in

தாய்மை (அனுபவ பகிர்வு) – வைஷ்ணவி

நவம்பர் 30, 2010 காலை 6 மணிக்கு உற்சாகத்துடன் எழுந்தேன். உற்சாகத்திற்கு காரணம், இன்று பக்கத்து வீட்டு சாந்தி அக்கா எனக்கு பிடித்த தக்காளி சாதம் செய்து தருவதாக நேற்றிரவு கூறினார். பல் துலக்கி விட்டு வருவதற்குள் அம்மா ஒரு படி அளவுள்ள பெரிய டம்ளரில் காபி ஊற்றி வைத்திருந்தார். காபி குடித்துக் கொண்டே யோசித்தேன்….இன்று மதியம் தக்காளி சாதத்திற்கு தொட்டுக் கொள்ள என்ன செய்யலாம்? ஒன்றும் தோன்றவில்லை. கிச்சனில் தேடியதில் உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தது. ஐ ஜாலி!

ஒரு நிமிடம். நீங்கள் என்னை சரியான தீனிப் பண்டாரம் என நினைத்திட வேண்டாம். ஆனால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. நீங்கள் என்னவோ நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது எது சொன்னாலும்  மண்டையில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால், இன்னும் எட்டு நாட்களில் என் வேண்டுதல் படி அந்த முருகனே எனக்கு மகனாக பிறப்பான் என்ற நினைப்பே மற்ற எதிலும் கவனம் கொள்ளாமல் தடுத்தது.தக்காளி சாதம் மட்டும் விதிவிலக்கு.

மதியம் பன்னிரண்டு மணி அளவில் மாமியார் கூறிய பிரசவத்திற்கு முந்தைய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவ மனைக்கு சென்று விட்டோம். பரிசோதனை செய்த மருத்துவர், பனிக்குடம் உடைய ஆரம்பித்துள்ளது, ஆனால் சிசுவின் தலை இன்னும் திரும்ப வில்லை வலி வருவதற்கான ஊசி போட்டுள்ளேன். பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

இரண்டு ஊசி போட்டும் வலியும் வரவில்லை. தலையும் திரும்ப வில்லை. அப்பன மாதிரியே எவ்ளோ அழுத்தமா இருக்கு என அம்மா எம்டனை திட்ட ஆரம்பித்து விட்டார். ஒரு புறம் பயமாக இருந்தாலும்,ஆறு தலையும் திரும்ப நேரமாகும் அல்லவா! என்ற நினைப்பே ஆறுதலை தந்தது. கடைசியில் இரவு பத்து மணிக்கு வந்த நர்ஸ் இதற்கு மேலே தண்ணீர் குடிக்காதீங்க , திடமா சாப்பாடு எதுவும் சாப்பிடாதீங்க என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அப்போதிருந்த வைஷ்ணவிக்கு கூகுள், யூடியூப் பற்றியெல்லாம் தெரியாது. நல்ல நேரம் தெரியாமல் போனது. இல்லையென்றால் அதை சர்ச் செய்கிறேன் இதை ரிசர்ச் செய்கிறேன் என கிளம்பியிருப்பேன்.

டிசம்பர் 01, 2010 நள்ளிரவு 3 மணிக்கு மீண்டும் பரிசோதித்த மருத்துவர் தலை திரும்பவில்லை என கூறிவிட்டு அறுவை அரங்கம் என எழுதப்பட்டிருந்த சில்லென்ற அறைக்குள் போக சொன்னார்.

தேவையில்லாமல் மனம் ஏனோ வசூல் ராஜா MBBS ஆபரேஷன் தியேட்டரை நினைவு படுத்தியது (தற்போதைய மைண்ட் வாய்ஸ்: இது ஒரு மானங்கெட்ட மனசு, எப்ப எதை நினைக்கிறதுனு இப்பவே தெரில, பதிமூணு வருசம் முன்ன மட்டும் எப்படி தெரியும்?)

ஆர்வக் கோளாறில் படுத்தவாறே அறையை நோட்டம் விட்டேன். லைட்டா பயம்.ஒரளவு எல்லாரும் சிரித்த முகத்துடனேயே இருந்தனர். அனஸ்தீசியா கொடுத்தவுடன் அரைக்கால் மயக்கம். எல்லாரும் அவரவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நான் பார்த்துக் கொண்டிருந்ததை  பார்த்த நர்ஸ் கண்ணில் ஏதோ திரை போல மாட்டிவிட்டார். இப்போது சதிலீலாவதி படத்தில் விமானத்தில் கமல் கண்ணில் ஒரு கருப்பு மாஸ்க் இருக்குமே அது நினைவுக்கு வந்து தொலைத்தது. again coming that manamgetta manasu. இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் தீவிர கமல் ரசிகை என்று.

நான் அறுவை அரங்கிற்கு சென்றதிலிருந்தே ஒரு வட இந்திய டாக்டர் என்னிடம் உடைந்த தமிழில் பேசிக் கொண்டே இருந்தார். நான் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டயே முக்கா மணி நேரம் பேசுவேன். இவர் வேற உன் ஹாபி என்ன ? என்ன வேலை செய்றனு கேட்டுட்டு இருந்தார். நானும் அவர்ட்ட பேசிட்டே இருந்தேன். இவர் பாவம் ஏதோ அஜிஸ்டெண்ட் டாக்டர் போல, சும்மா வேடிக்கை பார்த்துட்டு நம்மட்ட பேசறார்னு நினைச்சேன்.

அப்புறம்தான் தெரிஞ்சது அவர் அனஸ்தீசியன். அவர் வேலையே அதானு. இப்ப சமீபத்துல ஒரு பயாப்ஸிக்கு (பயாப்சியா ? அடாப்சியா?) இந்த மகளிர் மட்டும் ஊர்வசி வேற நடுல டிஸ்டபன்ஸ்)செமி அனஸ்தீசியால , நாந்தான் குந்தவை நாச்சியார்னு குதிரை ஓட்டுனதெல்லாம் தனிக்கதை.

அதுவரை பெங்காலி திரைப்படம் போல் மெதுவாக நகர்ந்த நிமிடங்கள் திடிரென ஹரி படம் போல் அரங்கமெல்லாம் ஒரே பரபரப்பு. இந்த பரபரப்பிலும் நேரத்தை கவனிக்க தவறவில்லை. அதிகாலை 5.57 ல் விருச்சிக லக்னத்திற்குள் சூரியன் பிரவேசித்தவுடன், டாக்டர் “வைஷ்ணவி பெண் குழந்தை மா உனக்கு” என்றார்.

ஒரு மைக்ரோ நொடி மட்டும் ஏமாற்றமும் முருகன் மீது கோபமும் வந்தது. நான் எதிர் நோக்கியது முருகனைத்தானே என்று.  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் இதற்கான விடை எனக்கு கிடைக்கும் என அப்போது தெரியவில்லை. விருச்சிகத்திற்கு அதிபதி முருகன்தானே! வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள் அவை.

Happy Birthday Jingly!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிள்ளைச் செல்வங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஊமச்சி குலதெய்வம் (சிறுகதை) – பூங்குழலி.S, வடசேரி, தஞ்சாவூர்