இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தம்பி.. அந்த பனைமரம் பற்றி எரிவதை பார்த்ததும் என் இதயமே ஒரு கணம் நின்று விட்டது. உன்னை இடி மின்னலில் இருந்து காப்பாற்றிய நம் குலதெய்வம் ஊத்துக்காட்டில் குடியிருக்கும் எல்லம்மனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லாம் அவள் கருணை என்று தெய்வத்தை புகழ்ந்தான் சங்கபதுமன்.
ஆமாம் அண்ணா எல்லாம் அந்த தெய்வத்தின் அருள் தான். இடி மின்னலுக்கு பயந்து பனைமரத்தின் அடியில் இருக்கும் போது என்னை யாரோ அழைப்பது போல இருந்தது. அது ஒரு பெண் குரல். கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் சற்று பயமாகவும் இருந்தது. குரல் கேட்ட திசையை நோக்கி மெதுவாக நடந்து வந்தேன். அந்த குரல் இந்த பாறை குவியலுக்கு பின்னால் இருந்து கேட்டது. மீண்டும் மீண்டும் என் பெயரையே அந்த குரல் ஒலித்து கொண்டிருந்தது. இவ்விடம் வந்து பார்க்கும் பொழுது இங்கு ஒருவரும் இல்லை, என்னை அழைத்த குரலின் சத்தமும் நின்றுவிட்டது. அந்த நேரத்தில் தான் இடி மின்னல் தாக்கி அந்த பனை மரமும் பற்றி எரிந்தது, இதைக் கண்ட நான் இரு கைகளால் காதுகளை பொத்தி அமர்ந்து கொண்டேன் என்று நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான்.
தூமவதி பேச தொடங்கினாள், அந்த குரல் உன்னை காக்க வந்த உன் குலதெய்வத்தின் குரல்தான். தெய்வத்தின் பூரண அருளும், பகைவனை ஒரு நொடியில் சாய்க்கும் திறன் கொண்ட நீ இடி மின்னலுக்கு பயந்தாயா? என்னால் நம்ப முடியவில்லையே! என்று ஆச்சரியமாக கேட்டாள்.
அம்மா… என் தம்பி சலந்தாரி சமயோசித புத்திசாலி, திறமைசாலி, பகைவனை எதிர்க்கும் தைரியசாலி இருப்பினும் இவனுக்கு சிறு வயதிலிருந்தே ஒன்று மீது மட்டும் பயம், அது இந்த இடியும் மின்னலும் தான். சலந்தாரிக்கு ஆறு வயது இருக்கும் அப்போது வீட்டிற்கு முன் பெய்து கொண்டிருந்த மழையில் விளையாடிக் கொண்டிருந்தான். வேகமாக வந்த இடி ஒன்று அருகில் இருந்த வேப்ப மரத்தை தாக்கியதில் மரம் இரண்டாக பிளந்தது. இதை அருகில் இருந்து பார்த்த அவனுக்கு உடல் நடுக்கமும், காய்ச்சலும் வந்தது அதிலிருந்து அவனுக்கு இடி மின்னல் என்றாலே ஒரு பயம் தான் என்று கூறி முடித்தான் சங்கபதுமன்.
தன் பலவீனத்தை பற்றி தொடர்ந்து பேசுவதை விரும்பாத சலந்தாரியோ பேச்சை மாற்றினான்.
“நாம் செய்ய வேண்டிய காரியம் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. இங்கேயே இவ்வளவு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் இங்கிருந்து விரைவாக புறப்படுவோம்” என்றான் சலந்தாரி.
நாளை சூரியன் வருவதற்குள் பாதி வேலையாவது முடித்திருக்க வேண்டும். இங்கு நின்று கொண்டு பேசுவது வீண் பயன். வாருங்கள் செயலில் இறங்குவோம் என்று கூறிவிட்டு தூமவதி முன் நடந்தாள். அவளைத் தொடர்ந்து சங்கபதுமனும் சலந்தாரியும் பின் நடந்தனர்.
சலந்தாரி… நீ சென்ற வேலை என்ன ஆயிற்று? வெற்றிகரமாக முடிந்ததா? என்று தூமவதி கேட்டாள்.
ஆமாம் அம்மா சொல்லவே மறந்து விட்டேன் அதற்குள் தான் இந்த இடி மின்னல் வந்து இப்படி அலங்கோலம் செய்துவிட்டது.
இரவு 8 மணிக்கெல்லாம் மல்லையன் தங்கியிருக்கும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அவனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். நுழைவாயிலில் காவலன் ஒருவன் இருந்தான். முன்வழியாக சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று எண்ணி பின்புறம் வந்தேன். ஆள் உயரம் உள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றேன்.
கிழக்கு மேற்காக இரு வாசல் கதவுகளை கொண்ட வீட்டின் முன் இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் உள்ளிருந்து கதவு திறந்தது, வெளியே வந்த மல்லையன் காவலர்கள் இருவருக்கும் உணவினை கொடுத்து சாப்பிட சொன்னான். இதுதான் சரியான சமயம் என்று நினைத்தேன்.
உள்ளே செல்ல ஏதேனும் வழி கிடைக்குமா என்று காத்திருந்த எனக்கு இறைவன் வழிகாட்டியது போல் காவலர்கள் இருவரும் உணவினை எடுத்துக்கொண்டு, பின் வாசலுக்கு சென்றனர். மல்லையன் நுழைவு வாயிலில் உள்ள காவலனுக்கு உணவு கொடுக்க வெளியே சென்றான். இந்த நல்ல நேரத்தை பயன்படுத்தி உள்ளே சென்றேன்.
உள்ளே மொத்தம் நான்கு அறைகள் இருந்தது. அந்த நான்கு அறையையும் மல்லையன் வருவதற்குள் திறந்து பார்த்தேன். அதில் ஒரு அறையில் மட்டும் வித்தியாசமான பொருட்கள் இருந்தது. சிரசின் மேல் நாகங்கள் குடை பிடிக்க அமர்ந்த கோலத்தில் ஒரு அம்மன் சிலை 7 அடியில் இருந்தது. மேலும் சிறு சிறு சுவாமி சிலைகள், மண்பானைகள், ஓலைச்சுவடிகள், செப்பு தகடுகள் என்று பல இருந்தன. இந்த அறை நாம் பதுங்குவதற்கு சரியான இடம் என்று எண்ணினேன்.
அடுத்த அறையை திறந்தேன். கட்டில், மெத்தை, ஆடம்பரமான ஆடைகள், மேசை, அந்த மேசையின் மீது தண்ணீர் குவளை இதையெல்லாம் பார்த்து இந்த அறை மல்லையனின் அறையாக இருக்கும் என்று ஊசிதப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றேன். மேசை, கட்டில், அலமாரிகள் என்று எல்லா இடமும் தேடினேன். ஆனால், தேடி வந்த பொருள் மட்டும் கிடைக்கவில்லை.
இச்சமயத்தில் வீட்டிற்குள் யாரோ வரும் சத்தம் கேட்டு சுவாமி சிலை இருந்த அறைக்குள் வேகமாக சென்று அம்மன் சிலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன். இந்த அறையிலாவது நான் தேடி வந்த பொருள் கிடைக்குமா என்று அறையை சுற்றியே என் பார்வை இருந்தது. அறையின் மூலையில் வைத்திருந்த பூரண கலசம் ஒன்று என் கண்ணில் தென்பட்டது. வேகமாக சென்று கலசத்தின் மேல் வைத்திருந்த தேங்காயை எடுத்து உள்ளே பார்த்தேன்.
பன்னீர், தண்ணீர், வெற்றி வேர், ஏலக்காய் ஆகியவை நிறைந்திருந்த கலச குடத்தினுள் வெள்ளி தகடு ஒன்று இருந்தது. தேடிவந்த பொருள் கிடைத்த சந்தோசத்தில் அங்கிருந்து புறப்பட முயன்றேன். இந்த அறையை நோக்கி வேகமாக யாரோ வருவது போல் இருந்தது. இடுப்பில் சொருகி வைத்திருந்த கூர்மையான கத்தியை உருவிக்கொண்டு மீண்டும் அம்மன் சிலைக்கு பின்னால் வந்து பதுங்கிக் கொண்டேன்.
கதவு மெல்ல திறந்தது….
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings