in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

தன் கையிலிருந்த போட்டோவையே நூறாவது முறையாக  உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி

’யாரிந்த தேவதை?’ என்று வியந்தது அவன் மனம்.

அவன் ஒரு ப்ரீ-லான்ஸ் போட்டோகிராபர்.  ஆறடி உயரம்.  இருபத்தி எட்டு வயது வாலிபன். பணக்காரத்தனம் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் மிளிரும்.

கருப்பு என்றும் சொல்ல முடியாத, வெள்ளை என்றும் சொல்ல முடியாத ஒரு இரண்டுங்கெட்டான் நிறம். முகம் மட்டும் கிரேக்க நாட்டு வீரன் போல் கூரிய மூக்கும், மெல்லிய எழுதி வைத்தாற் போன்ற உதடுகளும், பிடிவாதத்தைக் காட்டும் மெல்லத் தூக்கிய தாடையும், மெல்லிய மீசையுமாக ஆண்மையின் கம்பீரத்தோடு இருக்கும் அவனை ஒரு முறைப் பார்த்தாலே மீண்டும் திரும்பிப் பார்ப்பார்கள்.

சுவாமிமலையைச் சேர்ந்த ஒரு பெரிய பண்ணையாரின் மூன்றாவது மகன். எல்லாருக்கும் மூத்தவள் சௌம்யா என்னும் டாக்டர் அக்கா. இரண்டாவது அண்ணா வித்யாதர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர்.

ரிஷி தான் மூன்றாவது பையன். சிறிய வயதிலிருந்தே கையில் கேமிராவோடு சுற்றிக் கொண்டிருப்பான். படிப்பு கூட இரண்டாம் பட்சம் என்றுதான் சுற்றிக் கொண்டிருந்தான். ஆடு, மாடு, நாய் எதுவும் அவன் பார்வையில் தப்பாது அவன் கேமிராவில் ஒளிந்து கொள்ளும்.

ஒருநாள் அக்காவைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் அம்மா, நீர் யானை போல் வாயைத் திறந்து கொட்டாவி விட, அதை அப்படியே அவன் தன் கேமிராவில் அடக்க, அந்தப் போட்டோவைப் பார்த்த மாப்பிள்ளைப் பையன், தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறி விட்டான்.

அத்தோடு அவன் தந்தை கேமிராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, “நீ இஞ்ஜினீயரிங் முடித்து விட்டு எக்கேடும் கெட்டு ஒழி” என்று  தலை முழுகி விட்டார்.

அதனால் எந்த அரியர்சும் இல்லாமல் வேகமாக அந்த நான்கு வருடப் பட்டப்படிப்பை முடித்து விட்டுத் தன் கேமிராவோடு தன் நண்பன் சதீஷின் அறையில் வந்து தங்கிக் கொண்டான்.

இருபது வேலிநிலம். ஒரு சர்க்கரை ஆலை. அதில் நூற்றுக் கணக்காக வேலை செய்யும் ஆட்கள். எந்தப் பணக்கஷ்டமும் இல்லாததால் அவனுக்குத் தேவையான பணம் தேவையான போதெல்லாம் வந்து கொண்டிருந்தது.

சௌம்யா அக்காவும் ஒரு டாக்டரைத் திருமணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆகி விட்டாள். இப்போது அப்பாவிற்கு வயதாகி விட்டது.

அதனால் நிலம், சர்க்கரை ஆலை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள ரிஷியை வரச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவனும் அந்தப் போட்டோவில் இருக்கும் பெண்ணைப் பார்க்கும் வரை அதே எண்ணத்தில் தான் இருந்தான்.

சென்ற வாரம் யாரோ ஒரு மத்திய மந்திரி வந்து மற்ற கட்சிப் பணிகளில் கலந்து கொண்டு, பிறகு அன்று மாலை  வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு அநாதை ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியின் ‘கெமிஸ்ட்ரி  லேப்’பின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்காக வருகை தருகிறார் என்று கேள்விப்பட்டு, ரிஷியும், அவன் நண்பன் சதீஷும் கேமிராவோடு சென்றனர்.

முதலில் சிறிய குழந்தைகளின் பாட்டும் நடனமும் பேச்சுப் போட்டி எல்லாம் முடிந்த பிறகு, பள்ளி இறுதி வகுப்புப் பெண்களின் ‘சாகுந்தலம் நாட்டிய நாடகம்’ என்றும்  அறிவித்தனர்.

சகுந்தலையாக வேடமணிந்த ஒரு பெண், வெண்ணிறப் புடவையில், கழுத்தில் வெண்ணிற மலர் மாலையும், இரண்டு கைகளிலும் வெண்ணிற மலரைச் சுற்றி நடனமாடும் போது, இவன் கேமிரா வழியாக ஜூம் வைத்து முகத்தைப் பார்க்கும் போது ஏதோ தேவதை போல் தெரிந்தாள். மயங்கியே விட்டான் ரிஷி!.

அந்த போட்டோவையும், அந்த பள்ளியின் நிகழ்ச்சியையும் அவன் வழக்கமாக செய்திகளை அனுப்பும் பத்திரிகைக்கு அனுப்பினான்.

அனுப்பியதோடு நிற்காமல், ஒரு சிறு குறிப்பாக ‘திரையுலகம் திரும்பிப் பார்க்க வேண்டிய முகம்’ என்று குறிப்பிட்டிருந்தான். அந்த முகத்தைத் தான் இப்போது நூறாவது முறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு, தன் சர்க்கரை ஆலையைச் சுற்றி இன்ஸ்பெக்‌ஷன் வந்து கொண்டிருந்தான் ரிஷி.  அவன் இங்கு வந்து பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

ஜாலியாக கேமிராவோடு சுற்றிக் கொண்டிருந்தவனை, அவன் தாய் ஒரு நாள் இரவு, போன் செய்து அவன் தந்தைக்கு திடீரென்று ‘ஹார்ட் அட்டாக்’ வந்து கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருப்பதால் உடனே கிளம்பி வரவேண்டும் என்று அழுது கொண்டே கூறினாள்.

எல்லாம் அவன் அண்ணாவின் காதல் கலயாணத்தினால் வந்த வினைதான் அது.  அவன் அப்பா அவனுக்கு தஞ்சாவூரில் உள்ள பெரிய மிராசுதார்ரின் பெண்ணைப் பார்த்து முடிவு செய்து பெண் பார்க்க அவனை அழைத்திருக்கிறார்.

ஆனால் அவன் அண்ணா வித்யாதரோ அதற்கு பதிலாக ‘வாட்ஸ்அப்’பில் தன் அமெரிக்க மனைவி, மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் கூடிய தன் குடும்பப் புகைப்படத்தை அனுப்பவும் இவருக்கு பயங்கர ’ஷாக்’காகி மார்பு வலி வந்து ஹார்ட் அட்டாக் ஆகி இருந்தது.

நல்ல வேளையாக அம்மா அழுது புலம்பாமல் அவருக்கு நல்ல தைரியம் சொன்னதாலும், அவன் டாக்டர் அக்கா சௌம்யாவும், அவள் கணவர் டாக்டர் ரகுவும்  லண்டனிலிருந்து வந்து கூடவே இருந்து கவனித்துக்  கொண்டதாலும் அவன் தந்தை அந்த கண்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்.

ஆனாலும் அக்காவும் மாமாவும் அப்பாவிற்கு மனம் வலிக்கும்படி எதுவும் நடக்கக் கூடாதென்றும், எந்த அதிர்ச்சியும் தரக் கூடாதென்று அவன் அம்மாவிடமும், ரிஷியிடமும் எச்சரித்தனர்.

அதனால் ரிஷி வீட்டின் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். அவன் அக்காவும் மாமாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவனுக்கு உதவி செய்வதாகக் கூறினர். ஆனால் அவன் அண்ணா வித்யாதரோ, அவனுக்கு சர்க்கரை ஆலையோ அல்லது பரம்பரை நிலம் வேண்டாம் என்றும், அவனுடைய மென்பொருள் ஏற்றுமதி கம்பெனியின் வருமானமே மில்லியன் கணக்கில் இருப்பதாகவும், அதற்கே வருமான வரி மிகவும் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து எந்த சொத்தும் வேண்டாம் என்றும், எல்லா சொத்துக்களையும் அக்காவும் தம்பியும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அனுப்பியிருந்தான்.

அசையும், அசையாத சொத்துக்கள் வேண்டாம் என்றும், அவர்கள் அன்பு ஒன்றே போதும் என்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தான் வித்யாதர். ஆனால் ரிஷியும், அவன் அக்கா சௌம்யாவும் எல்லாவற்றையும் நான்காகப் பிரித்து அவர்கள் அம்மா, சௌம்யா, ரிஷி, வித்யாதரின் அமெரிக்கன் மகள் நான்ஸி என்று வங்கியில் பாதுகாப்பு செய்தனர்.

ஆதலால் யாருக்கும் யாரிடமும் வருத்தமில்லை. தப்பான அபிப்பிராயமும் இல்லை. வித்யாதரின் மனைவி ரீட்டா கூட இவர்களிடம் அன்பாகத்தான் பழகினாள். அவ்வப்போது தீபாவளி பரிசுகள், பிறந்த நாள் பரிசுகள் என்று எல்லோருக்கும் அவரவர் விருப்பத்தைக் கேட்டு அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ரிஷியும் சர்க்கரை ஆலை முதலாளி பதவியையும், நிலச் சுவான்தார் பதவியையும் ஒரு ஹோண்டா கார் வாங்கி நிலம், ஊரெல்லாம் சுற்றி நன்றாக என்ஜாய் செய்தான். அப்போது தான் சதீஷ் அவனிடம் போனில் கலாட்டா செய்தான்.

“டேய் ரிஷி, நான் ஒரு சர்ப்ரைசுடன் உன்னை வந்து சந்திக்கப் போகிறேன்” எனவும்

“என்னடா சர்ப்ரைஸ்?” எனக் கேட்டான் ரிஷி.

“போடா பூல்! சர்ப்ரைஸெல்லாம் நேரில் தான் பார்க்க வேண்டும்” என சிரித்தான் சதீஷ்.

அன்று இரவு முழுவதும் ரிஷி தூங்கவேயில்லை.

‘என்ன சர்ப்ரைஸ்?’ என்று மண்டை குழம்பியது தான் மிச்சம். அந்தப் புதிருக்கு எந்த விடையுமில்லை.

சௌம்யாவோ, “நீங்கள் இரண்டு பேரும் சரியான சினிமா பைத்தியங்கள்; அதனால் ஏதாவது புதியதாக ரிலீஸாகப் போகும் படத்தின் டிக்கெட்டாக இருக்கும்” என்றவள், “போய் நிம்மதியாகத் தூங்கு ரிஷி, கத்திரிக்காய் மலிந்தால் கடைத்தெருவிற்கு வரும்” என்று அலட்சியமாக கூறி விட்டு போய் விட்டாள்.

அடுத்த நாள் காலை பத்து மணிபோல் வீட்டு வாசலில் ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. சதீஷ் அதிலிருந்து இறங்கினான்.

ரிஷிக்கு இப்போது புரிந்தது. சதீஷ் ஒரு ஓட்டை மாருதி கார் வைத்திருந்தான். அதை மாற்றி ‘பென்ஸ்’ கார் வாங்கியதைத் தான் ஸர்ப்ரைஸ் என்று சொல்லுகிறானோ? அவ்வளவு பணம் இவனுக்கு ஏது? என்று யோசிப்பதற்குள் காரில் பின் சீட்டில் இருந்து ஒரு தேவதை இறங்கினாள்.  சௌம்யாவும் , ரகுவும் கூட ஆச்சர்யப்பட்டு, வியப்புடன் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

யார் இந்தப் பெண்? மேக்-அப் போட்டிருக்கிறாள், ஆனால் கண்களை உறுத்தாமல் எளிமையான மேக்-அப். பார்க்கக் கல்லூரி மாணவி போல் இருந்தாள். வாடாமல்லி கலரில் எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட ஒரு சுடிதர். தளரப் பின்னப்பட்ட நீண்ட அடர்த்தியான ஒற்றைப் பின்னல். அதில் மல்லிகைப் பூ நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆள் நல்ல உயரம், ஆனால் மிக மெல்லிய உருவம். உயரம் ஐந்தரை அடி இருப்பாள் போல் இருக்கிறது. அதனால் இன்னும் மெல்லிசாகத் தெரிந்தாள்.  பாலும், சந்தனமும் கலந்தாற்போல் ஒரு பொன்னிறம்.

மருண்ட மான் விழிகளால் இங்கும் அங்கும் பார்த்தபடி காரிலிருந்து இறங்கினாள். இரண்டு கைகளையும் தாமரைப் பூ போல் குவித்து, லிப்ஸ்டிக் போடாமலே சிவந்திருந்த தன் இதழ்களில் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தாள். பதில் வணக்கம் சொல்லக் கூடத் தோன்றாமல் எல்லோரும் மயங்கி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

சௌம்யா தான் டக்கென்று, “டேய் சதீஷ், நீ சொன்ன சர்ப்ரைஸ் இந்தப் பெண் தானா?” என்றாள் தன்னை சுதாரித்துக் கொண்டு.

“அக்கா, உனக்கும் எனக்கும் தான் இது பெண், ஆனால் ரிஷிக்கு இது சர்ப்ரைஸ்” என்றான் சதீஷ்.

ரிஷி ஒன்றும் புரியாமல் அவனை உறுத்துப் பார்த்தான். “ஏன் அவனுக்கு மட்டும் சர்ப்ரைஸ்?” எனக் கேட்டாள் சௌம்யா.

அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொணஃடிருந்த ரகு, “எல்லா ஆராய்ச்சியும் வந்த பெண்ணை வெளியில் நிறுத்திக் கொண்டேவா? வாருங்கள் உள்ளே போய் பேசலாம்” என்றார்.

அந்தப் பெண்ணும் ரிஷியை மட்டும் பார்த்து சிரித்தாள். ரிஷிக்கு மட்டும் அந்தப் பெண்ணை எங்கோ பார்தது போல் ஒரு நினைவு.

“இருவரும் காலையிலேயே கிளம்பியிருப்பீர்கள். வழியில் பாண்டிச்சேரியில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது மணி பன்னிரண்டாகிறது. லைட்டா ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிடுங்கள், பிறகு கொஞ்ச நேரத்தில் லஞ்ச் சாப்பிடலாம்” என்றாள் சௌமியா. இருவருக்கும் இட்லியும், காபியும் கொண்டு வந்து வைத்தாள்.

சாப்பிட்டுக் கொண்டே சதீஷ் தான் பேசினானான். “ரிஷி, இன்னமுமா உனக்கு ஞாபகம் வரவில்லை. சென்னையில் கடற்கரைச் சாலையில் ஓர் அநாதை ஆஸ்ரமத்தின் கட்டிடத் திறப்பு விழாவில் சாகுந்தலம் நாடகம் பார்த்தோமே. நீ கூட சகுந்தலையாக நடித்தப் பெண்ணின் அழகில் மயங்கி அந்த போட்டோவை நூறு முறை பார்த்துக் கொண்டிருந்தாயே. மறந்து விட்டாயா? அந்தப் பெண்ணின் போட்டோவைப் பல தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பி ‘திரையுலகம் திரும்பிப் பார்க்க வேண்டிய முகம்’ என்று கமென்ட் கூட எழுதியிருந்தாயே, மறந்து விட்டாயா?” என்றான்.

“அந்தப் பெண்ணா இவர்கள்? அந்தப் பெண் ஹோமில் அல்லவா இருந்தாள், ஆனால் இவர்களோ பார்ப்பதற்கு யாரோ ஒரு பெரிய ஸ்டார் மாதிரி இருக்கிறார்களே? பென்ஸ் கார் கூட அவர்களுடையது தான் போல் இருக்கிறதே. அது எப்படி இரண்டே வருடத்தில் இந்த மேஜிக் நடக்குமா?” என்றான் ரிஷி வியப்புடன்.

அது வரையில் அவர்கள் பேசுவதையெல்லாம் ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மா – ஆம் அது தான் அந்தப் பெண்ணின் பெயர் – அப்போது தான் வாயைத் திறந்தாள்.

“ரிஷி சார், முதலில் உங்களுக்கு ஒரு நன்றி. நீங்கள் சாகுந்தலம் நாட்டிய நாடகத்தை விமர்சித்து தினசரிகளில் நீங்கள் எழுதிய கட்டுரையோடு, ‘திரையுலகம் திரும்பிப் பார்க்க வேண்டிய முகம்’ என்று நீங்கள் கொடுத்த கமென்ட் தான் எனக்கு வாழ்க்கையில் இந்த உயரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். என்னைப் பெற்றவர்கள் நான் பிறந்த போது என்னைத் தூக்கிப் போட்டு விட்டார்கள். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் ஹோமில் தான் வளர்ந்தேன். அங்குதான்  எனக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. 

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் எங்கள் விடுதியைச் சேர்ந்த ஸிஸ்டரே, மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியதால் அவர்கள் கல்லூரியில் இடமும் கொடுத்து உபகாரச் சம்பளமும் கொடுத்தார்கள். உங்கள் விமர்சனத்தால் எனக்கும் திரையுலகில் ஓர் இடம் கிடைத்தது. அங்கு தான் ரேஷ்மா என்று பெயர் வைத்தார்கள்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நிறுத்தினாள். மேற்கொண்டு பேசுவதற்குத் தயங்கிது போல் இருந்தது.

சதீஷ் பேசலானான். “இப்போது இவர்களுக்கு ஒரு பிரச்சனை, அதற்குத்தான் உன் உதவியை நாடி வந்திருக்கிறார்கள்” என்றான்.

“என்ன பிரச்சனை? நான் என்ன செய்ய முடியும்?” என்றான் ரிஷி.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

    பொறுமை (சிறுகதை) – பஷீர் அஹமது