in , ,

திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 1) – பாலாஜி ராம்

 இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அமாவாசை இரவின் நடுசாமத்தையும் கடந்தபின் வீசும் சுழல் காற்றும் அடிக்கும் பேரலையின்  சீற்றத்தையும்  தாண்டியும் ஒரு படகு மாமல்லபுரம் கடற்கரையை நோக்கி நகர்ந்து வந்தது. எங்கும் இருள் சூழப்பட்டதால் அந்தப் படகு சற்று தடுமாறியே முன்னேறியது.

பெய்யும் மழை சாரலில் கரையின் ஓரத்தில் கிழக்கு மேற்காக ஒருவன் நடந்து கொண்டிருந்தான். யாரோ ஒருவரின் வருகைக்காக காத்திருந்தவன் போல் கடலை நோக்கியே அவனது பார்வை இருந்தது.

மழையில் நனைந்தபடியே படகில் அமர்ந்திருந்த தூமவதி படகு செலுத்துபவனை பார்த்தாள். அவன் அந்த இருளில் படகை செலுத்துவதற்கு சற்று சிரமப்பட்டான். 

“அம்மா.. நம் கொண்டுவந்த டார்ச் லைட்டும் அடித்த மழையில் எரியாமல் போய்விட்டது, இந்த வேளையில் கரையை கண்ணால் பார்த்தால் கூட படகை செலுத்தலாம், ஆனால் இப்படி எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறதே இப்போது நாம் எப்படி கரையை அடைவது” என்றான் படகோட்டி சங்கபதுமன்.

இதைக் கேட்டதும் அமர்ந்திருந்த தூமவதி எழுந்து நின்று “ஓ சமுத்திர ராஜனே… நாங்கள் உன்னையே நம்பி இருக்கிறோம் நாங்கள் நல்லபடியாக கரையை கடக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கைகூப்பி வணங்கும்போதே, பெரும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து பெருத்த சத்தத்துடன் இடியும் சேர்ந்து வந்தது. மின்னல் வெளிச்சத்தில் படகில் இருந்தவன் கரையையும், கரையோரம்  நின்று கொண்டிருந்த பனை மரத்தின் அடியில்  மழைக்கு ஒதுங்கிய சலந்தரியையும் கண்டான்.

“அம்மா நாம் கரையை கடக்க இன்னும் கொஞ்சம் தொலைவு தான் விரைவிலேயே கரையை அடைந்து விடுவோம்” என்றவன் தொடர்ந்து பேசலாயினான். “இனி வரும் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு நம்முடன் சலந்தாரியும் சேர்ந்து பயணிப்பான்” என்று சங்கபதுமன் கூறியதும், நடுஇரவில் கடலுக்கடியில் தூங்கிக் கொண்டிருக்கும் மீன்கள் எல்லாம் அலறும்படியான ஒரு சிரிப்பு சத்தம் தூமவதியிடமிருந்து வந்தது.

கரையில் இருந்த சலந்தாரிக்கு இந்த இடியும் மின்னலும் ஒரு வித அச்சுறுத்தலை நடுக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் சங்கபதுமனுக்கோ அடுத்த மின்னல் எப்பொழுது வரும் வெளிச்சத்தில் படகை செலுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். அவன் எண்ணியது ஈடேறியது. 

இந்தமுறை வந்த மின்னலும் இடியும் பயங்கரமாக இருந்தது.  “ஆ…” என்று கத்தியவன் தனது இரு கைகளாலும் காதுகளை பொத்திக்கொண்டு தரையில் மண்டியிட்டான்.

‘ஓ… சமுத்திர ராஜனே… இந்த இடி மின்னல் மீண்டும் வராதளவு என்னை காத்தருள்வாய்’  என்று வேண்டினான் சலந்தாரி. 

இவன் வேண்டுதலை செவிமடக்காது சமுத்திர ராஜனும் இருந்துவிட்டான். கோர பசியுடன் வந்த இடியும் மின்னலும் நீண்ட பனைமரத்தை தனக்கு இறையாக்கியது. பற்றி எரியும் வெளிச்சத்தில் படகை சுலபமாக கரையில் சேர்த்து விடலாம் என்ற சந்தோசத்தில் படகை ஓட்டினான்.

திடீரென்று.. சலந்தாரியின் நினைவு இவனுக்கு வர அலறி துடித்தான். தூமவதியை பார்த்து “அம்மா… அதோ எரியும் பனைமரத்தின் அடியில் தான் என் ஆசை தம்பி சலந்தாரி நின்று கொண்டிருந்தான். அவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே!அந்த இடியும் மின்னலும் பனை மரத்துடன் சேர்த்து என் தம்பியையும் இறையாக்கிவிட்டதோ, ஐயோ! இது என்ன கொடுமை” என்று அலறினான். 

“ஊர் எல்லையில் நின்று கொண்டிருக்கும் தெய்வம் கருப்பனிடமே தனது வீரத்தை காட்டியவன், காளியின் பூரணமான அருளைப் பெற்றவன், எத்தனை பேர் சண்டைக்கு வந்தாலும் ஒரே ஆளாக நின்று எதிர்க்கும் திறன் கொண்ட சலந்தாரிக்கு இந்த இடி மின்னலால் பாதிப்பு ஏற்படுமா என்ன? கவலைப்பட வேண்டாம்! அவனுக்கு ஏதும் ஆகாது” என்று ஆறுதல் கூறினாள் தூமவதி.

இது ஏதும் ஏற்காத சங்கபதுமனின் மனதில் தன் தம்பியை பார்க்கும் ஆசை மேலும் கூடியதால் வேகமாக தனது படகை முன்னோக்கி செலுத்தினான். மழை சாரலின் வேகம் அதிகரிக்க கனத்த மழையால் எரிந்து கொண்டிருந்த பனைமரம் குளிர்ந்தது.

மீண்டும் நான்கு திசைகளிலும் ‘கும்’ இருட்டு நிலவ படகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. கரையை கடக்க இன்னும் சிறிது தூரம் இருக்கும் வேளையில் பேரலையின் சீற்றமும், காற்றின் வேகமும் அதிகரிக்க தள்ளாடிக் கொண்டே படகு முன்னேறியது. 

இந்த நேரத்தில் ஆள் உயரத்திற்கு வந்த பேரலை ஒன்று படகை தாக்க சாமர்த்தியசாலியான படகோட்டி சங்கபதுமனோ கட்டுபாடிழந்த படகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

படகுக்குள் நுழைந்த கடல் நீரில் முழுவதும் நனைந்த தூமவதின் கையில் அலையில் அடித்துக் கொண்டு வந்த அழகான சங்கு ஒன்று கிடைத்தது. உள்ளங்கையில் அடங்கும் அளவில் இருந்த அந்த சங்கை தனது புடவை முந்தானையில் முடிந்தாள்.

இதை எதையும் கவனிக்காத சங்கபதுமன் படகை விரைவாக செலுத்தி கரையை அடைந்தான். படகை விட்டு இறங்கிய தூமவதி சலந்தாரியைத் தேடி இங்கும் அங்கும் ஓடினாள். சங்கப்பதுமன் தான் ஓட்டி வந்த படகை பெரிய பனைமரம் ஒன்றில் கட்டி விட்டு தன் தம்பியை தேடி ஓடினான். 

கரையின் ஓரமாக குவிக்கப்பட்டிருந்த பாறைகளுக்கு அருகே நடுக்கமும் குளிரும் சேர்ந்து வாட்ட இருக்கைகளையும் இறுக்கி கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். 

“சலந்தாரி…. சலந்தாரி….” என்று சங்கபதுமன் குரல் ஒலித்தது.

தன் பெயரை தன் அண்ணன் குரலால் கேட்ட சலந்தாரி, குரல் கேட்கும் திசையை நோக்கி நடந்தான். எதிரே வந்த தன் தம்பியை பார்த்த சங்கபதுமன் ஓடி வந்து, கட்டி அணைத்து ஆறத்தழுவினான். எதிர்திசையில் தேடி சென்ற தூமவதியும் சிறிது நேரத்திலேயே இவ்விடம் வந்து சேர்ந்தாள். 

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் காதல் (கவிதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 2) – பாலாஜி ராம்