எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னங்க, கிருஷ்ணன் அவன் குடும்பத்துடன் வடஇந்தியா டூர் நாளை கிளம்புகின்றான். விதுரனும் அவன் பேமிலியோடு மால்டீவ்ஸ் கிளம்புகிறான். நமக்கு அவர்கள் இருவரும் இல்லாதது ரொம்ப போர் அடிக்கும் இல்லையா?“ என்றாள் ஆண்டாள் என் அருமை மனைவி.
கிருஷ்ணன் எங்கள் முதல் மகன். அவனும் அவன் மனைவியும் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார்கள். அதிதி என்று ஒரே ஒரு மூன்று வயது செல்லப் பேத்தி. அவள் பிரி கேஜி, அருகில் உள்ள ஒரு கான்வென்டில் படிக்கிறாள்.
எங்கள் வீட்டிற்கு அடுத்தத் தெருவில் இருக்கும் மூன்று படுக்கை அறைகள் இருக்கும் ஒரு அபார்ட்மென்டில் இரண்டாவது அடுக்கில் இருக்கிறார்கள். எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு லக்ஷுவரி அபார்ட்மென்ட்.
நாங்கள் இருப்பது திருவல்லிக்கேணியில் ஒரு பழைய வீடு, மூதாதையர் சொத்து. நாட்டுஓடு வேய்ந்த வீடு. வீட்டில் நுழைவதற்கே ஏழு கருங்கல் படிக்கட்டுகள் இருக்கும். எந்த வெள்ளம் வந்தாலும் வீட்டினுள் வரமுடியாது. வீட்டின் இரண்டு பக்கமும் ஏழடி நீளமும் நாலடி அகலமும் கொண்ட ஒரு திண்ணை.
அந்தத் திண்ணையில் சுண்ணாம்பு ஒரு பட்டையும், செம்மண் ஒரு பட்டையும் அடிக்கப்பட்டிருக்கும். வீட்டிற்கு பெயின்ட்அடித்தே பழக்கம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் தவறாமல் கிளிஞ்சல் சுண்ணாம்புடன் நீலப்பொடி என்று ஒன்று சேரத்து சுவற்றிற்கு வெள்ளை அடிப்பார்கள்.
கலர்கலராகப் பெயின்ட் அடித்த எதிர் வீடு, பக்கத்து வீட்டு சுவர்களைவிட எங்கள் வீடு தான் பளிச்சென்று அழகாகத் தெரியும். ஆனால் கிருஷ்ணன் மனைவி மீராவிற்கு இந்த பழைய வீடு பிடிக்கவில்லை என்றாள்.
வீடு பிடிக்கவில்லையா, இல்லை எங்களைப் பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. இதில் விசேஷம் என்னவென்றால், என் மனைவிக்கு அவர்கள் தனியாகப் போனதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை.
தனிமையில், “ஆண்டாள், உனக்கு உன் பிள்ளை நம்மைவிட்டுப் போனதில் ஒன்றும் கவலையில்லையா?” என்று நான் தான் மிகுந்த வருத்தத்துடன் கேட்டேன்.
“இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? நீங்கள் இன்னும் போன நூற்றாண்டிலேயே இருக்கிறீர்கள்! இந்த காலத்துப் பெண்களைப் பற்றி நீங்கள் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை. வரும்போதே நம் வீடு பிடிக்கவில்லையென்று சொல்லி விட்டாள். அது பரவாயில்லை. நம்முடனே இருந்து நம் பென்ஷன் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் டெபாசிட் செய்யும் பல பிள்ளை, மருமகளைப் பற்ற எனக்குத் தெரியும். அது மட்டுமின்றி ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டு மாமியார், மாமனாரை வேலைக்காரர்களாக்கிவிடும் பல மருமகள்களைப் பற்றியும், அதைப் பற்றித் துளியும் கவலைப்படாத பிள்ளைகளைப் பற்றியும் எனக்குத் தெரியும்” என்றாள் மூச்சு விடாமல்.
தனிக்குடித்தனம் சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பேத்தியும் பிறந்து விட்டாள். அப்போது மட்டும் போய் ஒரு மாதம் உதவி செய்து விட்டு வந்து விட்டாள், ஆனால் பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்பே மருமகளின் பெற்றோர் வந்து விட்டனர்.
“ஒரேயொரு அழகான பேத்தி இருக்கிறாளே” என்றேன்.
“அவர்கள் குழந்தையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் என்ன பேபி சிட்டரா?” என்றாள்.
“நீ என்ன பக்கா பிஸினஸ் மேன் போல் பேசுகிறாய்?” என்றேன். ஆனால் அவள் ஒன்றும் பேசவில்லை. ஒரு மாதம் அமைதியாக கழிந்தது
ஒருநாள் ஆண்டாளின் தங்கைக்கு கர்பப்பை எடுக்க ஏதோ ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று என் மனைவியை உதவிக்கு அழைத்தாள். நான் என் மகன் கிருஷ்ணனுடன் தங்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தேன்.
அப்போது மகனும், மருமகளும் நடந்துகொள்வது சிறிது வித்தியாசமாக இருந்தது. மனதில் ஆண்டாள் ஒட்டும், ஒட்டாமலும் இருப்பது சரியோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது. நானும் அவர்களோடு அதிகம் சேராமல் பக்குவமாக இருந்து விட்டு தனியாக வந்து விட்டேன். ஆண்டாளும் வந்து விட்டாள்.
இரண்டாவது மகன் விதுரனுடனும் அவ்வாறே பழகினாள். விதுரன் மனைவி அப்பப்பா? பெரிய மருமகள் எட்டடி பாய்ந்தால் சுயநலமாக இருப்பதில் இவள் பதினாறடி பாய்ந்தாள்.
மீண்டும் ஆண்டாளின் தங்கையிடமிருந்து அவர்கள் வீட்டில் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது என்றும், அதற்கு கொஞ்சம் உதவி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு வந்தது .என்னையும் கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
என் சகலை என்னை விட வாயில்லாமல் பூச்சி. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டும் ஏசுபிரான். மழையே இல்லாவிட்டாலும் குளிரும் என்று மயிலுக்குப் போர்வை போர்த்தும் வள்ளல்.
ஆண்டாளின் தங்கையும் அவள் கணவனும் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள். பிள்ளையும் மருமகளும் கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே இருந்தார்கள்.
கதவைத் தட்டி அவர்களை வெளியே வரவழைத்தோம். அவர்கள் மகன் வாய் மூடி தலை கவிழ்ந்து நின்றான், மருமகள் தான் பயங்கரமாக கத்தினாள்.
“எங்களால் இவர்களை சகித்துக் கொள்ள முடியாது. எங்காவது ஹோமில் சேர்த்து விடுகிறோம் என்றால் போய்த் தொலைய மாட்டேன் என்கிறார்கள்” என்றாள்.
“இது அவர்கள் வீடு தானே. அவர்கள் ஏன் ஹோமிற்குப் போக வேண்டும்?” என்று நான் தான் மனம் பொறுக்காமல் கேட்டேன்.
“அவர்கள் எங்களுக்கு கிரயம் கொடுத்த இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. நாங்கள் வங்கியில் கடன் வாங்கி மாடியிலும் ரூம் கட்டி வாடகைக்கு விட்டு விட்டோம்” இப்போதும் அவர்கள் மருமகள் தான் பேசினாள்.
“சகலை, கிரயம் கொடுத்து வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள்?” என்றேன்.
“நான் எந்தப் பணமும் வாங்கவில்லை சகலை. மகன் வங்கியில் கடன் வாங்குகின்றானே என்று நான்தான் எந்தப் பணமும் வாங்காமல் கிரயம் செய்து கொடுத்தேன்” என்றவர் தலை கவிழ்ந்து நின்றார்.
‘அடப்பாவி’ என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போது தான் நான் என் மனைவி ஆண்டாளின் மகிமையை உணர்ந்து கொண்டேன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா; நம் கைப் பொருளை பிறரிடம் கொடுத்து, (பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும்) ஏமாறக் கூடாது என்பதும் நன்றாகப் புரிந்தது. ‘சம்சாரம் அது மின்சாரம் ‘ படத்தில் வரும் விசுவின் வசனம் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் போல் இருக்கிறது.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings