சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 3)
தலை கவிழ்ந்த நிலையில் தரையில் அமர்ந்திருந்த உமாவின் அசாதாரண அமைதி, மொத்த ஹாலையும் நிசப்தத்தில் ஆழ்த்தியிருந்தது. கன்னங்களில் நேர்க்கோடாய் அவ்வப்போது இறங்கிக் கொண்டிருந்த கண்ணீரை சிலமுறை துடைத்தும், சிலமுறை கண்டுகொள்ளாமலும் விட்டிருந்தாள்
அவளது தோழி ரேவதி அருகிலேயே நின்றிருக்க, சேர்களில் ஆங்காங்கே சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். தரையில் இரண்டு குழுக்களாக ஐந்தாறு பெண்கள்
“உமா… இப்புடியே எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துகிட்டு உக்காந்துருக்கறது? நாங்க சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லிட்டோம். முடியும் முடியாதுனு ஏதாச்சும் ஒண்ணு சொல்லணுமா இல்லியா நீ?”. என சொல்லி விட்டு வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள் ராமச்சந்திரனின் சித்தி
“நாங்க யாரும் எதுவும் கட்டாயப்படுத்த முடியாது. இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை. இதுக்கு மேல என்ன முடிவு பண்ணனும்னு தோணுதோ பண்ணிக்கங்க. அவ்ளோ தான்” என்றதுடன் கடமை முடிந்தது என்பது போல், உமாவின் அண்ணி முடிவுரை கொடுத்து விட்டு கையை ஊன்றி மெதுவாக எழுந்து நின்றாள்
விரல் மொத்தத்தில் வலுவான லென்ஸ்கள் பொறுத்தப்பட்ட கண்ணாடியுடன், ’எஸ்’ போன்ற வடிவத்தில் வளைந்தவாறே நடந்து வந்த பதினாறு வயது நிர்மல், உமாவின் அருகே வந்து குனிந்து அவளது முகத்தை நோக்கினான்
”அம்மா… எதுக்கும்மா அப்போலேர்ந்து அழுதுகிட்டே இருக்க?” என கேட்டு விட்டு, அவளது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நடக்கத் துவங்கியவன், கீழே கிடந்த மஞ்சள் நிற கிரேயானை எடுத்து கடிக்க எத்தனித்தான். மின்னல் வேகத்தில் பாய்ந்து பிடுங்கி தூக்கியெறிந்தாள் உமா
கைகளைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்த ராமச்சந்திரன், சலிப்புடன் திரும்பிக் கொள்ள, ராமச்சந்திரனின் அண்ணன் கவலையுடன் உமாவை நோக்கினார்
”நல்லபடியா பொறக்கற கொழந்தைங்களை வளர்த்து கரை சேக்கறதே இந்தக் காலத்துல பெரும்பாடா இருக்கு. இதுல நிர்மல் மாதிரி கொழந்தைங்களை ஆளாக்கறது எப்பேர்ப்பட்ட காரியம்னு எங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும்மா. அந்த கவலையில தான் சொல்றோம், எந்த முடிவெடுத்தாலும் கொழந்தைய மனசுல வச்சு முடிவெடு”
அந்தக் கூட்டத்தில் மூத்தவராய் தெரிந்த ராமச்சந்திரனின் தாய் மாமன் லேசாய் சிரமப்பட்டு இருக்கையை விட்டு எழுந்தார்
”சரிப்பா… நாளைக்கி ஊர்ல கொஞ்சம் வேலை இருக்கு, கெளம்பறேன். அவசரப்படாம ஒரு நல்ல முடிவா எடுத்துட்டு எனக்கு ஃபோன் பண்ணி சந்தோஷமா சொல்லுங்க. ராமு, அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு, அவங்க ரெண்டு பேரையும் அனுசரிச்சு போற மாதிரி புத்தியை வச்சுக்கடா. எல்லா பிரச்சனையும் சரியாயிடும். புரியுதா?”
”அவருக்கெல்லாம் அந்த மாதிரி புத்தியெல்லாம் வராது. இதோட விட்ருங்க..”
அனைவரின் கெஞ்சலுக்கும் இவ்வளவு நேரம் வாய் திறக்காத உமா, தானாகவே மௌனம் கலைத்தாள். உமாவின் தீர்மானமான வார்த்தைகள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எழுந்தவர்கள் மீண்டும் மெதுவாக அமர, அண்ணி தீர்க்கமாக அவளைப் பார்த்தாள்
”என்னம்மா… முடிவோட தான் இருக்கியா..?”
”ஆமாண்ணி, எல்லாரும் இப்ப பேசிட்டு போயிருவீங்க. அதுக்கப்பறம் நான் தான் தெனம்தெனம் கெடந்து சாகணும். வெட்டி விடணும்னு முதல்ல முடிவெடுத்தது அவரு தான். ஆனா, அவரோட முடிவுல நான் தான் இப்போ உறுதியா இருக்கேன். இவராலயெல்லாம் நிர்மலுக்கும் எனக்கும் நிச்சயமா எந்த நல்லதும் பண்ண முடியாது..”
அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, ராமச்சந்திரன் சட்டென்று வெளியே கிளம்பினான்
”டேய் நில்லுடா. அவவன் வேலை வெட்டியை விட்டுட்டு கிளம்பி வந்து பேசிகிட்டிருக்கான், மூஞ்சியில அடிச்ச மாதிரி எந்திரிச்சு போற ”
”என்னைய வேற என்னண்ணே பண்ணச் சொல்றீங்க? பேசறத பாத்தீங்கள்ல? தெனமும் இவ கூட எப்புடி குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்னு நீங்களே பாத்துக்கங்க..”
”எவன் வீட்லடா சண்டை சச்சரவு இல்லாம இருக்கு? கண்ணே மணியேன்னு இருவத்தி நாலுமணி நேரமும் கொலாவிகிட்டு தான் வாழ்க்கை நடத்திகிட்டிருக்காங்களா எல்லாரும்? பிரச்சனைகளுக்கு நடுவுல ஒருத்தரை ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழல? ஏன்டா… இப்புடி ஒரு குழந்தையை வச்சுருக்கற நீங்க ரெண்டு பேரும் எந்தளவுக்கு ஒத்துமையா, விட்டுக் குடுத்து போகணும்னு ஒரு அடிப்படை அறிவு வேணாம்? அந்தக் கொழந்தையோட எதிர்காலம் என்னத்துக்குடா ஆகறது?”
சந்தடி சாக்கில் பொதுவாகத் திட்டியது உமாவிற்குள் எரிச்சலை உண்டாக்கியது. தன்னால் பிரச்சனை திசை திரும்பி விடக் கூடாது என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தாள். ஆனால் ராமச்சந்திரனால் பொறுக்க முடியவில்லை. கோபத்துடனே ஒரு அடி முன்னால் வந்தான்
”இருக்கற அறிவெல்லாம் போதும் எனக்கு. இவங்க ரெண்டு பேரும் எக்கேடோ கெட்டு போய்த் தொலையட்டும். அவன் ஃபியூச்சரைப் பத்தி நான் எதுக்குக் கவலைப்படணும்? அவனோட எல்லா விஷயத்துலேயும் அவதானேமுடிவு எடுக்கறா?அவளால மட்டும்தான் அவனை வளர்த்து ஆளாக்கமுடியும்னு ஊருபூரா வேற சொல்லிகிட்டு அலையறா. அவளே வளர்த்துகிட்டும், எல்லாம் பண்ணிக்கட்டும், என்னை விட்ருங்க. ’ஸ்பெஷல் மதர், ஸ்பெஷல் மதர்’னு ஊரும் இவளை தான் ஒரேடியா தூக்கி வச்சுகிட்டு ஆடுது. அந்தப் பயலைக் கூட சமாளிச்சுடலாம் போலருக்கு. அவன் பேரை சொல்லிகிட்டு இவ போடற சீனை தான் என்னால தாங்க முடியல..”
உமா கனல் தெறிக்கும் விழிகளுடன் ராமச்சந்திரனை நிமிர்ந்து பார்க்க, அவளை எதிர்கொள்ள முடியாமல் முனகியபடியே தெருவை நோக்கித் திரும்பிக் கொண்டான் அவன்
”நீ என்னம்மா சொல்ற?”
உமா பதில் சொல்ல விருப்பமின்றி அமர்ந்திருக்க, அவளது தோழி ரேவதியோ கோபத்தின் உச்சத்திற்கு வந்திருந்தாள்.
”சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. அவளோட ஸ்கூல் காலத்துலேர்ந்து ஒவ்வொரு பிரச்சனையையும் கூட இருந்து பாத்தவ நான். அவ கேரக்டரும், இப்ப அவ படற அவஸ்தையும் எனக்கு நல்லாத் தெரியும். பெத்தவங்க இல்லாத புள்ளைக்கி ரொம்ப ஜாக்கிரதையா மாப்பிள்ளை பாத்துருக்கோம்னு சொல்லித் தான இவரை கட்டி வச்சீங்க? யாராச்சும் ஒருத்தராவது அவரு குடும்பம் நடத்தற லட்சணத்தை இந்த வீட்ல ரெண்டு நாள் தங்கியிருந்து வேடிக்கை பாத்துருக்கீங்களா?”
”நீயும் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா தாயே… அவசரப்பட்டு வார்த்தையை விடாம கொஞ்சம் நிதானமா பேசு. இப்பவும் அவ நல்லதுக்காகத் தான் ஆளுக்கொரு மூலையிலேர்ந்து கெளம்பி வந்து பஞ்சாயத்து பேசிகிட்டிருக்கோம்” என்றாள் கூட்டத்தில் ஒருத்தி.
”ரேவதி… நீ பேசாம இரு, இப்புடியெல்லாம் அவஸ்தைபடணும்கறது என் தலையெழுத்து. நீ எதாச்சும் பேசி தேவையில்லாம கெட்ட பேரு வாங்கிக்காத…” என அறிவுறுத்தினாள் உமா
”என்னடீ கெட்ட பேரு, நல்ல பேரு..? புள்ளை வளர்க்கறது நமக்காகவா ஊருக்காகவாங்கற விஷயத்துலேயே உங்க வீட்டுக்காரருக்கு இன்னும் தெளிவு வரல. இவரோட கேரக்டர் அந்த புள்ளையோட லைஃபை எவ்வளவு மோசமாக்க போவுதுன்னு தெரியாம ’அட்ஜஸ்ட் பண்ணி போங்க, அட்ஜஸ்ட் பண்ணி போங்க’ன்னு ஆளாளுக்கு மொட்டையாவே பஞ்சாயத்து பண்ணிகிட்டிருக்காங்க, என்னை வேடிக்கை பாத்துகிட்டிருக்க சொல்றியா? இங்க பாருங்க, உங்களுக்கெல்லாம் என் மேல எவ்வளவு கோவம் வந்தாலும் பரவால்ல. நான் எதிரியாவே இருந்துட்டு போறேன். தயவு செஞ்சு அவளோட பிரச்சனையை மட்டும் கொஞ்சம் நல்லா புரிஞ்சுகிட்டு, தெளிவா பேசி முடிச்சு விட்டுட்டு போங்க”
”அவ சொன்ன மாதிரி, உங்கள்ல எத்தனை பேருக்கு என்னோட பிரச்சனைங்க முழுசா தெரியும்னு தெரியல. எல்லா பிரச்சனையையும் லிஸ்ட் போட்டு சொல்றதுக்கு நாள் பத்தாது. இந்த நிமிஷம் வரைக்கும், நிர்மல் நம்ம குழந்தைங்கற எண்ணம் அவருக்குள்ள சுத்தமா இல்ல. தனக்கு இப்புடி ஒரு புள்ளை இருக்கான்கறதை சொல்றதுக்கும் அவருக்கு சுத்தமா பிடிக்கல.”
”புதுசா ஃப்ரெண்ட்ஸ்ங்க யாரும் வீட்டுக்கு வரப் போறாங்கன்னா, என்னையை கூப்ட்டு, ’அவங்க போறவரைக்கும் சத்தம் வராம அவனை ரூமுக்குள்ளேயே வச்சுரு. இல்லேன்னா எங்காச்சும் வெளியில கூட்டிட்டுப் போயிடு’ன்னு தான் தொரத்துவாரு. அவங்க ஆபிஸ்ல ஃபங்ஷன்னாலோ, வேலை பாக்கறவங்க வீட்ல விசேஷம்னாலோ, நிர்மலை எங்க கூட கூட்டிட்டு போகக் கூடாது. ரூமுக்குள்ள போட்டு பூட்டி வச்சுட்டு போலாம்னு டார்ச்சர் பண்ணுவாரு. நான் அதுக்கு ஒத்துக்கறதில்லங்கறதுனால இன்னைக்கி வரைக்கும் எல்லா விசேஷத்துக்கும் தனியா தான் போய்கிட்டிருக்காரு. ’இவன் என் புள்ளை’ன்னு சொல்லிக்க வாய் வரல அவருக்கு. இன்னும் ஓபனா சொல்லணும்னா, அசிங்கமா ஃபீல் பண்றாரு…”
”இவன் பொறந்தப்போ, விஷயம் தெரிஞ்சு மனசு தாங்காம அழுதேன். ரொம்ப நாள் அழுதுகிட்டே தான் இருந்தேன். ஆனா ஒருநாள் கூட,இப்புடி ஒரு புள்ளை பொறந்து நம்ம கௌரவத்தை கெடுக்குதேன்னு நெனைச்சு அழுததில்ல. அவன் படப்போற கஷ்டத்தை நெனைச்சும், ரோட்ல போறப்ப அவனை திரும்பி பாத்துகிட்டேபோகப் போற இந்த சொஸைட்டியை நெனைச்சும் தான் அழுதேன். போகப் போக என்னை நானே சரி பண்ணிகிட்டேன். இவனை விட அதிகமா கஷ்டப்படற கொழந்தைங்களை பாக்கும் போது, கடவுள் எனக்கு கருணை காட்டியிருக்கான்னு நெனைச்சு சந்தோஷப்பட ஆரம்பிச்சுட்டேன்..”
”அவனோட லெவல்லேர்ந்து உலகத்தை பாக்கறதுக்கும், அவனோட சேர்ந்து இந்த சொஸைட்டியில ட்ராவல் பண்றதுக்கும் பழகிக்கிட்டேன். திருப்பிகிட்டு நிக்கிறாரே இவரு, ஒருநாளாவது அவன் பக்கத்துல நின்னு அவன் என்னென்ன பண்றான், அவன்கிட்ட என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்குன்னு கவனிச்சிருப்பாரான்னு கேளுங்க..”
“நிர்மல் வித்தியாசமா குரல் குடுக்கும் போதோ, பொருளுங்களை கரெக்டா பிடிக்கத் தெரியாம கீழ போட்டு உடைக்கும்போதோ இவரு தான் மனநிலை சரியில்லாதவரு மாதிரி மாறிடறாரு. காட்டுத்தனமா எத்தனை தடவை அடிச்சுருக்காருன்னு நீங்களே கேளுங்க..”
”இவர் வீட்ல இருக்கும் போது அவனை விட்டுட்டு தைரியமா வெளியில கூட போக முடியல என்னால. எதாச்சும் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு.பெத்தவளுக்கு இதை விட வேற என்ன கொடுமை இருக்க முடியும்..?”
மனக்குமுறல்களையெல்லாம் கொட்டி விட்டு உமா அழத் துவங்க, ஹாலில் மீண்டும் நிசப்தம் நிலவியது
”டாக்டர்ஸ் அட்வைஸையெல்லாம் நெனைச்சா நைட்ல தூங்க முடியல அண்ணி. பொம்பளைப் புள்ளையா இருந்தா சில பிரச்சனைங்களை நானே சமாளிச்சுடுவேன். பையனா போயிட்டான். அவரோட சப்போர்ட் இருந்தா, எவ்வளவு சந்தோஷமா, நிம்மதியா அவனை வளர்ப்பேன் தெரியுமா?” என அழுதாள்
”வயசு ஏற ஏற, இன்னும் அவன் எப்புடியெல்லாம் மாறப் போறானோன்னு நெனைச்சா ஒரு பக்கம் ரொம்ப பயமா இருக்கு. இதையெல்லாம் யார்கிட்ட சொல்லி வாய்விட்டு அழ முடியும் நான், சொல்லுங்க? எனக்கு தேவைப்படற உதவியே ஆறுதலும் தைரியமும் தான். ஆனா, கிடைக்கறதெல்லாம் மேல மேல பிரச்சனைங்க. என்ன பண்ணச் சொல்றீங்க அண்ணி..”
இதுவரை இவளை எதிர்மறையாக பார்த்துக் கொண்டிருந்த அவளது அண்ணிக்கே தொண்டையடைத்து, மனசு பாரமாகித் தான் போனது
”புரியுது உமா, உன்னோட பிரச்சனையெல்லாம் சாதாரண பிரச்சனை இல்ல தான். அதுக்காக தனியாவே நின்னு நிர்மலை வளர்த்துக்கறேன்னு சொல்றதை கொஞ்சம் யோசிக்கணும் இல்லியா..?”
”டைவர்ஸ் வேணும்னு நானா கேட்டேன், சொல்லுங்க? அவர் போகணும்னு விருப்பப்படறாரு, விட்ருங்கன்னு தான் சொல்றேன். என் மேல குறை கண்டுபிடிச்சோ, நிர்மலையும் என்னையும் காயப்படுத்திட்டோ போறதுக்காக அவரு வெயிட் பண்ண வேணாம், விட்ருங்க. யார்கூட வேணும்னாலும் போயி சந்தோஷமா இருந்துக்கட்டும். ஜீவனாம்சம் அது இதுன்னு எந்த தொல்லையும் கூட என்னால இருக்காது, சொல்லிருங்க..”
பேசமுடியாமல் நிறுத்தியவள், துப்பட்டாவால் மூக்கை மூடி உறிஞ்சிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.
”துணி தச்சு குடுத்து, கம்ப்யூட்டர் டைப் பண்ணி என் புள்ளையை என்னால பாத்துக்க முடியும். வேற எந்த லைஃபையும் தேடி நான் போகப் போறதில்ல. நிர்மல் இருக்கறவரைக்கும் கடவுள் எனக்கும் உயிரை குடுக்கணும். அதை மட்டும் தான் தெனமும் வேண்டிக்கறேன்..”
ஒரு கையால் நெற்றியை தேய்த்தபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் ராமச்சந்திரன். அனைவரின் பார்வையும் அவனை நோக்கித் திரும்பியது.
”என்னப்பா ராமு..?” என கூட்டத்தில் ஒருவர் ஊக்க, குறிப்பாக யாரையும் பார்க்காமலே பேசத் துவங்கினான் அவன்
”அவ சொல்றது எதையும் இல்லன்னு சொல்லல. அவன் லெவலுக்கு எறங்கிப் போயி பொறுமையா சர்வீஸ் பண்றதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. என் கேரக்டர் டோட்டலா வேற. சும்மா வழவழன்னு இழுக்காம, இதோட வெட்டி விட்ருங்க, நான் என் வழியை பாத்து போய்க்கறேன்..”
உமா உதட்டைக் கடித்து அழுகையை கட்டுப்படுத்த முயற்சிக்க, அதை மீறி உதடுகள் துடித்தன.
”அவ டைவர்ஸ் எதிர்பாக்கறா போலருக்கு, வந்து என்ன ஏதுன்னு விசாரிங்கன்னு சொல்லிதானடா எங்களையெல்லாம் வரச் சொன்ன? பக்கத்து எலைக்கி பாயாசம் கேக்கறன்னு இங்க வந்து பார்த்தப்புறம் தான் தெரியுது. அவனை பாத்துக்க முடியலேன்னாலும், அவளுக்கு அனுசரனையா இருக்கேன்னு ஒரு வார்த்தை வருதாடா உன் வாயிலேர்ந்து?”
”ஏம்ப்பா… இதெல்லாம் ஆகற கதையா? உமா இவ்வளவு தூரம் அவனைப் பத்தி முழுசா சொல்லிட்டா. அதுக்கு அவனும் ஆமான்னு பலமா தலையாட்டிகிட்டு நிக்கிறான். இப்ப போயி சம்பந்தமில்லாம என்னென்னமோ பேகிட்டிருக்கீங்க? இவன் உதவி பண்ணலேன்னாலும் பரவால்ல, உபத்ரவமா இல்லாமயாச்சும் இருக்கட்டும். அடுத்து என்ன பண்ணணுமோ, அதை என்ன ஏதுன்னு பேசிட்டு கெளம்புங்க..”
”உன் ஃப்ரெண்ட் சொன்ன மாதிரி, தாய் தகப்பன் இல்லாத பொண்ணாச்சே, பிரச்சனை வராம இருக்கணும்னு நெனைச்சு தான் இவனுக்கு கட்டி வச்சோம். இவ்ளோ கேவலமா நடந்துக்குவான்னு தெரியாம போச்சு. சரிம்மா விடு, பேசி பிரயோஜனம் இல்ல. என்ன பண்ணனும்னு எதிர்பாக்கறியோ அதைச் சொல்லு, பண்ணிட்டே போறோம்..”
”எனக்கு எதுவும் பண்ண வேணாம். நிர்மலோட லைஃபை அவரு எந்தக் காலத்துலேயும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, அவ்வளவு தான். இந்தக் குழந்தைங்களுக்கும் இந்த உலகத்துல நிம்மதியா வாழறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவனுக்கு எந்தவிதத்துலேயும் பாதிப்பு வரக்கூடாது. மனரீதியாவோ உடல்ரீதியாவோ யாரும் காயப்படுத்திடக் கூடாது. என்னால அதை பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது..”
வெகுகாலத்திற்குப் பின்னர் ராமச்சந்திரனின் அண்ணனுக்கு கண்கலங்கியது. தனக்கு சாதகமான சூழல்நிலவாத நிலையில், வெளியே சென்று நின்று கொண்டான் ராமச்சந்திரன்.
”ஏம்மா, இந்த வீணாப் போன நாயி உன் கூட இருக்கும் போதே புள்ளையை பத்தி யோசிக்கமாட்டேங்குது. ஓடிப்போச்சுன்னா திரும்பியா பாக்கப் போவுது..? அவனால பிரச்சனை வரும்னெல்லாம் தேவையில்லாம போட்டு மனசை குழப்பிக்காத. இல்லேன்னா லீகலாவே முடிச்சுக்கோ. நானே வேணும்னாலும் ஒரு அட்வகேட்டை ஏற்பாடு பண்றேன். செலவைப் பத்தி கவலைப்படாத..”
உமா அமைதியாக நின்றிருந்தாள். ஆறுதலாக தோளில் கை வைத்தாள் ரேவதி
‘போயிட்டு வர்றேன்’ என்று சொல்வதற்கு கூட எவருக்கும் வாய் வரவில்லை.
வெளியில் வந்த அனைவருக்குள்ளும் இனம்புரியாத இயலாமையும், ’ஜாலியான வாழ்க்கையை நோக்கி ஓடிப் போகிறேன்’ என தைரியமாகச் சொல்பவனை இழுத்துப் பிடித்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனமும் மேலோங்கியிருந்தது.
மற்றவர்களை விட ராமச்சந்திரனின் அண்ணனுக்கு பாரம் அதிகமாக மனதை அழுத்தியது. வாசலைத் தாண்டியவர் கடந்து சொல்ல முடியாமல் அங்கேயே நின்றார். ராமச்சந்திரனின் அருகே சென்று, கூர்மையாக அவனைப் பார்க்க, நெளிந்தான் அவன்.
”மனுஷனா பொறந்தா அதுக்கான தன்மை கொஞ்சமாச்சும் இருக்கணும்டா. உமாவை தான் ஊரு தூக்கி வச்சுகிட்டு கொண்டாடுதுன்னு சலிச்சுக்கறியே, நாக்கு கூசல உனக்கு..? பெத்த புள்ளைய ரோட்ல விட்டுட்டு ஓடிடணும்னு மட்டுமே முயற்சி பண்ணிகிட்டிருக்கற உனக்கு அதைப் பத்தி பேசறதுக்கு என்னடா தகுதி இருக்கு..?
நீ பண்ணின கொடுமைக்கெல்லாம் எப்புடி தான் அவ இவ்வளவு நாள் உன் கூட குடும்பம் நடத்துனாளோ தெரியல. இதுல கொடுமையான ஒரு விஷயம் என்ன தெரியுமா..? அவ வேற எவனையாச்சும் கல்யாணம் பண்ணிகிட்டு போயிருந்தான்னா, இப்புடி ஒரு புள்ளையே கூட அவளுக்கு பொறந்துருக்காம போயிருக்கும்டா..”
அதைக் கேட்டதும் பயங்கர கோபம் வந்தது ராமச்சந்திரனுக்கு.
”என்ன முறைக்கற..? உன்னை மாதிரி எவனோ ஒருத்தன் எந்த ஜென்மத்துலயோ பண்ணின பாவம்… நம்ம பரம்பரையில வழிவழியா, பாட்டன் பூட்டன் காலத்துலேர்ந்து இப்புடி ஒரு குழந்தையை கடவுள் குடுத்துகிட்டேதான்டா வர்றான். நம்ம தாத்தா கூட பொறந்தவங்கள்ல ஒருத்தரு, அப்பா கூட பொறந்தவங்கள்ல ஒருத்தருன்னு வந்து, கடைசியா நம்ம கூட பொறந்த ஆறு பேர்ல, மூத்தவன் வைத்தியநாதனுக்கும் இதே பிரச்சனை தான்.
அடுத்ததா நானாச்சும் நல்லபடியா பொறப்பேனோ இல்லியோன்னு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உள்ளூர பயம் இருந்துச்சு. அந்த பயம், கடைசியா நீ பொறக்கற வரைக்குமே அவங்களுக்குள்ள இருந்துகிட்டே தான் இருந்துருக்கு. உனக்கு விவரம் தெரியறதுக்குள்ள வைத்தி போய் சேர்ந்துட்டான். ஆனா, அவன் இருந்தவரைக்கும் அப்பாவும் அம்மாவும் அவனை ராஜா மாதிரி பாத்துகிட்டாங்கடா. உமா கலங்கும் போது, அம்மா பட்ட கஷ்டமெல்லாம் தான்டா என் கண்ணு முன்னால வந்துச்சு. பாவம்டா அவ..”
”என் வழியை பாத்து போய்கிட்டே இருக்கேன், விட்ருங்கன்னு சொன்னீல்ல… போ… மேல ஒருத்தன் இருக்கான். நீ எங்க போனாலும் அவன் விடமாட்டான். நீ கை கால் வெளங்காம ரோட்ல கெடந்தாலும் சரி, அனாதைப் பொணமா கெடந்தாலும் சரி… எங்கள்ல ஒருத்தர் கூட வந்து என்ன ஏதுன்னு பாக்க மாட்டோம்…நீயெல்லாம்..”
ராமச்சந்திரன் குனிந்து கொள்ள, மயானத்திலிருந்து கிளம்புபவர்களைப் போல் திரும்பிப் பார்க்காமல் அமைதியாய் நடக்கத் துவங்கியிருந்தார்கள் அனைவரும்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ad – தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
அருமையான கதை. ஆனாலும் மனது வேதனைப்பட வைத்தது. இப்படியான குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் பெற்றோர்களும் உள்ளனர் என்பதே வேதனையை இன்னமும் அதிகரிக்கிறது. தொய்வில்லாமல் எழுதி உள்ளார் கதாசிரியர். வாழ்த்துகள். நல்ல கருவைத் திறமையாகக் கையாண்டுள்ளார்.
Great feel and realistic issues. Felt like sitting near Uma and watching her feel. Wishes to writer
தாய்மை என்பதற்கு நிகரான ஒன்று எதுவுமில்லை என்பதை உணரவைக்கும் அற்புதமான ஒன்றில் இக்கதையும் ஒன்று.
அருமையாக கட்டமைத்துள்ளார் ஆசிரியர்
உறுத்தல்.கதாசிரியர் கதை சொன்ன விதம் காட்சிகளாகவே தோன்றியது.கடைசி பகுதி எனக்கு தெளிவாக தெரியவில்ல.கண்கள் படித்ததால் உறுத்தல்….
உண்மையாக நடப்பதையே எழுதி இருக்கிறீர்கள். படிக்கும் போதே கண்ணீர் வந்துவிட்டது. உமாவிற்கு எடுத்த முடிவை பல காரணங்களால் சில பெண்களால் எடுக்க முடிவது இல்லை என்பதே உண்மை.
தாய் உமாவின் அன்பு அரவனைப்பு பிள்ளை படும் வேதனை என அந்த உணர்வை படிக்கின்ற எங்களுக்கும் கடத்திவிட்டார். உலகில் பெரிய சக்தி தாய் என்பதை உணர்த்திவிட்டார். ஒரு காட்சியை வைத்து கொண்டு மெல்ல மெல்ல பல தலைமுறை பிரச்சினையை அழகாக கொண்டுவந்துள்ளார். ராமசந்திரனின் அண்ணன் மனதில் நிற்கிறார்.
ஆசிரியரின் எழுத்துநடை அற்புதம் மேலும் பல உயரம் தொட வாழ்த்துகள்.
ராமச்சந்திரனின் அண்ணனது விளக்கங்கள் மனதை நெகிழ வைத்தது. கதையின் நீளம் அதிகம். ஒரு பக்க கருத்து கேட்டு முடிவெடுக்கும் சமுகத்தை அற்புதமாக படைப்பாளி சித்தரித்துள்ள முறை அபாரம். Untold finish is so royal touch!🙏
ராமச்சந்திரன் போன்றவர்களை இக்கதை உறுத்தும், திருத்தும்!
ராமச்சந்திரன் போன்றவர்களை இக்கதை உறுத்தும், திருத்தும்!
கதையின் முடிவு அருமை. இதை குறும்படமாக கூட எடுக்கலாம்.
கதையின் முடிவு அருமை. இதை குறும்படமாக கூட எடுக்கலாம்.
நிதர்சனமாக கதைக்கரு..!
ஒரு சீன்ன்னா கூட.. வெய்ட்டான சீன் சார்.
உலுக்கிடுச்சி.
நிஜத்துல ராமச்சந்திரன்கள் நிறைய நிறைய உண்டு. ஆனா ஈசியா பழிய பக்கத்து இலக்கு பாயசம் போடுறத போல பண்ணிடுவாங்க.
ஆனா அத வெளிக்கொண்டுவந்த விதம் செம..
#வழக்கமா ஒவ்வொரு சிறு கதையிலயும், கதை எழுதறதுக்கான வரிகளோ, உவமைகளோ, சொற்கள் பயன்படுத்துற விதமோ இருக்கும். ஆனா அதெல்லாம் அடிச்சி துவம்சம் பண்ணிட்டீங்க..
எத்தனைபேருக்கு இத்த்யனை தாயுள்ளம் இப்போது இருக்குமென தெரியவில்லை. எதுவும் பிரச்சனை வேண்டாம் என அடக்கி அடக்கி அமைதியாய் இருந்த உமாவின் நெற்றிச்சுருக்கமும், மூச்சுக்காற்றும் எழுத்துகளில்..
ஒரு கட்டத்தில் வெடித்து விம்மி அழுவதும் காட்சிகளாய்.. எழுத்துக்களில் கொணர்ந்த விதம் அருமை.
நிச்சயம் பற்பல இடங்களில் இது போல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மிக எளிதாக நகர்ந்து விடுகிறோம் “ குடும்பம்ன்னா ஆயிரம் பிரச்சன இருக்கத்தான செய்யும்” என்று.. ஒரு சம்பவமே மனதை உகுக்கி விட்டது
ஒரு சீன்ன்னா கூட.. வெய்ட்டான சீன் சார்.
உலுக்கிடுச்சி.
நிஜத்துல ராமச்சந்திரன்கள் நிறைய நிறைய உண்டு. ஆனா ஈசியா பழிய பக்கத்து இலக்கு பாயசம் போடுறத போல பண்ணிடுவாங்க.
ஆனா அத வெளிக்கொண்டுவந்த விதம் செம..
#வழக்கமா ஒவ்வொரு சிறு கதையிலயும், கதை எழுதறதுக்கான வரிகளோ, உவமைகளோ, சொற்கள் பயன்படுத்துற விதமோ இருக்கும். ஆனா அதெல்லாம் அடிச்சி துவம்சம் பண்ணிட்டீங்க.
என்னவோ, அப்படி உவமையோடயும், வார்த்தை பிரயோகமும் இருந்தால்தான் அது கட்டுரை, சிறுகதைன்னு ஃபிக்ஸ் பன்னிட்டாங்க சிலர்.
ஆக்சுவலா இதான் நிதர்சனம். ஒரு இடத்துல கூட lag.. இல்ல..வார்த்தை பிரயோகமும் படிக்கும் போதே, அவ்ளோ கேஷ்வலா வந்துச்சு.
.