in

‘திருப்பட்டூர்’ கோவில் (பானுமதி வெங்கடேஸ்வரன்) – பிப்ரவரி மாத போட்டிக்கான பதிவு

'திருப்பட்டூர்' கோவில்

திருச்சியிலிருந்து  சென்னை நெடுஞ்சாலையில் முதல் டோலை தாண்டிய பிறகு, இடது பக்கம் பிரிகிறது திருப்பட்டூர் செல்லும் சாலை.

சிறிய கிராமம்.   இங்கிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சமீப காலங்களில் பிரபலமாகி இருக்கிறது. காரணம், இது பிரம்மா சிவனை பூஜித்து அவரை இங்கு வழிபடுகிறவர்களின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை பெற்றவர் என்பது நம்பிக்கை

மும்மூர்த்திகளுள் பிரம்மாவிற்கு தனியாக கோவில் கிடையாது. ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் விதிவிலக்கு.

திருப்பட்டூரைப் போலவே,  திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு (கொள்ளிடத்தின்) வடகரையில் அமைந்திருக்கும் உத்தமர் கோவிலிலும் பிரம்மாவுக்கு தனி சன்னதி உண்டு

சிவபெருமானைப் போலவே ப்ரம்மாவிற்கும் ஆதி காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் அவர் கர்வம் கொள்ளவே, சிவபெருமான் அவருடைய ஐந்தாவது தலையை கொய்து விடுவதோடு படைக்கும் தொழிலையும் அவரிடமிருந்து பறித்து விடுகிறார். 

தன் தவறை உணர்ந்து தன்னை மன்னித்து அருள வேண்டும் என்று பிரம்மா சிவபெருமானிடம் வேண்ட, அவரை பூமிக்குச் சென்று பல்வேறு தலங்களில் தன்னை பூஜிக்கும்படியும், தக்க தருணம் வரும் பொழுது தான் அவருக்கு அருள் புரிவதாகவும் கூறுகிறார்.

அதன்படி பூமிக்கு வந்து பல்வேறு தலங்களில் சிவபெருமானை வழிபட்ட பிரம்மா, இத்தலத்தில்  துவாதச லிங்கங்களை (12 லிங்கங்கள்) வைத்து வழிபட, மனம் மகிழ்ந்தார் சிவபெருமான்

பிரம்மாவுக்கு இழந்த பதவியை மீண்டும் தருவதோடு, இத்தலத்தில் பிரம்மாவை வழிபடும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப அவர்கள் தலை எழுத்தை மாற்றும் உரிமையையும் தந்தார் சிவபெருமான் 

பிரம்மாவால் பூஜிக்கப்பட்டதால், இங்கு உறையும் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்

பூலோகம் எங்கும் அலைந்து திரிந்ததால், தன்னுடைய பொலிவை இழந்த பிரம்மாவுக்கு, மீண்டும் தோற்றப் பொலிவை அருளியதால், இங்கிருக்கும் அம்மன் ‘ப்ரம்ம சம்பத் கௌரி’ அன்று அழைக்கப்படுகிறாள். 

கோவில் பெரியது என்று கூற முடியாது. அதன் அமைப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலைப் போகவே இருக்கிறது. 

அண்ணாமலையார் கோவிலைப் போலவே, இங்கும் தல விருட்சம் மகிழமரம்தான்.  உள்ளே நுழைந்ததும் கொடிமரம் தாண்டி, மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியில் பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி

அங்கு வணங்கிவிட்டு வெளியே வந்தால், வலது பக்கம் ஒரு மேடையில் பிரம்மாவின் சந்நிதி.  பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் ஒரு மேடையில் விநாயகர், முருகன், கஜலக்ஷ்மி கொலுவீற்றிருக்கிறார்கள்.

அங்கிருந்து திரும்பி கிழக்கு நோக்கி வரும் பொழுது, அம்மன் சந்நிதிக்கு செல்லும் வாசல். அதன் வழியே சென்று ப்ரம்ம சம்பத் கௌரி அம்மனை வழிபடுகிறோம்.

திருவண்ணாமலையிலும் இப்படித் தான், ஸ்வாமி சந்நிதியிலிருந்து பிரகாரம் சுற்றி வரும் பொழுது, இடதுபுற வாசல் வழியே, அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்

அங்கிருந்து இடபுறம் இருக்கும் வாசல் வழியே சென்றால், நந்தவன பகுதிக்கு செல்கிறது. அங்கு பூச்செடிகளுக்கு மத்தியில் சற்று பெரிய தனி கோவிலாக கைலாசநாதர் சன்னிதி இருக்கிறது

அதற்கு முன் பெரிய நந்தி உள்ளது. ஆனால் அந்த கோவில் விமானம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் எனும் நிலையில் தான் இருக்கிறது. ஆகவே அதை வலம் வர வேண்டாம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது

அதைத் தவிர, ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காளத்திநாதர், மண்டூகநாதர் என்ற பெயரில் தனித்தனி சிறு சன்னதிகள் உள்ளன.

கோவிலின்  ஸ்தல விருக்ஷமான மகிழம்பூ மரமும், கோவிலுக்கான திருக்குளமும் இங்கு தான் இருக்கின்றன. குளம் வித்தியாசமான வடிவில் (ஸ்வஸ்திக் வடிவோ என்று தோன்றுகிறது) இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட தண்ணியில்லாமல் வறண்டு கிடக்கிறது.

கோவிலின் உள்ளே பிரம்மா சந்நிதிக்கு எதிரே, யோக சாஸ்திரத்தை உலகுக்குத் தந்த பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இருக்கிறது. அங்கே அமர்ந்து தியானம் செய்வது நலம் என்கிறார்கள். 

இங்கிருக்கும் மூலவர் சன்னிதி எப்போதும் நல்ல வெளிச்சத்துடன் இருக்குமாம். பிரம்மா சிவ பெருமானிடம் வேண்டி இழந்த தன் படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றதால், வேலையில் பிரச்சனை இருப்பவர்களும், வேலை இழந்தவர்களும் இங்கு வந்து வழிபட வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், பிரம்மா தானே படைப்புக்கு அதிபதி, எனவே குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை.

இவை எல்லாவற்றையும் விட, சிவபெருமான் இங்கு வந்து பிரம்மாவை வழிபடும் பக்தர்களின் தலை எழுத்தை அவரவர் தகுதிக்கு ஏற்ப மாற்றி எழுதும் (இதை இரண்டு முறை படிக்கவும்) அதிகாரத்தையும் பிரம்மாவுக்கு வழங்கி இருக்கிறார். அதனால் தான் இப்போதெல்லாம் இங்கு அதிக கூட்டம்.  

பிரம்மா குருவுக்கு இணையானவர் என்பதால், அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையிலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும் அவரவர் ஜென்ம நட்சத்திர தினத்திலும் இங்கு வழிபடுவது சிறப்பு 

நான் இந்தக் கோவிலுக்கு இதற்கு முன் இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதல் முறை சென்ற பொழுது, ப்ரம்மா சந்நிதியில் எந்த தடுப்பும் கிடையாது. இரண்டாவது முறை சென்ற பொழுது, நடுவில் கம்பி தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.

இப்போது,  பக்தர்களை  உள்ளே அனுப்புவதற்கு வளைத்து வளைத்து வரிசை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு கோவில் வாசலில் பூ,பழம், அர்ச்சனை பொருள்கள், பிரம்மாவிற்கு சாற்ற மஞ்சள் வஸ்திரம் போன்றவை விற்கும் கடை. அதில் 12 பேர்கள் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எத்தனை பேர் வருவார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அதற்கு பக்கத்திலேயே காபி, டீ, வடை, சமோசா போன்றவை விற்கும் கடையும் இருக்கிறது.

காரை நிறுத்தியவுடன் ஒருவர் ரசீது புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கிங்  செய்யவதற்கு பணம் வசூல் செய்கிறார்.  எல்லா கோவில்களையும் போலவே இதை யார் வசூல் செய்கிறார்கள்? என்ற கேள்விக்கு விடை கிடையாது. நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. 

நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு பூக்கடையில் பூ வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது, ஐம்பது வயது தாண்டிய தம்பதியர் ஒருவர், “இந்த கோவிலில் எப்படி வழிபட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?, சிவனை தொழுது விட்டு ப்ரம்மாவை வணங்க வேண்டுமா? அல்லது ப்ரம்மாவை வணங்கி விட்டு சிவனை வணங்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அவர்கள் ஏதோ பத்திரிகையில் இந்த கோவிலைப் பற்றி படித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

“முதலில் சிவன் சன்னதிக்குத் தான் செல்ல வேண்டும். அங்கிருந்து ப்ரும்மா சன்னதிக்குச் செல்லலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களின் ஜாதகங்களை கொண்டு வந்திருந்தால் அதை ப்ரும்மாவின் சன்னதியில் வைத்து பூஜித்து கொடுப்பார்கள்” என்றேன்

கேட்டுக் கொண்டவர்கள், “ஜாதக நோட்டு கொண்டு வரவில்லை, சரி அடுத்த முறை பார்க்கலாம்” என்று தங்களுக்குள் பேசிவிட்டு, 

“ப்ரும்மாவிற்கு தாமரைப் பூ மாலை சாற்றுவது சிறப்பு என்று அந்த புத்தகத்தில் போட்டிருந்தது, தாமரை மாலை இருக்கிறதா? என்ன விலை?” என கடையில் இருந்த நபரிடம் கேட்க

“ஒரு மாலை இரண்டாயிரம் ரூபாய்” என்றார் அவர்

அவர்கள் ஜெர்க்காகி, வெறும் அர்ச்சனைத் தட்டு மட்டும் வாங்கிக் கொண்டு சென்றனர்.

நீங்களும் ஒரு முறை சென்று  ப்ரம்ம சம்பத் கௌரி சமேத பிரம்மபுரீஸ்வரரையும், நான்முகக் கடவுளான பிரம்மாவையும் வணங்கி விட்டு, அங்கிருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்ய முடியாவிட்டாலும், மௌனமாக அமர்ந்து விட்டு வாருங்கள். வாழ்க நலம்!

Amazon தளத்தில் உள்ள ஆன்மீக நூல்கள் பெற விரும்புவோர், கீழே உள்ள புத்தக இணைப்புகளை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம் 👇

           

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. சிறப்பான பதிவு பானும்மா. திருப்பட்டூருக்கு நான் இதுவரை சென்றதில்லை..

    • நன்றி ஆதி. அவசியம் ஒரு முறை சென்றுவிட்டு வாருங்கள்.

நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 5) – விபா விஷா – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

‘தப்பு’த் தாளங்கள்… (சிறுகதை) பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு