in ,

Deivanayaki AyyasamyDeivanayaki Ayyasamy

நம் வாழ்க்கை நம் கையில் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையில் எழுந்து பிரஷ் செய்துவிட்டு, லேசாக முகமும் கழுவி விட்டு ஒரு டவலால் துடைத்துக் கொண்டு நேராக சமையலறைக்குள் நுழைந்தாள் சியாமளா.

வண்டிக்குப் பெட்ரோல் போட்டால் தான் வண்டி ஓடும் என்பது போல், சியாமளாவிற்கு காலையில் பிரஷ் செய்துவிட்டு நல்ல ஸ்ட்ராங்காக கொஞ்சமாகப் பால் கலந்து, சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்து கொதிக்கக் கொதிக்க பில்டர் காபி குடித்தால்தான் சுகமான காலைப் பொழுது விடியும்.

சமையலறையில் அம்மா பார்வதி, ஒரு ஸ்டவ்வில் குக்கரை ஏற்றி விட்டிருந்தாள். இன்னொரு ஸ்டவ்வில் ஒரு அலுமினிய கடாயில் எண்ணெய் லேசாகக் காய்ந்து கொண்டிருந்தது. சியாமளாவைப் பார்த்தவுடன் ஒரு கிச்சன் டவலைப் பிடித்து பின்னால் இருக்கும் இன்னொரு அடுப்பில் தூக்கி வைத்து பாலை சூடாக்கினாள்.

ஒரு பீங்கான் கப்பில் பில்டரில் இருந்து காபி டிகாக்ஷனை பாதி கப் அளவு ஊற்றி விட்டு அளவாக சூடான பாலையும் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து நுரை வரும்படி ஆற்றி சியாமளா கையில் கொடுத்தாள்.

“அம்மா, உன் கையால் கலந்து கொடுக்கும் காபிக்குத் தனி ருசி. இதைக் குடித்த பிறகு தான் சுறுசுறுப்பே வருகிறது” என்றாள் அம்மாவைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டு. அவள் சிரிப்பில், அந்த வெண்ணிறப் பற்களின் அழகின் வரிசையில் பார்வதியே ஒரு நிமிடம் மயங்கி நின்றாள்.     

“அம்மா, அக்காவின் அழகைப் பார்த்து நீயே மயங்கி நின்றால் எப்படி?“ என்று சிரித்தாள் சியாமளாவின் தங்கை சிந்துஜா.

“என்ன செய்வது? அழகு இருக்கும் இடத்தில் அமைதி இல்லையே! வாயை மூடிக்கொண்டு வாழும் பெண்ணாக இல்லையே? வாயை மூடிக்கொண்டு பொறுமையாக வாழ்ந்திருந்தால், இன்று தனியாக நிற்பாளா?“

“கொள்ளைக் கூட்டத்தினர் மத்தியில் வாழ்வதற்கு இந்தத் தனிமையான வாழ்க்கை எவ்வளவோ மேல்“ என்றவள் சுவற்றில்  மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து ஒரு டவலை எடுத்துக் கொண்டு அவசரமாகக் குளியலறைக்குள் சென்றாள் சியாமளா.  

“புத்தி கெட்ட பெண்; ஊரில் யாரும் கேட்காததையா மாப்பிள்ளை கேட்டு விட்டார்? நாம் வசிக்கும் வீட்டைத் தானே கேட்டார்! அதற்கு பதில் அவர் சிந்துஜாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். திருமணத்திற்குப் பின் செய்யும் ஆடிச் சீர், தீபாவளி சீர் எல்லாவற்றையும் அவரே பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதாக்க் கூறுகிறார். என்னையும் கடைசிவரை அவரே பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார். ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் குடும்பத் தலைவனாக இருந்து பார்த்துக் கொள்வதாகக் கூறுகிறார். பார்த்துக் கொள்ளட்டுமே! நமக்கு ஒரு பிள்ளை இருந்தால் அவன் கேட்காமலே தரமாட்டோமா? இந்த சியாமளாவிற்கு ஈகோ; யாரையும் நம்ப மாட்டாள்” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

சியாமளா ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியை. அருகில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியையாக இருப்பதால் நல்ல சம்பளம்; அகவிலைப்படி, மற்ற அலவன்ஸ்கள் எல்லாம் சேர்ந்து அவள் எதிர்ப்பார்த்ததைவிட நிறையவே பணம் கிடைத்தது. 

அதுவும் இல்லாமல் பள்ளி முடிந்து நேரத்தோடு வீட்டிற்கும் வந்துவிடுவதால், அவள் வீட்டருகில் உள்ள ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷனும் எடுப்பாள். அதனால் அம்மா அவளை எந்த வீட்டு வேலையும் செய்யும்படிச் சொல்ல மாட்டாள். கல்லூரிப் பாடம், ரெகார்ட் வரைதல் போன்ற வேலைகள் நிறைய இருப்பதால் சிந்துஜாவையும் எந்த வேலையையும் செய்யும்படி சொல்ல மாட்டாள்.

மேல் வேலைக்கு அல்லி என்று ஒரு பெண்ணை வைத்துக் கொண்ட பார்வதி, அவளுக்கு வஞ்சனையில்லாமல் காலையில் காபி, டிபன் மதியம் சாப்பாடு எல்லாம் கொடுத்து விடுவாள். அதனால் அவளும் பார்வதிக்கு சமையலிலும் உதவி செய்வாள்.

அதனால் சியாமளா, சிந்துஜா இருவருக்கும் அவ்வளவாக சமைக்கத் தெரியாது. அவசரத்திற்குத் தான் சமைப்பார்கள்; தினமும் சமைக்க மாட்டார்கள். சியாமளாவின் திருமணத்தின்போது பார்வதி இதையெல்லாம் மறைக்காமல்தான் சொல்லியிருக்கிறாள்.

திருமணம் முடியும் வரை, அவர்களே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வதாகவும், சியாமளா  ஆசிரியையாகப் பணிபுரிந்தால் மட்டும் போதும்’ என்றவர்கள் ‘சிவா அவள் கையால் சமைத்தது தான் சாப்பிட வேண்டும் என்று தொந்தரவு செய்ததாகவும், தந்திரமாகப் பேசி  யூடியூப், சமையல் புத்தகம் பார்த்து சமைக்க வைத்து விட்டனர்.

அது கூட சியாமளாவிற்கு சந்தோஷம் தான். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்யலாம் என்று. ஆனால் சிவா நல்ல வேலையில், கை நிறைய சம்பாதிக்கிறான் என்ற காரணத்தால், அவள் அம்மா, அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த இரண்டு ஏக்கர் நிலத்தை அவன் பேசிய மாயா ஜால வார்த்தைகளில் மயங்கி சியாமளா பெயரில் வரதட்சிணையாகக் கொடுத்து விட்டார். கூடவே ஐம்பது சவரன் நகை வேறு.

சியாமளா அப்போதே அவள் அம்மாவிடம் கத்தினாள். “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு வேண்டும்” ஏன்றாள். அம்மாவிற்கு மாப்பிள்ளையின் நயமான பேச்சில் அபார நம்பிக்கை.

“அம்மா, உனக்கு நான் மட்டும் ஓரே ஒரு பெண்ணல்ல. என் தங்கை சிந்துஜா இருக்கிறாள். அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நீயும் உன் கடைசி நாள் வரை எந்த வித பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும். நீ என் கணவரும், மாமியாரும் பேசும் பேச்சில் மயங்கி நின்றால், மொத்தத்தையும் இழந்து நடுத்தெருவில் தான் நிற்பாய்“ என்று பயங்கரமாகக் கத்தினாள்.

“வாழ்க்கையில் யாராவது ஒருவரை நம்பித் தான் வாழ வேண்டும். நம் வீட்டில் தான் ஆண்பிள்ளை இல்லையே, மருமகப் பிள்ளையைத் தான் நம் பிள்ளையாக  நினைக்க வேண்டும். நீ அனுபவமில்லாத சின்னப் பெண், நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கவலைப்படாதே“ என்றாள் பார்வதி.

தலையில் அடித்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று விட்டாள் சியாமளா. அவர்கள் இருவரையும் பார்த்து ‘ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என்று பழைய பாடலைப் பாடிக் கொண்டு, ஸ்டைலாக தோள்களைக் குலுக்கிக் கொண்டு, வழக்கமான கல்லூரி மாணவிகளைப் போல பொறுப்பில்லாமல் தன் செல்போனை கொஞ்சிக் கொண்டு லேசாக சிரித்துக் கொண்டு போய்விட்டாள் சிந்துஜா.

சிவா, நல்ல ருசி கண்ட பூனையாகி விட்டிருந்தான். மாதந்தோரும் கணிசமான சியாமளாவின் சம்பளம் வாங்கி, கொஞ்சம் வீட்டிற்காக செலவு செய்து விட்டு, மீதிப் பணத்தை அப்படியே கணிசமாக ஒரு தனி அக்கௌன்டில் போட்டுக் கொள்வான். எந்த பணத்திற்கும் கணக்கும் தர மாட்டான். ஆனால் சியாமளா, தனக்கென்று மாதம் ஒரு நான்காயிரம் எடுத்துக் கொண்டு தான், மீதி இருபதாயிரம் ரூபாயை அவனிடம் கொடுப்பாள்.

“மொத்தச் சம்பளத்தையும் என் மகனிடம் கொடுத்துவிட்டுப் பிறகு கேட்டு வாங்கிக் கொள்வது தான் மரியாதை“ என்று மாமியார், மரியாதையைப் பற்றிப பாடம் எடுப்பாள். ஆனால் சியாமளா எதையும் கண்டு கொள்ள மாட்டாள்.

ஆனால் திடீரென்று ஒரு நாள் சியாமளா, அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள். காரணம் எதுவும் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்ட போது, “இனிமேல் அங்கே போகமாட்டேன்” என்பது தான் ஒரே பதிலாக இருந்தது.

சியாமளா அம்மா வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்களாகி விட்டன.  ‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்‘ என்று நினைத்த பார்வதி, பெண்கள் இருவரும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்ற பிறகு சிவாவின் வீட்டிற்குச் சென்றாள். அங்கே ஒன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை.

“நாங்கள் அவளை போகச் சொல்லவில்லை, எப்படிப் போனாளோ அப்படியே வரட்டும்” என்று விட்டேத்தியான பதில் தான் கிடைத்தது.

பார்வதி என்ன செய்வதென்றுத் தெரியாமல் திகைத்து நின்றாள். எந்த மாற்றமும் இல்லாமல் மேலும் ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் மாலை சியாமளா பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரத்தில், சிவா அவன் தாயுடன் கொஞ்சம் வாழைப்பழம் பூவுடன் வந்தனர்.

சிறிது நேரத்தில் சியாமளா வந்து அவர்களைப் பார்த்து திகைத்து நின்று விட்டாள். மரியாதைக்காக சிறிது நேரம் பேசிவிட்டு உள்ளே  போகத்  திரும்பியவளை, “எப்போது நம் வீட்டிற்கு வரப் போகிறாய்?” என்றார்கள் சியாமளாவிடம் நேராக.

“வங்கி லாக்கரில் வைக்கிறேன் என்று என்னிடம் கூறிவிட்டு, என் பெயரில் உள்ள, என் அம்மா கொடுத்த நிலத்தையும், ஐம்பது சவரன் நகைகளையும் அடகு வைத்து வாங்கிய பணத்தை நீங்கள் அதிக வட்டிக்கு விட்டது எனக்குத் தெரியும். என் நிலத்தையும், நகைகளையும்  எப்போது என்னிடம் திருப்பிக் கொடுக்கிறீர்களோ அப்போது தான் வருவதைப் பற்ற யோசிக்க முடியும்” என்றாள் திட்டவட்டமாக

“நான் என் நண்பனின் மருத்துவ சிகிச்சைக்குத் தான் உன் நிலத்தையும் நகைகளையும் வாங்கிக் கொண்டு போனேன். ஆனால் அவனுக்கு அப்போது கிட்னி மாற்று சிகிச்சை செய்ய அவன் பிளட் குரூப்பிற்கு ஏற்ற கிட்னி கிடைக்கவில்லை. அதுவரையில் அந்த பணத்தைக் கையில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வட்டிக்கு விட்டேன். நான் செய்தது தவறா அத்தை?” என்றான் ஒன்றுமே தெரியாத குழந்தை போல்.

“நன்றாக நடிக்கிறீர்கள், ஆனால் அதுவும் பொய்யென்று உங்கள் நண்பர் மூலமாகவே தெரிந்து கொண்டேன். ‌அப்போதுதான் வயிறெறிந்து நான் என் வீட்டிற்கு வந்து விட்டேன். நீ நல்லவனாக இருந்தால், என் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த நிலத்தையும் தங்க நகைகளையும் நீங்கள் கட்டாயம் திருப்பித் தருவீர்கள். ஆனால் நீங்கள் திருப்பித்தர மாட்டீர்கள் என்று நிச்சயம் தெரியும். இப்போது வசிக்கும் வீட்டையும் அபகரிக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் மனிதர்களா இல்லை உயிரோடு கொல்லும் பிசாசுகளா?” என்று வெறுப்புடன் கத்தினாள்.

“கத்தாதே, போனதெல்லாம் போகட்டும். நீ நம் வீட்டிற்கு வருவது எப்போது?” என்றான் சிவா.

கலகலவென்று சிரித்தாள் சியாமளா. “போனதெல்லாம் போகட்டும்  என்றால் என் நிலமும் தங்க நகைகளும் போனது போனது தான் என்கிறாயா?  தாலி கட்டிய ஒரே பாவத்திற்காக, எங்கள் ஒரே சொத்தான வீட்டையும் கொடுத்து, என் தங்கையின் எதிர்காலத்தையும் என் அம்மாவையும் உன்னிடம் அடகு வைக்க நான் தயாராக இல்லை. உன்னிடம் இழந்த என் சொத்துக்களையும் நான் மீட்பேன். இனி நான் உன்னை கோர்ட்டில் தான் சந்திப்பேன்” என்றாள்.

“உன்னை மாதிரி ஒரு திமிர் பிடித்தவளோடு என்னாலும் வாழ முடியாது. இனி நீ காலத்திற்கும் வாழாவெட்டி தான், புருஷன் இல்லாத அனாதைதான்” என்று கோபத்துடன் வேகமாக எழுந்தான் சிவா.

“உன்னைப் போல ஒரு திருட்டுக் கணவனின் சிறையிலிருந்து விடுபட்ட நான் அனாதை இல்லை, சிறகு முளைத்த பறவை. என் படிப்பை என் வேலையை வைத்துக் கொண்டு நான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வேன், பை. இனி நாம் கோர்ட்டில் சந்திப்போம்” என்றவள் அவர்கள் போக வெளியே கையைக் காட்டினாள்.

அவர்கள் வெளியே சென்ற பிறகு, “என்ன சியாமளா இப்படிச் செய்து விட்டாயே” என்றாள் பார்வதி கலக்கத்துடன்.

“அம்மா, நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்க வேண்டும். திருடர்களிடம் ஒப்படைக்கக் கூடாது” என்றாள் சியாமளா.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 2) – பாலாஜி ராம்

    தீதும் நன்றும் பிறர் தர வாரா (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி