in

மாட்டுக்காரன் கேட்ட பாட்டு (திருவடிசூலம்)🙏 – ✍ மீரா ஜானகிராமன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

மாட்டுக்காரன் கேட்ட பாட்டு (திருவடிசூலம்)🙏

சென்ற வாரம், வார இறுதியை எங்களுடன் கழிப்பதற்காக குடும்பத்துடன் வந்திருந்தான் தம்பி. விடுமுறையை கொண்டாட எங்கே செல்வது என்ற வாக்குவாதம் (வழக்கம் போல்) காலை முதல் மாலை வரை நீண்டதில், எங்கும் செல்லாமல் வீட்டிலேயே பெரும்பாலான நேரம் விரயமாகியது

கொரோனா இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், கூட்டமான இடங்களுக்கு செல்ல எங்களில் எவருக்கும் விருப்பமில்லை

கடைசியில் தம்பியே, “இங்க பக்கத்துலயே ஒரு இடம் இருக்கு. அதிக ஜனநடமாட்டம் இல்லாம, அமைதியா, அழகா இருக்கும் வரீங்களா?” என்றான்

“சரி” என்றோம்

காரில் எல்லோரும் மகிழ்ச்சியான உரையாடல்களில் மூழ்கி இருக்க, நான் மட்டும் வழக்கம் போல் நித்திராதேவியிடம் என்னை ஒப்படைத்து விட்டேன்

கண் விழித்துப் பார்த்த போது, ஆளரவமற்ற ஒரு காட்டுக்கு நடுவில் ஒரு சின்ன கிராமத்து சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்தது

“டேய்… நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னை எதோ காட்டுக்குள்ள கடத்திகிட்டு வந்திருக்கியேடா”

“ஹா…ஹா….ஹா”

“என்னடா சிரிப்பு?”

“இது என்ன இடம்னு தெரியுதாக்கா?”

“தெரியலையே”

“அப்போ சரி… உன்னை தொலைக்க இது தான் சரியான இடம்” என என் தம்பி சொன்னதைக்  கேட்டு, மொத்த குடும்பமும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது

சரி விடுங்கள். இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான். வழி நெடுகிலும் பச்சை பசேலேன்ற வயல்வெளிகள், பருவமழையின் கருணையினால் நீர் நிரம்பி ததும்பி நிற்கும் ஏரிகள். மழையால் உயிர் பெற்று சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சிற்றோடைகள். தூரத்தில் மேககூட்டங்களால் சூழப்பட்ட குன்றுகள் என, மனதிற்கு ரம்மியமாக இருந்தன

குன்றுகளும், காடுகளும் சூழ்ந்த அழகிய கிராமம் அஞ்சூர். அதன் வழியாகத் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.

“இதுதான்’க்கா அஞ்சூர் ரிசர்வ் பாரஸ்ட்” என்றான் தம்பி.

கார் செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் சிறிது தூரம் பயணித்த பின் வலதுபுறம் திரும்ப, அங்கே ‘அருள்மிகு கோவர்த்தனாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீஸ்வரர் கோவில், திருவடிசூலம்’ என்ற பலகை காணப்பட்டது.

ஊருக்குள் நுழைய அழகான தோரண நுழைவாயில். சின்னஞ்சிறு கிராமம், ஆநிரைகளும், குரங்குகள் கூட்டமாக திரிகின்றன.

குன்றுகளுக்கு இடையில் இருக்கும் ஊர் என்பதால் ‘திருஇடைச்சுரம்’ என வழங்கப்பட்ட பெயர், தற்போது மருவி ‘திருவடிசூலம்’ என்று வழங்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலின் நுழைவாயிலில், ஐந்து நிலை கோபுரம் உள்ளது. கோவில் நுழைவாயில் தெற்கு நோக்கி இருக்கிறது. 

உள்ளே சென்றால் வெளிப்ரகாரத்தில் வரசித்தி விநாயகர் முதலில் காட்சி தருகிறார். தரிசித்து விட்டு மண்டபத்திற்குள் நுழைந்தால், உள்ளே இறைவன் ஞானபுரீஸ்வரர் என்கிற இடைசுரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அருகிலேயே தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அன்னை கோவர்த்தனாம்பிகை என்கிற இமயமடக்கொடி அம்மை. நான்கு கரங்களுடன் கூடிய அன்னையின் அழகு மெய்சிலிர்க்க வைக்கிறது.  

இறைவன் ஞானபுரீஸ்வரர், பெரிய லிங்கத்திருமேனி. சுயம்புவான மரகத லிங்கம் என்கிறார்கள். பிரதோஷசத்தன்று தேனால் அபிஷேகம் செய்யும் போது மட்டும் பச்சை நிறத்தில் காட்சியளிப்பாராம்.

தரிசித்து விட்டு வெளியே வந்து உள்பிரகாரம் சுற்றினோம். உள்பிரகாரம் அகழி வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறுகலாகவும், பழைமையாகவும் இருக்கும் உட்ப்ரகாரத்தில் சண்டேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நால்வர், பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்

வெளியே வரும் போது தல வரலாறை விளக்கும் படம் கண்ணில்பட்டது.

ஞானசம்பந்தர் ஒவ்வொரு சிவத்தலமாக தரிசித்து கொண்டு வருகையில் இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் சோர்ந்து அவர் அமர்ந்து விட, இறைவன் இடையன் வடிவில் வந்து மோர் கொடுத்து களைப்பை தீர்த்து விட்டு, இங்கே அருகில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது அவரைப் பற்றியும் பாடுங்கள் என்று சொல்லி வழிகாட்டினாராம்.

இறைவனை பின் தொடர்ந்து வந்த ஞானசம்பந்தர், கோவில் அருகில் இருக்கும் திருக்குளத்தின் அருகில் வந்த போது, இடையனாக வந்தவர் மறைந்து விட்டாராம். இறைவன் காட்சி கொடுத்தமையால் அந்த குளம் ‘காட்சி குளம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஞானசம்பந்தரும் இறைவனின் கருணையை எண்ணி உருகி பதிகம் பாடியிருக்கிறார். இறைவன் மாட்டுக்காரனாக வந்து விரும்பிக் கேட்ட பாட்டாகிய அந்த பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 

அன்னை கோவர்த்தனாம்பிகை பசுவாக வந்து இறைவனை வழிபட்டதாக சொல்கிறார்கள். ஆம், இறைவன் ஒருவனே பதி மற்றவர்கள் எல்லோரும் பசு தானே?

வெளிப்ரகாரத்தில் ஸ்ரீபிரம்மாண்டேஸ்வரர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி, கிழக்கு நுழைவாயிலின் எதிரில் நந்தி, பலி பீடம், ஆகியவை உள்ளன.

நாங்கள் சென்ற போது இந்த நுழைவாயில் மூடியிருந்தது. வெளிப்ரகாரத்தில் வில்வம், அரசு, வேம்பு ஆகிய மூன்று தெய்வீக மரங்களும் ஒன்றாக வளர்ந்துள்ளன. இங்கே இருக்கும் ஒரு பாம்பு புற்று விநாயகர் வடிவில் காட்சியளிக்கிறது.

சிறியதானாலும் அழகாகவும், மனதிற்கு இதமான இயற்கை சூழலோடும், அதிக ஜன சந்தடி இல்லாமல் அமைதியாகவும் இருக்கிறது, இன்று திருவடிசூலம் என்று மருவி வழங்கப்படும் திருஇடைச்சுரம். இந்த கோவில் திருக்கழுக்குன்றம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  

அழகான, அமைதியான இயற்கை சூழலில் இருப்பதால் மனம் அமைதியடையும். மனம் அமைதியடைந்தால் நோய் நொடிகள் அணுகாது. நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால், சிந்தனை தெளிவாகும். சிந்தனை தெளிவானால், செயல்கள் நல்லதாகும். நல்ல செயல்கள், உலகிற்கு நல்ல பயன்களை ஏற்படுத்தும். எனவே, முடிந்த போதெல்லாம் திருவடிசூலம் திருத்தலத்தை தரிசிக்கலாம், பிறவி பயன் பெறலாம்.

முக்கிய குறிப்பு : இந்த கட்டுரை டிசம்பர் இறுதி வாரத்தில் எழுதப்பட்டது

(முற்றும்)

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

அம்ருத்கா ஸப்ஜி (கொய்யாப்பழப் பச்சடி) – ✍ காமாட்சி மகாலிங்கம் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

சிவனடி போற்றி….! 🙏 (கவிதை) -✍ சி. கோவிந்த் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு