இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிறிது நேரம் கழித்துதான் அவன் பேசியதன் அர்த்தம் அவனுக்கே புரிந்தது. ‘எவ்வளவு நேசித்தாள்! தன்மீது அதிகபட்ச உரிமை கொண்டாடினாளே…! அவ்வளவு காதலும் கோபமாக மாறினால் அதிகபட்ச ஆபத்து தானே? பழி வாங்குவாளோ?‘ என்ற பயம் சூழ்ந்தது. சோப்பு போடலாமென்றாலும், இணைப்பு கிடைக்கவில்லை.
அந்த பயம்தான் கனவாகவும், கற்பனையாகவும் விரிந்தது. ‘அவள் ஏதாவது தவறாக யோசிப்பதற்குமுன் அவளை முடித்து விடலாமா?‘ என்று கூட எண்ணலானான்.
“என்னங்க, ப்ரியாவக் காணலைங்க. நான் போக கொஞ்சம் லேட்டாயிடுச்சி. யாரோ ஒருத்தி கார்ல ஏத்திட்டுப் போனான்னு வாட்ச்மேன் சொல்றாரு. எனக்கு பயமா இருக்குங்க“ என்று பதறியது, அலைபேசியில் பானுவின் குரல்.
“சே! இவ்ளோ ஃபாஸ்ட்டா ரியாக்ட் பண்ணுவான்னு நினைக்கலியே என்று நொந்து கொண்டு, சரி! டென்ஷனாகாம வீட்டுக்குப் போ. நான் பாத்துக்கறேன்“ என்றவன், நேரே பவித்ராவின் வீட்டிற்கு விரைந்தான்.
மேலிருந்து “டா…டீ!“ என்ற குரல் கேட்டு பதறி மேலே பார்த்தால், யாரோ ஒரு குழந்தை, யாரையோ அழைத்துக் கொண்டே ஓடியது. லிஃப்டிற்கு காத்திருக்க பொறுமையின்றி படிகளில் தாவி, பவித்ரா வீட்டின் அழைப்பு மணியை கதறக்கதற அழுத்தினான்.
நீண்ட நேரம் பதிலில்லாததால் பதற்றமாகி கதவைக் குத்த கை ஓங்கியபின்தான் பூட்டு தொங்குவதைக் கவனித்தான். பவித்ராவின் அலுவலக மேலாளரை அழைத்து விசாரித்தான்.
அவரோ, அவள் மூன்று மணிக்கே கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டதாகவும், வேறு விவரங்கள் ஏதும் தனக்குத் தெரியாது என்றும் அவரது எண்ணிலிருந்து பவித்ராவை தொடர்பு கொண்டாலும், அது தொடர்பு எல்லைக்கு வெளியிலுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாதேஷூக்கு தலை சுற்றியது; வியர்த்துக் கொட்டியது. வேறு வழியின்றி தனக்குத் தெரிந்த டி.எஸ்.பி. ஒருவரைத் தொடர்பு கொண்டு உதவி கோரினான். காவல் கட்டுப்பாட்டறை மற்றும் சைபர் க்ரைம் உதவியுடன் பவித்ராவின் கார் பயணித்த வழிகளும், அவளது அலைபேசி எண்ணில் கடைசியாய் சிக்னல் வந்த இடமும் கண்டறியப்பட்டன.
ப்ரியாவின் பள்ளி இருந்த சாலையின் வலதுபுறம் திரும்பி அடுத்த முக்கிய சாலையில் கார் பயணித்த பகுதிக்கு டி.எஸ்.பி. சொன்ன இன்ஸ்பெக்டர் மற்றும் குழுவினருடன் மாதேஷூம் சென்றான்.
பவித்ராவின் அலைபேசி அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஒரு தனி பங்களா இருந்தது. குழுவினர் வண்டியை விட்டு இறங்கி, உள்ளே எட்டிப் பார்த்தனர்.
“ஸார்! ஸார்! அவ கார் நிக்குது பாருங்க! பாவி…! என் பொண்ண என்ன பண்ணாளோ? சீக்கிரம் கேட்ட இடிச்சி தெறங்க ஸார்!“ என்று பதற்றமாய் கத்தினான் மாதேஷ்.
“ஷ்…! நீங்க அமைதியா வண்டில உக்காருங்க. நாங்க பாத்துக்கறோம்“ என்றார் இன்ஸ்பெக்டர்.
மாதேஷூக்கோ பதற்றத்தில் கை கால் உதறியது. கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றால், அந்த வீட்டின் உள்ளே பவித்ராவின் காரைத் தவிர இன்னொரு காரும் நின்றது.
ஆனால், பங்களாவில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஆனால் அந்த பங்களாவின் பின்புறம் ஒரு பாதை சென்றது. அதன் வழியே சென்ற போது, பின்புறம் ஒரு அவுட் – ஹவுஸ் இருந்தது. அதுவும் பூட்டியே இருந்தது.
“என்ன ஸார் இது? என் பொண்ண எங்க ஸார் வச்சிருக்கா?” என்று கத்தினான் மாதேஷ்.
“உங்கள வண்டில தான இருக்கச் சொன்னேன்? உங்கள யாரு இங்க வரச் சொன்னா?“ என்று பதிலுக்கு கத்தினார் இன்ஸ்பெக்டர்.
அவுட்-ஹவுஸின் பின்புறமிருந்து “டா…டீ!“ என கத்திக் கொண்டே ஓடி வந்து மாதேஷை கட்டிக் கொண்டு ஓவெனக் கதறினாள் ப்ரியா. அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“என்னாச்சுடா? பயப்படாதடா…! அதான் டாடி வந்துட்டேன்ல!“ என்றவாறே மகளை அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான் மாதேஷ்.
“டா…டீ…, ஆன்ட்டி…!“ என்று அவள் கையைக் காட்டிய திக்கில் சென்று பார்த்தால் தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் சாமான்களைப் போடும் ஒரு ஷெட் இருந்தது. அதனுள்ளே அலங்கோலமாக ரத்த வெள்ளத்தில் பவித்ராவைத் தவிர இன்னொரு ஆணும், பெண்ணும் கிடந்தனர்.
அவர்கள் முகத்தை அருகில் சென்று பார்த்து விட்டு “இது என்னோட பழைய டிரைவர் ராம். இது எங்க வீட்டு மெய்ட் ராணி. ஆனா, இவங்க எப்படி இங்க?“ என்றான் மாதேஷ்.
இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ. இடம், ஆம்புலன்ஸை அழைக்கச் சொல்லி விட்டு, “என்ன நடந்தது?“ என்று ப்ரியாவிடம் விசாரிக்க…
ஸ்கூல் முடிந்து ப்ரியா வெளியே வரவும், “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. உன்ன இட்டாரச் சொன்னாங்க“ என்றாள் ராணி.
கார் வீட்டிற்கு திரும்ப வேண்டிய இடதுபுறம் திரும்பாமல், வலதுபுறம் திரும்பவும், “எங்க கூட்டிட்டுப் போறீங்க?“ என்று கத்தினாள் ப்ரியா.
“பேசாம வா, கொன்னுடுவேன்“ என்றாள் ராணி.
“வண்டிய திருப்பு…“ என்று டிரைவர் முடியைப் பிடித்து ஆட்டினாள் ப்ரியா. கார் இடதுபுறம் சென்று கொண்டிருந்த பவித்ராவின் கார்மீது இடிக்க, வேகமாக வந்து, அவளது காரை குறுக்காக நிறுத்தி, இறங்கி வந்து சத்தம் போட்டாள் பவித்ரா.
“கைய எட்றீ!“ என ராணி போட்ட அடியில் அரண்டு போய் உட்கார்ந்திருந்தாள் ப்ரியா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
பவித்ரா வந்து சத்தம் போடவும், “ஹெல்ப்” என்று கத்தினாள் ப்ரியா. ராணி அவள் வாயைப் பொத்த முயல, நறுக்கென்று கடித்தாள் ப்ரியா.
“ஏய்! என்ன நடக்குது இங்க? ஹே!… நீ… நீ… ப்ரியா தான?“ என்றாள் பவித்ரா, திகைப்புடன் (மாதேஷூடன் புகைப்படத்தில் பலமுறை பார்த்து இரசித்த பெண்ணல்லவா?).
அவள் ஆமோதித்து கண்ணீரோடு தலையசைக்க, ராம் சட்டென வண்டியை சற்று ரிவர்ஸ் எடுத்து, வேகமாக பவித்ராவின் காரை விலக்கி பறந்தான்.
திகைத்த பவித்ரா, காரை எடுத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் சென்றாள். இந்த காம்பவுண்டிற்குள் இரண்டு கார்களும் நுழைந்ததும், சட்டென இறங்கி காம்பவுண்டுக்கு பூட்டைப் போட்டான் ராம்.
ராணி ப்ரியாவை இழுத்துக் கொண்டு பின்புறம் போக, “அவளை விடு…“ என்று பின்னால் ஓடினாள் பவித்ரா.
இந்த ஷெட்டுக்குள் வரவும், பவித்ராவின் பின்னாலிருந்து ராம் அவளைத் தாக்க, கீழே விழுந்தவளை இருவரும் சேர்ந்து கயிற்றால் கட்டிவிட்டு… ராணி ப்ரியாவின் கைகளை காரில் வரும்போதே கட்டியிருந்தாள்… இப்போது கால்களையும் கட்டிப் போட்டனர்.
“நீ யாருடீ, நடுவுல வந்து சம்மன் இல்லாம ஆசராகுற? யாருக்காது ஃபோன் கீன் பண்ணியா? என்று அவள் திறன்பேசியைப் பிடுங்கி, அவள் கை ரேகையையே வைத்து, பரிசோதித்துவிட்டு, ஒரு மணி நேரமாக அவள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதை அணைத்து வைத்தான்.
“யாரையோ தொட்டுட்டேன்னு ஓன் அப்பன் என்ன ஜெயிலுக்கு அனுப்புனான். இப்ப ஒன்னத் தொடப் போறேன். என்ன பண்ணுவான்?“ என்றவாறே ப்ரியாவைத் தடவினான் ராம்.
அவள் கதற… “ஏய் அந்த பிஞ்சுக் கொழந்தைய என்னடா பண்ற?“…
“அடியே நீயும் பொம்பள தான? அவனுக்கு தொணைக்கு வந்து ரசிச்சிட்டிருக்கியே, உங்கொழந்தைக்கு இப்டி நடந்தா சும்மா இருப்பியா?“ என்று கத்தினாள் பவித்ரா.
“எங் கொழந்தைக்கு நடந்துச்சே… ந…டந்துச்சே… இவ அப்பனால…“ என்று சட்டென கீழே உட்கார்ந்து தலையிலடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள் ராணி.
பவித்ரா அதிர்ந்தாள். மாதேஷ் அவ்வளவு மோசமானவன் இல்லையே!
இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings