sahanamag.com
சிறுகதைகள்

கேஷ் பேக் (சிறுகதை) ✍ திருமூர்த்தி.இரா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

“டேய் மச்சா..! ஏன்டா டல்லா இருக்க? ” என தன் நண்பன் விவேக்கிடம் ராஜ் கேட்க

“கடன் ப்ராப்ளம் டா, அதான் எப்படி சமாளிக்கறதுனு தெரியாம குழம்பிப் போய் இருக்கேன்” என கவலையாய் உரைத்தான் விவேக். 

பேசிக் கொண்டே வந்தவர்கள், டீக்கடையில் நின்றனர்

“சேட்டா… ரெண்டு டீ” என இரு கோப்பை தேநீர் பெற்று, ஒன்றை தன் நண்பனிடம் கொடுத்த ராஜ்

“ஏன் மச்சா… இப்ப வாங்குற சம்பளத்துல சமாளிக்க முடியலையா?” எனக் கேட்க

“அட ஏன்டா நீ வேற… வாங்குற சம்பளம் வீட்டு செலவுக்கும் எனக்குமே சரியா இருக்கு. இதுல எங்க கடன் அடைக்குறது?  ம்ம்… ஆபிஸ்ல சீப் அக்கவுண்டண்ட் வேலை காலியா தான் இருக்கு, சம்பளமும் இன்னும் சேந்து வரும். ஆனா எனக்கு ஒரு வருசம் தான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு, அதனால அந்த வேலை கிடைக்கறது கஷ்டம்” என்றான்

“விடு மச்சா, ரெண்டு வருசம் கஷ்டபட்டு இங்க வொர்க் பண்ணு. அப்புறம் வேற கம்பெனிக்கு போனா நல்ல சம்பளம் கிடைக்கும்” என நண்பனை தேற்றினான் ராஜ்

“அதான் மச்சா நானும் நினைச்சிட்டு இருக்கேன்” என விவேக் கூறவும், அவன் சட்டைப்பையில் இருந்த கைப்பேசி, மாஸ்டர் படத்தின் ‘கியா முயா’ இசையை வெளியிட்டது.

அழைப்பை எடுத்தவன், “இதோ இப்பவே அமௌன்ட் ட்ரான்ஸ்பர்  பண்ணிடறேன் மேம், தேங்க்ஸ்” என கூறிவிட்டு, போனில் கூறியது போல் பணத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பினான். 

“என்னடா மச்சா? யாருக்கு அமௌன்ட் ட்ரான்ஸ்பர் பண்ற?”  என ராஜ் வினவ

“டிரஸ்ட்’ல இருந்து கால் பண்ணாங்கடா அதான் அனுப்புனேன்” என்றான் விவேக்

“ஏன்டா உனக்கு இருக்குற பிரச்சனைக்கு மாசா மாசாம் எதுக்குடா டொனேட் பண்ற?” என சற்றே கோபமாய் ராஜ் கேட்க

“மச்சா, நம்ம கஷ்டம் எப்பவும் தான் இருக்கும். என்னோட தேவையில்லாத செலவ கம்மி பண்ணி, அத தான்டா அனுப்பறேன். நான் அனுப்பற காசுல ரெண்டு பேர் ஒரு நேரமாச்சும் நல்ல சாப்பாடு சாப்புடுவாங்கடா” என்றான்

“ஐயா வள்ளல் தெய்வமே, டீக்கு நான் பே பண்ணிட்டேன் போவமா?” என்று கிண்டலாய் ராஜ் கும்பிட, சிரித்தவாறே இருவரும் தங்கள் இல்லம் நோக்கி பயணித்தனர்                                             

றுநாள் காலை, அலுவலகத்தில் விவேக் செலவு கணக்கு கோப்புகளை தேதி வாரியாக பிரித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்

அவனிடம் வந்த மேனஜர் மனோ,  “விவேக்… உங்களை எம்டி வரச் சொன்னார்” என கூறி விட்டு செல்ல

“எம்டி எதுக்கு நம்மள கூப்பிடுறாரு” என குழப்பமாக மேனேஜர் பின் சென்றான் விவேக்

“மே ஐ கம் இன் சார்?” என அனுமதி கேட்டு விவேக் நிற்க

மடிக்கணினியில் பார்த்துக் கொண்டே, “யெஸ் கம் இன் ” என்றார் மேனேஜிங் டைரக்டர் அர்ஜூன்

“சார்… இவர் தான் விவேக்” என மேனேஜர் அறிமுகம் செய்ய

“குட் மார்னிங் சார்” என்றான் விவேக்

“வெரி குட் மார்னிங் விவேக், உட்காருங்க. நீங்களும் உட்காருங்க மனோ” என்று எதிரே இருந்த நாற்காலிகளை காட்ட, இருவரும் அமர்ந்தனர்

“மிஸ்டர் விவேக் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல சீப் அக்கவுண்டண்ட் வேகன்ஸி இருக்கு. பாஸ்ட் ஒன் இயரா நீங்க எனர்ஜிடிக்கா வொர்க் பண்ரீங்க, அண்ட் பன்க்சுவலா பெர்பெக்டா இருகீங்க. அதனால, உங்கள அந்த போஸ்டுக்கு  ப்ரோமோட் பண்றேன், வித் 30% ஹைக். ஹெச்.ஆர்’ல ஆபர் லெட்டர் வாங்கிக்கோங்க, இப்ப நீங்க போகலாம்” என அர்ஜுன் கூற

நடப்பது கனவா நனவா என நம்ப இயலாத பிரமிப்புடன், “தாங்கயூ சார்” என மகிழ்வுடன் நன்றி உரைத்து விட்டு வெளியேறினான் விவேக்

விவேக் சென்றதும், “சார் நான் ஒண்ணு கேக்கலாமா?” என மேனேஜர் நிறுத்த 

“கேளுங்க மனோ” என்றார் அர்ஜுன்

“சார்… விவேக் ஜாயின் பண்ணி ஒன் இயர் தான் ஆகுது, அதுக்குள்ள இவ்ளோ பெரிய ஆபர், அதுவும் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல, ஏதாச்சும் தப்பு நடந்துட போகுது சார்” 

“மனோ, உங்ககிட்ட லாஸ்ட் இயர் நம்ம டிரஸ்டுக்கு வந்த டொனேஷன் லிஸ்ட் கேட்டேனே, எடுத்துட்டு வந்தீங்களா?”

“இதோ இருக்கு சார்” என கோப்பையைக் காட்டினார் மனோ. 

“அதுல யார் நேம் அதிகமா இருக்குனு செக் பண்ணுங்க” என அர்ஜுன் கூற

சிறிது நேரம் எடுத்து சரி பார்த்த மனோ, “அமௌன்ட் கம்மியா இருந்தாலும், விவேக் மாசா மாசம் டொனேட் பண்ணி இருக்கார் சார்” என்றார்

“யெஸ்… அதான் விஷயம். இவ்வளவு லோ சாலரிலயும் டொனேட் பண்ணிருக்காரு, அப்படிபட்டவர் தப்பு செய்ய மாட்டார். அதனால தான் 30% ஹைக்கும் ப்ரோமோஷனும் குடுத்தேன்” என அர்ஜுன் விளக்கமளிக்க

“கரெக்ட் தான் சார்” என ஆமோதித்தார் மேனேஜர்

தேவையில்லாத செலவை கட்டுப்படுத்தி தானம் செய்த பணம், மீண்டும் விவேக்கிற்கே கிடைத்தது, பம்பர் கேஷ் பேக்’காக

(முற்றும்)

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Similar Posts

4 thoughts on “கேஷ் பேக் (சிறுகதை) ✍ திருமூர்த்தி.இரா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு
  1. அருமை . நல்லகதை . அறம் செய்ய விரும்பு என்று ஔவையார் பாட்டி கூறியுள்ளார் . வாழ்த்துகள் . இன்னும் நிறைய எழுதுங்கள்

  2. அனுபவ பூர்வமான உண்மை. இதை நாமும் பல விஷயங்களில் உணர்ந்திருப்போம். நல்ல மனதுள்ள விவேக்குக் கிடைத்த வெற்றி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!