எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்னங்க இது அக்கப்போரா போச்சு,ஒண்ணுமே செய்யாத சிலர் வந்து நம்ம காது படவே சொல்றாங்க, ”இந்த சக்திப் பயலுக்கு என்னல்லாம் செஞ்சிருக்கோம்,ஒரு நன்றி உண்டா, இந்தோ இருக்கற எலக்ட்ரிக் ஷாப்ல இருந்து ஒரு சரவிளக்கு வாங்கிண்டு வரச் சொன்னா இவனால முடியலை. இத்தனைக்கும் சும்மா வாங்கிட்டு வரச் சொல்லலை. வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு பில்லை காட்டினா பணத்தை கொடுத்துட்டுப் போறேன்.”
நேராவே சொல்றேனே, இது எங்க ஹவுஸ் ஓனர் சிவராமன்தான். நவராத்திரி டெகரேஷனுக்கு சாண்ட்லியர் மாதிரி சரவிளக்கு ஒண்ணு வாங்கிண்டு வரயாடா சக்தினு கேட்டார். சொன்னவர் பணம்லாம் ஒண்ணும் கொடுக்கலை. இதோ இருக்கற எலக்ட்ரிக் ஷாப்னு எல்லார்கிட்டயும் சொல்லிண்டு திரியறாரே அது எங்கே தெரியுமா அது பிராட்வேல. நாங்க இருக்கறது வேளச்சேரி.
நான் உண்மைல பிராட்வே போய் விலையெல்லாம் விஜாரிச்சேன், அவர் கேட்ட மாதிரி சரவிளக்கு அஞ்சாயிரம் ரூபாக்கு மேலே, அங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு எடுத்துட்டு வரணும் (பெரிய பேக்கிங், கிளாஸ் வேற) மாசக் கடோசி அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்.
தினம் ஆபீஸ் விட்டு வரப்ப வாசல்லயே நிக்கறார் சிவராமன் சார், ”என்னடா சக்திவேல் என்ன ஆச்சு சரவிளக்கு, கிளாஸ் ஃபேக்டரில ஆர்டர் கொடுத்திருக்கயா”னு கிண்டல் வேற.மாசக் கடோசில அவ்வளவு பணம் கைல இல்லைனு எப்படி சொல்றது. எதாவது பேசினா வாடகையை ஏத்திடுவாரோனு பயம் வேற.
காவேரிப் பாட்டிகிட்ட ,அவரும் அவர் பார்யாள் பங்கஜம் மாமியும் பேசறது மாடி பால்கனில இருந்த எனக்கு நல்லாவே கேட்டது. ”மேலே குடியிருக்கானே இந்த சக்திவேலு பய, கஷ்டப்படறானேனு சொல்ப வாடகைக்கு வீடு கொடுத்தோம், பேச்சுலர் பையன் வயசான காலத்துல நமக்கும் கூடமாட ஒத்தாசையா இருப்பானேனு.”
அந்தப் பாட்டி, ”என்னாச்சு ஏதாவது பொம்மனாட்டியை இழுத்துண்டு வந்து கொட்டம் அடிக்கறானா”
பங்கஜம் மாமி, ”அதுக்கெல்லாம் தில் வேணும் இது வெறும் புஸ்வாணம், வேலைக்கு போகும் வரும், தூங்கும் அவ்வளவுதான்”
பாட்டி, ”அப்ப என்னதான் பிரச்சனை,வாடகை கொடுக்க இழுத்தடிக்கறானோ”
சிவராமன், ”டாண்னு மூணாம் தேதி பாங்ல பணம் போட்டுடுவான்.”
பாட்டி இப்ப கொஞ்சம் பொறுமை இழந்தாள், ”என்னதாண்டா பிரச்சனை உன் ஓர்ப்படி பொண்ணு சரளா கொஞ்சம் விந்தி விந்தி நடப்பாளே அவளை கட்டி வச்சுடலாம்னு பாத்தே வேண்டாம்னுட்டான் அதானே”
“அது இன்னும் கேக்கவே இல்லை, நவராத்திரிக்கு கொஞ்சம் சாமான் வாங்கிண்டு வரச் சொன்னோம், முடியாதுன்னும் சொல்லாம இழுத்தடிக்கறான். இன்னும் ரெண்டு நாள் கூட இல்லை என்னால போய் வாங்கிட்டு வர முடியலை. காடராக்ட் ஆபரேஷன் பண்ணினதுக்கு அப்பறம் வெளில போக பயமா இருக்கு. கண்ணாடி போட்டுண்டா மேடெல்லாம் பள்ளமாவும், பள்ளம் மேடாவும் தெரியறது”
பங்கஜம் மாமி, ”பையன் சாயந்தரம் வரப்ப முகம் வாட்டமா இருந்தா சுடச்சுட டிபன் மேல நானே எடுத்துட்டுப் போய் எத்தனை தடவை கொடுத்திருப்பேன்”
எனக்கு அந்த சுடச்சுட கொடுத்த டிபன் ஞாபகம் வந்தது. என்னிக்கு பண்ணினதோ கோதுமை ரவை உப்புமா(லேசா ஊசிப் போன வாடையோட) ரெண்டு வாய் முழுங்கிட்டு ராத்திரி பூரா சிரமப்பட்டது எனக்குதானே தெரியும்.
பாட்டி இப்ப இறுதித் தீர்ப்பு சொன்னா, ”இந்தக் காலத்து பிள்ளைகள் இப்படிதான். நன்றின்னா என்னானே தெரியாது, நாலணாக்கு கிடைக்குமானு கேக்கும். சரி ஒரு டம்ளர்ல தலை தட்டி கொஞ்சூண்டு துவரம் பருப்பு கொடுடீம்மா. மாச சாமான் வாங்கினவுடனே திரும்ப கொடுத்துடறேன்”
பங்கஜம் முனகிண்டே உள்ளே போனா, இருக்கறதுக்குள்ளே சின்ன டம்ளரா எடுத்து அதுல அரை டம்ளர் துவரம் பருப்போட திரும்ப வந்து பாட்டி கிட்ட நீட்டினா.
பாட்டி சும்மா வாங்கிண்டு போவாளா, ”டம்ளர் ரொம்பப் பெரிசா இருக்கே இதுலதான் வரவாளுக்கு காபித் தண்ணி கொடுப்பயோ”னு கேட்டுட்டே புறப்பட்டா.
பங்கஜம் பாட்டி போனவுடனே, ”இந்த கிழத்துக்கு வாய் ஜாஸ்தி, திரும்ப பருப்பு எங்கே, டம்ளர் கூட வருமான்றது சந்தேகம்தான்”
சாயந்தரம் சிவராமன் தன் நண்பர் கோவிந்து மாமாகிட்ட சொன்னதும் காதுல விழுந்தது. வேணும்னு என் காதுல விழணும்னே இப்படி பேசுவாங்களோ?
“பாத்தயாடா கோவிந்து அரண்மணை மாதிரி வீட்ல மாடி போர்ஷன் பூரா ஃபர்னிஷ்ட் போர்ஷன் வாடகைக்கு விட்டோம் நம்மாத்துப் பையனா நினைச்சிண்டு, நன்றி இருக்கோ, ஒரு ரேஷன் கடைக்கு போகக் கூட தொங்க வேண்டியிருக்கு”
ஒவ்வொரு மாசமும் ரேஷன் கடைக்கு போறது, எலக்ட்ரிக் பில் கட்றது, மத்த சில்லரை வேலை பூரா நான்தான் செய்யறேன் பாவம் வயசானவங்க ஆச்சேனு.இந்த பர்னிஷ்ட் மாடிப் போர்ஷன்றாரே அது என்ன தெரியுமா, ஒரு ஸ்டீல் கட்டிலும் ,துணி மாட்ட ஒரு மர கோட் ஸ்டாண்டு, துணி காயப் போட கயிறு கட்டி இருக்கா அவ்வளவுதான்.அந்த கட்டில்ல ஒரு பவானி ஜமுக்காளம் போட்டுண்டு படுத்துக்கற அவஸ்தை எனக்குதான் தெரியும்.
சரி என் தலையெழுத்து கடோசில என் நன்றிக்கடனை செலுத்தியாச்சு ரெண்டு வருஷத்துக்கு அப்பறம்.
“ஏய் சரளா சீக்கிரம் புறப்படு டாக்டராண்டே போகணும்”, சரளா விந்தி விந்தி நடந்து வந்தா பாவம்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings