இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காஞ்சி மாநகரம் பொலபொலவென்று விடிந்துகொண்டிருந்தது. கோவில் நகரம் என்பதாலோ என்னவோ அதிகாலை தெய்வீகமாக இருந்தது. ஆங்காங்கே முளைத்திருந்த பூக்கடைகளும், பூஜை சாமான் கடைகளும் ஒருவித தெய்வீக மணத்தை, அந்த அதிகாலை நேரத்தில் காற்றில் கலந்துவிட்டிருந்தன. கூடவே தூரத்தில் ஒலித்த கோவில் மணியோசையும் மனத்துக்கு இதமாக இருந்ததோடு, அந்த நாளை இனிதே துவக்கிய ஒரு நிறைவையும் தந்தது.
காலை நாலரை மணிக்கே திறந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த டீக்கடைகளில் ஒலித்த பக்திப் பாடல்களும் இவற்றோடு சேர்ந்து மனத்தை தெய்வீக நிலைக்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தன. வெளியூரிலிருந்து பேருந்துகளிலும், வேன்களிலும் குழுவாகப் பயணப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் சுற்றிப் பார்க்கும் ஆவலோடு வந்தவர்கள், இந்த டீக்கடைகளை மொய்த்துக்கொண்டிருந்தனர். ஒருசில உள்ளூர்வாசிகள் அதிகாலையிலேயே குளித்து, கையில் பூக்கூடையோடு கோவிலை நோக்கி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம், கோவில்களுக்கு மட்டுமா பெயர் பெற்றது. பட்டுக்கும் பெயர்பெற்ற ஊரல்லவா. திருமணம் போன்ற வைபவங்களுக்கு காஞ்சிபுரம் வந்து பட்டு எடுப்பதை ஒரு தனி நிகழ்வாகவே வைத்துக்கொள்ளும் நிறைய பேர் இருக்கிறார்கள். திருமண ஏற்பாடுகளில் ஜவுளி எடுக்க காஞ்சிபுரம் வருவதற்கென்று தனியாக நாள் ஒதுக்கி, உறவுகளோடு வந்து பட்டு எடுத்துச் செல்வோர், இதைச் சாக்கிட்டு கோவில்களுக்கும் ஒரு சுற்று சென்று வருவார்கள். இப்படி, வெளியூரில் இருந்து வருபவர்களுக்குத்தான் காஞ்சியின் கோவில்களும், பட்டும் பெரிய விஷயமாக இருக்கும். அங்கேயே வசிப்பவர்களுக்கு இது அன்றாடம் கடந்து செல்லும் சாதாரண விஷயமாக இருக்கும். தினசரி அலுவல்களைக் கவனிக்கவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சராசரி மக்களையும் உள்ளடக்கியதுதானே எல்லா ஊர்களுமே. காஞ்சிபுரம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன.
கோவில் மாடவீதிகளைக் கடந்து ஊருக்கு சற்று வெளியே, பல்லவன் சாலையில் மூன்று மாடிகளோடு உயர்ந்து நின்றிருந்தது “சக்தி மனநல மருத்துவமனை”. நேரம் காலை ஆறு மணியைத் தொட்டுக்கொண்டிருந்ததால், மருத்துவமனை விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்து, மங்கலான விடியல் வெளிச்சத்தில் அந்த மருத்துவமனை சோம்பல் முறித்து விழித்தது. உறங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு அறைகளும் மெல்லிய வெளிச்சத்தில் கண்விழித்து அன்றைய நாளைத் தொடங்கத் தயாராயின. மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல், ஒவ்வொரு அறைகளும் மிகுந்த பாதுகாப்போடு, தனித்தனி அறைகளாக, சற்று பெரிய அறைகளாக இருந்தன. மூன்று மாடிகளிலும் சேர்த்து நோயாளிகளுக்கான அறைகள் மொத்தம் ஐம்பது இருந்தன. அதில் தற்போது நாற்பத்தைந்து அறைகளில் உள்நோயாளிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதுபோக, ஒவ்வொரு தளத்திலும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கான அறைகள், பரிசோதனை அறைகள் இப்படி அடிப்படையான அனைத்து வசதிகளுடனும் ஆடம்பரமில்லாமல் இருந்தது சக்தி மனநல மருத்துவமனை.
அங்கே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் யாருமே நாட்பட்ட நோயாளிகள் இல்லை. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் இப்படி குறுகியகால சிகிச்சை தேவைப்படுபவர்களாகவே இருந்தனர். மிகவும் தீவிரமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அங்கே அனுமதிப்பதுமில்லை. ஆரம்பகட்ட பரிசோதனைகளில் மனநோயின் தீவிரத்தைக் கண்டறிந்து, குறுகியகால சிகிச்சையில் குணமாக்க இயலுமானால் மட்டுமே அங்கே சேர்த்துக் கொள்கிறார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை சென்னைக்கு அனுப்பிவிடுவார்கள்.
சக்தி மனநல மருத்துவமனையின் நிறுவனரும், சிறந்த மனநல மருத்துவருமான சத்தியசீலன் மிகச் சிறந்த மனிதர். பிறருக்கு உதவும் உயர்ந்த நோக்கத்தோடு அந்த மருத்துவமனையைக் கட்டி, தொண்டாற்றி வருகிறார். யாரிடமும் அதிகப்படியான தொகை வசூலிப்பதில்லை. நியாயமான தொகை, சலித்துக்கொள்ளாத மருத்துவ ஊழியர்கள், தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் குணப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை இதுதான் சக்தி மனநல மருத்துவமனை பற்றி காஞ்சிபுரம் மக்கள் சொல்லும் கருத்து. சத்தியசீலன் மருத்தவமனையின் தரத்தை அந்த அளவுக்குப் பார்த்துக்கொண்டார்.
அந்த காலை நேரத்தில், ஒவ்வொரு அறையில் இருந்த நோயாளிகளையும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் நர்சுகள் எழுப்பிவிட்டு, கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு சிலர் அமைதியாக அவர்களுக்கு ஒத்துழைத்தார்கள். ஒரு சிலர்மட்டும் கோபமாக ஏதோ சொல்வதுபோல் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுமையாகக் கையாண்டனர் மருத்துவ ஊழியர்கள்.
மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு அறையில் இருந்து வெளியே வந்தான் சக்தி. சக்திக்கு இருபத்தியைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும். நல்ல உயரம், மாநிறம். தலைமுடியை நன்றாகப் படிய வாரியிருந்தான். மருத்துவமனை தந்த வெளிர் பச்சை நிற உடையை அணிந்திருந்தான். சுத்தமாகத் துவைத்து சுருக்கமில்லாமல் மடித்து வைத்திருந்த கொஞ்சம் தளர்வான சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தான். அதுவே அவன் குளித்து தயாராகிவிட்டதைச் சொல்லாமல் சொன்னது. சக்தியின் வயதுக்குரிய சுறுசுறுப்பு அவனிடம் இல்லை. எதையோ தொலைத்த ஒரு வெறுமை அவன் கண்களில் இருந்தது. தீர்க்கமான மூக்கு, களையான முகம், கவர்ந்திழுக்கும் கண்கள் என அக்மார்க் வாலிபனாக அவன் இருந்திருக்க வேண்டும் என்பதை அவனைப் பார்த்த யாருமே சொல்லிவிடுவார்கள். ஆனால் இப்போது கண்களில் மட்டும் ஒரு உயிர்ப்பு இல்லாமல் வெறுமையாக இருந்தது.
தன் அறையில் இருந்து வெளியே வந்த சக்தி, அந்த இரண்டாம் தளத்தின் வராந்தா முழுவதும் கண்களை ஓடவிட்டான். ஆங்காங்கே தெரிந்த ஒன்றிரண்டு பேரைத் தவிர வராந்தாவில் ஒரு ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. காலை எட்டு மணிக்கு மேல்தான் கொஞ்சம் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்க அவர்களது உறவினர்கள் வருவார்கள். ஒவ்வொரு தளத்தில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்கவும் வாரத்தின் வேறுவேறு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இன்று இரண்டாம் தளத்தில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்க உறவுகள் வருவார்கள். சக்தியின் கண்களில் ஒரு ஏக்கம் தெரிந்தது. மெதுவாக நடந்து ஒவ்வொரு அறையாகக் கடந்தான். அப்படிக் கடக்கும்போது ஒவ்வொரு அறையையும் கவனித்தபடியே நடந்தான். ஒவ்வொரு அறையிலும் வெவ்வேறான காட்சிகள் கண்ணில்பட்டன.
ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நிற்கும் ஒரு பெண்ணிடம் பாலைக் குடிக்கவைக்கப் போராடிக் கொண்டிருந்தார் நர்ஸ். அடுத்த அறையில் இருந்த முதியவர் மருந்தைக் குடித்துவிட்டுக் கோபப்பட்டுக் கத்தினார். அதற்கும் அடுத்த அறையில் இருந்த பெண்மணி நர்ஸ் பேசுவதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“என்ன சக்தி, காலைலயே குளிச்சு ரெடியாயிட்டே போல?” கேட்டபடியே எதிரில் வந்த நர்ஸ் ஜோதியின் குரலால் கலைந்தான் சக்தி. ஆனால் வாயைத் திறந்து பதில் சொல்லாமல் மெல்லிய சிரிப்போடு ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான்.
“எங்கே கிளம்பிட்டே, தோட்டத்துக்குப் போறியா? கவனமா செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு வந்துரணும் என்ன.”
இதற்கும் தலையசைப்பையே பதிலாகத் தந்துவிட்டு படிகளில் இறங்கி தரைத்தளம் வந்தான் சக்தி. தரைத்தளத்தில் ரிசப்ஷனில் நின்று பேசிக் கொண்டிருந்த முத்துவேல் சக்தியைப் பார்த்ததும், பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்தே கொஞ்சம் பலமாகப் பேசினார். முத்துவேல்தான் அங்கே இருப்பவர்களில் வயதானவர். அந்த மருத்துவமனையில் வெகு காலமாக வேலையில் இருப்பவர். பொறுப்பாக அனைத்தையும் கவனித்துக் கொள்பவர். அதனால் அனைவருமே அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார்கள். இவை அனைத்தையும்விட, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகள் பற்றிய விவரமும் அவருக்கு அத்துப்படி.
“என்ன பா சக்தி, தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்ச வந்தியா? உனக்கு இந்த வேலை புடிச்சிருக்கா?”
“ஆமா சார், தினமும் காலைல இந்தச் செடிகளோட இருந்தா நேரம் போறதே தெரியல. எனக்காகவே அதுங்க எல்லாம் காத்திருக்கற மாதிரி தோணுது. என்னைப் பார்த்ததும் எல்லாம் சிலிர்த்துக்கும். நான் தண்ணி ஊத்தினதும் எல்லாம் சந்தோஷப்படற மாதிரி எனக்கு நிறைவா இருக்கும்.”
“நல்லா சொன்னே போ. உனக்காக அதுங்க காத்திருக்குமா என்ன? நீ இப்போ ஒரு மாசமாத்தானே தண்ணி ஊத்தறே. அதுக்கு முன்னாடி நம்ம வரதன்தான் எல்லாத்தையும் கவனிச்சுப்பான். அப்பவும் எல்லாம் நல்லா சிலிர்த்துக்கும். சரி அதை விடு. உனக்காக இங்க இருக்கற செடியும் மரமும் காத்திருக்குன்னு சொல்றியே. உன்னோட காத்திருப்புக்கு பதில் கிடைச்சுதா? இன்னிக்காவது உன்னைப் பார்க்க யாராவது வருவாங்களா? டாக்டர் ஏதாவது சொன்னாரா?”
சட்டென்று முகம் வாடிப்போனான் சக்தி. தலையைக் குனிந்துகொண்டான். தன் கேள்வி தவறென்று உணர்ந்த முத்துவேல், சட்டென்று தான் நின்றிருந்த இடத்திலிருந்து வேகமாக சக்தியிடம் வந்தார்.
“ஏ என்னபா, நான் சாதாரணமாதான் கேட்டேன். கண்டிப்பா உன்னைத் தேடி உன் உறவுக்காரங்க வருவாங்க சக்தி. நீ கவலைப்படாதே. உனக்கு நாங்கெல்லாம் இருக்கோம். நீ போய் உனக்குப் பிடிச்ச வேலையைப் பாரு.”
உற்சாகமாகப் பேச ஆரம்பித்த சக்தி, முத்துவேலின் கேள்வியால் நீரற்று வாடிப் போன மரம்போல் துவண்டு போனான். மனம் முழுவதும் முத்துவேல் கேட்ட கேள்வியே நிறைந்திருந்தது. ஏன் தன்னைப் பார்க்க மட்டும் யாரும் வரவில்லை என்ற கேள்வி ஏற்கனவே அவனைத் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டிருந்தது. விடை தெரியாத கேள்வியை முத்துவேல் கேட்டதும் அவன் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அதே சிந்தனையோடு தோட்டத்திற்கு வந்து பூத்துக் குலுங்கும் மரங்களையும் செடிகளையும் பார்த்தான். ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக எல்லாம் சேர்ந்து குடும்பமாக இருப்பதால்தானே தோட்டம் என்ற பெயர் வந்தது. இவ்வளவு உறவுகள் இல்லையென்றாலும் யாராவது ஒருத்தராவது தனக்காக இருக்கமாட்டார்களா என்ற ஏக்கம் அவனை இம்சித்தது.
அவன் கண்களில் முட்டி நின்ற கண்ணீர் பிரவாகமாகப் பெருக்கெடுத்து கையில் பிடித்திருந்த குழாய் வழியாகப் பாய்ந்து செடிகளை ஈரமாக்கியது போல் இருந்தது. தோட்டத்தில் மலர்களையும் பச்சைநிறப் புல்வெளியையும் பார்த்து, அவற்றை தண்ணீரில் நனைத்து தன் மனதை ஆறுதல்படுத்திக்கொண்டான் சக்தி. அதற்குமேல் கவலைப்படவும் முடியவில்லை அவனுக்கு. தலையை வலிப்பதுபோல் ஒரு உணர்வு. எனவே வேறு எதையும் யோசிக்காமல் தோட்டத்தை ரசிப்பதிலேயே மனதைச் செலுத்தினான்.
‘இன்னிக்கு யாராவது வராங்களான்னு பார்த்துட்டு டாக்டர்கிட்ட கேட்கணும். கண்டிப்பா அவர்கிட்ட இதுக்கு பதில் இருக்கும்.’
தனக்குள் நினைத்துக்கொண்டான் சக்தி. அதே சிந்தனையோடு அந்த நாளைக் கடத்தினான். தோட்டத்திலிருந்து வந்து தன் அறையில் கொஞ்ச நேரம் வழக்கமான பயிற்சிகளைச் செய்து காலை உணவை சாப்பிட்டான். அதன்பிறகு வராந்தாவில் ஒரு ஓரமாக உட்கார்ந்து தன்னைப் பார்க்க யாராவது வருகிறார்களா எனக் காத்திருந்தான். மருத்துவமனை ஊழியர்கள் தவிர வேறு யாராவது வரும் போதெல்லாம் ஆர்வத்தோடு அவன் கண்கள் அவர்களையே பார்க்கும். ஆனால் அவர்கள் அங்கிருந்த ஏதாவது ஒரு அறைக்குள் நுழைந்ததும் ஏமாந்து போவான். இப்படியே மதியம்வரை நேரம் கடந்தது. அதற்குமேல் இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு. டாக்டர் சத்தியசீலனைப் பார்த்து பேசிவிடுவது என்ற முடிவோடு முதல் தளத்தில் இருந்த டாக்டரின் அறைக்கு வந்தான்.
மதிய நேரத்தில் அவர் தன் அறையில் ஓய்வாகத்தான் இருப்பார் என்று தெரியும் ஆதலால், கதவை லேசாகத் தட்டி பதிலுக்குக் காத்திருந்தான். உள்ளேயிருந்து பதில் வந்ததும், கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
“அட சக்தியா, வா பா. என்ன விஷயம், என்னைத் தேடி ரூமுக்கே வந்திருக்கே?”
“டாக்டர், நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
தன் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்ற எண்ணத்தோடு பேச வந்த சக்திக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருப்பது தெரிய வாய்ப்பில்லையே.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings