எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான் வாசகர்கள் ரசிச்சு படிக்கணும்றதுக்காக நிறைய கப்சா விட்டுட்டேன், வாசகர்களும் இதுவரை ஆதரவு தந்து வருகின்றனர். ஆனா இப்பச் சொல்லப் போறது பக்கத்து வீட்டு பார்வதி மேல ஆணையாக முற்றிலும் உண்மை.
அப்ப எனக்கு ஒரு பதினோரு வயசு இருக்குமா, இருக்கும் என் கிளாஸ்மேட் புருஷோத்தமன், சிங்கப்பூர் போஸ்ட் ஸ்டாம்ப் கலர்கலரா மீன் படத்தோட 4 ஸ்டாம்ப் நான் திருப்பதி மொட்டை போட்டுட்டு வந்தப்ப கொடுத்தானே அதுல இருந்து . நான் பிலடெலிஸ்ட் ஆனதுக்கு அந்த தினம்தான் ஆரம்பம்.
அதுல இருந்து அங்கே இங்கேனு பெரிய பெரிய ஆபீஸ் வாசல்ல காலைல கூட்டி குப்பை கொட்டற நேரத்துல நின்னு அவர்கள் எறிந்த தபால் கவர்களை பொறுக்கி அதில் ஒட்டப் பட்ட தபால்தலைகளை ஜாக்கிரதையா பிச்சி எடுத்து, அதை எல்லாம் ஒரு நோட்டு புஸ்தகத்தில் ஒட்டி, (கணக்கு நோட்டு கோவிந்தா) அச்சோ படிப்புக்கு கூட அவ்வளவு நேரம் செலவழித்தது இல்லை (கபடி, கேரம், கிரிக்கெட், பேட்மின்டன், பிலடெலி, இதுக்கெல்லாம் போக நேரம் இருந்தா படிக்க மாட்டோமா என்ன)
சுருக்கமா சொல்லிடறேனே, இப்படியாக வளர்ந்து வந்த தபால்தலை பைத்தியம் ஒரு கட்டத்தில் நின்று போனது. நானும் படித்து முடித்து கர்நாடகா, மும்பைனு பல இடங்கள்ல குப்பை கொட்டி (ஐ மீன் வேலை பாத்து) கடைசியா ஓய்வு பெற்று சென்னைக்கே வந்து சேந்தாச்சு.
ஏதேச்சையா மவுன்ட்ரோடு போஸ்ட் ஆபீஸ் போனப்ப, அங்கே பிலடெலிக் பீரோனு பாத்தேன். அப்ப திரும்பவும் வேதாளம் தோள் மேல ஏறி உக்காந்ததுதான். அங்கே என் வயதை ஒத்த நண்பர்கள் (சிறு வயதினர்), வயதானவர்கள் எல்லார் நட்பும் கிடைத்தது. வாரம் ரெண்டு முறை பஸ் ஏறி மவுண்ட் ரோட் போஸ்ட் ஆபீஸ். பழைய படி ஸ்டாம்ப் ஆல்பம் (இப்ப கணக்கு நோட் இல்லை)
இதை மட்டும் தொடர்ந்தா தொல்லை இல்லையே விட்டுடுமா விதி.கம்ப்யூட்டரில் முகநூல் (Facebook) அறிமுகம். தினம் ஒரு ஆறு ஏழு மணி நேரம் லேப்டாப் சகிதம் உக்காந்து எல்லார் கிட்டயும் வாங்கி கட்டிண்டாச்சு.
பையன் வெளிநாட்ல இருக்கானே, ஒரு தடவை வரப்ப, ஏன் டாடி இவ்வளவு பெரிய லேப்டாப்ல ஃபேஸ்புக் பாக்கணும் நான் வேற வழி பண்ணறேன்னு புதுசா ஒரு ஆப்பிள் ஐஃபோன் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டான், இன்னும் சவுகரியம்
உலகத்துல என்னை மாதிரி பொழுது போகாம பிலடெலி செய்ற ஆட்கள் லட்சக்கணக்குல இருக்கறது தெரிய வந்தது. என்னோட கலெக்ஷனை பதிவு போட்டா பதிலுக்கு நூறு பதிவு வரது. மெல்ல மெல்ல இந்த முகநூல் நண்பர்கள் வட்டம் பெரிசாச்சு.நானும் எப்பவும் ஃபோனும் கையுமாதான்.
என் மனைவிக்கோ படு கோபம் வீட்ல கூடமாட உதவி செஞ்சிட்டிருந்த என்னை ஸ்மார்ட் ஃபோன் வாங்கி கொடுத்து உதவாக்கறை ஆக்கிட்டானே பையன்னு.தினம் புலம்பல் சண்டை.
இதுக்கு என்னடா பண்றதுனு யோசிச்சு ஒரு முடிவு பண்ணினேன்,
சாயந்தரமே ஆப்பிள் ஸ்டோருக்கு போய் பளபளனு ஒரு புது மாடல் ஃபோன் வாங்கிட்டு வந்து மனைவிகிட்ட கொடுத்துட்டேன். முதல்ல எனக்கெதுக்குனு முனகினாலும் பத்தே நாள்ல பழகிக் கொடுத்து மற்றொரு அடிமையை உருவாக்கிட்டேன். இப்ப ஸ்விக்கி, ஜொமேட்டோ உதவியோட லைஃப் ஸ்மூத்தா போறது.
இப்ப வரேன் அந்த விஷயத்துக்கு. என்னாச்சு ஒரு சனிக்கிழமை ஜில்லுனு ஒரு மழைத்தூரல் சாயந்தரத்துல, ஈசிசேர்ல உக்காந்து பக்கத்துல உள்ள ஸ்டூல்ல சூடா பஜ்ஜி , காபியோட (பஜ்ஜி நாயர் கடைல இருந்து வந்தது, காபி பார்யாளே போட்டது) ஃபோனை மேஞ்சிட்டிருந்தேனா.
‘டிங்க்’ ஃபோன்ல ஒரு நோடிஃபிகேஷன். உங்களுடன் நட்பு விரும்பும் ஜாக்குலீன்.
அடுத்து ஒரு ‘டிங்க்’ உங்களை முகநூல் பக்கத்தில் பார்த்தேன் நட்பு கொள்ள ஆசை.
நானும் மனுஷன்தானே சார், கொஞ்சம் வயசு கூட ஆனா என்ன. போய்தான் பாப்போமேனு நட்பை ஒத்துக் கொண்டு ஹை போட்டேன்.
வேற தப்பான நோக்கம் இல்லை அவங்களும் பிலடெலிஸ்டா இருக்கலாம், அவங்ககிட்ட இருந்து ஸ்டாம்ப்ஸ் எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாமேனுதான். என் வாட்ஸ்ஆப் நம்பரையும் கொடுத்தேன் அவசரம் ஆத்திரம்னா பேசலாமேனு.
அடுத்த நிமிஷம் வாட்ஸ்ஆப் மெசேஜ். “ஹை டியர், நான் ஜாக்குலின், உங்க ஃபோட்டோவை FB ல பாத்த நொடில உங்களை பிடிச்சுப் போச்சு”
நான் பேசாம விட்டிருக்கலாம், ஆனா அந்த பெண்ணோட அழகான முகத்தை அவங்க புரொஃபைலில் பாத்து கொஞ்சம் நப்பாசை. டைப்பினேன் “ ஹை நன்றி”
“நான் அமெரிக்கன் ஆர்மில வேலை பாக்கறேன், வயசு 35, விவாகரத்து ஆனவள், ஒரு பெண் குழந்தை 5 வயது.”
நான்,” உங்கள் புரொபைல் பிக்சர் பாத்தேன் அழகாக உள்ளீர்கள், பெண் படிக்கிறாளா”
“ஆமாம், ஜூலி என் பக்கத்தில் தான் இருக்கிறாள், நான் விடுமுறையில் இருக்கிறேன், உங்கள் படத்தை அவளுக்கு காட்டினேன் அவளுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது”
“ஓ நன்றி ஜூலி, ஐ லவ் யூ”
“ஜூலியை மட்டும்தானா இந்த ஜாக்குலினை இல்லையா?”
“அப்படி இல்லை இது ரொம்ப சீக்கிரம்”
“நீங்கள் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனா ஐ ஆம் அல்ரெடி இன் லவ் வித் யூ”
65 வருஷத்துக்கு அப்பறம் மனசுக்குள்ளே ஒரு கிளுகிளுப்பு. 18 வயசுல பரிமளம் படியலை, 19 வயசுல சுசீலாவோட அறுந்து போன காதல், 22 வயசுக்கு பக்கத்து வீட்டு பார்வதி பாத்து பாத்து பறந்து போனது, 23 வயசுல கர்நாடக அழகி கஸ்தூரி கண்டும் காணாம ஒரு மாதிரி காதல். கடைசில ஒரு விதமா 27 வயசுல கல்யாணம். இப்படியே போன லைப்ல ஒரு அழகான செக்கச்சிவந்த வெளிநாட்டுப் பெண் தானாக வந்துஐ லவ் யூ சொன்னா?
இந்த உரையாடல்கள் ஒரு 15 நாள் தொடர்ந்தது. திடீர்னு ஒரு நாள், “டியர், என்னை ஈராக்ல போஸ்டிங் போட்டுட்டாங்க, பெண்ணை ஹாஸ்டல்ல போட்டுட்டு போகணும் ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன்”
நான், “ஓ ரொம்ப கஷ்டம் இல்லை எத்தனை மாசத்துக்கு?”
“அது இப்ப சொல்ல முடியாது ஆனா ஜூலி நான் ஹாஸ்டலுக்கு போகலை டாடிகிட்ட இந்தியா போறேன்றா”
என் வயிற்றில் பயப்பந்து சுருண்டு எழுந்தது, என் மனைவி குழந்ந்தைங்ககிட்ட இந்த புதுத் தக்காளிக் குழந்தை எங்கே இருந்து வந்ததுனு எப்படி சொல்றது.
ஜாக்குலின், “பயப்படாதீங்க எனக்குத் தெரியும் நீங்க ஒரு குடும்பத்துல இருக்கறது, நம்ம காதலை அதோட சேக்க மாட்டேன், நீங்க எனக்கு ஸ்பெஷல். கடைசி வரை நீங்க எனக்கு வேணும். ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க”
நான் கொஞ்சம் தயக்கத்துடன், “என்ன செய்யணும்”
“பெரிசா ஒண்ணுமில்லை நான் ஈ்ராக்ல இருந்து வரவரை என்னோட சொத்து சம்பந்தமான முக்கியமான டாகுமென்ட்ஸை பாதுகாப்பா நீங்க வச்சிருக்கணும். வேற யார் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்லை. தயவு பண்ணி உங்க விலாசத்தை அனுப்புங்க”
நான் பதில் சொல்வதற்குள் ஏதோ நெட்ஒர்க் பிராப்ளம் தொடர்பு விட்டுப் போனது. அது என் நான் செய்த பூர்வ ஜென்ம பலனோ தெரியலை.
அன்னிக்கு நானும் என் நண்பன் ஜெயராமன் சாயந்தரம் வாக்கிங் போறப்ப பார்க்ல கொஞ்ச நேரம் உக்காந்தோமா அப்ப அவன் சொன்னான். “டேய் யார்கிட்ட சொல்றதுனு தெரியலை மகிழ்ச்சியா இருக்கேன் இப்பல்லாம், என்னை ஒரு அமெரிகன் மிடில் ஏஜ் கேர்ல் புரொபோஸ் பண்ணியிருக்காடா, பேரு ஜாக்குலின், டைவர்சி, ஜூலினு ஒரே ஒரு பெண் குழந்தையாம், என்னை ரொம்ப பிடிச்சுப் போச்சாம். நியூயார்க்குக்கே கூட்டிக்கறேன்றா.”
எனக்கு மூச்சு அடைத்தது, “ஜாக்கிரதையா இருடா கமிட் பண்ணிக்காதே எதுவும்”னு சொன்னேன்.
அவன் புன்னகை சொல்லாமல் சொன்ன விஷயம், எனக்கு பொறாமையால் பேசறேன்னு. எனக்கு காதல் ராசி இல்லைன்றது 65 வயசுல நிரூபணம் ஆச்சு.
ராத்திரி 7 மணி நியூஸ், “சமீப காலமாக நூதன முறையில் போதைப் பொருள் கடத்தல், பல சபலம் பிடித்த ஆண்களிடம் பழகி வெளிநாட்டிலிருந்து அவர்கள் விலாசத்துக்கு டாகுமெண்ட் என்ற பெயரில் கூரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பும் நூதன கடத்தல்”
அச்சோ நூலிழைல தப்பிச்சேண்டா சாமி
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings