in

கண்ணம்மா நீயே என் காதலி ❤ (சிறுகதை) – By கரோலின் மேரி – December 2020 Contest Entry 8

கண்ணம்மா நீயே என் காதலி ❤ (சிறுகதை)

“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”

பாரதியின் இந்த வரிகளுக்கு ஏற்ப வலம் வருபவள் தான், இந்த கதையின் நாயகி பாரதி

சுப்பிரமணியம் – சிவகாமி இவர்களின் செல்லப் புதல்வி. 24 வயது பெண். மயக்கும் மை விழிகளும், எவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் தைரியமும் உள்ளவள்

தமிழ் பற்று மிக்க தமிழாசிரியை. பாரதியின் வரிகளை சுவாசிப்பவள். கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உடையவள்.

வலைதளத்தில் “கண்ணம்மாவின் கவிதைகள்” என ஒரு பக்கத்தை உருவாக்கி, தினமும் கவிதைகளை பதிவு செய்வாள். அவளின் கனவு, தனது கவிதைகளை புத்தகமாக பார்க்க வேண்டும் என்பதே

“பாரதி” என்ற தாயின் குரலில் திரும்பினாள்

என்னவென கேட்காமல், வெற்றுப் பார்வை பார்க்கும் மகளை முறைத்தார் சிவகாமி

தந்தையின் கெஞ்சல் பார்வையில், “என்ன மா சொல்லு” என்றாள் பாரதி

“நாளைக்கு உன்னை பெண் பார்க்க வருவாங்க…” எனத் தொடங்கியவர், மகளின் சலனமற்ற பார்வையில் பாதியில் நிறுத்தினார்.  பதிலேதும் சொல்லாமல் பள்ளிக்குக் கிளம்பினாள் பாரதி

“பாருங்க உங்க செல்ல மகள, எதுவும் சொல்லாம போறா. இப்படியே போனா என்ன அர்த்தம், நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்” என சிவகாமி கோபமுற

 “விடும்மா… அவ விருப்பப்படியும் உன் ஆசைப்படியும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாத” என மனைவிக்கு ஆறுதல் கூறினார்

தாயின் வார்த்தைகளுக்கு பதில் கூறாமல் வந்த போதும், பாரதியின் மனதில் கோபம் கனன்று கொண்டிருந்தது. அதற்கு காரணம் இதற்கு முன் வந்த வரன்கள் தான்

தன் தமிழ் பற்று, எழுத்தில் உள்ள ஆர்வம், எழுத்துலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்தையும், இதற்கு முன் பெண் பார்க்க வந்த மாப்பிளைகளிடம், தனியே பேச அனுமதித்த போது வெளிப்படுத்தினாள் பாரதி

“உன்னைப் பத்தி சொல்லு” எனக் கேட்டதும், மடை திறந்த வெள்ளமாய் இது தானே சொல்லத் தோன்றியது அவளுக்கு 

வந்த வரன்கள் அனைத்தும், சொல்லி வைத்தாற் போல் “கல்யாணத்துக்கப்புறம் இதெல்லாம் வேண்டாம், இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு பிடிக்காது” என்றே கூற, பாரதிக்கு வெறுத்துப் போனது

இதன் காரணமாகவே வந்த வரன்களையெல்லாம் நிராகரித்தாள்

அன்று மாலை வீட்டிற்கு செல்லவே அவளுக்கு விருப்பமில்லை. பெற்றவள் திருமணப் பேச்சை எடுப்பாள் என்ற நினைவே எரிச்சலைத் தந்தது

அவர் எதிர்பார்த்தது போலவே, வீட்டிற்கு சென்ற சற்று நேரத்தில், “நாளைக்கு என்ன புடவை கட்டிக்கறதுனு பாத்து எடுத்து வெய்யி  பாரதி” என்றார் சிவகாமி 

“அதுக்கு அவசியமில்லம்மா, எனக்கு கல்யாணமே வேண்டாம், நான் இப்படியே இருந்துடறேன்”

“நீ இருப்ப, ஊருக்கு நாங்க தான பதில் சொல்லணும்”

“அதுக்காக என்னோட விருப்பத்துக்கு மதிப்பு குடுக்காதவனுக்கு என்னை கழுத்தை நீட்டச் சொல்றியா?” என பாரதி சீற 

“இதெல்லாம் ஒரு காரணம்னு வெளிய போய் சொன்னா சிரிப்பாங்க” என்றார் எரிச்சலுடன் 

“என்னம்மா இது அநியாயம்… எனக்குனு ஆசை லட்சியம் எதுவும் இருக்கக் கூடாதா?” என்றாள் பாரதி ஆதங்கத்துடன்

“இருக்கலாம், ஆனா அது மட்டுமே வாழ்க்கை இல்ல” என நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றார் பெற்றவர் 

“ஆனா…” என ஏதோ கூற வந்த பாரதியை இடைமறித்த சிவகாமி 

“இங்க பாரு… நானும் அப்பாவும் உயிரோட இருக்கணும்னு நெனச்சா, நீ இன்னைக்கி வர்ற மாப்பிள்ளைகிட்ட கவிதை  லட்சியம் அது இதுனு  எதையும் உளறாம இருக்கணும் ” என வழக்கமாய் பெற்றோர் கையில் எடுக்கும் ஆயுதத்தை சிவகாமி எடுக்க, வேறு வழியின்றி பணிந்தாள் பாரதி 

பார்க்கலாம் நாளைய விடியல் பாரதிக்கு எப்படியென்று?

கரு நீல பட்டுப்புடவை உடுத்தி, தளர பின்னிய மல்லிகைச் சரம் சூடி, பொருத்தமான நகைகள் அணிந்து தேவதைப் போல வந்து நின்றாள் பாரதி

மாப்பிள்ளை கதிரவன். வைத்தீஸ்வரன்-தேவகியின் ஒரே புதல்வன். 28 வயது. ஆறடி உயரம். செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம். சொந்தமாய் தொழில் செய்பவன்.

கொலுசு ஓசையில் நிமிர்ந்து பார்த்தவன், கண்ணிமைக்க மறந்தான். பாரதியும் தன் சுட்டும் விழிகளால் பார்க்க…

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ??

வட்டக் கரிய விழி-கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?

என்ற வரிகளே பின்னணியில் ஓடியது

கண்ட நொடியே, கதிரவனின் மனம், “இவள் எனக்கானவள்” என குரல் கொடுக்க, பாரதியின் மனமும் அதையே மெல்லிசையாக இசைத்து

இருவரும் விழிகளால் “சம்மதம்” சொல்ல, திருமண நாள் நிச்சியக்கப்பட்டது

கதிரவன்-பாரதியின் காதல், தொலைபேசி மூலம் வளர்ந்தது. அப்போதும் பாரதி அவனிடம் தன் மன விருப்பங்களை கூறவில்லை

நாட்கள் வேகமாய் நகர, அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய திருமண நாளும் வந்தது. பாரதி, திருமதி.பாரதி கதிரவன் ஆனாள்

கதிரவனின் அன்பான அணுகுமுறை, பாரதியின் மனதை நிறைக்க,  திருமண வாழ்வில் இயல்பாய் பொருந்திப் போனாள்.      

திருமணமாகி இரண்டாம் மாதம், அன்று பாரதியின் பிறந்த நாள். திருமணத்திற்கு பின் வரும் முதல் பிறந்த நாள் எல்லோருக்கும் சிறப்பான ஒன்று தானே. அவளும் அதே மனநிலையில் தான் இருந்தாள் 

தோட்டத்து ரோஜாவை ரசித்துக் கொண்டிருந்தவளை, பின்னிருந்து கண் பொத்தினான் கதிரவன் 

“விடுங்கப்பா” என சிணுங்கவளை

“கொஞ்சம் நேரம் அமைதியாக இரு ரதி” என்றான் கதிரவன்

“என்னனு சொல்லுங்களேன் கதிர்” என பாரதி மறுபடியும் கேட்க, அவனிடம் மெளனம்

“எப்போதும் பிடிவாதம்” எனச் செல்லமாக அலுத்துக் கொண்டாள்.

அவளை தங்கள் அறைக்குள் அழைத்துச் சென்றவன், கண்ணை மூடியிருந்த கைகளை விலக்க, அங்கு கண்ட காட்சியில் பாரதியின் கண்கள் விரிந்தது

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா” என பெரிய எழுத்துக்கள் அவளை வரவேற்றது

மகிழ்ச்சியாக கணவனைப் பார்க்க, அவளை அணைத்து வாழ்த்து தெரிவித்தான் கதிரவன். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டாள் பாரதி

“ஒரு நிமிஷம்” என அவளை விட்டு விலகியவன், ஒரு பெட்டியை எடுத்து வந்து அவள் முன் நீட்டினான்

என்னவென கண்களாலேயே அவள் வினவ,  அவனும் அதேப் போல் “பிரித்துப் பார்” என பார்வையிலேயே பதிலுரைத்தான்

ஆர்வத்துடன் பிரித்தவள், அங்கு இருந்த பரிசைக் கண்டதும், பேச இயலாமல் கண்ணில் நீர் பனிக்க நின்றாள்

அதில் இருந்த பரிசு அவள் உயிராக நேசித்த பாரதியின் கவிதைகள் மற்றும் அவள் எழுதிய கவிதைகள், புத்தக வடிவில்

தான் எழுதிய கவிதை புத்தகத்தை ஆசையுடன் வருடியவாறே, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” தவிப்புடன் வந்தது அவளின் வார்த்தைகள்

அவளின் தவிப்பை உணர்ந்தவனாய், அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தியவன் “அத்தை சொன்னாங்க” என்றான்.

மகளின் நிறைவேறா ஆசை தாயின் மனதை உறுத்திக் கொண்டிருக்க, சமயம் பார்த்து அதை மருமகனிடம் தெரிவித்திருந்தார் சிவகாமி    

அந்த நேரத்தில் தன் தாய்க்கு மனதார நன்றி கூறினாள் பாரதி

“உன் விருப்பம் தான் என் விருப்பம் ரதி. அதற்கு என்றும் நான் தடையாக வர மாட்டேன் கண்ணம்மா” என்ற கணவனின் கூற்றில்

“என்ன தவம் செய்தேன், இப்படி ஒருவன் சரிபாதியாக கிடைக்க” என பாரதியின் மனம் மகிழ்ச்சியில் விம்மியது

உணர்ச்சி வசப்பட்டு நிற்கும் மனைவியின் காதில் “கண்ணம்மா நீயே என் காதலி” என்று சொல்ல, ஆசையோடு சரணடைந்தாள் பாரதி

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்

துன்ப மினியில்லை சோர்வில்லை, தோற்பில்லை

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது தீயது நாமறியோம் அன்னை!

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்

என்ற வரிகள் பாடலாக மாறியது

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 1) – By Fidal Castro – December 2020 Contest Entry 7

காலிஃப்ளவர் மோர்க்கூட்டு (சியாமளா வெங்கட்ராமன்) – December 2020 Contest Entry 9