in

துணை (சிறுகதை) – ✍ இளங்கோவன், கூடலூர்

துணை (சிறுகதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ளம்வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. முனுசாமி நாயக்கர் தன் மனைவி காசியம்மாள் கரத்தைப் பிடித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார் 

எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த அந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், முதுமையால் மிகவும் களைத்துப் போயிருந்தார். இருபத்திரண்டு ஆண்டுகளாக வருத்தம் என்பதையே காணாத அவர், விரக்தியாலும், சோகத்தாலும் மிகவும் நொந்து போயிருந்தார்.​

​“காசியம்மா ஒரு ஆட்டோவை பிடித்து போலாமா?” மனைவியை ஆசிரத்தையோடு கேட்டார்

 ​“போகலாம், உங்க சினேகிதர் பதினோரு மணிக்கு வருவதாக சொன்னார், மணி என்ன ஆகிறது?” 

மனைவி காசியம்மாள் குரலை கேட்டு பையிலுள்ள செல்போனை எடுத்துப் பார்த்தார், மணி 10:45.​

“ஆமாம் சொன்னார், நம்ம அந்த ஒதிலன் நிழலில நிக்கலாம்”

வீதியை தன்னுடைய வளர்ந்த கிளைகள் மூடியவாறு நின்று கொண்டிருந்த ஒதியன் மரநிழலில் இருவரும் நின்றார்கள் 

தோளில் மாட்டியிருந்த பெரிய பையை கீழே இறக்கி வைத்து முட்டு முட்டாய் வளர்ந்திருந்த, ஒதியன் வேர் முடிச்சுகளில் மீது அமர்ந்தார்கள்.​

முனுசாமி நாயக்கரின் எண்ணங்கள் பின்னோக்கி பயணம் செய்தன.

சிறந்த தலைமை ஆசிரியர் விருது பெற்றவர். அவரிடம் படித்த மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அவர் பணி ஓய்வு பெற்றதும் அவருடைய மகள் நந்தினி, குமரன், விநாயகம் இருபிள்ளைகளும், குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார்கள்.  

அவர்கள் திருமணமாகி நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், தந்தையின் ஓய்வூதிய பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் 

​நந்தினி தந்திரமாக அம்மாவிடம் சொன்னாள், “அம்மா,  பத்து பவுன் ரிட்டையர் ஆன பணத்தில் செய்யறதா கல்யாணத்துல சொன்னீங்க, அப்பாகிட்ட சொல்லும்மா”

“அதெல்லாம் அப்பாகிட்ட நீயே கேளு”

தாயின் பதில் அவளை வெருளச் செய்தது. முனுசாமி நாயக்கர் கண்டிப்பானவர் அம்மாவின் மூலம் தான் பிள்ளைகள் எதனையும் கேட்பார்கள் என்று அவருக்கு தெரியும்

அண்ணன்கள் இருவருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்து விட்டால், தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் நந்தினிக்கு இருந்தது. நந்தினியின் கணவன் அவளை தூண்டிவிட்டு அனுப்பி வைத்திருந்தான்.

குமாரனும், விநாயகமும், அவரை போட்டி போட்டுக் கொண்டு கவனிப்பதும், மிகவும் கரிசனமாக நடந்து கொள்வதாகவும் இருந்தார்கள். 

இருவருக்கும் ஒரே ஊரில் தனித்தனியே மனைகள் வாங்கி வீடு கட்டிக் கொடுத்திருந்தார். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்களில் அரசு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். படிப்பு பதவி இருவருக்கும் நிறைவாக இருந்தும், அவருடைய பணத்திலே குறியாக இருந்தார்கள்.​

​வெகுகாலம் சிறிய ஓட்டு வீட்டில் தனியாக தங்கியிருந்த அவர்கள், அதே தெருவில் உள்ள பெரிய மகன் குமரன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கினார்கள்

ஓட்டு வீட்டினை நல்ல விலைக்கு வந்தால் விற்றிடலாம் என்ற எண்ணத்தில் முனுசாமி இருந்தார். மழைக் காலத்தில் வீடு ஒழுகியது, இருப்பினும் மாமரம், தென்னை மரங்கள், வேப்பமரம், தோட்டம் இவைகள் கொண்ட வீட்டை விற்க அவருக்கு மனம் வரவில்லை

சிவன் கோயில் தெற்கு வீதியில் வடக்கு பார்த்த ராசியான வீடாக அவருக்கு இருந்தது. பகற்பொழுதில் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு, இரவில் குமரன் வீட்டு மாடியில் தங்கி விடுவார்கள். 

ஓட்டு வீட்டில்  பழங்கால தட்டுமுட்டு சாமான்கள், மூன்று அலமாரிகளில் எண்ணற்ற புத்தகங்கள் அடைக்கப்பட்டு கிடந்தன. வயதான காலத்தில் பராமரிக்க இயலவில்லை

மூவரையும் தோட்டத்தில் கூப்பிட்டு மனைவி முன்னிலையில் சொன்னவை அவருக்கு மனதில் எதிரொலித்தது

“இதோ பாருங்க, கவனமா கேளுங்க. கிராஜுடி, மற்ற பணம், நான் நாற்பது வருஷம் உத்தியோகம் பார்த்ததில் வந்தது யாருக்கும் கொடுப்பதா இல்லை. பென்சன் எங்க விருப்பம் போல தான் செலவு செய்வோம், உங்கள நம்பி நாங்க இல்ல. உங்களுக்கு தேவையான கல்வியை, வீட்டினை கொடுத்து விட்டோம், அதுவே பெருஞ்சொத்து. அதை வச்சு சந்தோஷப்படுங்கள் போதும்”

கண்டிப்பான அவரின் வார்த்தைகள், மூவருக்கும் பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது. நந்தினி மாப்பிள்ளை வீட்டார் கேட்டதை விட அதிகம் செய்தார்கள் 

போன வருடமே காசியம்மாளின் காசு மாலையை நைசாக பேசி வாங்கிக் கொண்டு போனாள். அது பதினைந்து பவுன் இருக்கும், முனுசாமி நாயக்கர் எதுவும் சொல்லவில்லை.​

​இதன் பிறகு அவருக்கு சோதனை வந்தது. குமரன் மனைவி சும்மா இல்லை. அவள் தம்பி பக்கத்திலுள்ள கல்லூரியில் சேர்ந்து இருந்தான். அவன் தங்கி படிப்பதற்காக இடம் தேவைப்பட, மாடி அறையே அவள் கண்ணில் பட்டது. 

மாமனார், மாமியாரை தன் கணவன் தம்பி விநாயகத்தின் வீட்டில் கொஞ்ச நாள் தங்கலாம் என்றும், பழைய ஓட்டு வீட்டினை சீர் செய்த பின்னர் சொந்த வீட்டுக்கே போகலாம் என்றும் தன் தந்தையிடம் கூறுமாறு தூபம் போட்டாள்.​

முனுசாமி நாயக்கர் பெரிய மகனின் எண்ணத்தையும் மருமகளின் அபிலாசை புரிந்து கொண்டார். சிறிய மகன் வீட்டு வாசலில், ஒருநாள் காலை பெட்டியும் படுக்கையுமாக நின்றார்

மருமகள் அவர்களை வாஞ்சையோடு அழைத்துக் கொண்டு சென்றாள். அவர்களை நன்றாக உபசரித்தாள்

தாய் தந்தையற்ற அவளைய முனுசாமி தான் சின்னவனுக்கு திருமணம் செய்து வைத்தார் . அதற்கு நன்றிக் கடனாக அவர்கள் காலம் உள்ளவரை அவர்களுக்கு சேவை செய்ய விரும்பினாள்.​

விநாயகம் தந்தையிடம் பழைய ஓட்டு வீட்டின் வேப்பமரத்தை வெட்டி ஜன்னல்கள் இதர பொருட்கள் செய்து வீட்டினை புதுப்பிக்கலாம் எனக் கூறினான். தந்தையின் அனுமதி இல்லாமலேயே மரம் வெட்டுவதற்கு ஆட்களை தயார் செய்து அழைத்து சென்றான்.

முனுசாமி நாயக்கர் அவனிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார்

“வேப்ப மரத்தை வெட்டுவதும் என்னை வெட்டுவதும் ஒன்னு தான். உனக்கு விருப்பம் இல்லேன்னா சொல்லு, இங்க தோட்டத்தில கொட்டா போட்டு தங்கிக்கிறோம்”

சொன்னதோடு அல்லாமல் தோட்டத்தில் சிறிய கொட்டாய் போட்டு அங்கையே இருவரும் தங்கி விட்டார்கள். மிகவும் வைராக்கியமும், மனஉறுதியும், கொண்ட அவர் பிள்ளைகள் பாராமுகத்தால், மிகவும் தளர்ந்து போய் விட்டார்,

குறிப்பறிந்து நடந்து கொள்ளாத பிள்ளைகளை வளர்ந்ததில் தவறு நேர்ந்து விட்டதாக கருதினார். அப்போது தான் அவருடைய பால்ய நண்பர் லட்சுமணன் அவரைப் பார்க்க வந்தார். எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார்

லட்சுமணன் முனுசாமி நாயக்கரிடம் கடலூருக்கு வந்து தற்காலிகமாக முதியோர் இல்லத்தில் தங்கி கொள்ளலாம் என்றும், ஓட்டு வீட்டை சீர் செய்த பிறகு சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விடலாம் என்றும் கூறினார்

அந்த யோசனை முனுசாமிக்கு சரியாகப்பட்டது.

“அதோ உங்க சினேகிதர் வரார்”, காசியம்மாள் காட்டிய இடத்தில் இலட்சுமணன் வந்து கொண்டிருந்தார்.​

லட்சுமணன் கடலூருக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இருவரும் பால்ய சினேகிதர்கள். லட்சுமணன் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்று புதுப்பாளையத்தில் தன் ஒரே மகன் உடன் தங்கி விட்டார்.​

“வாப்பா! நல்ல நேரம் வந்த…” முனுசாமி வாஞ்சையோடு லட்சுமணன் கையை பற்றிக் கொண்டார்.​

மூவரும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கொண்டு கெடில கரையோரம் உள்ள முதியோர் உறைவிடம் நோக்கி சென்றனர்.​

லட்சுமணன் முதியோர் இல்லம் மேலாளரிடம் அனைத்தையும் முன்னரே கூறியிருந்தார். ஓய்வூதிய அடிப்படையில் இருவரும் அங்கேயே தங்கி கொள்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது.

மேலாளர் அவர்களை அன்பாக வரவேற்றார். அவர்களின் ஆவணங்களை பார்வையிட்டு பதிவு செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்பாடாகியிருந்த பெரிய அறையில் அவர்களை தங்க வைத்தார்.

முனுசாமி நாயக்கர், தான் அந்த காலத்தில் ஏமப்பூர் கிராமத்தில் சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலத்தை அந்த முதியோர் இல்லம் நினைவூட்டியது.  அவரின் மனதில் புத்துணர்ச்சி பிறந்தது .​

அந்த முதியோர் இல்ல நடுவே ஒரு சிறிய பூங்கா இருந்தது. தன் சொந்த இல்லத்தை அவருக்கு நினைவூட்டியது. மாலையில் மூவரும் பூங்காவில் அமர்ந்து 

கடந்த கால நினைவுகளை மனதை பறிகொடுத்து அளவளாவினார்கள்.​

முனுசாமி நாயக்கர் தன்னுடைய நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். தன்னை விட மூன்று வயது இளைஞராக இருந்தாலும், லட்சுமணன் அவருக்கு பெரியவராகவே தோன்றினார்.​

​“லட்சுமணா… நாங்கள் கடைசி காலம் வரை இங்கே இருப்பதாக தீர்மானித்து விட்டோம். எங்கள் செலவுகள் போக மீதி பணம் மற்றும் கிராஜுவிட்டி பணத்தை எங்கள் இருவரின் மரணத்திற்கு பிறகு நீயே நம்ம ஊர் ஓட்டு வீட்டை சீர் செய்து அனாதை இல்லத்திற்கு ஒப்படைத்துவிடு”

கண்ணீர் மல்க முனுசாமி கூறிய வார்த்தைகளைக் கேட்ட லட்சுமணன் நெகிழ்ந்து போனார் .​

​“அதற்கு என்ன அவசரம், பேசாம இரு…” என்றார் லட்சுமணன்.​

​“இல்லை இலட்சுமணா, எனக்கு கடைசி வரை துணையாக இருப்பது ஓய்வூதியம் தான். அதுவே ஆதரவற்ற குழந்தைகளுக்கும் துணையாக இருக்கனும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது தான் நல்லது. ஒரு நல்ல வக்கில பார்” என்று கூறிய முனுசாமி நாயக்கரின் கையை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் லட்சுமணன் 

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                 “சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

குப்பைத் தொட்டி (சிறுவர் கதை) – ✍ திவ்யா விஜய் கார்த்திகேயன், சேலம்

மனங்களின் நெடுங்கணக்கு (சிறுகதை) – ✍ காந்தி முருகன், மலேசியா