குறுநாவல்

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 4) – By Fidal Castro – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

அத்தியாயம் 9 – முரண்

“யுவராணி வேண்டாம் வேண்டாம்… கடலில் குதித்து விடாதீர்கள்” என்ற சங்கமித்ராவின் வீரர்கள் போட்ட அலறல், விஜயனை இழுத்து வந்தது 

கப்பலின் மறுபக்கத்தில் இருந்து சங்கமித்ரா கடலுக்குள் பாய்ந்திருக்க, வீரர்கள் கதறிக் கொண்டிருந்தனர் 

அவளை நெருங்கிய விஜயன், “சங்கமித்ரா கைகளை பற்றிக் கொள்” எனவும்

“ஒரு அகதி தரும் உயிர் பிச்சை எனக்கு வேண்டாம். நான் மித்ரா சங்கமித்ரா!!! தோல்வி அறிந்தவள் அல்ல வெல்லப் பிறந்தவள்” என்றபடி, விஜயன் வலிந்து பற்றிய கைகளை உதறி, கடலில் விழுந்தாள் சங்கமித்ரா

கணமும் தாமதிக்காமல் கடலுக்குள் பாய்ந்தான் விஜயன். அவனைத் தொடர்ந்து, வீரர்களும் கடலுக்குள் குதித்தனர்

சற்று நேரத்தில், சங்கமித்ராவை தோளில் சுமந்த படி கப்பலுக்குள் குதித்தான் விஜயன் 

பின் சங்கமித்ரா கண் விழிக்க, “பெண்ணினத்திற்கு பெருமை சேர்ப்பவளென உன்னை நினைத்தேன். ஆனால் நீ கூக்குரலிடும் ஒரு கோழை என்பதை இப்போது உணர்கிறேன். அகதியென என் உதவியை ஏற்க மறுத்தாய்.

ஒன்றை புரிந்து கொள், நான் மட்டுமல்ல, உலகில் அனைவரும் அகதிகள் தான், அன்புக்கு. உன் அகந்தையை மாற்றிக் கொண்டால்,  புதுமைப் பெண் எனும் பதத்திற்கு உவமையாய் போற்றப்படுவாய்” என சங்கமித்ராவிடம் கோபமும் ஆதங்கமுமாய் உரைத்த விஜயன், வீரர்கள் பக்கம் திரும்பி, “வீரர்களே… இந்த  சம்பவத்தை உங்கள் நாட்டு மக்கள் அறியக் கூடாது, இது என் வேண்டுகோள்” என்றான்  

வீரர்கள் ஒப்புதலாய் தலையசைக்க, மௌனமாய் கிட்டு உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றான் விஜயன்

கிட்டுவை எழுப்பிய விஜயன், “கப்பல் அழகாபுரிய நெருங்கிடுச்சு, நம் மரணமும் தான். உலகத்துல நாம வாழப் போற கடைசி நிமிஷங்கள் இது” என வேண்டுமென்றே நடந்ததை மறைத்து வம்பு செய்தான் 

கிட்டு பயத்தில் அழத் தொடங்க, “கலக்கம் கொள்ளாதே” என ஆறுதல் உரைத்தவன், அடுத்த கணமே, “எனக்கும் பயமா தான் இருக்கு கிட்டு” என தொடர்ந்து விளையாடினான் விஜயன் 

“ஒண்ணு செய்வோம்… கப்பல விட்டு இறங்கினதும் நாம ஓடிறலாம்” என விஜயன் கூற

“அப்படியே செய்துடலாம்… இந்த அண்ணனை எப்படியாவது காப்பாத்துடா” என பாவமாய் கூறினான் கிட்டு 

கப்பல் அழகாபுரியை வந்தடைந்தது. முதலில் இறங்கிய வீரன் மூலம் தங்கள் யுவராணி சங்கமித்ராவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய விஜயன் பற்றி அறிந்த துறைமுகத்தில் இருந்த அழகாபுரி மக்கள், அவனை வரவேற்க மகிழ்வுடன் தயாராயினர் 

விஷயம் காட்டுத்தீ போல் பரவ, சற்று நேரத்தில் துறைமுகப் பகுதியில் கூட்டம் கூடியது

கப்லை விட்டு இறங்கியதும் கிட்டு ஓடத் தொடங்க, அழகாபுரி வீரர்களை அழைத்த விஜயன் “என் நண்பர் மெல்ல காலாற ஓடச் செல்கிறார், அவருக்கு இந்த ஊர் புதிது, பின் தொடர்ந்து சென்று நான் செல்லவிருக்கும் இடத்திற்கு அவரை அழைத்து வாருங்கள்” என்றான்

அமைச்சர் நந்தன் தலையசைக்க, காவலர்கள் கிட்டுவை தொடர்ந்து சென்று அவனை பிடித்தனர்

“வாருங்கள் மக்கள் சபை செல்வோம், அங்கு எம் மக்கள் காத்து இருக்கின்றனர், உங்களை கண்டால் மகிழ்வர்” என வீரன் ஒருவன் கூற 

“என் மரணம் உனக்கு மகிழ்ச்சியா?” என மீண்டும் ஓட முயன்றான் கிட்டு

வேறு வழியின்றி, கிட்டுவை மக்கள் சபைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர் வீரர்கள். பின்னர் நடந்த உண்மையை கிட்டுவிடம் கூறி சிரித்தான் விஜயன்

#ad

அத்தியாயம் 10 – மக்கள் சபை

பேரும் திரளாய் மக்கள் வெள்ளம் கூடியிருக்க, சங்கமித்ராவைக் கண்டதும், அவளுக்கு மரியாதை செய்து துதி பாடினர் மக்கள்

பின்னர், முரசு முழங்க, பறை இசைக்க, படை வீரர்கள் நடைபோட, பாவலர் துதி பாட, வான வேடிக்கை சிதற, சிங்கத் தோரணையுடன் ‘மாமன்னர்’ அருணதேவன் வந்தார்

நடந்தவற்றை அமைச்சர் விளக்க, அதிர்ச்சியடைந்தார் அரசர்

“முதலில் உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்” என அரசர் கூற 

“நன்றி!! நன்றி!!” என ஆரவாரம் செய்தனர் மக்கள் 

கூட்டத்தில் இருந்த முத்துவேலர் என்ற முதியவர், விஜயன் மற்றும் கிட்டுவை கை காட்டி, “இவர்களுக்கு என்ன தண்டனை அரசே?”என வினவ, அனைவரும் திகைத்தனர், மன்னர் உட்பட  

86 அகவையில் கால் பதித்த முத்துவேலரின் பேச்சுக்கு, மக்கள் சபையில் எப்போதும் செல்வாக்கு அதிகம்

“ஏன் தண்டனை? நம் யுவராணியை காப்பாற்றியவருக்கு எதற்கு தண்டனை?” என முணுமுணுத்தது கூட்டம்  

“முத்துவேலரே… நீங்கள் சொல்ல நினைப்பதை விளக்கமாக சொல்லுங்கள்” என்றார் அமைச்சர் 

“தடை மீறி இவர்கள் வலம்புரி வந்த நோக்கமென்ன?” என முதியவர் கேள்வியெழுப்ப, திகைத்தான் கிட்டு 

அனைவரும் கேள்வியாய் விஜயனைப் பார்க்க, “உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ஐயா?” என முத்துவேலரிடம் விஜயன் வினவ

“கேளுங்கள்” என்றார் முத்துவேலர்

“இதுவரை எத்தனை நாட்கள் நீங்கள் மூன்று வேளை உணவின்றி இருந்திருக்கிறீர்கள்?” என்ற விஜயனின் கேள்விக்கு கூட்டம் சலசலத்தது 

“அழகாபுரி மண்ணில் கடலன்னை மற்றும் எங்கள் அரசர் அருணதேவர் அருளால் நாங்கள் பட்டினி பார்த்ததில்லை” என பெருமையாய் உரைத்தார் முத்துவேலர்  

“நல்லது ஐயா. ஆனால் கடந்த சில நாட்களில் எங்கள் வலம்புரி, வளம் இழந்து வறுமை சூழ்ந்து, குழந்தைகள் முதல் முதியவர் வரை எந்த பிணியும் இன்றி, பட்டினியால் மாய்ந்தவர் எண்ணிக்கை எண்ணிலடங்காது. இரண்டு நாள் சிசு, அன்னை மார்பில் பால் இல்லா காரணத்தால் இறந்த சம்பவம் வலம்புரி கண்ட வறுமையின் உச்சம். ஏதோ ஒரு தலைமுறை செய்த தவறுக்கு, இந்த தலைமுறைக்கு ஏன் இந்த தண்டனை என நீதி கேட்டு, வலம்புரி போன்ற தென்திசை தீவுகளை வஞ்சகம் செய்யும் வணிக தடை நீக்க வேண்டி கொள்ளவே நான் இங்கு வந்தேன்” என தான் வந்த காரணத்தை விளக்கமாய் எடுத்துரைத்தான் விஜயன் 

“உன் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் முடிவு மக்கள் கையில்” என்ற அரசர், வணிகத் தடை நீக்கம் குறித்து கருத்து தெரிவிக்க, மக்களிடம் சீட்டு வழங்க உத்தரவிட்டார் 

நாழிகை ஒன்று (24 நிமிடங்கள்) சலசலப்புடன் கழிய, மக்கள் சபையில் கூடியிருந்த அனைவரின் கருத்தும் மன்னர் வசம் சேர்க்கப்பட்டது

அதற்குள் ஒற்றன் கொண்டு வந்த செய்தியை, தன் தந்தையிடம் பகிர்ந்தாள் யுவராணி சம்யுக்தா

“மக்கள் சபையின் முடிவை கூறும் முன், வலம்புரி சென்ற ஒற்றன் கொண்டு வந்த செய்தி இப்போது வாசிக்கப்படும்” என அறிவித்தார் மன்னர் 

“யுவராணி சங்கமித்ரா வலம்புரிக்கு அனுப்பிய ஒற்றன் இவர்கள் இருவரைப் பற்றி, கொண்டு வந்த செய்த என்னவெனில், விஜயனின் வில்லின் சக்தியும் சொல்லின் சக்தியும் வலம்புரி அறியும். கிட்டு – வெகுளி பேச்சில் வித்தகர். விஜயன் – சாதி ஆதிக்கம் செலுத்தியவரின் வேரறுத்து, அல்லி குகையின் மரகதம் வென்று, வலம்புரி மக்களால் ‘தளபதி’, சூத்திர குல சத்ரியர் என அழைக்கப்படும், செல்வாக்கு மிக்க மனிதர்” என செய்தியை பகிர்ந்தார் அமைச்சர் 

சிறிது நேர ஆலோசனைக்கு பின், “வணிகத் தடை நீக்க வேண்டும் என்ற மக்கள் முடிவை நானும் ஏற்றுக் கொள்கிறேன். தென் திசை தீவுகள் தோழமை தீவுகளாய் அறிவிக்கப்படும், சங்கமித்ராவை காப்பாற்றி பெரும் உதவி செய்த இவ்விருவர், மூன்று நாட்கள் நம் அரச விருந்தினராய் உபசரிக்கப்படுவர். சங்கமித்ராவை தாக்கிய சம்பவம் குறித்து விசாரிக்க, மூன்று நாட்களுக்கு பின் மீண்டும் மக்கள் சபை கூடும், நன்றி” என மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பென உரைத்தார் மன்னர் 

அதோடு நில்லாமல், தென் திசை நாடுகள் அனைத்திற்கும் பஞ்சம் போக்க உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தார் மன்னர் அருணதேவர். இதற்கு காரணமான விஜயனின் புகழ், கடல் வெள்ளம் போல் அனைத்து தீவுகளையும் சென்று சேர்ந்தது

(தொடரும் – டிசம்பர் 10, 2021)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!