in ,

தன்நெஞ்சறிவது பொய்யற்க (சிறுகதை) – ✍ நர்மதா சுப்ரமணியம், சென்னை

தன்நெஞ்சறிவது பொய்யற்க
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 62)

“அம்மா… டீஈஈஈ” எனக் கேட்டவாறே மாடியில் இருந்து இறங்கி வந்தாள் ஆராதனா.

“டைம் ஆறரை ஆகுது, இன்னுமா ஆபிஸ்க்கு கிளம்பாம இருக்க நீ? ஏழரைக்கு நைட் ஷிப்ட் கேப் வந்துடும்ல” என்றவாறு மகளின் கையில் தேநீரை வழங்கினார் தனலட்சுமி.

“ஹ்ம்ம் கிளம்பனும்மா” என்றவள் கூறிக் கொண்டிருந்த சமயம் உள்ளே வந்தார் அவளின் தந்தை முருகேசன்.

“அப்பா” என அவரின் முன்னே இவள் ஏதோ சொல்வதற்காக சென்று நிற்க, அவளின் பேச்சு தனது காதினில் விழாதது போல் அவளைக் கடந்து சென்ற முருகேசன், குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

அவரின் இந்தப் புறக்கணிப்பு மனதில் வலியை உண்டு செய்தது அவளுக்கு.

தனது அலுவல் பணியின் நிமித்தமாய் இரவு ஷிப்ட் வேலைக்காகக் கிளம்ப வேண்டிய அவசர நிலையில் இருப்பதை உணர்ந்தவள், தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து மாடிக்கு சென்றாள்.

துரிதமாய் குளித்துக் கிளம்பியவள், “அண்ணா, தெருக்குள்ள கார் வர அளவுக்கு இடம் இருக்காது. நீங்க தெரு முனைல ஓரமா நில்லுங்க, இதோ வந்துடுறேன்” அலுவல் வண்டியின் ஓட்டுனரிடன் கைபேசியில் பேசியவாறே கீழே இறங்கி வந்தாள்.

ஐ.டி.யில் வேலை செய்யும் ஆராதனா இரவு ஷிப்ட் வேலைக்குக் கிளம்பி வந்தவள், உணவுப் பையைத் தாயிடம் பெற்றுக் கொண்டு தந்தையைத் தேடினாள்.

ஆனால் அவரோ இவளை காண்பதை தவிர்ப்பதற்காகவே அறையினுள் முடங்கிக் கொண்டார்.

தினமும் தெருமுனை வரை தன்னுடன் நடந்து வந்து அலுவலக வண்டியில் ஏற்றி விட்டுச் செல்லும் தந்தை, இரு வாரங்களாய் தன்னைத் தனித்து விடுவது தன் மீதான அவரின் கோபத்தைப் பறைச் சாற்றியது அவளுக்கு.

அலுவலக வண்டியில் சென்று கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கி நீரை பொழிந்த வண்ணம் இருந்தன.

இரு வாரங்களாய் தானும் வீம்பாய் அவரிடம் பேசாது இருந்த போது நெஞ்சை அழுத்தாத சோகம், இன்று தான் முன்னே சென்று பேசியும், அவர் பேசாது சென்ற போது அழுத்தமாய் தாக்கியது அவளுக்கு.

‘நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இவர் இப்படி பண்றாரு?’ குமுறும் மனதினை ஆற்றுப்படுத்தும் வழியறியாது தவித்தாள்.

‘பெத்த பொண்ணைத் தேடி வீட்டுக்கே போலீஸ் வந்தா எந்தத் தாய் தகப்பனுக்குத் தான் கோபம் வராம இருக்குமாம்’ அவளின் மனசாட்சியே கேள்வி எழுப்ப,

‘ஆனா என் மேல தான் எந்தத் தப்பும் இல்லையே’ என அந்த மனசாட்சிக்கு பதிலிறுத்தவள் அந்த நாளை நினைவு கூர்ந்தாள்.

“ஆராதனா உங்க பொண்ணு தானே?” காக்கி காற்சட்டையும், வெள்ளை சட்டையுமாய் ஒருவர் ஆராதனாவின் வீட்டு கதவை தட்டி கேட்டிருந்தார்.

கதவினருகே நின்றிருந்த தனலட்சுமி, “யாரு நீங்க? நீங்க ஏன் என் பொண்ணைப் பத்தி கேட்குறீங்க? உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?” சந்தேகமாய் பார்த்தவாறே கேட்க

“என் பேரு மணி மாறன்” தான் ஒரு காவல் துறை அதிகாரி என அடையாள அட்டையை அவரிடம் காண்பித்தவர்,

“ஒரு விசாரணைக்காக உங்க பொண்ணைத் தேடி வந்திருக்கேன்” என்றார்.

போலீஸ் என்ற வார்த்தையே இல்லத்தரசியான தனலட்சுமியின் மனதை பதட்டமடையச் செய்து உடலை நடுங்க செய்தது.

ஆயினும் எவ்வித உணர்வையும் காண்பித்துக் கொள்ளாது, “உள்ளே வாங்க, உட்காருங்க” என அவரை அமர வைத்தவர், தனது கணவனுக்கு அழைப்பு விடுத்து உடனே வருமாறு பணித்தார்.

ஆராதனாவின் தந்தை முருகேசன் கோவில் திருவிழாக்களுக்கு, அரசியல் மற்றும் குடும்ப விழாக்களுக்கு ரேடியோ, சீரியல் செட் மற்றும் நாற்காலிகளை வாடகைக்கு விடும் கடையை நடத்தி வருபவர்.

அவரின் குடும்பத்தின் முதல் பட்டதாரியாகத் தனது ஒரே மகளான ஆராதனாவை படிக்க வைத்ததிலும், அவள் இந்த வேலைக்குச் சேர்ந்ததிலும் ஏக பெருமையும் மகிழ்வும் அவருக்கு.

பெண் பிள்ளையை இரவுப் பணிக்கு அனுப்ப வேண்டாமெனச் சுற்றத்தார் உறவினர்கள் எனப் பலரும் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாது, அவளின் ஆசைப்படியே பணி செய்ய அனுமதித்தவர் அவர்.

எப்படி யோசித்தும் கணவன் மனைவி இருவருக்குமே தன் மகளிடம் என்ன விசாரிக்க வந்திருக்கிறார் இக்காவலர் எனப் புரிபடவே இல்லை.

உறங்கி கொண்டிருந்த ஆராதனாவை அழைத்து அந்தக் காவலரின் முன்பு நிறுத்தியிருந்தனர்.

“விஜயலலிதாவை உங்களுக்குத் தெரியுமா?” மணி மாறன் கேட்க, திருதிருவென விழித்தாள் ஆராதனா.

போலீஸ் தன்னைத் தேடி வந்திருப்பதிலேயே உள்ளம் இரயில் தண்டவாளமாய் தடதடத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

‘தெரியாது’ என அவள் தலையசைக்க

“தெரியாத பொண்ணுக்கு தான் அவங்க காதலரோட சேர்த்து வைக்க நீங்க உதவி செஞ்சீங்களா?” சற்று அதட்டலாகவே வந்தது அவரின் குரல்.

இப்பொழுது முகம் பயத்தில் வியர்த்து வழிந்தது அவளுக்கு.

“இல்ல நிஜமாவே அப்படி யாரும் எனக்குத் தெரியாது” ஆராதனா கூறிக் கொண்டிருக்கும் போதே, அந்த விஜயலலிதாவின் தாய், தந்தை, அண்ணன், தம்பி என நான்கு நபர்கள் அவர்களின் இல்லத்தினுள் நுழைந்தனர்.

“என்ன மணி நீ, உட்கார்ந்து கேள்வி கேட்டுட்டு இருக்க இவகிட்ட” எனத் தனது காவல் துறை நண்பனான மணி மாறனிடம் கோபமாய் உரைத்த விஜயலலிதாவின் அண்ணன் ராகவன்

“என் தங்கச்சி கடைசியா அந்த சண்டாளன் கூட ஓடி போறதுக்கு முன்னாடி உன் போன்ல இருந்து தான் அவன்கிட்ட பேசியிருக்கா. அவங்க என்ன பேசினாங்கன்ற வரைக்கும் ட்ரேஸ் பண்ணிட்டோம்.

அதை வச்சி தான் அவ ஓடி போய்ட்டான்றதே எங்களுக்குத் தெரிய வந்துச்சு. இப்ப அவங்க எங்க இருக்காங்கனு சொல்லு. நாங்க அவங்களை ஒன்னும் செய்ய மாட்டோம்” ராகவன் ஆராதனாவிடம் சீறிக் கொண்டிருந்தான்.

அப்பெண்ணின் தாய் தந்தையென வந்திருந்தவர்கள் தனலட்சுமியின் கையைப் பிடித்து அழவே ஆரம்பித்து விட்டனர்.

“ஒரு வாரமா பொண்ணைக் காணோம்னு ஊரெல்லாம் தேடி நொடிஞ்சு போன நேரத்துல தான் இந்த மணி தம்பி, அவ காதலிச்ச பையன் கூட ஓடி போய்ட்டானு கண்டுபிடிச்சு சொல்லுச்சு. என் பொண்ணு அப்படிச் செஞ்சிருப்பானு நாங்க நம்பவே இல்லைமா.

ஆனா இந்த ஒரு வாரமா அந்தப் பையனும் காணாம போய்ட்டான்னு அவங்க வீட்டுல கம்ப்ளைன்ட் கொடுத்ததா தெரிஞ்சதும் தான்மா நம்பினோம். அவ காணோம்னு எப்படிலாம் துடிச்சி போய்ட்டோம்னு தெரியுமா மா. ஆனா நாங்க கவலைபடுவோம்னு கூட நினைக்காம சுயநலமா இப்படிப் போய்ட்டாளே” என அவளின் தாய் கதறி அழ

“அம்மா நீ வெளியே வா மா, அவங்க பேசட்டும்” எனத் தாயை அணைத்தவாறு வெளியே அழைத்துச் சென்றான் விஜயலலிதாவின் தம்பி.

அந்த நால்வரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான் மணிமாறன்.

ஆராதனாவிற்கு இந்தத் தாயின் அழுகையைக் கண்டு கண்கள் கலங்கி போனது.

ஆராதனாவின் தாய் தனலட்சுமி அவளருகில் வந்து, “யாருமா அந்தப் பொண்ணு? உனக்குத் தெரிஞ்சா சொல்லிடுமா, பாவம் எவ்ளோ வருத்தப்படுறாங்க பாரு” என்றார்.

“அய்யோ அம்மா நிஜமாவே எனக்கு இந்தப் பேருல எந்தப் பொண்ணையும் தெரியாதுமா, ஒரு வேளை வீடு மாறி வந்துட்டாங்களோ?” எனக் கேட்டாள் ஆராதனா.

ஆராதனாவின் பேச்சை கேட்ட மணிமாறன், அவளின் கைபேசி இலக்கங்களைக் கூறி, “இது உங்க மொபைல் நம்பர் தானே?” எனக் கேட்டான்.

அவள் ஆமெனத் தலையசைக்க, “விஜி கடைசியா இந்த நம்பர்ல இருந்து தான் அந்த ராஜேஷ் பையன்கிட்ட பேசியிருக்கா, அதுவும் சில்ட்ரன்ஸ் பார்க்கிட்ட வச்சி தான் போன்ல பேசினதா டவர் சிக்னல் காண்பிக்குது. சொல்லுங்க ஆராதனா.. அதுக்குப் பிறகு அவங்க எங்க போனாங்கனு சொல்லுங்க. அவங்களைத் தெரியாதுனு மட்டும் பொய் சொல்லாதீங்க” சற்று அதட்டலாகவே கேட்டிருந்தார் மணிமாறன்.

மனதினுள் வெடவெடத்தாலும், “நீங்க எவ்ளோ அதட்டி கேட்டாலும் தெரிஞ்சவங்கள தான் சார் தெரியும்னு சொல்ல முடியும் தெரியாதவங்களை எப்படித் தெரியும்னு சொல்ல முடியும்” என்றாள் ஆராதனா.

“பாப்பா உனக்குத் தெரியும்னா சொல்லிடுமா” என்றார் அவளின் தந்தையும்.

மணிமாறன் அவளின் கைபேசியை வாங்கி அழைப்பு வரலாற்றைப் பார்க்க, அன்றைய நாளுக்கான அழைப்பு வரலாறு தான் அதில் இருந்தது. முந்தைய நாளின் அழைப்பு விவரங்கள் வரை அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன.

“போன் ரிப்பேர் ஆகிடுச்சு. நேத்து தான் சர்வீஸ் சென்டர்ல இருந்து வாங்கிட்டு வந்தேன். பழைய கால் லாக் எதுவும் இல்லை” பயந்தவாறே தன்னிலை விளக்கம் கொடுத்தாள் ஆராதனா.

இது மணிமாறனின் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்த்தது. மனதினுள் சில திட்டங்களுடன் இரண்டு நாள் கழித்து வருவதாய் கூறிச் சென்றான் மணிமாறன்.

அந்த இரண்டு நாட்களும் அவளின் தாய் அவளைக் கேள்வி கேட்டே ஒரு வழியாக்கி இருந்தார்.

இரு நாட்கள் கழித்து மணிமாறன் அழைத்ததாய் காவல் நிலையம் வரை சென்று வந்தார் முருகேசன்.

வீட்டிற்கு வந்த முருகேசன் முன்பு பவ்யமாய் நின்றிருந்தாள் ஆராதனா.

“அந்தப் போலீஸ் என்னங்க சொன்னாரு?” எனக் கேட்டார் தனலட்சுமி.

“ஸ்கூல், காலேஜ், வேலை, அக்கம் பக்கத்து வீடு, ஃப்ரண்டோட ஃப்ரண்டுனு அந்தப் பொண்ணு விஜிக்கும் நம்ம பொண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனா எப்படி உங்க பொண்ணோட போன்ல இருந்து அந்த ராஜேஷ் பையனுக்கு விஜி பேசியிருக்கானு தெரியலை. உங்க பொண்ண ஒழுங்கா விசாரிச்சு சொல்லுங்கனு சொல்லிருக்காரு” என்றார் அவர்.

“இதைத் தானேப்பா நானும் இத்தனை நாளா சொல்றேன். அந்தப் பொண்ணை எனக்கு நிஜமாவே தெரியாதுப்பா” என்றாள் ஆராதனா.

‘மகள் உரைப்பதை நம்புவதா இல்லை போலீஸ் உரைப்பதை நம்புவதா?’ எனக் குழம்பி போனார் முருகேசன்.

அதற்கடுத்த இரு நாட்களில் மீண்டும் முருகேசனை போலீஸ் நிலையம் அழைத்திருந்தார் மணிமாறன்.

இம்முறை தனது ஏரியா கவுன்சிலர், தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர் என அனைவரையும் உடன் அழைத்துச் சென்றார் முருகேசன்.

ஆனால் அவர் நினைத்ததற்கு எதிர்மறையாய் காவல் நிலையத்தில் அனைத்தும் சுமூகமாக முடிந்திருந்தது.

காணாமல் போன பெண்ணும் பையனும் கிடைத்து விட்டதாகவும், அவர்கள் திருமணம் செய்து விட்டு வருவதற்காகவே தலைமறைவாகி இருந்ததாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றிலிருந்து தான் அவளின் தந்தை அவளிடம் பேசவில்லை. தன் பேச்சை நம்பாது அந்தப் பெண்ணிற்குத் தான் உதவியதாய் தன்னைச் சந்தேகித்துத் தந்தை தன்னிடம் பேசாமல் இருப்பதாய் எண்ணி தான் இத்தனை நாட்களாய் இவளும் அவரிடம் கோபத்தைக் காண்பித்துப் பேசாது இருந்தாள்.

ஆனால் இன்றைய அவரின் நேரடி முகத்திருப்பலில் வெகுவாகவே காயப்பட்டுப் போனாள் ஆராதனா.

அலுவலகத்தை அடைந்தவள், தனது பணியினைப் பார்த்துக் கொண்டிருக்க, காலை மூன்றரை மணியளவில் அழைப்பொலி கேட்டு கைபேசியை எடுத்தவள், “வீட்டுக்கு போய்ட்டியா யுவா?” எனக் கேட்டாள்.

“ஆமா இப்ப தான் வந்தேன் ஆரு” என்றான் அவளின் அத்தை பையன் யுவராஜ். முருகேசனின் சொந்த தங்கை மகன் இவன்.

இருவருக்குமிடையில் நல்ல நட்பு இருந்தது. யுவராஜின் அலுவலகத்தில் இரவு ஷிப்ட் மூன்று மணிக்கே முடிந்து விடும் என்பதால், எப்பொழுதும் இந்நேரத்திற்கு அவளுக்கு அழைப்பு விடுத்து பேசி விடுவான் யுவராஜ்.

“என்ன உன் குரலே சரியில்ல? உடம்பு சரியில்லையா?” எனக் கேட்டான்.

“அப்பாக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லாம இன்னும் என்கிட்ட பேசாம இருக்காருடா. இன்னிக்கு என் மூஞ்சிக்கு நேரா முகத்தைத் திருப்பிக்கிட்டு போய்ட்டாரு, நிஜமாவே எனக்கு அந்தப் பொண்ணை யாருனே தெரியாதுடா” எனக் கூறியவளின் குரல் அழுகையில் விம்மியது.

தன் ஆருயிர் தோழியின் அழுகையில் இவனின் மனம் வேதனை கொள்ள, “ம்ப்ச் என்ன ஆரு, மாமா பத்தி தெரியாதா உனக்கு? உன் மேல கோபப்படுற அளவுக்குலாம் அவருக்கு மனசு வராது. நீதான் அந்தப் பொண்ணு காதலுக்கு உதவியிருக்கனு நினைச்சு தான் கோபத்துல இருக்காரா இருக்கும்” என்றான்.

“எனக்குத் தான் அந்தப் பொண்ணு யாருனே தெரியாதேடா, நான் எப்படி அந்தப் பொண்ணு காதலுக்கு வேற உதவியிருக்க முடியும்” என்றாள்.

“இதை நீ மாமாகிட்ட சொன்னியா?” எனக் கேட்டான்

“அந்தப் போலீஸ் வந்தப்பவே சொன்னேனே” என்றாள் அவள்.

“ம்ப்ச் மாமா உன்கிட்ட பேசாம போன பிறகு அவர்கிட்ட எடுத்து சொன்னியா? நீயும் முறுக்கிட்டு தானே திரிஞ்ச?” என்றான்.

அவள் பக்கத் தவறை உணர வைக்கும் செயலில் இறங்கினான் யுவராஜ்.

“ஹ்ம்ம் அவர் எப்படி என் பேச்சை நம்பாம போகலாம்னு நானும் பேசலை” என்றாள்.

“சரி அத்தை என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.

“’எப்ப எதுனாலும் உன் அப்பாகிட்ட தானே சொல்லுவ. அவர்கிட்டயே சொல்லாம இவ்ளோ பெரிய காரியம் செஞ்சிருக்க நீ’னு அம்மாவும் என்னை நம்பாம திட்ட தான் செஞ்சாங்க.  ஆனா அந்த திட்டு கூட அப்பாவோட இந்த மௌனம் அளவுக்கு வலிக்கலைடா” எனக் கூறி அழுதாள். 

“நம்ம வேற எதுக்கோ எப்பவோ செஞ்ச தவறுக்கான தண்டனை, இப்படி சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு நம்ம மேல பழியை சுமத்தி வாங்க வச்சிடும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அது எவ்ளோ உண்மைனு இன்னிக்கு உன் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்

நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம ஆபிஸ்க்கு மட்டம் போட்டு மாமாகிட்ட பொய் சொல்லி அந்த கல்யாணத்துக்கு போனல. அப்படி என்ன புனிதமான காதல் அவங்களோடதுனு சப்போர்ட் பண்ண? யாரை பத்தியும் முழுசா தெரிஞ்சிக்காம அவங்களோட செயலுக்கு சப்போர்ட் செஞ்சா இப்படி தான் அனுபவிக்கனும் ஆரு” மனதினுள் இருந்த ஆதங்கம் அத்தனையும் மொத்தமாய் அவளிடம் கொட்டியிருந்தான். 

அவளிடம் இருந்து பதில் வராது விசும்பல் மட்டுமே கேட்க, தான் பேசியதற்காக தன்னையே நொந்து கொண்டவனாய், “சாரி ஆரு, வெந்த புண்ல வேலை பாய்ச்சிட்டேன், வெரி சாரிடா. காலைல வீட்டுக்கு போய் முதல் வேலையா மாமாகிட்ட பேசு, அப்புறம் என்னாச்சுனு எனக்கு மெசேஜ் பண்ணு. நான் முழிக்கும் போது பார்க்குறேன். ப்ளிஸ் அழுகையை நிறுத்துடா. எனக்கு கஷ்டமா இருக்கு” என்றவன்

“நான் வேணா காலைல மாமாகிட்ட வந்து பேசவா?” எனக் கேட்டான்.

“இல்ல இல்ல வேண்டாம், நானே பேசிக்கிறேன். நீ சொன்னது சரி தான். யாரோட காதல் உன்னதமானதுனு நான் உன்கிட்ட சண்டை போட்டு அவங்க கல்யாணத்துக்கு போனேனோ, அவங்களே இப்ப அம்மா அப்பா தான் பெரிசுனு பிரிஞ்சி தான் இருக்காங்க. நான் காலைல அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன், நீ தூங்கு” என இணைப்பை துண்டித்தாள். 

காலை ஏழு மணியளவில் வீட்டை அடைந்ததும் தந்தையைத் தேடி அவரின் அறைக்குச் சென்றவள், “அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள்.

கடைக்குக் கிளம்பி கொண்டிருந்த முருகேசன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நாற்காலியில் அமர்ந்தார்.

“அப்பா என்னை நீங்க நம்பலையா? நிஜமாவே எனக்கு அந்தப் பொண்ணு யாருனே தெரியாதுப்பா?” வேதனை நிரம்பிய குரலில் உரைத்திருந்தாள் அவள்.

“ஹ்ம்ம் அந்தப் பொண்ணு கடைசியா அந்தப் பையன்கிட்ட உன் போன்ல இருந்து தான் பேசினதா அன்னிக்குப் போலீஸ் ஸ்டேஷன்ல அந்தப் பொண்ணே சொல்லிடுச்சு” என்றவர் சொன்னதும்

உலகமே தட்டாமாலை சுற்றுவதாய் தோன்றியது அவளுக்கு. தனக்கு ஏதேனும் மறதி நோய் வந்து விட்டதா என்றே யோசிக்க ஆரம்பித்து விட்டாள் ஆராதனா.

மேலும் தொடர்ந்த முருகேசன், “ஆனா அந்தப் பொண்ணை உனக்குத் தெரியாதுனும் சொன்னாமா. குழந்தைகள் பூங்காகிட்ட நீ பஸ்காக காத்திருக்கும் போது அந்தப் பொண்ணோட போன் சார்ஜ் இல்லாம போய்ட்டதா சொல்லி ஒரு போன் பண்ணனும்னு உன்கிட்ட போன் வாங்கி அந்தப் பையனுக்குப் போன் பண்ணிருக்கு அந்தப் பொண்ணு. அந்தப் பையன் அப்ப அந்தப் பொண்ணுகிட்ட பேசினதோட போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சிருக்கான்.

அதனால தான் கடைசியா பேசினதா உன் நம்பரை காமிச்சிருக்கு. இதே மாதிரி அந்தப் பொண்ணு கடைசியா பேசின ஆளுங்ககிட்டயும் விசாரிச்சுட்டு தான் இருந்திருக்காங்க. தேவையில்லாம அவங்க பிரச்சனைல உன்னை இழுத்துட்டதா சொல்லி மன்னிப்பு கேட்டுச்சு அந்தப் பொண்ணு” என்றார் முருகேசன்.

பேரதிர்ச்சி ஆராதனாவிற்கு.

“அவசரத்துக்குக் கோட்டாங்களேனு பேச போன் கொடுத்தது ஒரு குத்தமா. நம்ம நல்லதா நினைச்சு ஒரு உதவி செஞ்சாலும் எப்படி அது நம்மளை பாதிக்குது பாருங்கப்பா. இதனால நம்ம குடும்பத்துல எல்லாரும் எவ்ளோ மனவுளைச்சல் அடைஞ்சிருக்கோம்” வாய் விட்டே புலம்பினாள் ஆராதனா.

“எப்படியோ என் மேல தப்பு இல்லனு இப்பவாவது புரிஞ்சிதே” ஆசுவாசமாய் பெருமூச்செறிந்தாள் ஆராதனா.

“உண்மை தெரிஞ்சும் ஏன்ப்பா என் மேல இந்தக் கோபம்? ஏன் இத்தனை நாளா என்கிட்ட பேசாம இருந்தீங்க?” ஆதங்கத்துடன் வந்தது அவளின் கேள்வி.

“அன்னிக்கு அந்தக் குழந்தைகள் பூங்காகிட்ட உனக்கு என்ன வேலை? அன்னிக்கு மார்னிங் ஷிப்ட் ஆபிஸ்க்கு போறேன்னு சொல்லிட்டு தானே போன? உன் ஆபிஸ் மறைமலை நகர்ல இருக்கு? ஆனா நீ எதுக்குக் கிண்டிக்கு போன?” என அவர் கேள்வி மேல் கேள்விகளாய் கேட்கவும், மாட்டிக் கொண்ட திருடனாய் திருதிருவென விழித்தாள் ஆராதனா.

“அப்பா அது வந்து” அவள் குரல் தடுமாற

“அப்படி எங்க போன அன்னிக்கு?” எனக் கேட்டார்.

“ஃப்ரண்ட்டோட மேரேஜ்க்கு போனேன்ப்பா” என்றாள் தலை கவிழ்ந்தவாறே

“அவங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சி நடந்த கல்யாணமா?”

இல்லையெனத் தலையாட்டினாள்.

“காதல் கல்யாணமா?”

ஆமெனத் தலையசைத்தாள்.

“உன் விருப்பப்படி நீ வாழ கூடிய எல்லா சுதந்திரமும் உனக்குக் கொடுத்து தான்மா அப்பா வளர்த்திருக்கேன். எங்கேயும் எப்போதும் உன்னோட ஆசைக்கும் விருப்பத்திற்கும் எதிரா நான் நடந்துக்கிட்டதே இல்லை. அப்படிப்பட்ட அப்பாகிட்டயே பொய் சொல்லிட்டு போறனா நீ செய்றதுல ஏதோ தப்பிருக்குனு ஏன்மா உனக்குத் தோணாம போச்சு” எனக் கேட்டார்.

“காதலிக்கிறது தப்பு சரினுலாம் நான் சொல்ல வரலை, ஆனா யாரையும் காயப்படுத்தாத காதல் தான்மா நீடிச்சு நிலைக்கும். பெற்றோரும் சரி பிள்ளைகளும் சரி மத்தவங்க பத்தி யோசிக்காம தன் நலத்தை மட்டும் கருதியே ஒரு விஷயத்தை செய்யும் போது அது அவங்களுக்கு என்னிக்குமே நன்மையைக் கொடுக்காதுமா” என்று நாற்காலியில் இருந்து எழுந்தார்.

அவள் முகத்தை பார்த்தவாறு, “உனக்கான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கேன்னு சொல்ல வரலைமா. உன் வாழ்க்கைக்கான சுதந்திரம் உனக்கு இருக்கு. ஆனா என் மக அதை நல்லமுறையில பயன்படுத்திக்காம தவறாக்கிட கூடாதேன்ற சாதாரணப் பெற்றோரின் நிலைல தான் அப்பா உன் மேல கோபப்பட்டது. இன்னொன்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டியேன்ற கவலையும் ஒரு காரணம்” எனக் கூறி விட்டு சென்று விட்டார்.

தான் என்றோ ஒரு விஷயத்திற்காக சொன்ன பொய், இன்று வேறொரு விஷயத்தின் மூலம் வெளிவந்து தன்னை சுட்டு விட்டது என புரிந்தது அவளுக்கு. 

‘அய்யோ ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு’ உள்மனம் உந்திய வேகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து பதறியடித்து எழுந்தாள் ஆராதனா.

மணி மாலை ஆறு எனக் காண்பிக்கவும் ஆசுவாசமானவளாய் மூச்சை இழுத்து விட்டு கொண்டாள்.

நெடு நேரம் உறங்கியது போன்றதொரு உணர்வு எழுந்தது அவளுக்கு.

முகம் கழுவி விட்டு மாடியில் தனது அறையிலிருந்து கீழே வந்தவள், “அம்மா டீ” என்றவாறே நேராய் சமையலறை நோக்கி சென்றாள்.

அங்குத் தந்தை நிற்பதை கண்டவளின் பாதம் அப்படியே சமையலறையின் வாசலிலேயே தேங்கி நின்றது.

காலையில் தந்தையுடன் உரையாடி விட்டு உறங்க சென்றவள், தற்பொழுது தான் அவரைக் காண்கிறாள்.

அவளின் புறம் துளியும் திரும்பாது சமையல் வேலை செய்து கொண்டிருந்தவர், “உங்க அம்மா அவ தூரத்து சொந்தகார பையன் ரவிக்கு இன்னிக்கு ரிசெப்ஷன்னு யுவா கூட அங்க போய்ருக்கா” என்றார்.

“ஆமா.. அம்மா காலைலயே சொன்னாங்கப்பா, நான் தான் மறந்துட்டேன்” என்றவள் அவரின் முகம் பார்த்தாள்.

இவளின் பதிலுக்கு எவ்வித எதிர்வினையும் காட்டாது, கடமையே கண்ணாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருப்பாய் காட்டிக் கொண்டார் முருகேசன்.

அவளை இவர் தவிர்க்கிறார் என நன்றாகவே புரிந்தது அவளுக்கு. அவரையே பார்த்தவாறு நின்றிருந்தாள் ஆராதனா.

அவளைக் கடந்தவாறு முகப்பறைக்குச் சென்றவர், அங்கு இருந்த மேஜை மீது அவள் கேட்ட தேநீரை வைத்து விட்டு வந்தார்.

தேநீரை தன் கையால் வழங்காது மேஜை மீது வைத்த அவரின் செய்கையைக் கவனித்தவாறு நின்றிருந்தவளுக்குக் கண்களில் நீர் தளும்பியது.

‘இன்னும் தன் மீது கோபத்தில் தான் இருக்கிறாரா?’ என மனம் சோர்ந்து போனது அவளுக்கு.

சமையலை முடித்து அவளின் இரவுணவை அதற்குரிய டப்பாவில் அடைத்து, அவளின் உணவுப்பையில் எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தவரை நோக்கி சென்றவள், “அப்பா சாரிப்பா, இப்படிப் பேசாம இருக்காதீங்கப்பா” கண்களில் நீர் தேங்கி நிற்க, அவர் முகம் நோக்கி கூறினாள் அவள்.

அவளைத் தவிர்த்து விட்டு தனதறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

வேலைக்குக் கிளம்ப வேண்டிய அவசர நிலையில் இருப்பதை உணர்ந்தவள் மாடிக்கு சென்றாள்.

துரிதமாய்க் குளித்துக் கிளம்பியவள், “அண்ணா, நீங்க தெரு ஓரமாவே நில்லுங்க, இதோ வந்துடுறேன்” அலுவல் வண்டியின் ஓட்டுனரிடன் கைபேசியில் பேசியவாறே கீழே இறங்கி வந்தாள்.

முருகேசன் முகப்பறையில் அமர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் நின்று அவரைப் பார்த்தவள், வேண்டுமென்றே உணவுப்பையை எடுக்காது, “பை(bye) ப்பா” என நிலை கதவு வரை செல்ல

“நில்லு பாப்பா, சாப்பாடு எடுத்துட்டு போ” உணவுப்பையை எடுத்து அவளருகே சென்று கைகளில் திணிக்க, அவரைத் தன்னிடம் தானாகப் பேச வைத்து விட்ட களிப்பில் அவள் முகத்தினில் கள்ளப்புன்னகை உண்டானது.

அதைக் கண்டு கொண்ட அவளின் தந்தையோ முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு, “பார்த்துப் பத்திரமா போய்ட்டு வா, ஆபிஸ் போய் சேர்ந்ததும் போன் பண்ணு” என்றார்.

‘ஹ்ம்ம்’ எனக் கண்கள் மின்ன தலையாட்டி அவள் சென்ற பின், தெரு முனையில் இருந்த வண்டியில் அவள் ஏறியதை வீட்டின் வெளியே நின்று பார்த்து உறுதி செய்த பிறகே வீட்டினுள் வந்து நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் முருகேசன்.

தன்னை பேச வைப்பதற்கென்றே மகள் செய்த செயலை நினைத்து பார்த்தவர், ‘கள்ளப் பாப்பாவாகிட்டமா நீ’ என மனதோடு மகளை வாஞ்சையாய் ஏசியவாறே முறுவலித்தார்.

அதே சமயம் அலுவலக வண்டியில் பயணித்திருந்த அவளும், ‘ஹப்பாடா! இனி எப்படியாவது அப்பாவை மலை இறங்க வச்சிடலாம்’ என மனதினுள் எண்ணி கொண்டவாறு மென்னகை புரிந்தாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திறந்த வீடு (சிறுகதை) – ✍ Dr. நடராஜா ஜெயரூபலிங்கம், Aylesbury, UK

    சொத்து (சிறுகதை) – ✍ இராச.குணசேகரன்