இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பொலபொலவென்று விடிந்துகொண்டிருந்தது சிங்காரச் சென்னை. மார்ச் மாத இளவெயிலைப் பருகும் ஆர்வத்தோடு ஒருசிலர் அந்தக் காலை வேளையில் மெரினாவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நடைப்பயிற்சிக்கென்றே பிரத்யேகமான உடை, காலணி என அணிந்து ஒருசிலர் முழுமூச்சாக கைகளை வீசியபடி நடந்தனர். இன்னும் சிலர் நண்பர் குழாமோடு கதைத்தபடி மெதுவாக நடந்தனர். இன்னும் சிலர் ஒரு ஓரமாக நின்று உடம்பை வளைத்தும் கைகளைச் சுழற்றியும் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் தினமும் பார்த்துச் சலித்ததாலோ என்னவோ கடல் அலைகள் சுரத்தின்றி, அதிக ஆர்ப்பாட்டமின்றி கரைகளை வந்து வந்து தொட்டுச் சென்றன.
முந்தைய இரவின் பசியின் மிச்சத்தைப் பறைசாற்றின கடற்கரை மணல் முழுவதும் இரைந்து கிடந்த குப்பைகள். காகிதத் தட்டுகள், காலித் தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்க்ரீம் குச்சிகள், பஞ்சுமிட்டாயின் நீளமான குச்சிகள், வேர்க்கடலை ஓடுகள், மாங்காய்ப் பத்தையின் மிச்சங்கள், காற்றுப் போன பலூன்கள், சுற்றாமல் மணலில் வீசப்பட்ட கலர்க் காத்தாடி என மனிதனின் பொழுதைப் போக்கிய தருணங்களின் வலிகள் கடற்கரை முழுவதும் கண்ணீரோடு கிடந்தன. கறுப்புநிற பெரிய பைகளோடு தங்களுக்கு மோட்சம் அளிக்க வரும் துப்புரவுப் பணியாளர்களை ஆவலோடு எதிர்பார்த்திருந்தன இந்தக் குப்பைகள்.
அனைத்தையும் தன் கண்ணாடி அணிந்த கண்கள் வழியாக அமைதியாகப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தார் ஐம்பத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மித்ரன். காதில் ஏர்போட் மாட்டிக்கொண்டு யாருடனோ பேசியபடியே நடந்துகொண்டிருந்தார். மித்ரன் சென்னையில் பிரபல தொழிலதிபர். அவரின் மென்பொருள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியில் உள்ளனர். நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு மித்ரன் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். வேலை விஷயத்தில் கறாராக இருப்பார். ஆனால் அதற்காக தேவையற்ற கெடுபிடி செய்யமாட்டார். உரிமையோடு அனைத்து ஊழியர்களையும் அன்பாக, சரிசமமாக நடத்துவார்.
ஆறடி உயரம், கோதுமை நிறம், முன் தலை முழுவதும் முடியை வெறுத்து ஒதுக்கி வழுக்கையாக இருந்தது. அந்த முன்வழுக்கை அவர் முகத்திற்கு ஒரு கம்பீரத்தையும் அழகையும் கொடுத்தது. பின்னந்தலையில் ஒட்டிக் கொண்டிருந்த சில வெள்ளிக் கம்பிகள் அவரின் வயதை எடுத்துக்காட்ட முயன்று தோற்றன. மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவற்றிற்கு கருப்பு வண்ணம் பூசி, வயதைக் குறைத்துக்கொண்டார் மித்ரன்.
யாருடனும் வம்புக்கு நின்று பேச்சு கொடுக்காமல் தன் வேலையை அமைதியாகச் செய்துகொண்டிருந்தார் மித்ரன். காலை வணக்கம் சொல்லியபடியே தன்னைக் கடந்து செல்பவர்களுக்கு, தலையசைப்பையே பதிலாகத் தந்த வண்ணம் நடந்தார். அலைகளைப் போலவே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தார்.
கடிகார முட்கள் ஏழு மணியை நெருங்கிக்கொண்டிருந்தன. ஐந்தரை மணிக்கே நடைப்பயிற்சிக்கு வந்த பலர், வியர்க்க விறுவிறுக்க நடந்து முடித்து, ஆங்காங்கே இருந்த சிமென்ட் இருக்கைகளில் ஓய்வெடுத்து, வீட்டிற்குத் திரும்பித் தயாராகினர். இவர்களைக் கவருவதற்காகவே ஒன்றிரண்டு தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் முளைத்திருந்தன. அருகம்புல் ஜூஸ், கற்றாழை ஜூஸ், ராகிக் கூழ், பழங்கஞ்சி எனப் பெயர்களைத் தாங்கி நின்ற கடைகளைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது.
மித்ரன் தன் ஒருமணி நேர நடைப்பயிற்சியை முடித்து, வழக்கமாக உட்காரும் இருக்கையில் வந்தமர்ந்தார். பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து முன் நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றியெடுத்தார். கதிரவன், மேகங்களை விரட்டிவிட்டு நன்றாக மேலெழும்பியிருந்தான். சுள்ளென்ற வெயில் மித்ரனின் முகத்தில் விழுந்து தகதகத்தது. தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி நன்றாகத் துடைத்து உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் வைத்துவிட்டு, கண்களை மூடி மூச்சை மெதுவாக இழுத்துவிட்டார். பத்து முறை மூச்சை இழுத்துவிட்டவர் கண்களைத் திறந்து கண்ணாடியை எடுத்தார். கண்ணாடியோடு ஒரு துண்டுக் காகிதமும் ஒட்டிக்கொண்டு வந்தது. குழப்பத்தோடு கண்ணாடியை அணிந்து அந்தத் துண்டு காகித்தைப் பார்த்தார்.
சீராக வெட்டப்பட்ட வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனாவால் “என்னுயிர் நீதானே” என எழுதியிருந்தது. குழப்பத்தடன் சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் யாராவது தன்னையே கவனித்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தேடினார். அனைவரும் அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தனர். சந்தேகப்படும்படி யாரும் கண்ணில் படவில்லை. மீண்டும் அந்தத் துண்டுக் காகிதத்தில் எழுதியிருந்ததை நிதானமாக வாசித்தார். “என்னுயிர் நீதானே” சீரான அழகான கையெழுத்து. கோடுகள் இல்லாமலேயே சீரான அளவுகளில் அளவெடுத்தது போல் இருந்தன எழுத்துக்கள்.
‘யார் இதை இங்கே வச்சிருப்பாங்க? எதுக்காக வைக்கணும்? இதுக்கு என்ன அர்த்தம்? நான் இங்கே வந்து உட்காரும்போதுகூட எதுவும் இருக்கலையே. கண் மூடி மூச்சுப் பயிற்சி செஞ்ச நேரத்துலதான் யாரோ இதை வச்சிருக்கணும். என்ன காரணமாயிருக்கும்?’ குழம்பினார் மித்ரன்.
துண்டுக் காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஏதாவது ஒரு இடத்தில் ஏதேனும் குறியீடோ கையெழுத்தோ இருக்கிறதா எனத் தேடினார். ம்ஹூம் எதுவுமில்லை.
‘காதலைச் சொல்றதுக்காக யாராவது எழுதி வச்சது காத்துல பறந்து இங்கே வந்திருக்குமா? அப்படி காத்துல வந்தாலும், எப்படி கரெக்டா நான் உட்கார்ந்த இந்த இடத்துல வந்து விழும்? இல்ல, இதுக்கு முன்னாடி இங்கே உட்கார்ந்திருந்த யாராவது விட்டுட்டுப் போய்ட்டாங்களா? ஆனா நான் வந்தப்போ எதுவும் இருக்கலையே.’
பல்வேறு விடை தெரியாத கேள்விகள் மித்ரனின் மனத்துக்குள் குடைந்து, அந்தத் துண்டுக் காகிதத்திற்கு விளக்கம் தேடியது. அந்தக் காகிதத்தைத் தூர எறிய நினைத்தவர், மீண்டும் அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். என்ன தோன்றியதோ, அதைத் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.
‘இருக்கட்டும். இதை நம்ம தேவநாதன்கிட்ட குடுத்து, ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்கச் சொல்லணும். எப்பவும் கிரிமினல்களைக் கையாளற காவல்துறைக்குக் கண்டிப்பா ஏதாவது தெரிஞ்சிருக்கும். இது ஏதாவது கோட் வேர்டா, இல்ல எனக்கு விடப்பட்ட மிரட்டலான்னு கண்டுபிடிச்சு சொல்லிடுவான் தேவநாதன். ம்ம்ம்ம், மிரட்டலா இருக்குமோ?’
இப்போது மித்ரனுக்கு லேசாக பயம் எட்டிப்பார்த்தது. ஒருவேளை இது தனக்கு விடப்பட்ட மிரட்டலாக இருந்தால்? யாராக இருக்கும்? மிரட்டல்தானா அல்லது எச்சரிக்கை மணியா? தன்னுடைய தொழில் சார்ந்த எதிரிகள் யாரேனும் இதற்குக் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் முளைத்தது. அவருக்கு வேண்டாதவர்கள், அவரைப் பிடிக்காதவர்கள் என அவசர கதியில் ஒரு பட்டியல் மனதில் தயாரானது. அந்தப் பட்டியலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் கண்ணில்படுகிறார்களா எனப் பதட்டத்துடன் தேடினார். பரந்து விரிந்த கடற்கரையில் பலவித மக்கள் தங்கள் வேலைகளில் மும்மரமாக இருந்தனர். யாருக்கும் யாரைப் பற்றிய கவலையோ, சிந்தனையோ இருப்பதாகத் தெரியவில்லை. மித்ரனை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் பார்வையில் சிக்கும் ஒவ்வொருவர் மேலும் அவருக்கு சந்தேகம் வந்தது. கண்டிப்பாக அது அவருக்கு வைக்கப்பட்ட மிரட்டலாக இருக்கும்பட்சத்தில், அந்த நபர் எங்கிருந்தேனும் இவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.
பார்வையைக் கூர்மையாக்கி, கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை கண்களால் வலை வீசினார். எதுவும் தவறாகத் தோன்றவில்லை. இருந்தாலும் மனதுக்குள் சந்தேகமும் பயமும் குடிகொண்ட பிறகு அவரால் இயல்பாக இருக்கமுடியவில்லை. இதயத் துடிப்பு தன் கட்டுப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதுபோல் ஒரு அசௌகரியம். அதற்குமேல் அங்கே இருக்க விரும்பவில்லை மித்ரன். அங்கிருந்து எழுந்து தன் கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடக்கலானார். நடைப்பயிற்சி செய்தபோது வியர்த்ததைவிட இப்போது அதிகமாக வியர்த்தது அவருக்கு. பயமும் பதட்டமும் அவரின் நடையின் வேகத்தை அதிகப்படுத்தியது. காரை நெருங்க நெருங்க ஏனோ மித்ரனுக்கு பயம் அதிகமானது. பாதுக்காப்பான இடமாகக் கருதிய அவருடைய காரை நோக்கித்தான் அவர் போய்க்கொண்டிருக்கிறார். ஆனாலும் பயம் குறைந்து பாதுக்காப்பாக உணர்வதற்குப் பதில் பயம் அதிகமாகக் காரணம் என்ன? அவருக்கே குழப்பமாக இருந்தது. மனதுக்கு ஏதோ அசம்பாவிதமாகப் பட்டது. ஆனாலும் தனக்குத்தானே சமாதானமும் செய்துகொண்டார்.
‘அது ஏதோ காத்துக்குப் பறந்து வந்த பேப்பராக்கூட இருக்கலாம். அதை நினைச்சு நான் ஏன் இவ்வளவு பயப்படணும்? காதலர்கள் யாராவது அவங்க காதலை வெளிப்படுத்த எழுதினதாக்கூட இருக்கலாம். அது தவறுதலா நான் உட்கார்ந்திருந்த இடத்துல இருந்திருக்கலாம். இதை சீரியஸா எடுத்துட்டு பயப்படற அளவுக்கு நான் கோழையில்லையே. அதுபோக என்னை இப்படி மிரட்டற அளவுக்கு நான் யாருக்கும் எதிரியும் இல்ல. காம் டவுன்.’
தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்ட மித்ரன், சாலையோரமாக அமைதியாக நின்றிருந்த அந்தக் கருப்புநிற பிஎம்டபிள்யூவை நோக்கி நடந்தார். கடற்கரை மணல் அவரின் வேகத்துக்குத் தடை போட்டது. ஒவ்வொரு அடியையும் அழுத்தமாக எடுத்து வைத்தார். அந்த அழுத்தம் அவர் மனம் படும்பாட்டைப் பிரதிபலித்தது. சீரான இடைவெளிகளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கார்களில் சில இப்போது கிளம்பியிருந்ததால், நடுநடுவே காலியிடங்கள் காற்று வாங்கின. கையிலிருந்த சாவியின் பட்டனை அழுத்தி பிஎம்டபிள்யூவை உயிர்ப்பித்தார். அவரின் கார் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தது. அதன் இருபுறமும் காலியாக இருக்க, சற்று தள்ளி நிறைய கார்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.
காரில் ஏறி அமர்ந்து ஏசியை உயிர்ப்பித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். திடீரென்று தனியாக இருப்பதுபோல் ஒரு உணர்வு அவருக்கு. தனியாக இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இப்போது கலக்கத்தை உண்டுபண்ணியது.
‘வேலு இருந்தா இந்த சமயத்துல உதவியா இருக்கும்.’ சலித்துக் கொண்டார் மித்ரன்.
அவர் தினமும் காலை நடைப்பயிற்சிக்கு வரும்போது ட்ரைவர் வேலுவை அழைத்து வருவதில்லை. ஆனால் இன்று ஏனோ அவன் இருந்தால் தேவலாம் போல் தோன்றியது. அவருக்கே அவரின் எண்ண ஓட்டங்கள் வியப்பாக இருந்தன. எப்போதும், எதற்கும் கலங்காத மித்ரனின் வலிமையான இதயம், இப்போது டாப் கியரில் துடித்துக்கொண்டிருந்தது. காரின் கதவில் சொருகியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, வாய் கொள்ளாத அளவுக்குத் தண்ணீரைச் சரித்தார். எப்போதும் சாப்பிடுவதோ, பானங்கள் குடிப்பதோ, மிகவும் நாசூக்காகக் கையாளுவார் மித்ரன். ஒருதுளி மேலே சிந்தாது. இப்போது தண்ணீர் தொண்டை வழியாக வழிந்து ஆடையை நனைத்தது.
மூச்சை நன்கு இழுத்துவிட்டு கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட மித்ரன், காரை ரிவர்ஸ் எடுக்குமுன் வழக்கமாக வைக்கும் எஃப்எம்மை ஒலிக்கச் செய்தார். விளம்பரங்கள் வரிசைகட்டி வந்தன. திடீரென மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தது. மூக்கை உறிஞ்சி உறிஞ்சி வித்தியாசமான வாசத்தைக் கண்டறிய முனைந்தார். எங்கிருந்து வாசம் வருகிறது, அதனால்தான் மூச்சு திணறுகிறதா என்று அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து காரை ஆஃப் செய்து, கதவைத் திறந்து வெளியேற நினைத்தார். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை.
மித்ரன் மூச்சுக்குத் திண்டாடினார். கால்கள் அங்குமிங்கும் தாண்டவமாடின. கைகள் காற்றில் எதையோ துழாவின. ஒரு கையால் காரின் கதவைத் திறக்கப் போராடியவர், இன்னொரு கையால் கார் ஹாரனை அடிக்க முயன்றார். ஆனால் சுவாசிக்கத் திணறியதால், மித்ரனால் அவர் செய்ய நினைப்பதை செய்ய முடியவில்லை. கண்கள் இருண்டன. தலைக்குள் என்னவோ செய்தது. தன் உயிர் தன் வசம் இல்லாமல் நழுவுகிறது என்ற உண்மை அவருக்குப் புரிந்தாலும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தெரியாமல் தவித்தார். விளம்பரங்கள் முடிந்து, விஜே பேசி முடித்து, எஃப்எம்மில் பாடல் ஒலிக்கத் துவங்கியது. பாடலைக் கேட்ட மித்ரனின் கண்கள் மரண பயத்தை உமிழ்ந்தன. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனார் மித்ரன்.
உறுமிக் கொண்டிருந்த காரில் பாடல் மெலிதாக ஒலித்தது.
“என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே.”
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings