in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 8) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7

ன்று சரவணனுக்கு கல்லூரி கடைசிநாள். நண்பர்களுடன் விடைபெறும் நாளைக் கொண்டாடி விட்டு பவானியைப் பார்க்க சரவணன் ஓட்டமும் நடையுமாக வந்தான். அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தின் கீழே பவானி கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்தாள்.

அருகில் வந்த சரவணன் மூச்சிறைக்க, “பவா…” என்று ஆசையுடன் அழைத்தான். கையில் மஞ்சள் நிற ரோஜாப்பூக்களின் கொத்து ஒன்றை அவளிடம் நீட்டினான். அவள் மிகவும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.

“ம்… இனிமே உன்ன நான் எப்ப பார்ப்பேன்?…” கேட்கும் போதே கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது பவானிக்கு

“நா என்ன வெளிநாட்டுக்காப் போகப் போறேன்… நினைச்சா வந்து பாக்கறேன்…. அதான் ஃபோன்ல தினமும் பாத்துக்கறோம்ல…..” என்றான் சிரித்துக்கொண்டே……

“மதியம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து சினிமா போகப் போறோம். அப்பறம் அப்படியே நான் ஊருக்கு கிளம்பறேன்….” என்றான் கண்களால் அவள் முகத்தை அளந்தபடியே…

“ம்… ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி இங்க வா..” என்றாள் சிறிது அதிகாரம் கலந்த உரிமையுடன்.

அந்தி சாயும் வேளை, பவானியும் சவிதாவும், கார்த்திக்குடன் எதற்காகவோ காத்திருந்தார்கள் வயல்வெளியில். சரவணன் குழப்பமான சிந்தனையுடன் இவர்களை நோக்கி வந்தான். சவிதாவின் கையில் இரண்டு மஞ்சள் நிற ரோஜா மாலை இரண்டு இருந்தது.

“என்ன?…” என்றான் சரவணன் தயக்கத்துடன்.

“தாலி தான் கட்டமாட்டேங்கற…. இந்த மாலையை என் கழுத்துல போடு” என்றாள் பவானி கெஞ்சும் குரலில்.

சிறிது நேரம் தயங்கியவன் பின் ஒத்துக் கொண்டான். சவிதா வீடியோ எடுத்தாள். பவானியும் சரவணனும் மாலை மாற்றினார்கள், வானமும் நிலமும் சாட்சியாக, இரு நண்பர்களின் சாட்சியாக.. சவிதாவும்,கார்த்திக்கும் அவர்களை வாழ்த்தி விட்டு விலகினார்கள்.

“ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி…” என்றான் சரவணன்.

“சின்ன வயசுலேர்ந்து அப்படித்தான்.எனக்குப் பிடிச்சது எனக்கு கிடைக்கணும்” என்றாள் கன்னம் சிவக்க..

அவனுக்கு அவளுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு பரவசமடைந்தான். இருவரும் மரத்தின் அடியில் அமர்ந்தார்கள். உரிமையுடன் பவானி அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள். கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.

அவன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். சிறிது நேரம் வானத்தின் மாலை நேர வர்ணஜாலங்களில் இருவரும் கரைந்தார்கள். கண்கள் நிறைத்த வானத்தில் இருவரும் பயணம் போனார்கள்.

சவிதா வந்து அழைக்கும் வரை அவர்கள் இந்த உலகில் இல்லை. அவசரமாக எழுந்த சரவணன் மாலையை கழற்றப் போனான்.

அவனை தடுத்த பவானி, “ஒரு நிமிஷம்…இரண்டுபேரும் சேர்ந்து நின்னு ஒரு ஃபோட்டோ  எடுத்துக்கலாம்” என்றாள்.

அரை மனதாய் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டான் சரவணன். சவிதா ஃபோட்டோ எடுத்தாள்.  அது பெரிய ஆபத்தை கொண்டுவரும் என்பதை அறியாமல் இருவரும் புன்னகைத்தார்கள்.

**********

“தறுதலை….. ஒன்னால எம் மானமே போச்சு… படிப்புத் தா வரல…வெவரமும் பத்தல…. ஒன்னப் பெத்ததுக்கு ஒரு ஒரலப் பெத்துருக்கலாம். ஒழுங்கா இருந்தா மாமேன் இப்படி சொல்லிருப்பாரா?”

“என்னத்துக்கு ஆட்டம் ஆடப் போற….? அதுவும் பொம்பளப்பிள்ளைகளோட சேந்து என்ன ஆட்டம் வேண்டிக் கெடக்கு?” என்று திட்டித் தீர்த்தாள் ராக்கம்மா முருகேசனைப் பார்த்து.

“ஆமா ….எனக்குத்தா படிப்பு வரலைன்னா தெரிஞ்சும் பொறவு ஏன் காலேசுல சேர்த்த? ஒனக்கு பணத்தாச.. ..அதுக்காண்டி என்னை பவானி பின்னாடி சுத்த சொல்ற அவ அவன் பின்னாடியே சுத்தறா…..உனக்கு பலிகடாவா நாந்தே கெடச்சேனா?” என்று பதிலுக்கு கத்தினான்.

“யார்ரா அந்த பரதேசி?…அவன வெட்டிப் போடு” என்று வெறி பிடித்தவள் போல கத்தினாள் ராக்கம்மா.

“அத அவ கிட்டயே கேளு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுச் சென்றான் முருகேசன்.

“கேக்கறேன்” என்று தலையை ஆட்டி சொல்லிவிட்டு விறுவிறுவென்று வந்தாள்.

“பவானி….பவானி….மா…” என்று குழைவான குரலில் கூப்பிட்டுக் கொண்டே வந்தாள்.

“என்னங்க அத்தை” என்று கேட்டபடியே…,மாடிப்படிகளில் இறங்கிய பவானியிடம்.,

“இரு..இரு..இறங்காத…நா.. வரேன்” என்று கூறியவாறே சென்ற ராக்கம்மாவை கோபத்தை கட்டுப்படுத்திய பார்வையால் பார்த்துக் கொண்டு நின்றனர் ராமலிங்கமும் தனலெட்சுமியும்.

“இங்க பாரு…நீ நல்லா யோசிக்கத் தெரிஞ்சவ… உனக்கு புத்தி சொல்ல வேணாம்…இந்த வயசுல மனசு இப்படித்தா அலை பாயும்.. நம்ம குடும்பம் எப்பேர்பட்ட குடும்பம்?..நம்ம சாதி என்ன?சனம் எப்படி நம்மள மதிக்கறாங்க….. நாம எப்படி நடந்துக்கணும் … இதெல்லாம் மனசுல எப்பவும் வெச்சுகிட்டுத்தான் மத்தவங்களோடப் பழகணும்….  ஆம்பளைங்க எல்லாரும் இப்படித்தான்…பின்னாடியே சுத்துவாய்ங்க…..பேச்சால வசியம் பண்ணுவாய்ங்க…. பொம்பளப்புள்ளைங்க நாம தான் சாக்ரதையா இருக்கோணும்…. அதுவும் இந்த காலத்துல நடக்கறதெல்லாம் பாத்தா…பொம்பளப் புள்ளய வெளிய அனுப்பவே பயமாயிருக்கு….நல்லாப் பேசறவனெல்லாம் நல்லவன் கிடையாது”

சிறிது மூச்சுவிட நிறுத்தியவள், “அவளருகில் வந்து தணிந்த குரலில் உன்னப் பத்தியும், நீ பழகறதப்பத்தியும்….எங்களுக்கு எதுவும் தெரியாது….னு நினைச்சுட்டு இருக்கியா?” என மிரட்டினாள்.

முதலில் பயந்த பவானி, பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நா…நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்னு இப்படிப் பேசறீங்க….?” குரல் கொஞ்சம் கம்மியது.

“செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இப்ப என்ன செஞ்சேன்னாக் கேக்கற…? உங்கப்பனைப்பத்தி ஒனக்குத் தெரியாது….மானஸ்தன்…. தல குனிவ ஏற்படுத்தினேன்னா… உன்னையும் கொன்னுட்டு தானும் நாண்டுக்கிட்டுச் செத்துருவான். பாத்துக்க…அடக்க ஒடுக்கமா இருக்கக் கத்துக்க” என்று உறுமி விட்டு கீழே இறங்கினாள்.

இறங்கியவள் தனலெக்ஷ்மியின் கையைப்பிடித்து இழுத்து, “அண்ணி…ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டாள்.

“அண்ணி, நா சொல்றத அண்ணன் காதுலே வாங்க மாட்டேங்குது…. நீங்க தான் ஒரு முடிவு எடுக்கணும். இல்லன்னா நம்ம குடும்ப மானம் சந்தி சரிச்சுறும், ஆமா சொல்லிப்பிட்டேன்” என்று கிசுகிசுப்பானக் குரலில் சிறிது கோபமாகக் சொன்னாள்.

“நீ….என்ன சொல்ற….புரியல” எனக் கேட்ட தனெலக்ஷ்மியிடம்

“நீங்க ஒரு அப்பிராணி அண்ணி… நீங்க இப்படி இருக்கறதால தான் பவானிக்கு இம்புட்டு தெகிரியம் வந்துருக்கு….பவானியக் கொஞ்சம் அடக்கி வைங்க… அவ ஃபோன்ல…யார்கிட்ட ப் பேசறான்னு….கொஞ்சம் கவனிங்க….நெலமை முத்திப் போறதுக்குள்ள ஒரு முடிவு எடுக்கறது நல்லது….அப்புறம் வருத்தப்பட்டு ஒரு பிரயோசனுமும் இல்ல….ஆமா…நா சொல்றத சொல்லிட்டேன்….வெரசா முடிவெடுங்க” சொல்லிவிட்டு காதில் ஏதோ இரகசியமாகச் சொல்லிவிட்டு கதவைத் திறந்து வெளியேறினாள்.

வேகமாக வெளியேறிய ராக்கம்மா, தன் வீட்டிற்கு வந்து இரவில் கணவனிடம் காதில் ஏதோ சொல்ல., அவன் “எங்கிட்ட விடு….நா பாத்துக்கறேன்” என்றான் முகத்தில் கொடூரம் தாண்டவ மாட.

மறுநாள், ராக்கம்மா சிறிது நேரம் கண்கள் ஒரே இடத்தில் வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ஏதோ விடை கிடைத்ததால் தலையை மேலும், கீழும் ஆட்டி “ம்…அதுதான் சரி…அப்படித்தான் செய்யணும்” என தனக்குத் தானே முணுமுணுத்துத்தாள்.

இரண்டு நாள் கழித்து வெத்தல, பாக்கு, பழத்தட்டோடு தன் புருசனோடு தன் மாமியார் கொழுந்தியாளையும் அழைத்துக் கொண்டு ராமலிங்கம் வீட்டிற்கு வந்து விட்டாள்.

“அண்ணே….இன்னிக்கு நாள் ரொம்ப நல்லாருக்கு….நல்ல விஷயம் பேச ஆரம்பிச்சரலாம்”

இரண்டு நாளாக மனம் குழம்பிக் கொண்டிருந்த ராமலிங்கம், இந்த எதிர்பாராத நிகழ்வால் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார்.

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 7) – முகில் தினகரன்

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 9) – ராஜேஸ்வரி