in ,

சரண்யா எங்கே? (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தினமும் 4.30 மணிக்கே கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் மகள் சரண்யா இன்று ஆறரை மணியாகியும்  வீடு திரும்பவில்லை.

“ஏங்க, சரண்யா இன்னும் வரலையே?” கணவர் கிருஷ்ணாவிடம் கவலையுடன் கேட்டாள் லட்சுமி.

“இன்னும் கொஞ்ச நேரம் பாக்கலாம், வந்துடுவா” என்றார் கிருஷ்ணா.

மணி ஏழு கடந்த பிறகும் சரண்யா வீட்டுக்கு திரும்பவில்லை என்றவுடன் அவர்கள் கவலை அடைந்தனர். சரண்யாவின் செல்லுக்கு போன் செய்தபோது ஆப் செய்யப்பட்டிருந்தது.

அப்போது,  மகன் ரவி உள்ளே வந்தான்.

“டேய் ரவி, சரண்யா காலெஜ்லிருந்து இன்னமும் வீடு திரும்பலை, அவளது மொபைலும் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு. என்ன ஆச்சுன்னு தெரியல” என மகனிடம் கவலையுடன் கூறினார்.

“அவளின் பிரண்ட்ஸ்க்கு போன் செய்து கேட்ட்டீர்களா?” என கேட்டான் ரவி.

அவர்கள் “இல்லை” என்றார்கள்.

உடனே, சரண்யாவின் நண்பர்கள் சிலருக்கு போன் செய்தபோது, அவர்கள் அனைவரும், ஓரே மாதிரியாக, “சரண்யா காலேஜ் முடிந்தவுடன் 3.30மணிக்கே காலேஜ்’ஐ விட்டு புறப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டவுடன், அம்மா லட்சுமி அழ ஆரம்பித்தாள்.

அம்மா, “கொஞ்ச நேரம் அமைதியா இரு, நீ கவலைப்படற அளவுக்கு ஒன்னும் இருக்காது. நான் அவ friends வீட்டுக்கு போயி விசாரிச்சுட்டு வரேன்” என்றான்.

அப்பாவும் மகனுமாக சரண்யாவின் classmate மைதிலி என்ற பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, அவள் “எனக்கு ஒன்றும் தெரியாது” என்றாள்.

பிறகு, மாதவி என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, “மதியம் உணவு இடைவேளையின் போது சுரேஷுடன்  பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன்” என்றாள்.

“சுரேஷ் யார்?” என கேட்ட போது

“சரண்யாவோட boy friend,  அவன் கூடத்தான் அடிக்கடி அவள் பேசிக்கொண்டிருப்பாள், சில நேரம் கேன்டீனில் இருவரும் உட்கார்ந்திருப்பார்கள்” என சந்தேக  திரிய கொளுத்தி போட்டாள் அந்த பெண்.

அதிர்ச்சி அடைந்த அப்பாவும், மகனும் “அவன் எங்கிருக்கிறான்? “என கேட்டார்கள்.

“இதே தெருவில் அவனோட பிரண்ட் பிரபு கடைசி வீட்ல இருக்கான், அவன்கிட்ட கேளுங்க” என்றாள் மாதவி.

கிருஷ்ணாவும், ரவியும் அங்கு சென்று பிரபுவிடம், சுரேஷ் முகவரியை பெற்றுக்கொண்டு சுரேஷ் தங்கியிருக்கும் வீட்டை அடைந்தபோது வீடு பூட்டியிருந்தது.

ரவி உடனே அப்பாவிடம், “அப்பா நாம இனிமேலும் தாமதம் செய்யக்கூடாது, உடனே போலீசில்  கம்பளைண்ட் கொடுத்திடலாம்” என்றான்.

காவல் நிலையம் சென்று நடந்தவைகளை கூறி புகார் மனு எழுதி கொடுத்தார் கிருஷ்ணா.

அங்கிருந்த ஆய்வாளர், “மீண்டும் ஓரு முறை வீட்டுக்கு போன் செய்து பாருங்க” என்றார்,

ரவி அம்மாவிடம் போனில் கேட்டபோது, “சரண்யா இன்னமும் வரவில்லை” என அழுதுகொண்டே கூறினாள்.

காவல் ஆய்வாளர், அங்கிருந்த காவலர்களிடம் சுரேஷின் முகவரிக்கு சென்று அவனை உடனே விசாரணைக்கு அழைத்து வருமாறு கூறினார்.

பிறகு கிருஷ்ணாவிடம், “நீங்க வீட்டுக்கு போயிட்டு காலைல வாங்க” என்றார்.

“இல்லை சார், அந்த பையன் சுரேஷ் வந்தவுடன் விசாரித்துவிட்டு செல்கிறோம்” என்றார் கிருஷ்ணா.

“சரி, அப்போ வெளியில் வெயிட் பண்ணுங்க” என்றார் ஆய்வாளர்.

சுமார் ஓரு மணி நேரத்திற்கு பிறகு, காவலர்கள் ஓரு பையனை ஜீப்பில் அழைத்து வந்தார்கள். அவன்தான் சுரேஷாக இருக்கக்கூடும் என கிருஷ்ணா யூகித்தார். அந்த பையன் மிகவும் பயந்தபடியே ஜீப்பிலிருந்து இறங்கி வந்தான்.

காவல் ஆய்வாளர் முன் நிறுத்தப்பட்ட அவனிடம், அவர் விசாரணையை துவக்கினார்  

“உன் பெயர் என்ன?”

“சுரேஷ்”

“அப்பா, அம்மா எங்க இருக்காங்க?”

“கேரளாவில், கோட்டயத்தில் இருக்காங்க”

தன்னை எதற்கு அழைத்து வந்துள்ளார்கள் என தெரியாமல், மிகவும் பயத்துடன் காணப்பட்டான்.

“சரி, சரண்யா எங்கே?” 

“எந்த சரண்யா?”

உடனே அவனை கன்னத்தில் அறைந்த காவலர், “உனக்கு தெரியாதா, உன்னோட காலேஜ்ல சுத்துவாளே அந்த பெண்” என்றார்

“ஓ.. அவ என்னோட காலேஜ் friend” என்றான் கன்னத்தை தடவியபடி 

“அவளை எங்க கடத்தி வச்சிருக்க?”

“நானா, நான் ஏன் அவளை கடத்தணும்? அவ என்னோட பெஸ்ட் பிரண்ட், நானும் அவளும் அடிக்கடி சந்திச்சு படிப்பைப்பத்தி டிஸ்கஸ் செய்வோம்”

“கடைசியா எப்ப அவளை பார்த்த?”

“இன்னைக்கு மத்தியானம் லஞ்ச் டைம்ல பாத்தேன். அதுக்கு அப்புறம் நான் அவளை பார்க்கவில்லை”.

“காலேஜ் முடிஞ்சவுடன் எங்க போன?”

“மெரினா பீச்சுக்கு போயிட்டு, 8.30க்கு மேல்  ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போனேன். அப்போது அங்கு வந்த போலீஸ் என்ன இங்க அழைச்சுகிட்டு வந்தாங்க” என கூறி முடிதான்.

மீண்டும் அவனை அடித்த ஆய்வாளர், “என்னடா, கதை சொல்ற, சரண்யாவை எங்க வச்சிருக்க? மரியாதையா உண்மையை சொல்லு” என்றார்.

அவன் அழுதுகொண்டே, “சார், சத்தியமா சரண்யா எங்க போனானு எனக்கு தெரியாது, நான் அவளை கடத்தவில்லை” என்றான்.

ஆய்வாளர் காவலர்களிடம், “இவனை  லாக்-அப்ல போடுங்க,  காலையில் விசாரிப்போம்” என்றார்.

காவலர்கள், சுரேஷ்’ஐ இழுத்து சென்று லாக்-அப் அறையில் போட்டார்கள்.

ஆய்வாளர், கிருஷ்ணாவிடம் திரும்பி, “சார், நீங்க வீட்டுக்கு போய்ட்டு காலைல வாங்க, நாங்க அவனை விசாரிச்சு வைக்கிறோம்” என்றார்.

அப்பாவும் மகனும் சோர்வுடன் வீடு திரும்பினார்கள். அனைவரும் கவலையுடன் ஹாலிலேயே சோஃபாவில் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று காலிங் பெல் ஒலித்தது.

ரவி எழுந்து சென்று கதவை திறந்தவன் ஆச்சரியத்திலும்!, அதிர்ச்சியிலும், “அம்மா, இங்க பாருமா, சரண்யா வந்துட்டா“ என கத்தினான்.

ஓடி வந்த அம்மாவும், அப்பாவும், சரண்யாவை பார்த்ததும் கண்ணீர் விட்டார்கள். சரண்யா தலையில் கட்டு போட்டிருந்தாள், நெற்றி, கை, கால்களில் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது.

அவளது கோலத்தை பார்த்த அம்மா, “என்னடி இது கோலம்? இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே? உனக்கு என்ன ஆச்சு?” என கேட்டாள்.

அப்பா, சரண்யாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து அமர வைத்தார். சரண்யா நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

“காலேஜ் முடிந்தவுடன், நான் வீட்டுக்கு வருவதற்காக காலேஜ் பஸ்ஸில் ஏற சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என் பிரண்ட் சைலஜா, தான் ECR ரோட்டில் உள்ள ஓரு கோவிலுக்கு போவதாகவும், என்னையும் உடன் வரும்படியும் கூறினாள். நான் 6.00மணிக்குள் வீட்டுக்கு திரும்ப வேண்டும், அதனால வரவில்லை  என்றேன்.

ஆனால், அவளோ, அவளுடைய two wheelerலேயே போய்விட்டு வந்துவிடலாம் என்றும், என்னை வீட்டிலேயே கொண்டு விட்டுவிடுவதாகவும் கூறினாள். நானும் சம்மதித்து அவளுடன் சென்றேன்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தாமதம் ஆகிவிட்டது. பிறகு 6.00 மணியளவில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தோம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிளில்  வந்த மூன்று கல்லூரி மாணவர்கள் எங்களை கிண்டல் செய்தபடியும், எங்கள் வண்டி மீது மோதுவது போல வந்து மிரட்டியும் வந்தனர்.

ஓரு கட்டத்தில் சைலஜா, பயந்துபோய் வண்டியை ரோடு ஓரம் இருந்த சுவற்றில் மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டோம், விழுந்த வேகத்தில் எங்களின் கைப்பை, மொபைல் அனைத்தும் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் விழுந்துவிட்டது.

எனக்கும், அவளுக்கும் அதிர்ச்சியில் மயக்கம் ஏற்பட்டு விட்டது. அருகில் இருந்த கிராம மக்கள் ஓடிவந்து எங்களை மீட்டு அருகில் இருந்த  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இருவருக்கும் சிகிச்சைக்குப்பின் விடியற்காலை மூன்று மணிக்கு கண்விழித்தோம்.

சைலஜா, தன்னுடைய வீட்டுக்கு போன் செய்ய சொல்லி, அவளுடைய அண்ணனும், மாமாவும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து எங்கள் இருவரையும் அழைத்து வந்தனர். என்னையும் வீட்டு வாசலில் கொண்டுவிட்டு போனார்கள்” என முடித்தாள்.

“நீ எங்கே இருக்கே, என்ன ஆச்சோன்னு பதட்டமானதால் இங்க சில தவறுகள் நிகழ்ந்து விட்டது” என தயங்கியப்படியே கூறினார் கிருஷ்ணா.

“என்ன நடந்தது?” என கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தாள் சரண்யா.

சரண்யாவின் நண்பர்களுக்கு போன் செய்ததிலிருந்து, அவளின் நண்பன் சுரேஷ் மீது சந்தேகப்பட்டு, அவனை பிடித்துவந்து காவல் நிலையத்தில்  லாக்-அப்பில் போட்டது வரை நிகழ்ந்தவைகளை சொல்லிமுடிதான் ரவி.

நடந்தவைகளை கேட்டவுடன் பொங்கி எழுந்தாள் சரண்யா. “நீங்க எப்பிடி யாரோ சொன்னதை வச்சு எங்களை சந்தேகப்பட்டீங்க? உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?“ என கோபமாக கேட்டாள்.

“இல்லம்மா, உன் பிரண்ட் மாதவிதான் உங்க இரண்டு பேரையும் சந்தேகபடற மாதிரி பேசினாங்க. அதற்கேற்றாற்போல், அந்த பையன் வீட்டுக்கு தேடி போனப்ப வீடு பூட்டி இருந்தது, அதனாலதான் போலீஸ்ல புகார் செய்ய வேண்டியதாப் போச்சு” என்றார் அப்பா.

“ஏம்ப்பா, ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டும் பழக முடியாதா? அந்த சுரேஷ் மிகவும் நல்லவர். அவர் கேரளாவை சார்ந்தவர் என்பதால் அவருக்கு சிறிது மொழி பிரச்சினை உண்டு, அதனால யாரிடமும் நெருங்கி பழக மாட்டார். ஆனால் என்னிடம் சகஜமாக பழகுவார், பாடம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நாங்கள் விவாதிப்போம். அந்த மாதவிக்கு எப்போதுமே நாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பது பிடிக்காது, அந்த வெறுப்பின் காரணமாகவே தப்பாக சொல்லியுள்ளாள். அவள் சொன்னதை கேட்டு, நீங்க போலீஸ்ல புகார் செஞ்சு என்னையும், சுரேஷயும், அசிங்கப்படுத்தி, அவரையும் அவமானப்படுத்திட்டீங்க” என்றாள்.

“சாரிம்மா, டென்ஷன்ல கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்” என்றார் கிருஷ்ணா.

“சரி உடனே கிளம்புங்க, சுரேஷை உடனே வெளியே கொண்டுவந்து அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்றாள் சரண்யா.

காவல் நிலையத்தில், நடந்தவைகள் அனைத்தையும் சரண்யா காவல் ஆய்வாளருக்கு விரிவாக கூறினாள். அனைத்தையும் statement ஆக எழுதி வாங்கிக்கொண்டு சுரேஷையும்  விடுவித்தார் ஆய்வாளர்.

சரண்யாவின் அப்பா சுரேஷின் கைகளை பிடித்துக்கொண்டு நடந்த தவறுக்கு வருந்துவதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

சரண்யாவும், சுரேஷ் இருந்த நிலையை பார்த்துவிட்டு, அழுதபடியே, “என்னால்தான் இத்தனை பிரச்சினை, என்னை மன்னித்துவிடு” என்றாள்.

சுரேஷ், “பரவாயில்லை சரண்யா, நீ உயிர் பிழச்சு வந்ததே போதும்” என்றான் பெருந்தன்மையுடன்.

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஊமை மனம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    ரகசியமானது காதல் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி