இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 112)
ஆண் குழந்தை என்றால் தாய்ப்பால், பெண் குழந்தை என்றால் கள்ளிப்பால் என்ற தாரக மந்திரத்தோடு இருந்த உசிலம்பட்டியில், கந்தசாமி, காமாட்சி தம்பதியர் வாழ்வில் நடந்த கதை இது
இப்படியான சம்பவம் வேறு எவருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பிரார்த்தனையோடு தான் இந்த சிறுகதையை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கிராமப் பகுதியல்ல, அது நகராட்சி பகுதியாக உள்ள இடமாகும். தமிழ்நாட்டு மக்களுக்கே நன்கு அறிமுகமான ஊர் அந்த உசிலம்பட்டி
தொழிற்சாலை நகரமாகவோ, இல்லை; வேறு எந்தவொரு தயாரிப்பு பொருளுக்கோ சிறந்த ஊராகவோ உசிலம்பட்டி இல்லை. உங்களுக்கு தெரிந்திருக்கும். உசிலம்பட்டி பெண் சிசுக்களை உசிரை வாங்கும் பட்டியாக இருப்பது
பெண் குழந்தைகளுக்கு அந்த மண்ணில் வாழ்க்கை கிடையாது. அப்படியானால் பெண் குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்கள் மட்டும் பெண்ணினத்தை சார்ந்தவர்கள் இல்லையா? அவர்கள் மட்டும் எப்படி தப்பித்து வந்தார்கள்?
பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் மற்ற சடங்குகள் செய்வதற்கும் வசதியற்ற சூழலினால் தான் பெண் குழந்தைகளை பிறக்கும் போதே தாய்ப்பாலுக்கு பதில் கள்ளிப்பால் கொடுத்து கொள்வதாக செவி வழியில் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களை அடிமைகளாக வைத்திருந்த காலத்திலேயே, பெண்களையும், பெண் குழந்தைகளையும் தெய்வமாக பாவித்து மரியாதை செலுத்தியவர்கள் உசிலம்பட்டி மக்கள்.
இப்பகுதியில் பெண் தெய்வங்களே அதிகமாக காணப்படுகின்றன. அப்படியுள்ள உசிலம்பட்டியில் இப்படியான கொடுமைகளும் நடக்கத் தான் செய்கின்றன
1970 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக, உசிலம்பட்டியில் ஒரு பகுதி வறட்சி ஏற்பட்டது. வறட்சி காரணமாக பொருளாதார பற்றாக்குறை உண்டானதால், பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்யவும் வரதட்சனை கொடுக்கவும் முடியாத சூழலில், பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் பழக்கத்திற்கு இப்பகுதி மக்கள் அடிமையாகினர்
அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், கல்விக்கான வசதிகள் கிடைக்காத நிலையிலும், இன்றளவும் தொடர்கிறது இந்த பெண் சிசுக் கொலை
இந்த சிறுகதையின் நாயகன் கந்தசாமி நாயகி காமாட்சி இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான், குழந்தையே பிறந்தது. அதுவும் அவர்கள் எதிர்பார்க்காத பெண் குழந்தையே பிறந்தது
உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கந்தசாமியிடமும் காமாட்சியிடமும் பெண் குழந்தை வேண்டாம் கள்ளிப்பால் கொடுத்து விடு என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள்
ஆனால் கந்தசாமிக்கும், காமாட்சிக்கும் குழந்தையை வளர்க்கத் தான் ஆசை இருந்தது. அப்போது கந்தசாமியோடு வேலை செய்யும் இரகுபதி, கந்தசாமிக்கு ஒரு யோசனையை சொன்னான்.
அதன்படி மதர் தெரேசா குழந்தைகள் காப்பகம் சென்று, அங்குள்ள தொட்டிலில் பெண் குழந்தையை விட்டு விட்டு வந்தனர். குழந்தையை பிரிந்த ஏக்கத்தில், அழுது கொண்டே இருந்தாள் காமாட்சி
மூன்று மாதங்கள் கடந்து போன நிலையில், வழக்கம் போல் கந்தசாமி தம்பதியர், தாங்கள் வேலை பார்க்கும் சோப்பு கம்பெனிக்கு வேலைக்கு செல்ல துவங்கினர்
அன்று காமாட்சி தனது கணவனிடம், “இன்று உடம்புக்கு ஒரு மாதிரியா இருக்கு, வேலைக்கு நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க” என்றாள்
கந்தசாமி மட்டுமே வேலைக்கு சென்றிருந்தான். மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் போது, எதிர்பாராத சாலை விபத்து ஏற்பட்டு கந்தசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்
இரவு மணி 9 ஆகியும், வேலைக்கு போன கந்தசாமி இன்னும் வீடு திரும்பாத நிலையில், வீட்டு வாசலில் போலீஸ்காரர் ஒருவர் வந்து, “கந்தசாமி வீடு இது தானே” எனக் கேட்டார்
காமாட்சி எழுந்து சென்று வாசலில் நின்றிருந்த போலீஸ்காரரிடம், “ஆமாங்கய்யா, கந்தசாமி வீடு இது தான்” என்றாள்.
கந்தசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செய்தியை போலீஸ்காரர் சொன்னதும் கதி கலங்கி போய் விட்டாள் காமாட்சி
மருத்துவமனையில் நுழையும் போதே அலறி துடித்து விட்டாள்.
“பலத்த அடிபட்டுள்ளது, ஆனால் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை” என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், காமாட்சி சற்று ஆறுதல் பட்டாள்.
அரசு மருத்துவமனையில், பொறுப்புடன் கந்தசாமியை கவனித்து கொண்டார்கள்
சில நாட்களில் கந்தசாமி குணமடைந்து வீடு திரும்பினான். வலது காலில் பலத்த அடிபட்டுள்ளதால் அவனால் சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது
முன்பு போல் உடம்பு திடகாத்திரமாக இல்லை, பலவீனமடைந்து விட்டான். முன்பு போல் வேலைக்குச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த காமாட்சி, மனசுக்குள் மிகுந்த கவலையாக இருந்தாள்
கந்தசாமிக்கு மருந்து, மாத்திரை வாங்க முடியாத சூழ்நிலையில் காமாட்சி வேலைக்கு செல்ல துவங்கி விட்டாள்.
விடியற்காலை எழுந்து, காலை உணவு மதிய சாப்பாடு இரண்டையும் தயார் செய்து வைத்து விட்டு, காலை 6 மணிக்கே சென்று விடுவாள் காமாட்சி
மாலை 7 மணிக்கு தான் வீடு திரும்புவாள். இப்படியே இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், கந்தசாமிக்கு சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.
அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தாலும், ஆட்டோ செலவுக்கு பணம் போதாக்குறையாக இருந்தது. வைத்தியம் செய்து கொண்டாலும், கந்தசாமியின் உடல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது
தனக்காக காமாட்சி வேலைக்கு போவதை நினைத்து மனம் கலங்கினான். கணவனின் உடல் நிலையை நினைத்து காமாட்சியும் தினம் தினம் வேதனையில் கண்ணீர் வடித்தாள்
கந்தசாமி, காமாட்சி இருவருக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணீர் பொழுதாகத் தான் கழிந்து கொண்டிருந்தது.
கந்தசாமி தனக்கு குழந்தை இல்லையே என்று கவலைப்படுகிறானோ இல்லையோ, காமாட்சி தனக்கு குழந்தை இல்லாததையும் பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டோமே என்ற ஏக்கத்திலும் நாள்தோறும் இதே நினைப்போடு இருந்து கொண்டிருந்தாள்.
சில நேரங்களில் இன்னும் நான் ஏன் உயிரோடிருக்கிறேன் என்று கூட நினைப்பதுண்டு.
அன்று பொழுது விடியும் முன்பே, லேசாக மழை தூற ஆரம்பித்தது. காலை 4 மணிக்கே எழுந்திருக்கும் காமாட்சி அன்றும் வழக்கம் போல் 4 மணிக்கே எழுந்து சமையலை துவங்கினாள்.
முதலில் இருவருக்கும் டீ தயாரித்தாள். டீயை கையிலெடுத்துக் கொண்டு வாசலில் படுத்திருக்கும் கணவனை எழுப்பினாள், எழுந்திருக்கவில்லை. சத்தம் போட்டு கூப்பிட்டும் கந்தசாமி அசைவே இல்லாதது போல் படுத்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் ஊரே கூடிவிட்டது. ஆம்…. கந்தசாமி இறந்து போன செய்தி, அந்த பகுதியிலுள்ள அனைவருக்கும் எப்படியோ பரவி விட்டது.
தனக்கு துணையாக இருந்த கணவனும் இன்று இறந்து போனானே என்ற கவலையில் ஒவ்வொரு நாளும் காமாட்சி கவலையோடு கழித்துக் கொண்டிருந்தாள்.
அரசாங்கம் மாசா மாசம் கொடுக்கிற இலவச அரிசி இல்லையென்றால் பல குடும்பங்கள் வறுமையில் பட்டினியாகவே கிடக்க வேண்டியிருக்கும்.
காமாட்சியும் ரேஷன் அரிசியில் தான், காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். அரசாங்க புறம்போக்கு இடத்தில் மண்சுவர் குடிசையில் காலத்தை போக்கிக் கொண்டிருந்த காமாட்சி, சில நேரங்களில் புள்ளையும் இல்லை! புருஷனும் போய்விட்டான்! இனி நான் மட்டும் தனியாக இருந்து என்ன சாதிக்கப் போகிறேன் என்ற விரக்தியில் கண்ணீர் விட்டு கலங்கி போய் விடுவாள்!
காமாட்சி, சோப் கம்பெனியில் வேலை பார்க்கும் போது அவளோடு சேர்ந்து வேலைக்கு செல்லும் மங்களம் எப்போதாவது வந்து காமாட்சியிடம் பேசிக் கொண்டிருப்பாள்
“காமாட்சி, இப்படி தனியா உட்கார்ந்து கவலைப்படறதுக்கு என் கூட நீ சோப் கம்பெனிக்கு வேலைக்கு வரலாமுல்ல”
“இல்லக்கா… இந்த நிலமையில நான் வேலைக்கு வந்தா, அங்க என்னால ஒழுங்கா வேலை செய்ய முடியாது. நீங்க போயிட்டு வாங்க” என்று தட்டி கழித்து வந்தாள்.
அந்த பகுதியிலுள்ள நகராட்சி கவுன்சிலர், காமாட்சிக்கு விதவைக்கான உதவித் தொகையினை மாதா மாதம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அரசாங்க உதவித் தொகையை பெற்றுத் தருவதற்கு ஒரு பைசா கூட லஞ்சமாக பெற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
வருடங்கள் கடந்து கொண்டிருந்த நிலையில், காமாட்சிக்கு வயது ஐம்பதை தொட்டிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள்
பூக்கடைகளுக்கு பூக்கள் கட்டிக் கொடுத்து கூலியாக கிடைத்த வருமானமும் வர போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு நாள், காமாட்சியிடம் மங்களம் வந்து பேசிக் கொண்டிருந்தாள்
“நீ தனியாக இருக்கறது உனக்கு கஷ்டமா தெரியலயா காமாட்சி?”
“ஆமாம், கஷ்டமாத் தான் இருக்கு. என்ன பண்றது, என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு”
“காமாட்சி, அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் ஒரு யோசனை சொல்றன, அது கேட்கறியா?”
“சொல்லுங்க அக்கா, நீங்க எனக்கு கெட்ட யோசனையாக சொல்லப் போறீங்க, நல்லது தான சொல்லுவீங்க”
“நல்ல யோசனை தான், உனக்கு புடிச்சிருந்தா பாரு இல்லேன்னா வுட்டுடு”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க”
“காமாட்சி, மதுரையில எனக்கு தெரிஞ்சவங்களோட சொந்தக்காரங்க குடும்பத்தோட இருக்காங்க. புருசனும் பொண்டாட்டியும் வேலை பாக்குறவங்களாம். மூனு வயசுல ஒரு குழந்தை இருக்குதாம். அவங்க வீட்டுல இருந்துகிட்டு வீட்டு வேலை, சமையல் வேலை செய்யனும் ஆள் வேணும்னு கேட்டாங்க.
எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது, அங்க இங்கனு அலையறதுக்கு நீ கௌரவமா ஒரே எடத்துல இருக்கலாம்னு தோணிச்சு. உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். உனக்கு புடிச்சிருந்தா நீ நாளைக்கே மதுரைக்கு போலாம். யோசனை பண்ணி சொல்லு, அப்ப நான் புறப்படறேன்”
அடுத்த இரண்டு நாட்கள், மங்களம் சொன்ன அந்த வீட்டு வேலையை நினைத்து மனசுக்குள்ள குழப்பமாகவே இருந்தாள் காமாட்சி
இறுதியாக, இப்படி தனியா இருந்து தடுமாறிக் கொண்டிருப்பதற்கு, மதுரைக்கு போய் விடலாம் என்று தீர்மானித்து விட்டாள்
மங்களம் எப்போதும் போல, காமாட்சியை தேடி வந்தாள்.
“அக்கா நான் மதுரைக்கு போகலாம்னு முடிவு செஞ்சிட்டேன். ஆனா உங்களவிட்டு பிரியறது தான் மனசுக்கு என்னவோ போல இருக்கு”
“காமாட்சி, நீ அந்த வேலைக்கு போறேன்னு சொன்னது எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? நான் உன்ன பார்க்கனும்னு நினைச்சா பஸ் ஏறி வந்துடறன். நீ என்ன பார்க்கனும்னு நினைச்சா மதுரையிலேருந்து பஸ் ஏறி உசிலம்பட்டிக்கு வந்துரு. நான் சொல்றது சரிதான.
சரி, மதுரைக்கு போறதுக்கு உன் துணிமணியெல்லாம் தயார் பண்ணி வச்சுக்க. வேலைக்கு ஆள் கேட்டவங்ககிட்ட உன்ன பத்திய விபரத்தை சொல்லி எப்ப மதுரைக்கு போவலாம்னு கேட்டுட்டு வரேன்”
“சரி அக்கா, துணியெல்லாம் எடுத்து வைச்சுட்டு கிளம்ப தயாரா இருக்கேன்” என்றாள்
இரண்டு தினங்களுக்கு பிறகு உசிலம்பட்டியிலிருந்து வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தவரின் காரில், தனது துணிமணி மூட்டை முடிச்சுகளோடு, மதுரைக்கு போய் கொண்டிருந்தாள் காமாட்சி
பல ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சியும் கந்தசாமியும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை அநாதையாக கொண்டு விட்டார்களே, அந்த பெண் குழந்தை தான் இன்று படித்து பட்டம் பெற்று அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் மாலதி
அந்த மாலதியின் வீட்டு வேலை செய்வதற்காக தான், காரில் பயணித்து கொண்டிருந்தாள் காமாட்சி
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
நினைச்சேன்,இப்படித்தான் முடியும்னு.