in

நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 5) – விபா விஷா – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

நீரினைத் தேடிடும்...❤ (பகுதி  5)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ந்த நள்ளிரவு வேளையில் ஆதித்யன் போன் செய்ததே ஆச்சர்யமான விஷயமென்றால், அவர் எதையோ பார்த்து பயந்ததைப் போலப் பாதிப் பேச்சில் போனை வைத்துவிட, பயந்து போன ஜானவி, தன் அண்ணனுக்குப் போன் செய்தாள்

நைட் டியூட்டிக்கு சென்றிருந்த அவன்,  வழக்கம் போல் அவளது அழைப்பை ஏற்கவில்லை

மேலும் நான்கைந்து முறை முயற்சி செய்ய, ஓயும் நேரம் போன் எடுக்கப்பட்டது.

“ஹலோ குகன்… குகன், நான் பேசறது கேக்குதா? நீ பேசறது எனக்கு சரியா கேக்கல. சரி பரவால்ல, நான் சொல்றத மட்டும் கேளு. நம்ம ஆதித்யன் சார் இப்போ வரைக்கும் மலையில தான் இருந்துருக்காரு. கொஞ்சம் முன்னாடி எனக்குப் போன் பண்ணினாரு, பேசிட்டே இருந்தவர் எதையோ பார்த்து பயந்து பாதிப் பேச்சுல கட் பண்ணிட்டாரு, எனக்கென்னமோ பயமாருக்கு. அதனால நான் இப்ப அங்க போறேன், நீயும் முடிஞ்சா அங்க வந்துடு” என்று படபடவெனக் கூறி அழைப்பை துண்டித்தவள், போனில் சொன்னது போல் கிளம்பினாள்

வீட்டிலிருக்கும் தாய் தந்தையிடம் கூட எதுவும் கூறாது, பதட்டத்தில் தன் போக்கில் வண்டியைக் கிளப்பி புறப்பட்டாள் ஜானவி

அங்கு மலையடிவாரத்தில் ஆதித்யனின் பைக் கீழே விழுந்து கிடந்தது, அவரது பையும் ஒரு ஓரமாக கிடந்தது

அப்படியானால், அவர் மலையை வீட்டுக் கீழிறங்கி கிளம்பும் நேரத்தில் தான் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்க வேண்டும் என கணித்துக் கொண்டு, அவரது பொருட்கள் சிதறி இருக்கும் பக்கம் சென்றாள் ஜானவி

திடீரென தூரத்தில் யாரோ முனகுவது போல் கேட்க, சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தாள்

செடி கொடிகளுக்கிடையில் யாரோ இருப்பது போலத் தோன்ற, அவற்றை விலக்கி  விட்டு அங்குச் சென்றவள் அதிர்ந்தாள்

அங்கு அந்த முட்புதர்களுக்கிடையில், உடலில் வழிந்தோடும் குருதி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார் ஆதித்யன்

“ஆதி சார் ஆதி சார்… என்னாச்சு உங்களுக்கு? சார்…சார்… சார்…” என ஜானவி கதற, மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்த உயிர்பறவைக்குச் சற்று கடிவாளமிட்டு நிறுத்தி, கண் திறந்தார் அவர்

“ஷ்ஷ்ஷ்… ஜானவி, சத்தம் போடாத. அவன் பக்கத்துல தான் இருப்பான், என்னை காப்பாத்த முடியாது, என் முடிவு நெருங்கிடுச்சு. நீ போ… போ…” என்று அவளைக் கிளப்ப எத்தனித்தவர்

“ஒரு நிமிஷம்” என்று அவள் கரம் பற்றி, தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி அவளிடம் அளித்தார்

“இது… இது… உனக்குத் தான். இது உன்கிட்ட தா இருக்கணும், இனி எல்லாம் நீ தான். கிளம்பு கிளம்பு, போ..” என்று மிகவும் சிரமப்பட்டுக் கூறியவாறே, மெல்ல விழி மூடினார்

“சார்… சார்.. இங்க பாருங்க சார்…” என்று ஜானவி கதறிக் கொண்டிருக்க

“டேய் அங்க யாரோ வந்துட்டாங்க பாருடா” என்று ஒருவன் பேசும் குரலும், நான்கைந்து பேர் அவளிருக்கும் இடம் நோக்கி வரும் அரவம் கேட்க, வேகமாய் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ஜானவி

அதே சமயம் ஜானவி மலையை நோக்கி சென்றதை அறிந்த யாதவோ, அவ்விடம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்

ஜானவி அவள் அண்ணனின் கைபேசிக்கு அழைத்த போது, மலையூர் அரசு மருத்துவமனையில் யாரோ விபத்தில் மரணமடைந்து விட, அவரின் உறவினர்களோ, மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் அவர் உயிர் பிரிந்தது என்று போராட்டம் செய்து கொண்டிருந்தனர்

அவர்களது போராட்டத்தை அடக்கவும், அங்குக் குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைச் சமாளிக்கவும் யாதவ் மற்றும் குகன் அவர்களது குழுவினருடன் அங்கே தான் இருந்தனர்

அந்தச் சமயத்தில் ஜானவி தொடர்ந்து குகனுக்கு அழைக்க, குகன் பேசும் சூழ்நிலையில் இல்லாததால் அந்த அழைப்பை எடுத்தான் யாதவ்

அப்போது தான் ஜானவி மலைக்குச் செல்வதாகக் கூறியது மட்டும் காதில் விழுந்தது. அழைப்பில் ஏதோ பிரச்சனை இருக்க, ஆதித்யன் சார் அழைத்ததை பற்றி சொல்லிய விவரம் எதுவும் சரியாய் கேட்கவில்லை

குகன் பத்திரிக்கையாளர்களைச் சமாளித்துக் கொண்டிருக்க, ‘தானே ஜானவியை சென்று பார்ப்போம்’ என தன் இயந்திரக் குதிரையைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்

மற்றொருவனும் பின் தொடருகிறான் என்பதை யாதவ் அப்போது அறியவில்லை

யாதவ் மலைக்கருகில் சென்ற சமயம், ஏதோ வாகனம் நேரே வந்து அவன் பைக்கில் மோத, வண்டியை ஓட்டி வந்த இருவரும் கீழே சரிந்தனர்

யாரந்த மற்றொருவர், அவருக்கு ஏதேனும் அடிபட்டிருக்கிறதா என பார்த்தவனது முகம், கோபத்தில் சிவந்தது 

“ஏய்… அறிவிருக்கா உனக்கு? மணி என்ன ஆகுது, இந்நேரத்துல ஊர் சுத்திட்டுருக்க? அதுவும் இப்படி நேரா வந்து வண்டில விழற? போ போய் லாரி ஏதாவது வந்துச்சுன்னா அதுல போய் விழு” என்று கத்திக் கொண்டே போனவன்

தனது பேச்சிற்கு எவ்வித மறுமொழியும், ஏன் சிறு அசைவும் கூட இன்றி தரையில் அமர்ந்திருந்த ஜானவியின் அருகே குழப்பத்துடன் சென்றவன், “ஜானவி.. ஏய் ஜானவி.. என்னாச்சும்மா? விழுந்ததுல அடி ஏதாவது பலமா பட்டுடுச்சா?” என்று வினவினான்

அதற்கும் பதிலின்றிப் போகவும், “ஜானவி.. ஜானு…” என அவளைப் பிடித்து உலுக்க, அப்பொழுது தான் சுயநினைவிற்கே வந்தவள்

“யாதவ்.. அங்க.. அங்க.. அவர்.. அவரை யாரோ கொன்னு… கொன்னுட்டாங்க..” என்று மழையில் நனைந்த புறாவென நடுநடுங்கி, வார்த்தைகளைக் கோர்வையாகப் பேச இயலாது தடுமாறினாள் 

அவள் எதைக் கண்டோ மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என உணர்ந்தவன், மெல்ல அவளை எழுப்பி அங்கே அருகிலிருந்த மரத்தின் அடித்தண்டில் அமர வைத்து, மெல்ல ஆறுதலாய் அணைத்து தேற்ற முனைந்தான்

அப்பொழுது பலநூறு மின்னல்கள் ஒருசேர கண் முன் தோன்றிட, இருவரும் விதிர் விதிர்த்துப் போய் எழுந்தனர்

அவர்கள் முன்பு, அங்கு மருத்துவமனையில் இருந்த ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் நின்றிருந்தனர்

அப்பொழுது, “என்ன சார்.. நள்ளிரவில் இளமங்கையுடன் சல்லாபம்னு முதல் பக்கத்துல போடட்டுமா?” என்று கோணல் சிரிப்புடன் கேட்டான், யாதவைப் பின் தொடர்ந்து வந்த அந்த பத்திரிகை நிருபர்

அவன் தான் மருத்துவமனையிலிருந்து கிளம்பியதுமே, தனது மற்ற சகாக்களிடம், ‘யாதவ் எங்கேயோ ரகசியமாய்ச் செல்கிறான்’ என்று தகவல் அனுப்பியது

ஏனெனில், அவன் சற்று முன்பு மருத்துவமனையில் யாதவிடம் எக்குத்தப்பாகக் கேள்வி கேட்டு, நன்றாய் வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அந்த எரிச்சலில் தான், குகனிடம் பத்திரிக்கையாளர்களைச் சமாளிக்கும்படி கூறிவிட்டு உள்ளே வந்தான் யாதவ். அதன் பொருட்டே குகன் போனிற்கு வந்த ஜானவியின் அழைப்பை யாதவ் ஏற்க நேர்ந்தது

இப்பொழுது அதே பத்திரிகை நிருபர், தன்னை அத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியவனை பழிவாங்கும் வெறியோடு, அவனுடன் இருக்கும் ஜானவியையும் சேர்த்து கேவலப்படுத்தினான்

“ஏய் இதுக்கெல்லாம் நீ தான் காரணம்னு தெரியும், உண்மை தெரியாம எதுவும் பேசாத” என்று அந்த நிருபரிடம் எகிறிய யாதவ், அப்பொழுது அங்கு அதிர்ச்சியுடன் வந்த குகனைப் பார்த்து

“குகா… இது நீ நினைக்கற மாதிரி இல்லடா. என்னை நம்பலைனாலும் பரவால்ல… உன் தங்கச்சிய நம்பு” என்று கூறிக் கொண்டிருக்கையில்

மீண்டும் இடைபுகுந்த நிருபர், “ஏன் சார் எங்களை எல்லாம் பார்த்ததுக்கு அப்பறம் இப்படிப் பூசி மொழுகறீங்க? இது யாரு? உங்களுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? அது பெர்சனல் உறவா? இல்ல பிசினஸ் உறவா?” என்று மேலும் கேவலமாகப் பேச முனைந்தவனை, யாதவ் கொலைவெறியுடன் தாக்க முற்படும் முன்னே, யாரோ அந்த நிருபரை பளாரென்று அறைந்து விட்டிருந்தனர்

அது யாரென்று திரும்பிப் பார்த்த யாதவ், மயக்கம் போடாத குறை தான். ஏனெனில், அங்கு இருந்தது யாதவனின் தந்தை சர்வேஸ்வரன்

யாதவ் ஸ்தம்பித்து நிற்க, அவன் தந்தையோ “யாரப் பார்த்து என்ன வார்த்தை சொல்றடா? அவ எங்க வீட்டு பொண்ணு. என் மருமகப் பொண்ணைப் பார்த்து இப்படிப் பேசின உன் நாக்கை அறுக்கல, என் பேரு சர்வேஸ்வரன் இல்லடா” என்று கர்ஜிக்க, அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் ஒரு நொடி உடல் உதறத் தான் செய்தது

ஆனால் யாதவோ, “ஐயோ இவர் இங்க என்ன பண்றாரு? அடக்கடவுளே, நாம தான கோவையில் இருந்து வாடகை காருல வீட்டுக்கு போய்ட்ருந்த அப்பாவை, டயர்டா இருக்குனு ஆஸ்பத்திரில இருந்து நம்மள வீட்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னோம். மனுஷன் ஆஸ்பத்திரி போய் அங்க விசாரிச்சுட்டு, நேரா இங்க வந்துட்டாரு போலயே? வந்தது தான் வந்தாரு, இப்படிக் கண்டதையும் உளறி, எதுக்கு இடியாப்ப சிக்கல்ல இன்னும் நாலஞ்சு முடுச்சு சேர்த்து போடணும்?” என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்க

அங்கிருந்த மற்ற பத்திரிக்கையாளர்களோ, “என்ன சார் இந்தப் பொண்ணு உங்க மருமகளா? உங்க பையனுக்குத் தான் இன்னும் கல்யாணமே ஆகலேயே? அதுக்குள்ள எப்படி மருமகள்னு சொல்றீங்க? என்ன சார் பையன் பேரு இப்படிக் கெட்டு போச்சேனு கண்ட கழிசடையையும் மருமகளாக்கப் பாக்கறீங்களா?” என்று அவரைக் கேள்விகளால் துளைக்க, சர்வேஸ்வரனோ மிகவும் நிதானமாகப் பதில் சொல்லலானார்

“ஏங்க கல்யாணம் ஆனா தான் மருமகளா? என் பையனுக்குக் கல்யாணம் பேசி முடிச்சாச்சு, அடுத்த வாரம் கல்யாணம். ஏதோ இங்க ஆஸ்பிடல்ல நைட் டூட்டி, பக்கத்துல தான பொண்ணு வீடு, அப்படியே வருங்கால மனைவியைப் பார்த்துட்டு போகலாம்னு வந்துருப்பான். இதுக்குப் போய் இவ்வளவு கேவலமா பேசறீங்க? நாளைக்கு மட்டும் என் மகனைப் பத்தியோ, மருமகளைப் பத்தியோ உங்க பேப்பர்ல ஏதாவது தப்புத் தப்பா எழுதினீங்க… உங்க எல்லார் மேலயும் மான நஷ்ட வழக்கு போட்டுடுவேன்” என்று மீண்டும் ஒரு கர்ஜனை செய்தார்

இதற்கு இடையில் புகுந்து என்ன சொல்லுவது என்று தெரியாமல் யாதவ் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, அங்கு நடப்பது எதுவுமே புரியாத நிலையில் இருந்தது ஜானவியும் குகனும் தான்

ஜானவி பயத்திலும், குகன் புரியாத பார்வையுடனும் இருக்க, அவர்கள் புறம் திரும்பிய பத்திரிகையாளர்களை, மீண்டும் தன் வசமே திருப்பினார் சர்வேஸ்வரன்

“நீங்க என்ன கேக்கறதா இருந்தாலும் என்னைக் கேளுங்க. எதுக்கு அவங்கள தொந்திரவு பண்ணிக்கிட்டு” எனக் கூறி, அவர்களைச் சற்றுத் தொலைவில் அழைத்துச் சென்றார்.

இங்குக் குகனோ, “என்ன சார் நடக்குது? ஏய் ஜானு என்ன இதெல்லாம், நீ எதுக்கு இந்த நேரத்துக்குத் இங்க தனியா வந்த” என கத்தத் தொடங்கினான்

அதற்கு ஜானவியோ அப்பொழுது தான் முழிப்பு வந்தவளாய், இம்முறை கொஞ்சமே கொஞ்சம் நிதானத்தோடு, “அண்ணா அப்போ நீ போன் எடுக்கலயா? நான் உனக்குத் தான கூப்பிட்டேன். ஆதி சார் மலையில தனியா இருக்கார் அவருக்கு ஏதோ ஆபத்துனு சொன்னனே? அப்போ வேற யாரு போன் எடுத்தா?”எனவும் 

“உங்கண்ணன் பிஸியா இருந்ததால நான் தான் எடுத்தேன், ஆனா நீ பேசினது சரியா கேக்கல. என்னமோ மலைக்கு போறேன், வந்துடுனு சொன்னது மட்டும் கேட்டுச்சு, அதான் கெளம்பி வந்தேன்” என்றான் யாதவ்                              

“அங்க மலையடிவாரத்துல… ஆதி சார் ரத்தக் காயத்தோட கிடக்கறாரு. அவரை யாரோ கொலை பண்ண முயற்சி பண்ணிருக்காங்க, என்னையும் அவங்க கொல்றதுக்கு துரத்தினாங்க. நான் பயந்து போய் வண்டிய எடுத்துட்டு வேகமா வந்துட்டேன், அண்ணா அங்க போய்ப் பார்க்கலாம்ணா. என்கிட்ட பேசினப்ப அவருக்கு உயிர் இருந்துச்சுண்ணா. அவரை எப்படியாவது காப்பாத்திடலாம்… வாண்ணா…” என்று அழுது கொண்டே ஜானவி கூற, குகனும் யாதவும் ஒருசேர அதிர்ந்தனர்

“என்ன மா.. என்ன சொல்ற?” என்று குகன் ஜானவியை விசாரித்துக் கொண்டிருக்க

மறுபுறம் திரும்பிய யாதவோ, பத்திரிக்கையாளர்களிடம் சென்றவன், “உங்க மீதி பேட்டியை நாளைக்கு வச்சுக்கலாம், இப்போ ரொம்ப நேரமாகிடுச்சு. அப்பா வயசானவங்க, நைட் டைம்ல ரொம்ப முழுச்சுருக்கக் கூடாது” என மற்றவர்களை அனுப்பியவன்

தன் தந்தையிடம் திரும்பி, “அப்பா ஜானவிய அவ வீட்டுக்கு நீங்க தான் பத்திரமா கூட்டிட்டு போய் விடணும். நாங்க அவ வீட்டுக்கு தகவல் சொல்லிடறோம்” என்று ஜானவியையும் தனது தந்தையையும் அங்கிருந்து கிளப்பலானான்

அதற்குச் சர்வேஸ்வரனோ, “இதெல்லாம் நீ சொல்லித் தான் நான் செய்யணும்னு இல்ல” என முறைப்புடன் பதில் கூறினார்

ஆனால் ஜானவியோ, “இல்ல இல்ல அண்ணா.. நானும் வரேன். நான் வந்து அவருக்கு என்னாச்சுனு பார்க்கணும். அது மட்டும் இல்லாம, அவர் எங்க இருக்கார்னு நான் வந்தா தான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்” என்று கூறவும், பயங்கரக் கோபம் வந்தது யாதவுக்கு

“அப்படியே ஓங்கி ஒண்ணு விட்டேன்னா பாரு, சொன்ன பேச்ச மட்டும் கேளு.. வாய மூடிக்கிட்டு வீட்டுக்குப் போற வழியப் பாரு.” என்று அவளை அதட்டியவன்

மீண்டும் தன் தந்தையிடம் திரும்பி, “அப்பா அவ வீட்டுல இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம், எல்லாம் நானும் குகனும் வந்து சொல்லிக்கறோம். நீங்க என்னோட அப்பானு மட்டும் சொல்லிடுங்க. நான் வந்து உங்கள கூட்டிட்டு போறவரைக்கும், உங்கள அவங்க வீட்டுல காத்திருக்கச் சொன்னேன்னு சொல்லிடுங்க. அப்பறம் ரெண்டு பேரும் நீங்க வந்த காருலயே போய்டுங்க.. ப்ளீஸ்” என்றவன், காரோட்டியிடம் ஜானவியின் வீட்டு முகவரியை தெரிவித்து நிமிர்ந்தவன், மீண்டும் கோபக்கண் கொண்டு பார்த்தான்

ஏனென்றால், குகன் ஒருபுறம் வாக்கி டாக்கியில் ஆதித்யன் விஷயமாகத் தன் கீழ் பணிபுரிபவர்களை அங்கு வரச் சொல்லி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்க, ஜானவியோ நடுங்கும் கரங்களால் அவளது வண்டியைத் தூக்கி நிறுத்தி, அதை இயக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்

“ஏய்” என்ற அவனது அதட்டலில், தளிரென நடுங்கி கீழே விழப் போனவளை, தனது ஒற்றைக் கரத்தால் தாங்கிப் பிடித்தான் யாதவ்

“உன்ன நான் காருல தான’ம்மா போகக் சொன்னேன். இப்போ நீ ரொம்பப் பயந்து போய் இருக்க, உன்னால வண்டி ஓட்ட முடியாது. என் அப்பா கூடப் பயப்படாம உன் வீட்டுக்கு போ, நாங்க வர வரைக்கும் அவர் அங்க தான் இருப்பாரு. உன்ன யாரும் எந்தக் கேள்வியும் கேட்காம பார்த்துப்பாரு. போ ம்மா…” என்று மயிலிறகு குரலால் கூறிட, அக்குரலுக்குக் கட்டுப்பட்ட பாவையோ, மகுடிக்கு மயங்கிய சர்ப்பமென அவன் வார்த்தையைச் செயலாக்கினாள்

அவர்களிருவரையும் காரில் அனுப்பி வைத்ததும், அங்கு வந்து சேர்ந்திருந்த மற்ற காவலர்களுடன் யாதவும், குகனும் மலை நோக்கிப் புறப்பட்டனர்

அங்கு மலையடிவாரத்தில், குத்து மதிப்பாய் ஜானவி கூறிய இடத்தில் தேடியவர்கள் திகைத்தனர்

அப்படியிருந்தும் சலிக்காதவர்களாய், மலையைச் சுற்றியும் தங்கள் தேடலைத் தொடர்ந்தவர்கள், மேலும் குழப்பத்திற்கே ஆளானார்கள்

ஏனெனில், ஜானவி கூறியது போல ஆதித்யன் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடக்கவில்லை. ரத்த வெள்ளத்திலென்ன? அங்கு யாருமே இருந்ததற்கான எந்த ஒரு தடையமுமே தென்படவில்லை

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்…வெள்ளி தோறும்)    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. நல்ல விறு விறுப்பாய்ச் செல்கிறது. வழக்கம் போல சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அதிகமாக! என்றாலும் சுவை குன்றவில்லை.

பச்சை மஞ்சள் ஊறுகாய் (கீதா சாம்பசிவம்) – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

‘திருப்பட்டூர்’ கோவில் (பானுமதி வெங்கடேஸ்வரன்) – பிப்ரவரி மாத போட்டிக்கான பதிவு