2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காத்திருப்பு அறையில் சில்லென்ற இரும்பு நாற்காலியில் மௌனமாய் என்னெதிரே இருந்த வண்ணமீன் தொட்டியை பார்த்தபடியே இருந்தேன் . அதன் நேர் மேலே இருந்த கடூஸஸ் சிம்பலில் இரண்டு சர்ப்பங்கள் பின்னி பிணைந்திருந்தன.
சென்னையில் புகழ்பெற்ற அந்த மருத்துவமனையில் அண்ணனை சேர்த்திருந்தோம் அவனுக்கு ஸ்கிசோஃப்ரினியா .நோயின் தாக்கத்தில் இருந்தான் சரியாக சிகிச்சை எடுத்திருந்தானென்றால் இவ்வளவு மோசமாகியிருக்காது அது பற்றி பிறகு சொல்கிறேன் .
மனநல வார்டு மருத்துவமனையில் சற்று தள்ளி ஒதுக்குபறமாக வைத்திருந்தார்கள் . காத்திருப்பவர்களில் யார் சிகிச்சைக்காக வந்தவர் யார் உடன் வந்தவர் என்று பிரித்தவறிவதற்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது .எல்லோரும் நாசூக்காக நடந்து கொண்டார்கள் . ஹஸ்கி குரலில் பேசிக்கொண்டார்கள் . அலைபேசி வந்தால் பதறி அதை மியூட்டில் போட்டு வாய் பொத்தி வெளியே போய் பேசினார்கள் .
சட்டென யோசனை கலைத்து எழுந்து கொண்டேன் .தரைத்தளத்தில் உணவகம் இருக்கிறது காபி சாப்பிடலாம் போல் இருந்தது .லிப்டில் சடுதியில் இறங்கி விடலாம் .பட்டனை அழுத்தியதும் மௌனமாய் சேவகன் போல் கீழறங்கி என் எதிரே திறந்து கொண்டது உள்ளே உள்ள ஒரு மத்திம வயதுப்பெண்ணும் அவளுடன் ஒரு பையனும் நின்று கொண்டிருந்தார்கள் அந்தப்பெண் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் நிச்சயம் இந்த நகரை சேர்ந்தவளல்ல என்பதை பார்த்தவுடன் தெரிந்தது லிப்டினுள் மெலிதாய் ஒலித்த இசையை ரசிக்க இயலவில்லை .
நான் எனக்கான வெளி வேண்டி ஆழ்மன உந்துதலால் தலையை மேலுயர்த்தி கூரையை வெறிக்கத் துவங்கினேன். பூப்போல தரைத்தளத்தை அடைந்து கதவுகள் திறந்து கொள்ள மெதுவாய் கஃபே நோக்கி நடக்க துவங்கியதும் பின்னால் அந்த குரல் கூப்பிட்டது.
“சதீஸ் ….”
நிச்சயமாக எனக்கு பழக்கமான குரல் .
ஜுலி அக்கா தான் ., ஒரு சிறுவனை இடது கையில் பிடித்தபடியும் வலது கையில் ஒரு ப்ளாஸ்கை பிடித்தபடியும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் .
அக்கா …
எப்டியிருக்க மேன் ?
சரியா பதினைந்து வருடங்களுக்கு பின் ஜுலி அக்காவை இப்போது தான் பார்க்கின்றேன்.என்னை விட ஏழு வயது பெரியவள்.
நல்லா இருக்கியா ?
நல்லா இருக்கேன்கா நீ எப்படி இருக்க ? எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க ?
“ஆமா இவர கண்டுபிடிக்க முடியாதா ? என்று அந்த சிறுவனை பார்த்து சிரித்தாள் .
சரி என்ன யாருக்கு ? என்று நிறுத்திக்கொண்டாள்.
“சொல்றேன்க்கா நீ என்ன இங்க ?”
“அம்மாக்குத்தான் ……”
இப்போது ஜுலி அக்காவை நிதானமாக பார்த்தேன் சற்றே எடை ஏறி ஆனால் கண்ணில் அந்த மின்னல் மட்டும் போகவில்லை ..
எங்கள் தெருதான் . ஆங்கிலோ இந்திய அழகி .அன்று பாளையங்கோட்டையில் ஜுலி அக்காவை விரட்டாத ஆளில்லை.அவ்வளவு ஒரு அழகு எங்கள் வீதியில் கடைசியாக உள்ள மிகப்பெரிய காம்பௌண்ட் வீடு
ஜுலி சேவியர்ஸ் கல்லூரியில் இளநிலை கணிதம் படித்துக்கொண்டிருந்தாள் .கல்லூரி செல்லும் போதும் வரும் போதும் சமாதானபுறம் சர்ச் அருகில் தினம் யாரோ ஒருவன் வாழ்த்து அட்டையோ . கவிதை (உள்ளே காதல் கடிதம் )புத்தகமோ, நீட்டிக்கொண்டிருப்பார்கள்.ஆனால் அவள் யாரையும் கடிந்து கொள்வதில்லை எதையும் வாங்குவதும் இல்லை .
ஒரு புன்னகையுடன் சர்ச் வளாகத்திலிருக்கும் மாதாவை சில வினாடிகள் நடந்தவாறே ப்ரார்த்தித்தபடி பின் வாசல் வழியே கடந்து விடுவாள் .
ஜுலியின் அப்பா எப்பொழுதும் வீட்டில் தான் இருப்பார் .கைகளில் எப்பொழுதும் ஆறாம் விரல் போல பெர்கிலி சிகரெட் புகைந்து கொண்டிருக்க மேல் சட்டையின்றி பெண்பிள்ளை போல ரோமங்களற்ற தளர்ந்த மார்புகளை அவ்வப்போது சொறிந்து கொண்டிருப்பதை காணலாம் . மற்றபடி அவர் இருப்பை வீட்டில் எவரும் பொருட்படுத்துவதில்லை.
ஒவ்வொரு வருடமும் கிருஸ்துமஸ் நெருங்கும் தினங்களில் எங்கள் தெரு வழியாக அவர்கள் கரோல் கீதம் பாடியபடி செல்லும் கூட்டத்தில் ஜுலியும் பாடியபடி செல்வாள் . அதைக்காணவே இளைஞர் கூட்டம் தெருவிற்கு தெரு காத்துக்கொண்டிருக்கும் . அவளுக்கு பூனைக்கண்கள் . குட்டையான சாடின் ஸ்கர்ட் அணிந்து , (அப்பொழுதே ரோமங்களற்ற அவளின் வழுவழு கால்களுக்கு வழுக்கி விழுந்தவர்கள் ஏராளம் . )
Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh.
Jingle Bells, Jingle Bells,
Jingle all the way!
Oh, What fun it is to ride
In a one horse open sleigh…..
கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி , கூட்டத்தில் பாடியபடி செல்வாள். அதன் வெளிச்சத்தில் பூனை கண்கள் மினுமினுக்க தன்னை ஒருதரம் பார்த்துவிட மாட்டாளா என்று ஏங்கியவர்கள் ஏராளம் .அப்படியெரு திகைக்க வைக்கும் அழகு .
எங்கள் தெருவில் அவள் மேல் காதல் கொள்ளாத விடலைகளே இல்லை . தெருவின் கடைசியில் தன் அப்பாவின் இரும்பு பட்டறையில் அரிவாள் அடிக்கும் செல்லப்பாவும் ஜுலியை காதலித்தான் . அவளுக்காக இரும்பில் இதயம் செய்து , அவளுக்கு கொடுக்க தனது கரிபடிந்த கால்சட்டையில் என்னேரமும் வைத்திருந்தான் . பேட்டையில் ஐஐடி படித்துக்கொண்டிருந்த கோபியும் அவளை காதலித்தான் . அவளழகில் யார்தான் வீழ மறுப்பார்கள் ?.
நானும் ஜுலி அக்காவை காதலித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் . அது பப்பி லவ் என்று இன்று உணர்ந்தாலும் அன்று என்னை மிக ஆக்ரோஷமாய் என்னை ஆட்டிப்படைத்தது , ஜுலியக்கா அவள் வயதொத்த பையன்களின் காதலை நிராகரிக்கும் போதெல்லாம் மனதில் அப்படியெரு சந்தோசம் வெடித்தது . நமக்கு இன்னும் வாய்ப்புள்ளது . ஏதேனும் மாயாஜாலம் நடந்து என்னை கல்யாணம் செய்து கொண்டு விடுவாள் என்று கூட நம்பிக்கொண்டிருந்தேன் .
ஆனால் விதி அண்ணன் ரூபத்தில் விளையாடியது. ஜுலியின் தம்பி குருஸ் அம்ப்ரோஸ் என் வகுப்பு தான் . யாருடனும் ஒட்டாமல் இருந்தவனை ஜுலிக்காக என் நண்பனாக்கிக்கொண்டேன் .அவர்கள் வீட்டில் இருக்கும் ப்ளாக்கி என்கிற கருப்பு பிசாசை நினைத்தாலே குலை நடுங்கினாலும் தைரியமாக அவனை பார்க்கும் சாக்கை வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று வந்தேன் .
ஜுலிக்கு ஒரு அண்ணன் இருந்தான். எந்நேரமும் தொம் தொம் என்று வீட்டில் ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டிருப்பான். இரவினில் ஏர்கன்னில் பால்ரஸ் குண்டுகளை போட்டு வீட்டுத்தோட்டத்தில் உள்ள கொடுக்காபுளி மரத்தில் ஒளிந்திருக்கும் எருது பூனையை சுட்டுக்கொண்டிருப்பான் .இதுபோக யாரெல்லாம் ஜுலியின் பின்னால் சுற்றுகிறார்களோ அவர்களின் மண்டையை உடைப்பதை மீதி நேரங்களில் செய்து கொண்டிருந்தான் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் அண்ணன் ஒருநாள் மண்டையில் ரத்தம் சொட்ட சொட்ட நள்ளிரவில் வீடு வந்தான் ,அப்பாவிற்கு தெரியாமல் பின்கட்டு வழியாக வந்தவனை பார்த்து உறைந்து நின்றேன் . அப்பாவின் பழைய வேட்டியை கிழித்து தானே கட்டு போட்டுக்கொண்டவன் என்னைப்பார்த்து சிரித்தான் .
“காதல்ல ஜெயிக்கனும்னா இதெல்லாம் பாத்துதாம்ல ஆவனும் “
” யார்னே அடிச்சா ?, என்னாச்சு !!??”
“வேற யாரு நம்ம ஜுலியோட அண்ணன் தான் . அவளுக்கு என் மேல இஷ்டம் தான் . அத என்கிட்ட சொல்ல தயங்கிட்டே இருந்தா . நாந்தான் அவகிட்ட போய் தைரியமா என் லவ்வ சொல்லி லெட்டர் கொடுத்தேன் , அத அவ அண்ணன்காரன் பாத்துட்டான் …”
அதன் பிறகு அவன் சொல்லிய எதுவும் என் காதில் விழவில்லை ,இதயத்தில் கத்தி சொருகியது போல இருந்தது .என் முதல் காதல் சுக்கு நூறாக நொருங்கியது .
அதன் பிறகு ஜுலி , அண்ணனின் காதலை ஏற்றுக்கொண்டு பதில் கடிதம் கொடுத்தை சொன்னான் . ” எங்கே காமி ” என்றதுக்கு காண்பிக்க மறுத்து விட்டான் .
பின் இருவரும் ரகசியமாய் ஊர் சுற்றியதையும் . பூர்ணகலாவில் படம் பார்த்ததையும் சொல்லி வெறுப்பேற்றுவான் .
மானசீகமாய் அவனை வெறுத்தாலும் ஜுலியை அண்ணியாய் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் .
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings