in , ,

புரியாத புதிர் (பகுதி 3) – ஸ்ரீவித்யா பசுபதி

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சென்னை மயிலாப்பூரில் உள்ள மித்ரனின் பரந்து விரிந்த அந்த பங்களா, களையிழந்து காணப்பட்டது. விஸ்தாரமான முன் அறையில் வல்லபன் ஹரிஹரனுடன் பேசிக்கொண்டிருந்தான். வல்லபன் மித்ரனின் மகன். இருபத்தியேழு வயது இளைஞன். வல்லபன் முகத்தில் ஒரு வார தாடி புசுபுசுவென முளைத்து, அவன் முகத்தில் சோகத்தின் ரேகைகளைப் படரவிட்டிருந்தது. மித்ரனின் உயரமும் அம்மா ரஞ்சனியின் வசீகரக் கண்களும் வல்லபனை அக்மார்க் பணக்கார வாலிபனாகக் காட்டின. சரியான ஓய்வில்லாத ஒருவார அயர்ச்சி அவன் கண்களில் நிரம்பியிருந்தது. 

தந்தையின் இழப்பைத் தாங்கமுடியாத நிலையில் இருந்தாலும், தாயைத் தேற்றி மீட்டு வரவேண்டிய பெரிய பொறுப்பு இருந்தது. வீடு தேடி துக்கம் விசாரிக்க வரும் தொழில்ரீதியிலான நட்புகளை எதிர்கொண்டு பேசவேண்டிய கட்டாயம் இருந்தது. கூடவே மித்ரனின் எம்ஆர் சொல்யூஷன்ஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்பது குறித்த நடவடிக்கைகள் என எல்லாம் அவன் தோளில் விழுந்தது. அதனால் மனம் லேசாகும்வரை அழக்கூட நேரமும் தனிமையும் வல்லபனுக்குக் கிடைக்கவில்லை. 

அவனுடன் பேசிக்கொண்டிருந்த ஹரிஹரனுக்கு மித்ரனின் வயதுதான். மித்ரனின் நெருங்கிய நண்பன். பள்ளிக் காலத்தில் தொடங்கிய நட்பு, கல்லூரியிலும் தொடர்ந்து இப்போது பிஸினசிலும் தொடந்து கொண்டிருக்கிறது. ஹரிஹரனின் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு இப்போது தளர்ந்திருந்தது. சமீப நாட்களாக சரியான தூக்கமில்லை என்பதை அவர் கண்களே காட்டிக் கொடுத்தன. அதோடு பிரயாணக் களைப்பு வேறு. 

ஹரிஹரனின் மகள், திருமணம் முடிந்து அமெரிக்காவில் இருக்கிறாள். அவளைப் பார்ப்பதற்காக மனைவியுடன் அமெரிக்கா கிளம்பிப் போனார். அவர் அங்கே போய்ச் சேர்ந்த அன்று இங்கே மித்ரனின் எதிர்பாராத மரணம். அவருக்குத் தகவல் தெரிவித்து, அதனால் அவர் நிலைகுலைந்து, பின் சுதாரித்து, அவருக்கு மட்டும் டிக்கெட் புக் செய்து, எப்படியோ இன்றுதான் சென்னை வந்திருக்கிறார். வந்தவர் நேராக மித்ரனின் வீட்டிற்கு வந்துவிட்டார். 

மித்ரன் இறந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. எதிர்பாராத இந்த இழப்பு மித்ரனின் குடும்பத்தை மட்டுமல்ல, அவரின் தொழில் சார்ந்த வட்டத்திலும் பெரும் அதிர்ச்சி அலைகளைப் படரவிட்டிருந்தது. இந்த ஒரு வாரமாக மித்ரன் மறைந்த சோகத்தைப் பகிர்ந்துகொள்ள வீடு தேடி வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடியே இருந்தது. வல்லபன்தான் அனைவரிடமும் பேசினான். நெருங்கிய உறவுகள் சிலர் வீட்டிலேயே தங்கியிருந்து ரஞ்சனிக்கு ஆறுதலாக இருந்தனர். வல்லபன் வெளியாட்களை கவனித்துக் கொண்டான். 

இன்று காலையிலேயே ஹரிஹரனைக் கண்டதும் தன்னையும் மீறி உடைந்து அழுதான் வல்லபன். மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டும்தானே ஆறுதல் தேடமுடியும். வல்லபனும் அந்த நிலையில்தான் இருந்தான். தன் அப்பாவுக்கு அடுத்து, ஹரிஹரனிடம் அவன் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்தான். அதனால் அவரைக் கண்டதும், ஒரு வார அழுத்தம் அழுகையாக வெளியே வந்தது.

 “வல்லபா, என்ன இது? சின்னக் குழந்தையா நீ? இப்போதான் தைரியமா இருக்கணும். அதான் நான் வந்துட்டேனில்ல, எல்லாம் நான் பார்த்துக்கறேன். முதல்ல நான் உங்க அம்மாவைப் பார்த்துப் பேசிட்டு வரேன். அப்புறமா நாம விவரமா பேசலாம். ரிலாக்ஸ் வல்லபா.” 

ஹரிஹரன் எழுந்து வல்லபனை ஆரத் தழுவி தட்டிக் கொடுத்தார். குழந்தையில் இருந்து வல்லபனைப் பார்த்தவருக்கு, அவன் கலங்கி நிற்பதைத் தாங்கமுடியவில்லை. ஆனாலும் இப்போது அவனுக்கு ஆறுதல்தான் அவசியம் என்பதால், தன் வேதனையை மென்று விழுங்கியபடி ரஞ்சனியைப் பார்க்கப் போனார். ரஞ்சனிக்கு ஐம்பத்தியிரண்டு வயது. கணவரின் திடீர் மரணம் அவரைக் கரைத்திருந்தது. சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல் அழுது அழுது துவண்டிருந்தார். ரஞ்சனி வெகு யதார்த்தம், சூதுவாது தெரியாது. வீடு கணவன் மகன் குடும்பம் இதைத்தவிர மித்ரனின் தொழில் சம்பந்தமாகப் பெரிதாக எதுவும் தெரியாது. ஹரிஹரன் அறைக்குள் வந்ததும், அங்கிருந்த உறவுகள் மௌனமாக வெளியேறினர். ரஞ்சனி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பெருங்குரலில் கத்தியபடி அழுதார்.

 “அண்ணா, அவரை இப்படித் தனியா விட்டுட்டீங்களே. நீங்க கூட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்னை அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டாரே, இனிமேல் நான் என்ன செய்வேன். போலீஸ் வேற ஏதேதோ சொல்றாங்க. அவரை இப்படிக் கொல்றதுக்கு யாருக்கு மனசு வரும். யாருக்கும் எந்தக் கெடுதலும் அவர் செஞ்சதில்லையே…” 

இத்தனை நேரம் வல்லபனுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்த ஹரிஹரன் கலங்கி, செய்வதறியாது நின்றார். அவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரஞ்சனியை இந்தக் கோலத்தில் பார்த்ததும், நண்பன் உயிருடன் இல்லை என்ற வலிக்கும் உண்மை நெஞ்சைப் பிசைந்தது. அழுதபடியே ரஞ்சனியைத் தேற்றினார். 

வல்லபன் ஹால் சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து, தன்னை சுதாரித்துக்கொள்ள முயன்றான். வல்லபன் படித்துமுடித்து, கடந்த நான்கு வருடங்களாக பிசினசில் மித்ரனுக்கு உதவியாக இருக்கிறான். தொழில் நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தான். சென்ற வாரம் காலை ஜிம்மில் இருந்தபோதுதான் ஃபோன் வந்தது. இப்படி ஒரு பேரிடி வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பாரமான மனத்துடன் ஒருவாரம் முன்பு நடந்தவைகளை அசைபோட்டான். 

அன்று மித்ரனின் மரணம் சற்று நேரம்வரை கவனிக்கப்படாமலேயே இருந்தது. காலை 7:30 மணிக்கு மித்ரனின் கருப்புநிற பிஎம்டபிள்யூவைச் சுற்றி கூட்டம் கூடத்தொடங்கியது. காலை நேரப் பரபரப்பில் அவரவர் வேலைகளில் மும்மரமாக இருந்ததால் யாரும் இதைப் பெரிதாக கவனிக்கவில்லை. மித்ரனின் கார் அருகில் வேறு கார்கள் இல்லாததும் ஒரு காரணம். உறுமிக்கொண்டிருந்த கார் வேகுநேரமாகக் கிளம்பாமல் அதே இடத்தில் நின்றிருப்பதை ஒருசிலர் கவனித்தாலும், உள்ளே ட்ரைவர் இருக்கையில் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 

உண்மையில் மித்ரன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அவர் உயிருக்குப் போராடியது போன்றோ, அல்லது உயிரற்று இருப்பது போலவோ எந்த சந்தேகமும் வராது. அதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் தெரியவில்லை. வெகு இயல்பாக கார் இருக்கையில் அவர் அமர்ந்திருப்பது போலத்தான் இருந்தது. ஆனால் நேரம் ஆகஆக, அங்கே ஜூஸ் கடை போட்டிருந்தவர்களுக்கு சந்தேகம் வந்தது. கார் அருகே வந்து அழைத்துப் பார்த்தார்கள். காரின் கண்ணாடியைத் தட்டி அழைத்தார்கள். எதற்கும் மித்ரன் திரும்பாமல் அப்படியே இருந்ததால் சந்தேகம் வந்தது. அவர்களின் தொடர் கூச்சல் இன்னும் சிலரை காரை நோக்கி வரவழைத்தது. 

காரைச் சுற்றி மக்கள் கூடி நிற்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதையும் கவனித்த காவலர் ஒருவர், அங்கே விரைந்து வந்தார். காவலரிடம் தங்கள் சந்தேகங்களைச் சொன்னதும், அவர் மேற்கொண்டு ஆக வேண்டியவைகளைக் கவனித்தார். உயர் அதிகாரிகள் வந்தனர். சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பானது. காவல்துறை வாகனங்கள் வரிசைகட்டின. மருத்துவர் குழாமுடன் ஆம்புலன்ஸ் வந்தது. முதற்கட்டமாக காரில் இருப்பவர் மித்ரன் என்பதும், அவர் உயிருடன் இல்லை என்பதும் தெரிய வந்ததும், அவர் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மூச்சுத் திணறலால் அவர் இறந்திருக்கலாம் என்ற தகவல் அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் தள்ளியது. மித்ரனின் மகன் வல்லபனும், அவரின் ட்ரைவர் வேலுவும் பதட்டத்துடன் விரைந்து வந்தனர். வல்லபனால் நடப்பதை நம்பவே முடியவில்லை. கலங்கி நின்றிருந்த அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றும் நிலையில் வேலு இல்லை. கண்ணீர் பெருக தவித்துக் கொண்டிருந்தான். பிரேதப்பரிசோதனை செய்வதற்காக மித்ரனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. கூடவே வல்லபனும், வேலுவும் அங்கிருந்து அகல, மிச்சமிருந்த காவலர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, உயரதிகாரிகளும் கிளம்பினார்கள். மித்ரனின் காரை கைரேகை நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர். 

அரசு ஆஸ்பத்திரியில் மித்ரனின் உடலை கூறுபோட்டு, பிரேதப் பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டனர். மித்ரனின் மரணம் இயற்கையானதல்ல என்றும், நச்சு கலந்த காற்றை சுவாசித்ததாலேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. அவரின் மரணத்தால் நிலைகுலைந்திருந்த குடும்பத்தினருக்கு, இத்தகவல் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. வல்லபன் மனதில் வருத்தமும் கோபமும் ஒன்றாக நாட்டியமாடின. கூடவே இருந்து அவனைத் தேற்றியவர்கள் ஐஜி தேவநாதனும், மித்ரனின் ஐடி நிறுவனத்தில் அசோசியேட் டைரக்டராக இருக்கும் அம்பலவாணனும்தான். ஹரிஹரன் இருந்திருந்தால் அவரும் ஆறுதலாக இருந்திருப்பார். 

அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது. ஹரிஹரன் மிகவும் சோர்வாக இருந்தார். ரஞ்சனியை ஆறுதல்படுத்தியவர் மீண்டும் வல்லபனிடம் வந்தார். 

“அங்கிள், நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க. ஜெட்லாக் இருக்கும். இந்த ஒரு வாரத்துல இவ்ளோ லாங்க் ட்ராவல் உங்க வயசுக்கு ரொம்ப கஷ்டம் அங்கிள். நீங்க வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாம பொறுமையாப் பேசலாம்.” 

“ஆமாம் பா, உடம்பு மட்டும் டயர்டா இருந்தா சமாளிச்சுடுவேன். மனசும் தளர்ந்து போச்சு. மித்து இல்லாம இனிமேல் எப்படி நாட்களை நகர்த்தப் போறேன்னு தெரியல வல்லபா. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, நாற்பத்தஞ்சு வருஷ பழக்கம். அவன் கூடவே இருந்துட்டேன். அவன் இல்லேன்னு நினைச்சுகூட பார்க்கமுடியல. யுஎஸ்ல இருந்து கிளம்பினவன்தான், இங்கே எப்படி வந்தேன்னு எனக்கே தெரியல. என்னால உங்க அம்மாவை இந்தக் கோலத்துல பார்க்க முடியல டா.” 

பொத்தென்று சோஃபாவில் உட்கார்ந்து தலையைக் கவிழ்ந்து கைகளால் முகத்தைத் தாங்கிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார் ஹரிஹரன். வல்லபனுக்கு இப்போதுதான் ஹரிஹரனின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது குறித்த சிந்தனையே வந்தது. அவர் அருகே அமர்ந்து ஆறுதலாகத் தோள்களைப் பற்றிக்கொண்டான். 

“அங்கிள், மனசுல அழுத்தத்தை வச்சுக்காதீங்க, கொட்டிருங்க. எனக்கும் அம்மாவுக்கும் முன்னாடியே அப்பாவை உங்களுக்குத் தெரியும். உங்களுக்கும் அப்பாவுக்குமான புரிதல் அதிகம். உங்க மனசுல இருக்கற வேதனை புரியுது. நீங்க வந்ததும் உங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கணும். ஆனா நான் என் வேதனையைக் கொட்டி உங்களைக் கஷ்டப்படுத்திட்டேன். சாரி அங்கிள். மனசைத் தேத்திக்குங்க. எங்களுக்கு நீங்க சப்போர்ட்டா இருக்கணும். அதுக்காகவாவது நீங்க தைரியமா இருக்கணும்.”

 வல்லபனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இருவருக்கும் இடையே ஆழ்ந்த மௌனம் நிலவியது. அவரவர் மன ஓட்டங்களில் மித்ரனின் நினைவுகள் சூழ்ந்து மனதை அழுத்தின. அவர்களின் மௌனத்தைக் கலைத்தபடி ஐஜி தேவநாதன் வந்தார். தேவநாதன் காவல்துறையில் இருந்தாலும் மித்ரனின் குடுமபத்திற்கும் நெருக்கமானவர். அந்த நட்பு முறையில்தான் இப்போது வந்திருக்கிறார்.

 “என்ன ஹரி சார், எப்போ யுஎஸ்ல இருந்து வந்தீங்க?” என்று ஹரிஹரனை விசாரித்தபடியே வந்தார் தேவநாதன். 

ஹரிஹரனுக்கும் தேவநாதனுக்கும் இடையே சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தபின், ஹரிஹரன் கேட்டார். 

“மித்ரன் மரணம் தொடர்பா புதுசா தகவல் ஏதாவது கிடைச்சுதா ஐஜி சார்?” 

“ஆமா அங்கிள், நேத்து ஃபோன்ல பேசும்போது ஏதோ சொல்றேன்னு சொன்னீங்களே, என்ன விஷயம்?” என்று வல்லபனும் கேட்டான். 

“சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஹைட்ரஜன் சயனைட் சுவாசிச்சதாலத்தான் மித்ரன் உயிர் போயிருக்கு. அது எப்படி காருக்குள்ள வந்துதுன்னு இப்போ என்க்வயரி போயிட்டிருக்கு. ஒண்ணும் பாசிட்டிவா தகவல் கிடைக்கல. அப்புறம் இன்னொரு விஷயம், மித்ரனோட ஷர்ட் பாக்கெட்ல ஒரு துண்டு பேப்பர் கிடைச்சிருக்கு. அதுல “என்னுயிர் நீதானே”ன்னு எழுதியிருக்கு. அது எப்படி மித்ரன்கிட்ட வந்துது. பீச்ல என்ன நடந்துது, யாரையாவது பார்த்துப் பேசினாரா இப்படி எல்லாக் கோணத்துலயும் விசாரணை செஞ்சிட்டிருக்காங்க.”

 “என்ன அங்கிள் சொல்றீங்க, அப்பா ஷர்ட் பாக்கெட்ல இருந்துதா? நான் கவனிக்கவே இல்லையே. அப்போ யாரோ ப்ளான் பண்ணித்தான் அப்பாவைக் கொன்னிருக்காங்களா?” 

“என்ன ஐஜி சார், புதுசு புதுசா ஏதேதோ சொல்றீங்களே. சீக்கிரம் விசாரிங்க.” 

“கேஸ் என்கிட்டே இல்ல சார். ஆனாலும் நான் ப்ரஷர் குடுத்திருக்கேன். சீக்கிரம் ஏதாவது க்ளூ கிடைக்கும்.”

 “யார் வேலையா இருக்கும்? நம்மளால பாதிக்கப்பட்ட யாராவது இதுல இன்வால்வ் ஆயிருக்கலாமோ?”

 ஹரிஹரனின் இந்த சந்தேகம் மற்ற இருவரையும் குழப்பிவிட்டது. நீண்ட பெருமூச்சை விட்டபடி அவர்களின் மௌனங்களுக்கிடையே உரையாடல் அவ்வப்போது எட்டிப் பார்த்தது. 

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புரியாத புதிர் (பகுதி 2) – ஸ்ரீவித்யா பசுபதி