sahanamag.com
சிறுகதைகள்

‘தப்பு’த் தாளங்கள்… (சிறுகதை) பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

“ஏன் யா? இப்பிடி பண்ற? உன்னால நாலு காசு சம்பாரிச்சு பெத்த புள்ளைக்கு சோறு போட முடியுதாய்யா? வேற வேலைக்கு போகாம இதையே கட்டிட்டு அழுற. ஏதோ நோய் வந்து இப்போ எந்த விழாவும் இல்லாம வருமானத்துக்கு வழியும் இல்லாம கிடக்கோம். எப்போ தான் இதை விட்டுத்தொலைவ?” என தன் ஆதங்கத்தை கணவனிடம்  வெளிப்படுத்தினாள் அவள்.

வறுமையில் வாடிய உடலும் வேதனையில் பொழிவிழந்த முகமுமாய் இருந்தவவளின் கண்களில் இருந்து, நிற்காமல் வடிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

“எனக்கு இதை விட்டா வேற என்னடி தெரியும்? பாதி பயலுக இதை விட்டுட்டு வேற கூலி வேலைக்கு போயிட்டானுங்க. நமக்கு மரபுவழி வந்த கலைய விட, அவனுங்களுக்கு எப்பிடி தான் மனசு வருதோ தெரில. நானும் இதை விட்டுட்டா, இந்த ஊர்ல ‘தப்பு’ச் சத்தம் எவன் காதுக்கும் கேட்காது. இந்த கலையும் அழிஞ்சிடும்டி. நானாவது இதை வளக்கனும். என்கிட்ட காசு இல்லனாலும் இதோ இந்த பறை தான் என்னை நம்பிக்கையோட வாழ வைக்கிது, என்னைக்கவது விடிவு காலம் வரும்” என அவனும் தன் மனதிலுள்ளவற்றை கொட்டினான்.

“ஆமா… நல்லா வாழ வைக்கிது. அது எப்பிடி வாழ வைக்கிதுனு இவனப் பாருயா. நம்ம புள்ள நல்லா  சாப்பிட்டு ரெண்டு மாசம் ஆச்சுயா?” என அவள் காட்டிய திசையில் தன் மகனைப் பார்த்து அதிர்ந்தான்.

உடம்பில் இருக்கும் எலும்பின் அளவை இலகுவாக எண்ணுமளவிற்கு இருந்தது உடல். நிற்பதற்கு கூட தெம்பில்லாமல் சோர்ந்து போய் சுவரில் சாய்ந்து அமர்ந்து கண்மூடி அமர்ந்திருந்தான் பத்து வயது சிறுவன்

“இப்போ திருப்தியா உனக்கு? என்னை விடு. இன்னைக்கு  பசில என்ன செய்றதுனே தெரியாம பக்கத்து வீட்டில வெளிய கொட்டுன சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருந்தான்யா. நான் தான் போய் அவனை கூட்டிட்டு வந்தேன். என்னால….என்..னால இதை பாக்க முடியலயா. பெத்த வயிறு எரியுதுயா… இன்னுமா உன் கல் மனசு கரையல?” என்றவளது குரல் வார்த்தைக்கு வார்த்தை உடைந்தது.

இதைக் கேட்டவனது மனமோ முற்றிலும் உடைந்தது. இதற்கு மேல் அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தான் தோளில் சுமந்து திரிந்த தன் பிள்ளையின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

தன் நடுங்கும் கரங்களை கொண்டு மகனின் இரு கன்னங்களையும் பிடித்து கண்ணீர் விட்டான். தந்தையின் கண்ணீர் அவன் முகத்தில் பட்டதோ என்னவோ,   தன் கண்களை மெதுவாகத் திறந்துப் பார்த்தான் பிள்ளை

எப்போதும் கம்பீரமாக நிற்கும் தந்தை, இன்று தளர்ந்து போய் கண் கலங்க தன் முன் மண்டியிட்டு அமர்ந்ததை பார்த்தவன், “அப்பா… அழாத ப்பா. என்னை மன்னிச்சிடு ‘ப்பா, என்னால பசி தாங்க முடியாம தான் அப்பிடி பண்ணேன்” என சோர்வுடன் கூறி, தந்தையின் கண்களை தன் காய்ந்து போன கரங்களால் துடைத்து விட்டான்.

தன் மகனின் கரங்களை ஒரு கையால்  பற்றியவாறு மறுகையால் அவனை தன் நெஞ்சோடு சாய்த்து  அணைத்துக் கொண்டான்

பின் அவனைப் பார்த்து “நீ ஒண்ணும் தப்பு பண்ணல யா, எல்லாம் என்னால தான்” என கண்ணீர் விட்டான்.

அவன் மனையாளும் அருகில் அமர்ந்து, கண்ணீருடன் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள்

சிறிது நேரத்தில் இவர்களின் தகர வீட்டிற்கு அருகே யாரோ ஓடி வருவது கேட்க, வீட்டின் தலைவன், பறைக்கலைஞன் மருதன் எழுந்து வாயிலை நோக்கி செல்ல, அவன் மக்களும் பின் தொடர்ந்தனர்.

“மருதா…” என மூச்ச வாங்கியபடி அவன் முன் வந்து நின்றான் மருதனை ஒத்த வயதுடையவன்.

மருதனின் விழிகள் அவனைக் கேள்வியாக நோக்கியது.

“யெப்பா மருதா!  ஏதோ பாட்டு காலேசு பசங்களாம். போன வருஷம் நம்ம ஊர்  கோயில் திருவிழால எடுத்த வீடியோவாமே, அதில நீ தப்பு வாசிக்கிறதை பாத்துட்டு இப்போ உன்னை பாக்கணும்னு வந்துருக்காங்க” என அவன் பின்னே நின்ற மாணவர் கூட்டத்தை காட்டினான்

அவர்களைப் பார்த்த மருதன், “சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?” எனக் கேட்க

“சார் நாங்க மியூசிக் காலேஜ் ஸ்டூடன்ஸ். எங்க காலேஜ்ல தப்பு வாத்தியம் வாசிக்க சொல்லித் தர ஒரு நல்ல குரு இல்லைங்க. இப்போ தான் இந்த நோய் பிரச்சினை எல்லாம் கொஞ்சம் முடிய, இப்போவாது ஒருத்தர் கிடைக்க மாட்டாரானு இருந்தப்போ தான், உங்க கோயில் திருவிழா வீடியோ கிடைச்சது. அதான் உங்கள பாக்க வந்தோம்.  உங்களுக்கு மாசமாசம் பத்தாயிரம் தரோம். உங்க குடும்பத்துக்கும் தங்க ஒரு வீடு தரோம். நீங்க என்ன சொல்றிங்க? அது மட்டுமில்ல, அழிந்து போற கலைகள வளர்க்கனும்னு ஆசை படுறோங்க” என மாணவர்களுள் ஒருவன் சொல்லி முடிக்க

மருதனின் மனைவி தெய்வா, தன் கணவன் யோசிப்பதைப் பார்த்து, “சரினு சொல்லுயா” என ஊக்கினாள்

அந்த மாணவன் சொன்ன மற்ற விவரங்களை பெரிதாக விருப்பம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தவன், இறுதியாக அந்த மாணவன் ‘கலையை வளர்க்க வேண்டும்’ என கூறியதில் நிறைவடைந்தான்.

தன் கனவிற்கு ஒரு தூண்டுகோல் கிடைத்ததென மகிழ்ந்தான். பின் தன் மனையாளின் ஆவலையும் பார்த்து சம்மதித்தான்.

அந்த மாணவர்களும் மகிழ்ந்து அடுத்த வாரமே அவர்களது கல்லூரிக்கு வரும் படி அன்பு கட்டளையிட்டு விடைப்பெற்றனர்.

சிறிது நாட்களுக்கு பிறகு…

மாணவர்கள் சிலர் மருதனின் வழிகாட்டலுடன் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ‘பறை’ கலையை மீட்க முயன்று கொண்டிருந்தனர்

மாணவர்களை கவனித்துக் கொண்டிருந்த மருதன், கதவின் அருகே நின்று ஆர்வமாக மகன் பார்ப்பதைப் பார்த்து அவனருகில் சென்றான்.

அவனது உடல் சற்றுத் தேறியிருக்க, தன்  தந்தை தன்னருகே வந்ததும் பாய்ந்து  கட்டிக் கொண்டான்

“வாய்யா… உனக்கும் இதை படிக்க ஆசையா இருக்கா?”

“ஆமா ப்பா, எனக்கும் கத்துத்தறியா?”

“உனக்கில்லாததா?” என பிள்ளையை உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.

“ஏங்க… கதையளந்தது போதும் வந்து சாப்பிடுங்க” என்று மனைவி தெய்வா அழைக்க, குடும்பமாய் மகிழ்வுடன் உணவருந்தியவன், தன் மகனை அழைத்துக் கொண்டு உணவு இடைவேளை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு செல்ல கிளம்பினான் மருதன்

“ஏங்க ஒரு நிமிஷம்…” என அழைத்த தெய்வா

“நீங்க எப்பவும் சொல்றப்ப பைத்தியக்காரத்தனம்னு நினைச்சேன். ஆனா இப்ப உங்க ஆசையும் நிறைவேறி, அந்த பிள்ளைகள பாக்கும் போதும் சந்தோஷமா இருக்குங்க. உங்கள புரிஞ்சுக்காததுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்

“உன் மேல எந்தத் தப்பும் இல்லை தெய்வா. உன்னோட இடத்துல இருந்து நான் யோசிக்காம விட்டது என் தப்பு தான்” என சமாதானம் செய்தவன்

“இப்போ ஒண்ணு சொல்றேன், அதையும் ஞாபகம் வச்சுக்க. நான் வீழ்ந்தாலும் என் கலை வீழாது!” என உரைத்து விட்டு சென்றான்

கணவனை பெருமையுடன் பார்த்தபடி நின்றாள் தெய்வா

மாணவர்களில் ஒருவன், “சார் இந்த பறைல எத்தனை வகை இருக்கு” எனக் கேட்க

அவனும் ஒரு புன்னகையோடு கூறினான்.

“அரிப்பறை – அரித்தெழும் ஓசையையுடைய பறை.

அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).

ஆறெறிப் பறை – வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.[4]

ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).

உவகைப்பறை – மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)

சாப்பறை – சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)

சாக்காட்டுப் பறை – இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.

வெட்டியான்பறை – சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.

நெய்தற்பறை – நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115

பம்பை – நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).

தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40)

மீன்கோட்பறை – நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)

மருதநிலப்பறை – மருதநிலத்திற்குரிய பறை.

கல்லவடம் – ஒரு வகைப்பறை

குரவைப்பறை -குறிஞ்சிநிலத்துக்குரியது.

தடறு – தொண்டகப் பறை. (அக. நி.)

குறும்பறை – குறும்பறை இசை (புறநானூறு. 67, 9)

கொடுகொட்டி – ஒரு வகைப்பறை

கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43),

கோட்பறை – செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.

தமுக்கு – செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.

நிசாளம் – ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).

சூசிகம் – ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.

தக்கை – அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை.  (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)

தடாரி – பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)

பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)

தலைப்பறை – யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.

படலை – வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)

பண்டாரமேளம் – அரச விளம்பரங் குறிக்கும் பறை.

பன்றிப்பறை – காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)

முரசம், வெருப்பறை – போர்ப் பறைகள்.

முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).

பூசற்றண்ணுமை – பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக்

கொட்டும் பறை. (நன்னூல்)

முருகியம் – குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)

வெறியாட்டுப்பறை – குறிஞ்சிநிலப் பறை.

வீராணம் – ஒருவகைப் பெரிய பறை.

வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).

பஞ்சமாசத்தம் – சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.

என மாணவனின் கேள்விக்கு விளக்கமாய் பதிலளித்த மருதன், “இப்போ தெரிஞ்சிக்கிட்டிங்களா?” எனக் கேட்க

மாணவர்களின் கரகோஷம் அந்த அறையை நிரப்பியது

(பறை வகை தகவல்கள் – நன்றி விக்கிப்பீடியா )

“இவர்கள் போல் கலைஞர்கள் வாழும் வரை கலைகளும் வாழும்

-பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி-

ad#

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

  (முற்றும்)

 

Similar Posts

8 thoughts on “‘தப்பு’த் தாளங்கள்… (சிறுகதை) பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு
  1. இறுதியில் பறைகளின் வகைகளை குறிப்பிட்டிருந்தது கதையோட்டத்தோடு ஒட்டாமல் இருந்தது. மற்றபடி சிறப்பான கரு மற்றும் நடை.

  2. மாறி வரும் நவீன உலகில் தமிழர் கலையையும் கலையை வளர்ப்பவர்களும் படும் இன்னல்களை உங்கள் எழுத்துக்களில் படம் பிடித்து காட்டிய முயற்சிக்கும் உங்கள் மனதிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்🙏 தான் அழிந்தாலும் தன் கலை அழிந்துவிடக்கூடாது எனும் கலைஞரின் மனப்போராட்டத்தை உங்கள் எழுத்துக்களில் எடுத்துக்காட்டியதும் சிறப்பு ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!