in

தோல்வி தந்த நிம்மதி (சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்பிரமணியன், சென்னை

தோல்வி தந்த நிம்மதி (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ப்ரவீணாக்கு முதலில் பிள்ளை பிறந்த போதே சற்றுக் குறை தான். அவளுக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆசை என்பதை விட பிரார்த்தனை, வெறி என்று கூட சொல்லலாம்.

பெண் பிறந்து அதை அவள் எண்ணப்படி, திட்டப்படி ஒரு ஆணுக்கு சமமாக சகல திறமைகளுடனும் வளர்த்து தன் ஆசையை, ஏக்கத்தை, குறையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள்.

முதலில் அர்ஜுன் பிறந்த போது மற்றவர்கள் பார்வைக்காக சந்தோஷமாக காட்டிக் கொண்டாள், ஆனாலும் மனதில் குறையாகத் தான் இருந்தது. அடுத்து ராகுல் பிறந்த போது ரொம்பவே நொந்து போனாள்.

பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆணின் குரோமோஸம் என்று தெரிந்து கொண்ட போது கடுப்பாயிருந்தது. மாமியாருக்குப் பெருமை, ஆனால் இவளுக்கு எரிச்சலாயிருந்த்து. நல்ல வேளை மூன்றாவது பெற்றுக் கொள்ள  கணவன் சம்மதித்து ரேணு பிறந்த போது தான் தன்னுடைய லட்சியத்தில் ஜெயித்து விட்டதாக நினைத்தாள்.

ரேணுவை பார்த்துப் பார்த்து வளர்த்தாள். அவளை சீண்டினால் பிள்ளைகளை அடிக்கக் கூடத் தயங்க மாட்டாள். ரேணுவுக்குப் பிடித்த சமையல், ரேணுவுக்காகத் தனி ரூம், ரேணு அழக்கூடாது, அவளுக்கு வேர்க்கக் கூடாது, அவள் எதிலும் தோற்கக் கூடாது.

அவளை சிட்டியிலேயே பெரிய ஸ்கூலில் சேர்த்தாள். பிள்ளைகள் ஸ்கூல் பஸ்ஸில் போவார்கள், ரேணுவுக்குத் தனியாக ஆட்டோ ரிக்‌ஷா. ட்யூஷன், பாட்டு, டான்ஸ், எல்லாம் வீட்டுக்கு டீச்சர் வந்து சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தாள். பார்த்துப் பார்த்து துணிமணிகள் வாங்கினாள்.

ரேணு பிறந்த நேரமோ என்னமோ, ப்ரவீணாவின் புருஷனுக்கு உத்யோகம் ஓஹோவென்று உயர்ந்தது. அதில் அவனுக்கும் ரேணு மேல் பாசம் அதிகமாச்சு. ரேணு கேட்ட்தெல்லாம் கிடைக்கும். கேட்காததும் கிடைக்கும்.  எந்த விஷயத்திலும் அவள் செலக்‌ஷன் தான் முடிவு.

புது வீடு கட்டும் போது ரேணு சொன்ன டிசைனில் டைல்ஸ், ரேணு செலக்‌ஷன் படி தான் பெயிண்டிங் கலர். அவள் ஆசைப்பட்ட செடிகள் எல்லாம் எங்கெங்கிருந்தோ வரவழைத்துத் தோட்டம் அமைத்தாள் ப்ரவீணா.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இத்தனை செல்லம் கொடுத்தும் அந்தப் பெண் குணம் தங்கமாக இருந்தது தான்.

அண்ணாக்களிடம் உயிராக இருந்தாள். அவர்கள் சொன்னபடி தான் நடந்து கொண்டாள். எப்போதும் அவர்கள் இஷ்டப்படியே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டாள். அவர்களுக்காக அம்மா, அப்பாவிடம் தன் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் தான் அதிகம். அந்தப் பிள்ளைகளும் தங்கையிடம் ரொம்பவே அன்பாக இருந்தார்கள்.

பின்னே இருக்காதா, ரேணு மாதிரி ஒரு பெண்ணிடம் கோபப்பட யாருக்குத் தான் மனசு வரும், அவ்வளவு மோசமான மனிதர்களும் இருப்பார்களா என்ன! ப்ரவீணா மாமியார் கூட பேத்திக்கு ரொம்பச் செல்லம் கொடுப்பது பற்றி முணுமுணுப்பாளே ஒழிய, பேத்தி காதுபட ஒன்றும் சொல்லி விட மாட்டாள்.

“கல்யாணம் ஆகி வேறு வீட்டுக்கு வாழப் போக வேண்டிய பொண்ணைக் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்க்கிறாள் அது அவளுக்கு நல்லதில்லை” என்று மாட்டுப் பெண்ணைத்தான் குற்றம் சொல்வாள்.

அதைக் கேட்கும் போது தான் ப்ரவீணாவுக்கு இன்னும் அதிகமாக பற்றிக் கொண்டு வரும்.

ரேணு வளர்ந்தாள், எத்தனை செல்லம் கொடுத்தும் அவள் ரொம்ப பதவிசாக இருந்தது ப்ரவீணாக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அழகு, புத்திசாலித்தனம் இதோடு வெகுளித்தனமும் இருந்ததே அவள் மீது எல்லாருக்கும் பிரியத்தை ஏற்படுத்தியதோ!

ரேணு காலேஜில் சேர்ந்த போது ப்ரவீணா கணவன் ரிடையரானான். சொந்தத்தில் பிஸினஸ் ஆரம்பித்தான். வீட்டிலேயே ஒரு பகுதியில் ஆபீஸ் அமைத்துக் கொண்டான்.

ரேணுவுக்கு அப்பாவின் தொழில சம்பந்தமாக நிறையத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. பிள்ளைகள் மேல்படிப்பு, வெளி நாடு என்று போவதில் ஆர்வம் காட்டியதில் ரேணுவின் அப்பாவுக்குப் பெண் காட்டிய ஆர்வம் பிடித்திருந்த்து. 

காலேஜ் நேரம் போக அவள் அப்பாவின் ஆஃபிஸில் இருக்கத் தொடங்கினாள். அப்போது தான் அங்கு ராகேஷ் வேலைக்குச் சேர்ந்த்தான். அவனது புத்திசாலித்தனம் அவர்களுக்கு  ரொம்ப உதவியாக இருந்த்து.  ஆனால் அவன் இயல்வில் ரொம்பவும் அமைதியானவன், ரொம்பக் குறைவாகவே பேசுவான்.

சிரிப்பது ரொம்ப அபூர்வம். தனக்கு நேர்எதிரான இயல்பில் அவன் நடந்து கொண்ட்து ரேணுவுக்கு அவன் மேல் ஒரு விதமான ஆர்வத்தை ஏற்படுத்தியது, அதுவே காதலாக மாறியது.

ப்ரவீணாவுக்கு இது பெரிய அதிர்ச்சியாக ஆனது. ராகேஷ் ரொம்ப சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவள் கவனித்த வரையில் அவன் பெண்களை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்பவனில்லை என்று தோன்றியது.

ஏதாவது முக்கிய வேலையென்றால் ரேணுவை தனியாகச் செயல்படுத்த விட மாட்டான். அவளால் முடியாது என்பது போல  தானே எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்து விடுவான்.

ரேணு, ராகேஷ் லவ் ப்ரவீணாவுக்கு பிடிக்கவேயில்லை. ராகேஷ் ரேணு பற்றி என்ன நினைக்கிறான் என்று நிச்சயமாகத் தெரியக்கூட இல்லை. ராகேஷை வேலையிலிருந்து விலக்கும்படி கணவனிடம் தீர்மானமாகச் சொன்னாள்.

ஒரு ஏழையை பெண்ணுக்கு கல்யாணம் செய்தால் ஊர் தவறாகப் பேசும் என்று எச்சரித்தாள். ரேணு நிறையப் படித்து, அவர் பிஸினசை மேலே கொண்டு வந்து சாதிப்பாள் என்று நம்பினாள். அது தான் அவள் கனவும் லட்சியமும்.

ராகேஷ் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பது ப்ரவீணாக்கு ஓரளவு புரிந்திருந்தது, நிச்சயமாக அது அவள் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்று அவள் மனசில் தோன்றியது.

அவள் விசாரித்த வரையில் அவர்கள் குடும்பம் ரொம்ப ஆசாரம், பக்தி, பழைய கால வழக்கங்ளில் ரொம்ப நம்பிக்கை கொண்ட குடும்பம் என்று  தெரிய வந்தது. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் பிசினஸில் சாதனை புரிவது இருக்கட்டும். வீட்டை விட்டு தனியாக வெளியில் போக விடுவார்களா என்று கூடக் கவலையாக இருந்தது.

அவள் கனவு தவிடு பொடியானது. ஒரு நாள் ரேணு கல்லூரியிலிருந்து திரும்பி வரவில்லை. அவளிடம் இருந்து மறுநாள் ஒரு மெசேஜ் வந்த்து. தான் ராகேஷ் மேல் உள்ள நம்பிக்கையில் அவனோடு வாழ முடிவு செய்து அவனோடு போவதாகவும், கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயித்து பிறகு அவர்களை வந்து சந்திப்பதாகவும் ரேணு விளக்கியிருந்தாள்.

அந்த அதிர்ச்சி ப்ர்வீணாவை நிலைகுலையச் செய்தது. படுத்த படுக்கையானாள்.  ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்துக் கொண்டாள். எப்படியாவது ரேணுவைக் கண்டுபிடித்து அழைத்து வந்து அவள் வாழ்க்கையை சரியாக்கி விடுவது என்று தீர்மானித்தாள். எப்படி என்று  புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.

அவள் குடும்பத்தில் மற்றவர்கள் உதவியில்லாமல் முடியாது என்று தெரிந்து கொண்டாள். பார்க்கப் போனால் அவர்களுக்கு இது பற்றிக் கண்டிப்பாக விஷயம் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் என்று கூடத் தோன்றியது.

பிள்ளைகள் இருவரும் தீபாவளிக்காக வீட்டுக்கு வந்திருந்தார்கள். ரேணு இல்லாத வீட்டில் ஒருவருக்கும் பண்டிகை கொண்டாடுவதில் யாருக்கும் சுவாரசியம் இருக்கவில்லை. ஆனால் வேலைக்காரர்கள், ஆஃபிஸில் வேலை பார்ப்பவர்களுக்காக சில விஷயங்களைச் செய்ய வேண்டி இருந்த்து.

பண்டிகை முடிந்து ஓய்வாக இருந்த போது பிள்ளைகளிடம் பேச்சை ஆரம்பித்தாள். ரொம்பத் தயக்கமாக, பயமாகக் கூட இருந்த்து.

“அர்ஜுன், கொஞ்சம் கோப்பபடாம பொறுமையாக் கேளு. நம்ம ரேணுவும் ராகேஷும் பண்ணினது தப்பு தான். ஆனால், ரேணு அப்டி முடிவெடுத்ததுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கு தான். ஊர், உலகம் என்ன சொல்லும், அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டான்னெல்லாம் நினைச்சுண்டு தான் சொல்லாம கொள்ளாம எங்கயோ போயிருக்கா. ஆனா, உங்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா ஏதாவது விஷயம் தெருஞ்சுதா, ஏதாவது கேள்விப்பட்டீங்களா. அவா இரண்டு பேரையும் கண்டு பிடிச்சு அவங்க வாழ்க்கைக்கு உதவியா ஏதாவது பண்ணணுண்டா. உனக்கோ, தம்பிக்கோ எதாவது விஷயம் தெரியுமா?”

அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு நிமிஷம் மௌனமாக இருந்தார்கள். சின்னவன் தான் மொள்ள ஆரம்பிச்சான்.

“அம்மா, நானும் அண்ணாவும் ரெண்டு மாசம் முந்தி ரேணுவையும் மாப்பிள்ளையையும் பாம்பேல பார்த்தோம். அவா நன்னா தான் இருக்கா. உன் ஆசைக்கு எதிரா பண்ணின முடிவு தான் அவா தயக்கத்துக்குக் காரணம். ரேணு ரொம்ப நல்ல பையனைத் தான் செலக்ட் பண்ணியிருக்கா. அவன் அவளை நன்னாப் பார்த்துக்கறான். அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா. ஒரு விஷயத்தை நாம ஒத்துக்கணும், நாம ஆசைப்பட்ட படி வெளி ஒலகத்துல பெரிய பேர் எடுத்து சாதிக்கற ஆசை ரேணுவுக்கு இருக்கறதாத் தெரியலை. நல்ல புருஷன் அவன் என்னை நன்னா வச்சுப்பான், அவன் பேரில இருக்கற காதல் தான் பெருசுன்னு இருந்துடுவா தோணறது. அவளைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம். அவ கூடிய சீக்கிரம் நம்மளையெல்லாம் பார்க்க வருவா, கவலைப்படாதே”

“என்னடா இப்படிச் சொல்றீங்க?  நான் ரேணுவப் பத்தி எத்தனை கனவு வச்சிருந்தேன், அவளை வளர்க்கறதுல எத்தனை கவனம் காட்டினேன். அவளை ஒரு பெரிய பெரிய பிஸினெஸ் உமன் ஆக ஊரே புகழ மாதிரி ஆக்கணும்னு எத்தனை திட்டம் வச்சிருந்தேன். கடைசியில ஒரு சாதாரண குடும்பத்துப் பையனோடு வாழ்ந்து பிள்ளை குட்டின்னு வாழறதுக்கா இத்தனைக் கஷ்டப்பட்டேன்?”

“அம்மா, நீ ஆசைப்பட்டதுல தப்பில்லை, ஆனா அவ ஆசை வேறயா இருந்திருக்கு. ஒண்ணும் தப்பாப் போகலை, அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா, அவன் கிட்ட இருக்கற ஏதோ ஒரு குணம், இல்லை அவங்களுக்கு இடையில இருக்கற காதல் அவளைக் கட்டிப் போட்டிருக்கு. எது எப்படியோ, அவங்க சந்தோஷமா இருக்காங்க. அவ இன்னும் அழகு கூடி எப்டி இருக்கா தெரியுமா. நாங்க அவ வீட்டுக்குப் போயிருந்தோம். அவங்க எல்லாரும் அவகிட்ட இயல்பா ஆசையா இருக்கா. அவளும் விழுந்து விழுந்து வேலை செய்யற அழகென்ன, அவங்க எதுக்காகவோ திட்டின போது, சிரிச்சுண்டே சமாளிச்ச லாவகமென்ன, எங்களை அவ ஹஸ்பெண்ட் பிரியமா நடத்தின விதமென்ன. எல்லாமே ரொம்ப நன்னாயிருந்துது. நீ அவளைப் பத்திக் கவலைப்படாதே, அவ வாழ்க்கையை அவ பார்த்துப்பா, உன் கனவு நிறைவேறலைன்னு கவலைப் படறதில ஒரு லாபமும் இல்ல”

ப்ரவீணாவுக்குத் தான் தன் லட்சியத்தில் தோற்றுப் போனது புரிந்தது, ஆனாலும் ரொம்ப நிம்மதியாக இருந்ததென்னவோ உண்மை தான்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வழியும் வலியும் (கவிதை) – ✍ வைரமணி, திருச்சி

    மனம் (கவிதை) – ✍ சங்கீதா செந்தில்