எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் பாடல் தான் சம்யுக்தா மனசில் ஓடியது. அவள் கணவன் ஜவஹர் அந்த தத்துவத்தைத் தான் பின்பற்றுகிறான் போலும்.
வாய் வார்த்தைகளால் உரக்கப் பேசாமல், கை நீட்டாமல் அவன் வெறுப்பை கண்களாலும், மௌனமான அவன் பார்வையாலும் அவளிடம் மட்டுமே வெளிப்படுத்துவதில் மன்னன்.
ஆனால் சம்யுக்தாவிற்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஜவஹர் அவ்வளவு வெறுப்பு காட்டுவதன் காரணம் தான் என்னவென்று தெரியவில்லை.
அவள் உருவம் ஒன்றும் அருவருக்க தக்கதல்ல. எல்லோராலும் அழகி என்று போற்றப் படுபவள் தான். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் எந்த வியாதியும் அவளுக்கில்லை. திருமணத்திற்கு முன் காதல் ,ஊதல் என்று எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாதவள் தான்.
ரகசியமாக துப்பறியும் நிறுவனம் மூலம் இவளைப் பற்றி எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டவன் தான் ஜவஹரும்.
இவன் இப்படியெல்லாம் ஒற்றன் வேலை பார்ப்பது இவளுக்குத் திருமணத்திற்கு முதல் நாள் தெரிந்திருந்தால் கூட அத்திருமணத்தை அப்போதே நிறுத்தியிருப்பாள் .
மற்றவர்கள் எதிரில் ஹீரோவாக இருக்கும் அவன், தன் மனைவியுடன் வில்லனாக இருப்பது திரைமறைவில் தான். ஜவஹரின் அம்மாவிற்கே அவனுடைய மாறுபட்ட நடவடிக்கை சமீப காலம் வரை தெரியாது.
சம்யுக்தா அவனுக்காக மாடிக்கு எடுத்துச் செல்லும் பீங்கான் காபி கப்புகள் தூள் தூளாக உடைந்து டஸ்ட் பின்னைச் சேரும்போது தான் அவளுக்கு கொஞ்சமாகத் தெரிந்தது.
மூன்று நாட்கள் தொடர்ந்து காபி கப் அல்லது பீங்கான் சாசர்கள் உடையும் போது தான் அவன் அம்மாவிற்கு சந்தேகம் வந்தது.
“சம்யுக்தா, ஏன் காபி கப் உடைந்தது?“ என்று கேட்டாள்.
“நான் தான் கை தவறி விட்டு விட்டேன் அம்மா“ என்றாள்.
“ஒரு நாள் தான் வழுக்கி விழும். மூன்று நாட்களாக தினமும் உடைகின்றதே! உங்களுக்குள் ஏதாவது சண்டையா?“ என்றாள் சந்தேகமாக.
அவன் தான் மற்றவர்கள் எதிரில் உத்தமப் புருஷனாக நடிக்கின்றானே! அவன் வேஷத்தை அவனே தான் கலைக்க வேண்டும். இல்லை அவனைப் பெற்ற பாவத்திற்கு அவன் அம்மாவே கண்டுபிடிக்க வேண்டும்.
நாமாக ஏதாவது சொன்னால் அந்த கோபத்தையும் நம்மிடம் தானே காட்டுவான். ‘சரியான சைக்கோ’ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள்.
மெல்லிய அமெரிக்கன் ஜார்ஜெட் புடவை இளம் ரோஜா நிறத்தில். அதை அழகாக ஆபாசமில்லாமல் அணிந்து கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சம்யுக்தா. அவள் அழகைப் பார்த்து பிரமித்து நின்றாள் அவள் மாமியார் லலிதா.
அந்த ரோஜா நிற சேலையில் அங்கங்கே மிகவும் பொடியான வெள்ளைக் கற்கள் பூக்கள் டிசைன்களுக்கு இடையில் ஒட்டப்பட்டிருந்தன. அந்த கற்களின் பளபளப்பு அந்தப் புடவையின் அழகை மேலும் அதிகரித்தது.
அந்தப் புடவை அவள் மகன் ஜவஹர் வாங்கியது தான். ஆனால் அவன் வாங்கியது அவன் தங்கை சைலஜாவிற்காக. ஒன்று ஆகாய நீல நிறத்திலும், மற்றது இளம் ரோஜா நிறத்திலும். நீல நிறப் புடவை அடர்த்தியான கிரேப் சில்க்கால் ஆனது.
சைலஜா புடவையை இதுநாள் வரை, மற்றவர்கள் உடுத்தித் தான் பார்த்திருக்கிறாள். அவள் இடது கையால் கூட அதைத் தொட்டதில்லை. எப்போதும் முக்கால் பேன்ட்டும், ஜீன்ஸ் தான் அவள் அலங்காரம். ஜவஹர் கொண்டு வந்து புடவைகளைக் கொடுத்தவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அண்ணா, எனக்கு ஏன் புடவை வாங்கி வந்தாய்? எனக்கு இந்த சனியனை உடுத்தக் கூடத் தெரியாதே“ என்றாள்.
“நீயும் பெண்தானே, அதனால் தான் வாங்கி வந்தேன். இது நாள் வரை கட்டத் தெரியாதென்றால் பரவாயில்லை. இனி தெரிந்து கொள். பழகிக் கொள். திருமணம் செய்யும் வயது தானே! நீ இப்போது தான் முதன்முதலில் சேலை கட்டப்போவதால், அதிக கனமில்லாத ஜார்ஜெட் சேலை உனக்கு. கொஞ்சம் அடர்த்தியான கிரேப் சில்க் புடவை நம் வீட்டின் புது வரவிற்கு” என்றான்.
அவர்கள் உரையாடலை அங்கிருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் சம்யுக்தா. அவள் பேரைச் சொல்லக் கூட அவனுக்கு விருப்பமில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
ஆனால் அவன் அம்மா மட்டும் கோபத்துடன், “அது என்னடா புது வரவு? ஒன்று உன் அண்ணி என்று உன் தங்கையிடம் சொல், இல்லை உன் மனைவி சம்யுக்தா என்று சொல். இரண்டும் இல்லாமல் புதுப் புது பெயராக வைக்காதே“ என்றாள் கோபமாக.
“மாமியார், மருமகள் பாசமா? இல்லை டிராமாவா?“ ஜவஹர் கிண்டல் செய்தான்.
“நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள். ஆனால் ’ஒருவர் பொறை இருவர் நட்பு‘ என்று நான் அடிக்கடி சொல்வதை என் மருமகள் கேட்டு நடக்கின்றாள். ஆனால் எப்போதும் இதே பொறுமையுடன் இருப்பாள் என்று சொல்ல முடியாது. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு‘ என்று எழுந்தால் அன்றே உன் வாழ்க்கை காலி“ என்றாள்.
சமையலறையில் இருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தா ஒரு முடிவுக்கு வந்தாள்.
‘இவன் ஒன்றும் முழுவதும் கெட்டவனில்லை. இவன் மனதில் விழுந்த ஏதோ ஓர் அடியால் தன்னிடம் மட்டும் மாறி நடக்கின்றான். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல். அதனால் அவனிடமே அவன் கோபத்தின் காரணம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் சிறந்தது‘ என்பது தான் அது.
‘ஒருவர் பொறை இருவர் நட்பு‘ என்ற அத்தையின் வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் இவனோடு பேச வேண்டும் .ஆத்திரப்பட்டுப் பேசி காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது‘ என்பதில் உறுதியாக இருந்தாள்.
அந்த ஞாயிற்றுக்கிழமை அவள் மாமியாரும், சைலஜாவும் ஷாப்பிங் என்று ஏதோ மாலுக்கு கிளம்பி விட்டனர்.
கண்ணாடி முன்பு நின்று ஷேவ் செய்து கொண்டிருந்த ஜவஹரிடம் “உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்“ என்றாள்.
“என்ன பேசவேண்டும்?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.
சம்யுக்தா எப்படித் தொடங்குவதென்று தெரியாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மேடை போட்டு மைக் செட் ஏதும் கட்டவேண்டுமா?“ என்றான் கிண்டலாக. அவள் கோபத்துடன் பார்த்தாள்.
“பேச வந்ததைப் பேச வேண்டியது தானே. அமைதியாக நின்று கொண்டிருந்தால் என்ன சொல்வது?” என்றவன் அவன் அடித்த ஜோக்கை அவனே ரசித்து சிரித்தான்.
“இந்த ஜோக்கிற்கு நானும் சிரிக்க வேண்டுமா?”
அவளைக் கோபமாக முறைத்துக் கொண்டு “என்ன பேச வேண்டுமோ அதைச் சீக்கிரம் பேசி விட்டு இடத்தை காலி செய்“ என்றான் ஜவஹர்.
“உங்கள் கோபமான முகமூடியை கழற்றி எறியுங்கள். நீங்கள் வேண்டுமென்றே என்னிடம் வெறுப்பைக் காட்டுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை வெறுக்கும் காரணம் நீங்கள் தயவுசெய்து சொல்லுங்கள். அதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன், முடியாவிட்டால் உங்களிடம் இருந்து விலகிக் கொள்கிறேன். தேவையற்ற இந்த மௌன யுத்தம் நமக்குள் வேண்டாம். முடிந்தால் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். இல்லையென்றால் நிரந்தரமாகப் பிரிந்து விடலாம்“ என்று ஒரு நீண்ட உரையாற்றினாள்.
“என்ன ரொம்ப நல்லவள் போல் நடிக்கினறாயா? இல்லை என் அம்மா சொல்லிக் கொடுத்து அனுப்பினார்களா?” என்றான் சந்தேகமாக.
“நான் நடிக்கவுமில்லை. யாரும் சொல்லிக் கொடுக்கவும் இல்லை. உண்மையான ஆதங்கத்துடன் தான் கேட்கிறேன்“ என்றாள்.
“நீ எதற்கு கேட்கின்றாயோ? ஆனால் எனக்கும் என் துக்கத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும். நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராக நேசித்தேன். ஆனால் அவள் ஒரு நடிகை, அதற்கு என் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு நடிகை மூலம் இந்த வீட்டின் பேரக் குழந்தை வரக்கூடாதாம். அதனால் ஜாதி பார்த்து, ஜாதகம் பார்த்து உன்னைக் கட்டி வைத்தார்கள். என் வெறுப்பைக் காட்டவே அவர்கள் பார்த்து கல்யாணம் செய்து வைத்த பெண்ணிற்கும் குழந்தை பிறக்காது என்று காட்டவே நான் உன்னை வெறுப்படிக்கிறேன்“ என்றான்.
“நீங்கள் இன்னும் கூட அந்தப் பெண்ணைக் காதலிக்கிறீர்களா?”
“ஆம், உயிரினும் மேலாக” என்றான் நீண்ட பெருமூச்சுடன்.
“அப்படியானால், அந்தப் பெண்ணும் உங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், உங்கள் இருவரையும் பிரித்த பாவம் எனக்கு வேண்டாம். அந்தப் பெண்ணும் உங்கள் பிரிவால் துன்பப்படுகிறாள் என்றால் நான் உங்களிடமிருந்து நிரந்தரமாக விலகிக் கொள்கிறேன். இரண்டாவது திருமணத்திற்கு ஜாதி ,குலம் என்று எதுவும் தடையாக இருக்காது” என்றாள்.
சம்யுக்தாவையே ஆழமாகக் கூர்ந்து கவனித்தான் ஜவஹர். “அவள் சில நேரங்களில் அனுப்பும் குரூப் மெசேஜ்கள் அவளும் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றும்“ என்றான்.
“அவ்வளவு சந்தேகம் ஏன்? நேரில் போய் பார்த்துப் பேசி விட்டு வந்தால் சந்தேகம் தீரந்து விடும் அல்லவா? உங்களுக்கு அந்தப் பெண்ணின் வீடு தெரியுமா?”
“தெரியும். நேரில் போய் பார்த்துப் பேச முடியுமா? அவள் ரொம்ப கோபக்காரி. அவளைவிட அவள் அம்மா பத்ரகாளி போல் கத்துவாள். ரொம்பவும் அசிங்கமானால் என்ன செய்வது?”
“காதலில் இதெல்லாம் சகஜம்ப்பா“ என்றவள் சிரித்தாள்.
“என்னைப் பார்த்தால் உனக்குக் கூட கேலியாக இருக்கிறா சம்யூ?” என்றான்.
இத்தனை நாள் அவள் பெயரைச் சொல்லியே அழைக்காதவன், சம்யூ என்றழைத்தவுடன் அவளுக்கு லேசாக மனம் சிலிர்த்தது. .கண்கள் கூட லேசாக கலங்கியது.
“நீங்கள் தனியாகப் போக வேண்டாம். நானும் வருகிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழச் சம்மதித்தால் நான் நிரந்தரமாக சட்டபூர்வமாக பிரிந்து விடுகிறேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று பேசுகிறேன். நெகட்டிவ் திங்க்கிங் வேண்டாம், பாசிட்டிவ்வாகவே நினைக்கலாம்“ என்றவள், “எப்போது போகலாம்?” என்று கேட்டாள்.
“போன் செய்து விட்டுப் போகலாமா?”
“போனெல்லாம் வேண்டாம். ‘நன்றே செய்; இன்றே செய்‘ என்று பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா? வெளியே ஷாப்பிங் போகிறோம் என்று அம்மாவிற்கு ஒரு ஸ்லிப்பில் எழுதி வைத்து விட்டுப் போகலாம்“ என்றவள் கிளம்பி விட்டாள்.
சென்னைப் புறநகரில் ஒதுக்கப்புறமான இடத்தில் அவள் வீடு. வீட்டின் எதிரில் விலையுயர்ந்த கார்கள் இரண்டு நின்று கொண்டிருந்தன. அதில் ஒன்று பி.எம்.டபுள்யூ. ஒன்று லெக்ஸஸ்.
ஒரு வேலைக்காரி உள்ளேயிருந்து வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ஒரு பிளாஸ்டிக் ஒயர் பையில் சாப்பாட்டு விஷயங்களை அடுக்கி வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“அம்மாவைப் பார்க்க வேண்டும்” என்றாள் சம்யுக்தா.
அதே நேரத்தில் மாடியில் இருந்து இறங்கி வந்த ஒரு ஆளைப் பார்த்ததும் தப்பான இடத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் அவள் மனதில் ஏற்பட்டது.
உடல் லேசாக நடுங்க ஜவஹரை நெருங்கி ,அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அந்த ஆளைத் தொடர்ந்து வந்த ஒரு பெண் போதையில் நிற்கவும் முடியாமல் விழுந்து விடுவது போல் தள்ளாடினாள்.
ஆனால், உண்மையில் அவள் பேரழகி தான். அந்த அழகைப் பார்த்துத்தான் ஜவஹர் மயங்கி விட்டான் போல் இருக்கிறது.
ஆடை கலைந்து, போதையில் இறங்கி வந்த அந்தப் பெண்ணைப் பார்த்து ஜவஹர் முகம் இறுகியது. முகம் கோபத்தில் கருத்தது. சம்யுக்தாவின் கையைப் பிடித்து வேகமாக மூச்சிறைக்க வெளியே வந்தான். பின்னால் இருந்து வந்த ‘ஜவஹர்’ என்ற அழைப்பை சிறிதும் லட்சியம் செய்யவில்லை.
போகிற வழியில் ஒரு ’ஊபர்’ கால் டாக்ஸியை அழைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வரும் வழியெல்லாம் சம்யுக்தாவின் கைகளை இறுகப் பற்றி, ‘ஸாரி’ என்று சொல்லிக் கொண்டே வந்தான் . அவள் கைகளைப் பிடித்து மாடியில் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.
கீழேயிருந்து அவன் அம்மா நின்றுக் கொண்டு மெல்லிய சிரிப்போடு நிம்மதி பெருமூச்சு விட்டவாறு மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா எவ்வளவு கிரேட் என்பது எனக்கு இப்போது புரிந்தது. அடிக்கடி ‘ஒருவர் பொறை இருவர் நட்பு‘ என்பார்கள். நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போனதால் எனக்கு நீ கிடைத்தாய். என் தவறுகளை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்வாயா சம்யுக்தா?” என்றான் கெஞ்சுதலாக.
“நட்பாகவா? கணவனாகவா?” என்றவள், கிண்டலுடன் அவன் கைகளை இறுகப் பற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings