in

“தெய்வம் இருப்பது எங்கே?” (சிறுகதை) -✍ முகில் தினகரன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

“தெய்வம் இருப்பது எங்கே?” (சிறுகதை)

ன்றைய தபாலில் வந்திருந்த கடிதத்தை கணவனிடம் நீட்டினாள் சுதா

அது பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவன் யோசனையுடன் பார்க்க, “நான் தான் பிரிச்சுப் படிச்சேன்” என அவளே வாக்குமூலம் தந்தாள்.

மெலிதாய் முறுவலித்தபடி கடிதத்தை படிக்க ஆரம்பித்தான் ரகுநாதன்

“த பாருங்க… அப்பனையும் ஆத்தாளையும் முழுங்கிட்டு ஆறுமாசமா தனியாளா கிராமத்துல கெடந்த உங்க அண்ணன் மகனுக்கு திடீர்னு உங்க மேலே பாசம் பொத்துக்கிச்சாம். உங்களைப் பார்க்க வர்றானாம். அனாதைச் சனியன், வந்து என்னத்தைக் கேட்கப் போகுதோ? ஐயாயிரம் குடு, பத்தாயிரம் குடுனு கேட்கப் போகுதோ? இல்ல, அங்க தனியா இருந்து பார்த்துட்டேன் முடியலை, அதனால இனி இங்கியே இருக்கறேன்னு சொல்லி அடைக்கலம் கேட்கப் போகுதோ தெரியலையே” ரகுநாதனை படிக்க விடாமல் பொரிந்தாள் சுதா

தலையைத் தூக்கி அவளை எரிப்பது போல் பார்த்த ரகுநாதன், “கொஞ்சம் படிக்க விடறியா?”

“படிங்க, நானா வேணாங்கறேன்? முன்னாடியே படிச்சிட்டதால விவரத்தைச் சொன்னேன், அவ்வளவு தான்” என்றாள்

நிதானமாய்க் கடிதம் முழுவதையும் படித்து முடித்த ரகுநாதன், யோசனையுடன் மேவாயைத் தடவினான்

“நீங்க எதையும் யோசிக்கவே வேண்டாம். இந்த ஒரு விஷயத்திலாவது புத்திசாலித்தனமா நான் சொல்றதைக் கேட்டு நடந்துக்கங்க, இல்லேன்னா தேவையில்லாத சிக்கல்ல மாட்டிக்குவீங்க”

“இப்ப என்ன பண்ணனுங்கற சுதா?”

“புதன்கிழமை தான வர்றதா எழுதியிருக்கான்? நீங்க செவ்வாய்கிழமையே கிளம்பி பழனி போய்டுங்க, நீங்க இங்க இருந்தா தான எதையாவது கேட்டு வைப்பான். அவன் கேட்டா, நீங்களும் இல்லேனு சொல்ல தைரியம் இல்லாம ‘சரி’னு பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டித் தொலைப்பீங்க. அதனால நீங்க இங்க இருக்கவே வேண்டாம். நான் அவன் வந்ததும் நீங்க கோவிலுக்குப் போயிட்டதா சொல்லிட்டு, நானும் எங்கம்மா வீட்டுக்குக் கௌம்பிட்டிருக்கேன்னு சொல்லிடறேன். அப்ப தான் அவன் உடனே போவான்”

ரகுநாதன் சற்றுத் தயங்க, “சரி… ஏதோ டீஸண்டா திருப்பியனுப்பறதுக்கு வழி சொன்னேன், இதுக்கும் ‘ம்ஹூம்’ சொன்னீங்கன்னா அப்புறம் நேரிலேயே பேசித் துரத்தியடிக்கறதைத் தவிர வேற வழியில்லை”

சுதா அப்படிச் செய்யக் கூடியவள் தான் என்பதை உணர்ந்த ரகுநாதன், “சரிடி, நீ சொல்ற மாதிரியே நான் பழனி கிளம்பிடறேன், நீயும் அவன்கிட்டப் பார்த்து பேசு. ரொம்பத் தரக்குறைவாப் பேசி, மரியாதைக் குறைவா நடத்திடாத…பாவம்”

“சரி…சரி” ஏதோ இந்த மட்டிலாவது ஒப்புக் கொண்டாரே என்ற சந்தோஷத்தில் தலையாட்டினாள் சுதா

புதன்கிழமை… பழனி கோவிலில் முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு கோவிலை சுற்றி நடந்து கொண்டிருந்த ரகுநாதன், செல்போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தான்.

‘சுதா காலிங்’ என்றது செல்போன் திரை

“ஏங்க… என்னாச்சு? சாமி தரிசனம் முடிஞ்சதா?”

“ம்ம்…ஆச்சு ஆச்சு. அது செரி, அவன் வந்துட்டானா? பேசித் திருப்பியனுப்பிட்டியா?”

“ம்… அவரு வந்துட்டாரு, சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்திட்டிருக்காரு”

“என்னது….அவரா? ஏய்…என்னாச்சு உனக்கு?”

“அதெல்லாம் நேர்ல பேசிக்கலாம், தரிசனம் முடிஞ்சுதல்ல? உடனே பொறப்பட்டு வாங்க”

“அவன் போகட்டும், அப்புறம் வர்றேன்”

“அவரு போக மாட்டாரு, நீங்க வந்ததும் உங்களைப் பார்த்துப் பேசிட்டுத் தான் போவாரு”

குழப்பத்திலாழ்ந்த ரகுநாதன், “சரி… நான் உடனே கிளம்பி வர்றேன், எப்படியும் ராத்திரி ஒன்பதுக்குள்ளார வந்துடுவேன்” என அழைப்பை துண்டித்தான்

இரவு ஒன்பதே முக்கால் மணி வாக்கில் வீட்டிற்குள் நுழைந்த ரகுநாதனை எதிர்கொண்டு வரவேற்றான் அவன் அண்ணன் மகன் தனபால்

“எப்படியிருக்கீங்க சித்தப்பா? கோவில்ல கூட்டமா?”

“ம்…ஓரளவுக்கு கூட்டம் தான். சரி நீ சாப்பிட்டியா?”

“நான் சாப்பிட்டாச்சு, நீங்க சாப்பிட்டுட்டு வாங்க, அப்புறம் பேசுவோம்”

அவன் அப்படிச் சொன்னதும் ரகுநாதனின் மனதில் அச்சம் புகுந்தது

 “அப்புறம் பேசுவோம்னு சொல்றானே? என்ன கேட்கப் போறானோ?”

இரவு பத்தரை மணி வாக்கில் காற்றாட மொட்டை மாடியில் அமர்ந்து பேச ஆரம்பித்த போது தனபால் சொன்ன விஷயம், ரகுநாதனை வாயடைக்க வைத்தது

“சித்தப்பா, மேக்காலத் தெருவுல அந்தக் கடைசி வீட்டுல ஒரு கெழவி பல வருஷமா சாகாம இழுத்திட்டே கிடந்ததல்ல? அந்தக் கெழவி பதினஞ்சு நாளைக்கு முன்னாடி செத்துப் போயிடுச்சு. யாருமே இல்லாத அந்த அனாதைக் கெழவியோட வீட்டை பஞ்சாயத்துக்காரங்க சோதனை போட்டு பத்திரங்களையெல்லாம் எடுத்துப் படிச்சுப் பாத்ததுல, அந்த வீட்டையும் மலையடிவாரத்துல கெழவி வாங்கிப் போட்டிருக்கற பத்து ஏக்கர் நெலத்தையும் என்னோட தாத்தா, அதாவது உங்க தகப்பனார் பேருக்கு எழுதி வெச்சிட்டுப் போயிருக்கு”

விழியிமைக்காமல் பார்த்தபடியே நின்றிருந்தான் ரகுநாதன்.

“அப்படிப் பார்க்கும் போது அந்தச் சொத்துக்கு இன்னிக்கு தேதில வாரிசுக நீங்களும் நானும்தான். ஆனா பஞ்சாயத்துல என்ன சொன்னாங்கன்னா, இந்த ஊர்ல இருக்கற பூர்வீக சொத்துக்கு பாத்தியதை உள்ளவங்க, ஊர்ல இல்லாம வெளியூருக்குப் பொழைக்கப் போயிட்டா, அவங்க பாத்தியதை ரத்தாயிடுமாம். ஆனாலும் பங்காளிகளா இருக்கறவங்க பிரியப்பட்டா அவங்களுக்கும் பங்கு தரலாமாம்”

“நான் என்னோட விருப்பத்தை பஞ்சாயத்துல சொல்லி, சொத்தை ரெண்டு பங்காப் போடச் சொன்னேன். இதோ உங்க பங்குக்கான பத்திரங்களைக் கையோட கொண்டு வந்திருக்கேன். உங்கள நேர்ல சந்திச்சு கைல குடுத்திட்டுப் போனா தான் எனக்கு நிம்மதி”

அண்ணன் மகன் சொன்னதைக் கேட்டதும், ரகுநாதனின் விழியோரம் லேசாய் நீர்க்கசிவு

 “இன்னிய தேதில அந்தப் பாதிச் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி தேறும். இதை இவன் சொல்லாமலே விட்டிருந்தாக் கூட எனக்குத் தெரிய வர துளி கூட சந்தர்ப்பமில்ல. ஆனாலும் மறைக்காம பஞ்சாயத்துல என்னை விட்டுக் குடுக்காம பேசி, எனக்கொரு பங்கைக் கொண்டு வந்திருக்கான்னா, இவன் எப்பேர்ப்பட்ட மனசுக்காரன். இவனைத் துரத்தறதுக்கா நான் பழனிக்கு ஓடினேன்…ச்சே”

ரகுநாதனின் மனம், நீர் வயல் போல் நெகிழ்ந்து போயிருந்தது

திரும்பி சுதாவைப் பார்க்க, அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் வழக்கம் போலவே இருந்தாள்

‘பாவிப் பெண்ணே, அஞ்சாயிரம் குடு…பத்தாயிரம் குடுனு கேப்பான், இல்லேன்னா ஆயுசு பூராவும் நம்ம கூடவே ஒட்டிக்கறேன்னு கேப்பான்னு சொன்னியே. பார்த்தியா அவன் சர்வ சாதாரணமா ஒண்ணேகால் கோடி ரூபாய் சொத்தை அள்ளி வீசிட்டுப் போறதை” என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்

“சரிங்க சித்தப்பா, டாகுமெண்ட்களையெல்லாம் பத்திரமா பீரோவுல வெச்சுக்கங்க. நான் காலைல நேரத்துல எந்திரிச்சு மொத பஸ்ஸூக்கு கௌம்பறேன்” என்ற தனபால், தன் கடமை முடிந்த உணர்வுடன் நிம்மதியாய் உறங்கச் சென்றான்

அன்றிரவு, குற்ற உணர்வில் உறங்காமல் தவித்தது மற்றொரு ஜீவன்

(முற்றும்)

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. தெய்வம் மனுஷ ரூபேண . தெய்வம் மனிதர்களின் மனதில் உறைகிறார் . அவரைப் போற்றுவதும் தூற்றுவதும் அவன் கையிலே தான் இருக்கிறது . மிகவும் அருமையான கதை . வாழ்த்துகள் சகோ . இன்னும் நிறைய எழுதுங்கள் . நன்றி . வணக்கம்

  2. முகத்தில் அறைந்திருக்கலாம். அதை விட இந்த தண்டனை கொடுமையானது. உண்மையில் தெய்வம் இப்படிப் பட்ட மனிதர்கள் உருவிலேயே வாழ்கிறது. நல்ல கதை. வாழ்த்துகள்.

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 7) – விபா விஷா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு                                

கேஷ் பேக் (சிறுகதை) ✍ திருமூர்த்தி.இரா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு