ஆள் கடல் ஆழம் பெரிது, அதனினும் பெரிது ஆறறிவு மனிதனின் கற்பனை
கற்பனைக்கும் கடலுக்கும் காதல் வந்தது அதுவே இந்த கதை. இந்த கதையை சுவைக்கும் முன்னர் இந்த கதையின் கற்பனை களம் மற்றும் இதில் வரும் பாத்திரங்கள் பற்றிய சுவையான குறிப்புகள்
கதைக் களம்
மேலும் கீழும் நீலம் கொண்ட, நித்தம் மகிழ்ச்சி மீனாய் துள்ளும் நிலபரப்பு
கடல் தாயின் 66 மைந்தர்கள் சற்று இடைவெளி கொண்டு சிதறி இருக்கும் அழகிய களம். 66 தீவுகள் ஒரு கடல் சுமந்து நிற்கும் உலகமிது. ஒரு தாய் பெற்ற மைந்தர்களுக்கு உரிய அன்பு இங்கு உள்ள தீவுகளில் தென்பட்டாலும், பகை போட்டிகளுக்கும் இங்கு பஞ்சம் இல்லை.
66 தீவுகள் இங்கு தனி ராஜாங்கமாய் இருந்தாலும், இந்த தீவுகளுக்கு முடிசூடா மன்னன் போல இருக்கும் மகா தீவு “அழக அரிநல்பூரி”. இது அழகாபுரி எனவும் அழைக்கப்படும் சொர்க்க பூமி.
கடல் நடுவே மற்றும் ஒரு கடல் போன்ற நிலப்பரப்பு கொண்ட வளமை வாய்ந்த பூமி. சுற்றி இருக்கும் தீவுகள் இந்த பூமியின் நட்பை கொண்டே வாழும் நிலையும் உண்டு. நம்பிய தீவுகளை திண்டாட விடாது இந்த அழகாபுரி.
வணிகத்தில் வஞ்சிக்கப்பட்ட தென் திசை
அழகாபுரி அனைத்து தீவுகளுக்கும் அன்பையும் செல்வங்களையும் அள்ளிக் கொடுக்க, தென் திசை தேசமாகிய 5 தீவுகள் எதிர்களை போல் நடத்தபட்டனர்.
மித்ரபுரி, மருதபுரி, பவளபுரி, வலம்புரி, அரலைபுரி ஆகியவை ஒதுக்கி வைக்கபட்டவை. இந்த தேசங்கள் மேல் வணிகத் தடையும் மறைமுகமாக கடைபிடிக்கிறது அழகாபுரி.
கடல் பகுதியில் கவலை மறந்து கடலுக்கு உறவுகளை இறையாக்கிய கடல் மேல் கொண்ட காதல் மறவாத மாந்தர்களே கதையை நகர்த்தும் காய்கள். கடலினுள் நடக்கும் சதுரங்க ஆட்டத்தை ருசிக்க, கடல் உப்பாய் கரைந்து கதைக்குள் கரைவோம் வாருங்கள்
அத்தியாயம் 1 – தனியொருவன்
கடலின் தென்முனையில் வளம் இல்லா தீவு வலம்புரி. எளிய மனிதர்கள் வாழும் பகுதி, மீனவர்கள் நிரம்பியது. மற்றும் ஒரு பகுதி சத்ரியர் வாழும் பகுதி. சாதி ஆதிக்கத் தீ 66 தீவுகளிலும் பற்றி எரிந்தது
வலம்புரி முழுவதும் பெயர் போன ஒருவர் கைலாசம். ஆனால் கைலாசம் என்றால் யாருக்கும் தெரியாது. காரணம் இவரை அனைவருக்கும் விலாசம் என்றால் தான் தெரியும். இவருக்கு வலம்புரி மண்ணில் தெரியதா இடம் எதுவும் இல்லை.
வலம்புரி மட்டுமல்ல, கடல் உள்ள அனைத்து தீவுகளுக்கும் செல்லும் வழி மற்றும் அந்த தீவுகளில் உள்ள முக்கிய இடங்கள் அனைத்தும் அத்துபிடி. இவர் ஒருவரிடம் விலாசம் கேட்டால், அவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள முக்கிய இடத்தை சொன்னால் மட்டும் விடமாட்டார். அவர் வீட்டின் சமையல் அறை வரை செல்லும் விலாசத்தை வாங்காமல் விடமாட்டார்.
இவரைப் பற்றி தவறாக சொன்னால் கூட விட்டு விடுவர், ஆனால் ஏதேனும் ஒரு விலாசத்தை தவறாக சொன்னால் தகராறு செய்து விடுவார்.
கைலாசம் மூன்று குழந்தைகளுக்கு தந்தை. இவரது மனைவி இவரின் இளைய மகள் பிறக்கும் போதே இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுடன் சேர்த்து தனது அக்கா மகன் கிட்டுவையும் வளர்கின்றார்.
கைலாசம் ஒரு மீனவர். வலம்புரியில் பள்ளிசாலைக்கு சத்ரிய வம்சம் மட்டுமே செல்லும். இந்த நிலை மாற பல எதிர்ப்புகள் கடந்து, தனது நான்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன் வந்தார்.
அதற்கு முன் தனது குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுக் கொடுத்தார், இதிகாசங்களை போதித்தார். கைலாசம் கேள்வி அறிவு மிக்க மனிதர். பல நகரங்கள் சுற்றி, அந்த அறிவுத் தேடலின் விழுமியத்தை குழந்தைகளுக்கு வழங்கினர்.
இத்தனையும் செய்த கைலாசம், குழந்தைகளை பள்ளி சாலைக்கு அனுப்ப பயந்தார், அதற்கு காரணம் ஆசான் ஆதிமுத்து.
ஒரு முறை ஆசான் ஆதிமுத்து, வலம்புரி குகை கோவிலுக்குச் செல்ல கைலாசத்திடம் வழி கேட்டார்.
“ஊருக்கு புதுசா பெரியவரே” என கைலாசம் விசாரிக்க
“ஆம், நான் மித்ரபுரி மண்ணைச் சேர்ந்தவன்” என்றார் ஆசான்
“உனக்கு அறிவு இல்ல, பார்க்க பெரிய மனுசன் மாதிரி இருக்க மொட்டையா பேசுற, குகை கோவில் தானே கேட்ட…” என கைலாசம் வார்த்தையை விட
முறைத்தபடி “ஆம், தம்பி” என்றார் ஆசான்
“குகை கோவில் வலம்புரில இருக்கும் போ, தேடு” என்று சொல்லி அணுப்பினான் கைலாசம்.
ஆனால் இப்போது வலம்புரியில் சாதிய வேற்றுமை பாராமல் பாடம் சொல்லித் தரும் ஒரே ஆள் ஆசான் ஆதிமுத்து தான்
மூத்தவன் பாலன் வயது 9, இளையவன் விஜயன் வயது 7, மகள் மலர் வயது 5, அக்கா மகன் கிட்டு வயது 8 என்றிருக்க, ஒரு நிறை பவுர்ணமி திங்கள் தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆசான் ஆதிமுத்துவின் பாடசாலைக்கு சென்றான் கைலாசம்
குழந்தைகளை பாடசாலைகுள் யாருக்கும் தெரியாமல் முதலில் அனுப்பி விட்டான். அன்று புதிய மாணவர்களோடு நால்வரும் கலந்து விட்டனர். பின், ஆசான் மனைவி அஞ்சுகம் அம்மாவை அணுகி நடந்ததை கூறி தான் செய்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தான் கைலாசம். மேலும் ஆசானை சமாதனம் செய்யும் படி கேட்டுக் கொண்டான்.
அஞ்சுகத்துடன் கைலாசம் பாடசாலைக்கு செல்ல, முகமெல்லாம் சிரிப்பாய் எதிர்கொண்டார் ஆசான். அவர் இருந்த மனநிலையில், கைலாசம் அங்கிருப்பதை அவர் உணரவில்லை
“அஞ்சுகம் கண்டேன் நல்ல செல்வத்தை இன்று” என்று பூரிப்புடன் சற்று முன் பாடசாலையில் நடந்த நிகழ்வை விவரித்தார்
“புதிய மாணவர்கள் யாராவது தமிழின் பெருமையை குறைந்த எழுத்துக்கள் கொண்ட சொல்லால் வர்ணிக்கவும், வெல்பவர்களுக்கு பரிசு உண்டு” என ஆசான் கூற
“பழமை” என்றாள் மலர் மழலை மாறா தமிழில். பலரும் செழுமை, இலக்கியம், இலக்கணம், எளிமை என்று கூறினார்.
கடைசியாக ஒரு குழந்தை எழுந்தான்,”’ழ’ ழரகம் தான் தமிழின் பெருமை” என்று ஒரு எழுத்தில் சொல்லி பரிசை வென்றான்
அந்த குழந்தையோ, பரிசாக தன் தந்தையை பாராட்டி சிநேகம் கொள்ள வேண்டும் எனக் கேட்டது
அதே நேரம், ஆசானின் காலில் விழுந்தான் கைலாசம். அவனைக் கண்ட ஆசான், “நீயா? நீ இங்கு என்ன செய்கிறாய்? அஞ்சுகம் இவனை வெளியே போகச் சொல்” என்றார் முகம் சுளித்தபடி
அந்த சமயம் அங்கு வந்த “ழகரம்” சொல்லி பரிசை வென்ற குழந்தை விஜயன், “இவர் தான் என் தந்தை” என்றான் பெருமையுடன்
அதைக் கேட்ட ஆசான் மலைத்து நின்றார்
“உன் மகனா இவன்” என ஆச்சர்யமாய் பார்த்தவர், பின் மகிழ்வுடன், “உன் மகன் இனி என் மாணவன், இவன் தனியொருவன், கலை தமிழ் சிறந்து விளங்கும் வல்லமை படைத்தவன்” என்றார்
அனைத்து கலை மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று தேர்ந்தான் விஜயன். அவன் புகழ் விஸ்வரூப அலை போல் வலம்புரி மற்றும் தென் தீவுகளில் பரவியது.
இருபதாம் அகவைக்குள் 16 இலக்கிய நூல்களை இயற்றினான். சாதி தீ சுட்ட போதிலும், சூரியன் போல் ஒளிர்ந்தான். நொடியில் கவி பாடும் திறமை கொண்டிருந்தான்.
“தமிழால் தனிப்பெரும் புகழ் தரணியில் கொண்டான். தரமான படைப்புகளால் தென் திசையில் தனி ஒருவனாய் திகழ்ந்தான்”
அத்தியாயம் 2 – நாயகன்
காலம் சுழன்றது
பாலகன் விஜயன் பலம் கொண்ட விஜயன் ஆனான். அவன் பலம், அவனது எழுத்திலும் சொல்லிலும் இருந்தது. ஆசான் ஆதிமுத்து தனது நண்பர்கள் உதவி நாடி விஜயனுக்கு சண்டை கலைகள் / வில் கலைகள் கற்று கொடுத்தார்.
விஜயன் சொல்லும் வில்லும் கொண்ட வீரனாக வலம் வர தொடங்கினான். சத்ரியன் போல் தோற்றம் அவனை ஒட்டிக் கொண்டது. ஆனால் அவனுள் குழந்தை குணமும் குறும்பும் குறையாமல் இருந்தது
சகமனிதனை நேசிக்கும் சாமானியன் போல வாழ விரும்பினான். சாதி தீயை ஆணைக்க தனது பலங்களை பயன்படுத்தத் தொடங்கினான். வாய் பேச்சில் மரியாதை, வாள் வீச்சில் வேகம் நிறைந்து இருக்கும் அவனிடம்.
விஜயன் குகை கடவுளை போற்றி பல பாடல்களை பாடத் தொடங்கினான். அவன் பாடல் இறைவன் செவிகளுக்கு சென்றாலும், அவன் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை. கவி மேல் அன்பு கொண்டாலும், கடல் மேல் வைத்த காதல் மாறவில்லை.
கடலுக்கு சென்று முத்துக்களை மாலையாக்கி தனது பாமாலையுடன் சேர்த்து குகை கடவுளுக்கு அர்ப்பணிப்பான். அன்றும் தனது முத்து மாலையை எடுத்துக் கொண்டு கோவில் சென்றான், இந்த முறை கோவில் உள்ளே சென்றான். அதை கண்ட ஆதிக்க வர்க்கம் அவனை தாக்க வந்தனர்.
குகை கடவுளுக்கு கவி பாடியபடி வாளை வீசத் தொடங்கினான். எதிர் வந்தவர்கள் எதிர் எதிர் பக்கம் சிதறினர்.
“இந்த வாள் இந்நாள் ஒரு நீதி வாங்கி தந்துள்ளது நாங்கள் அடிமைகள் அல்ல ஆளப் பிறந்தவர்கள், கல்வி மற்றும் நிலம் மதம் மொழி எங்களது பிறப்புரிமை. அதை பறிக்க என்னை படைத்த இறைவனுக்கும் கூட உரிமை இல்லை” என கூறி கர்ஜனை செய்தான் விஜயன்
ஆதிக்க வர்க்கத்தினை எதிர்க்க எண்ணம் கொண்டு, பயத்தால் உறங்கிய கண்கள் இன்று இவனால் விழித்தது. விஜயனை தாக்க அவர்கள் வந்த போது, 82 வயது முதியவர் ஒருவர் “என் தளபதி மேல் கைகள் பட்டால் மீன் போல உன் கைகள் தரையில் துடிக்கும் “என்றார் கனத்த குரலில்
முதியவரை தாக்க ஒருவன் வந்தான். அவன் கைகளில் இருந்த வாள் விஜயன் வாள் பட்டு வான் வரை சென்றது
“மீண்டும் நீ முயற்சி செய்தால் உன் கரங்கள் வான் செல்லும்” என்றான் விஜயன்
“தளபதி” என்று மக்கள் எழுப்பிய ஒலி, வான் அதிரும் படி ஒலித்தது
கலவரத்தின் நடுவே தளர்ந்த குரலில் ஒரு சத்தம், “இதற்கு தீர்வு என்னிடம் உள்ளது, அந்த தீர்வு அல்லி குகை மதுரா மரகதம் தான்” என்றான் அன்புநம்பி. 80 வயது நிரம்பிய அந்த நபர், வலம்புரி ஆதிக்க இனத்தின் ஆணிவேர்
இதற்கு முன்னர் கற்கை செழியன் என்ற ஒரு கீழ் வகுப்பை சேர்ந்தவன் சம உரிமை கேட்ட போது, அன்புநம்பி அல்லி குகைக்குள் சென்று மதுரா மரகதம் கொண்டு வந்தால் சாதி வகுப்பு முறை வலம்புரியில் ரத்து செய்யப்படும் என்று வாக்களித்தான்
செழியன் சென்றான், பின் குகை விட்டு வெளியே வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர், யாரும் அல்லி குகைக்குள் செல்ல முன் வரவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இப்போது அல்லி குகை செல்லும் நிலையில் விஜயன் தள்ளப்பட்டான். உறவுகள் அவனை தடுத்தாலும் உரிமைக்காக குகைக்குள் செல்ல முடிவு செய்தான்.
வரலாற்றை மாற்றும் முனைப்புடன் அல்லி குகைக்குள் செல்ல துணிந்தான் விஜயன். மணல் மைதானத்தில் கூடிய மக்கள் வெள்ளம், பூமி அதிர “தளபதி!!!!” என்று குரல் எழுப்பினர்.
“என் முடிவு எதுவாக இருந்தாலும் அது இனி வருபவர்களுக்கு நல்ல தொடக்கம். கல்வி மனிதர்களை மகான்கள் ஆக்குவதல்ல, நம்மை மனிதன் ஆக்குவதே. வரும் தலைமுறைக்கு கல்வியை கற்கும் உரிமை வேட்கையை பற்ற வையுங்கள் என் உறவுகளே” என தனது கம்பீர குரலில் முழங்கினான் விஜயன்
கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் கைலாசம் குடும்பத்தினரும் பொது மக்களும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings