இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 103)
காலையில் எப்பொழுது எழுந்தாலும், அப்பா அம்மாவை வசைபாடிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே எழுவது அமீருக்கு வழக்கம்.
இருவரின் திருமண வாழ்க்கையும் 30 வருடங்களாக நல்லா தான் இருந்தது, திடீரென்று அப்பா ஏன் இப்படி மாறினார் என்று தெரியவில்லை.
ஐந்தொழுகையும் கடமையனத் தெரிந்த அப்பாவிற்கு, ‘நீங்கள் உங்கள் மனைவியிடம் எப்படி நடந்துகொள்கிறீர்களோ, அப்படியே இறைவனும் நடந்து கொள்வான்’, ‘மனைவிக்கு நோவினை தந்தவனின் நல்ல காரியங்களையும் பிரார்த்தனையும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை’ என்ற ஹதீது (இஸ்லாமிய அறநூல்) ஏன் தெரியாமல் போனது.
ஆனால், அம்மாவிற்கோ அதெல்லாம் பழகிப்போன ஒரு விஷயம். மனதில் சில வலிகளுடன் மிச்ச வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பா கல்யாணமான நாளிலிருந்து வேலை பார்த்ததெல்லாம் சவுதி அரேபியாவில்தான். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நான்கு மாத விடுமுறைக்கு வருவார். என்னோடும் என் தம்பி தங்கையுடனும் சந்தோசமாக தன் விடுமுறையைக் கழித்து விட்டு செல்வார். இன்னும் நாட்கள் நீளாதா என்று ஏங்கிய நாட்கள் அதிகம்.
அம்மா, எங்களைப் பேணி காத்து பார்த்து வளர்த்தவள். எங்கள் ஆசையை நிறைவேற்றுபவள். எங்கள்பசி அறிந்தவள். தன் ஆசையை எங்களுக்காக தியாகம் செய்பவள். கள்ளங்கபடமற்றவள். இரக்க குணம் உள்ளவள்.
உண்மையை நேர்பட பேசுபவள். என்னிடம் ஒரு சில நல்ல பண்புகள் இருப்பதற்கு காரணம் என் தாயால் தான். எனக்கு நம்பிக்கையாய் இருந்தவள். குடும்பத்தில் முதல் பட்டதாரியாக என்னை உருவாக்கியவள்.
என் தந்தையும் நேர்மையானவர் தான். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். மிகவும் கோபக்காரர். சிக்கனம் உள்ளவர். தன் தந்தை தன்னை படிக்க வைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு உண்டு.
தன் சிறு வயதில் இருந்து உழைத்தவர். அதனாலோ என்னவோ வாழ்க்கையின் சிறுசிறு கணங்களை ரசிக்க தெரியாதவர் ஆகிவிட்டார். அவரிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் என்னேரமும் புகை பிடித்துக் கொண்டே இருப்பார்.
மற்றபடி ஒரு தந்தையாக தன் கடமையை செய்யத் தவறியதில்லை அவர். சதா எந்நேரமும் தன்னுடைய பழைய காலத்து கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
என் அப்பன் என்னை படிக்க வைக்கவில்லை, எனக்கு அது செய்யவில்லை, எனக்கு இது செய்யவில்லை என்று. அதையெல்லாம் நான் உங்களுக்கு செய்கிறேன் என்று சொல்லுவார். செய்ததை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்று தோன்றும் எங்களுக்கு.
என் தந்தை என்னை ஒரு சிறந்த பள்ளிக்கூடத்தில் தான் சேர்த்தார். எனக்கு அந்த பள்ளி பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று கேட்கவில்லை. சிலநேரங்களில் படிக்காத பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்தது மிகவும் சிரமம் என்று தோன்றும்.
ஏனென்றால், அதிகமாக பணம் செலவு செய்து வராத படிப்பை வர வைப்பார்கள். எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த சிறந்த பள்ளி எனக்கு அந்த ஆர்வத்தை கொடுக்கவில்லை. அது என்னை ஒரு புத்தகப் புழுவாகவே மாற்ற நினைத்தது.
அதிக பணம் வசூலிப்பதால் என் மண்டைக்குள் ஏதேதோ குப்பைகளை கொட்டியது அந்த பள்ளி. கடைசியில் அவர்கள் கையாலாகாத தனத்தை காட்டுவதற்கு பதிலாக எனக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி என்னை ஓரம் கட்டினார்கள்.
என்னால் எப்படி ஒரு பெரியகுளத்தில் (சிறந்த பள்ளி) சின்ன மீனாக வாழ முடியும். என் பள்ளிக் காலம் முழுவதுமே எனக்கு சிரமமாகத் தான் இருந்தது
ஏதேதோ சொல்லி அந்தப் பள்ளியை விட்டு ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்து விடும்படி கெஞ்சினேன். ஆனால், என் தந்தையின் காதில் என் சொல் எட்டவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு, நான் ஆசைப்பட்ட பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்.
ஆனால் என் தந்தைக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அதன்பிறகு ஒரு சின்ன குளத்தில் பெரிய மீனாக இருந்தேன். எனக்கு நடந்தது போலவே என் தம்பிக்கும் நடந்தது. அவன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு தன் படிப்பை நிறுத்திக் கொண்டான்.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் உள்ளத்தோடு ஏன் பேசுவதில்லை என்று புரியவில்லை. சமூகத்தைப் பார்த்து பிரதி எடுப்பவர்களாகவே இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
என் தந்தை தன் வெளிநாடு வாழ்க்கையை முடித்து விட்டு, இப்போது என் குடும்பத்துடன் இருக்கிறார். சுமார் 29 வருட உழைப்பிற்கு பிறகு இப்போது ஓய்வில் இருக்கிறார்
இப்போதோ, அந்த பொறுப்பை மூத்த மகனான நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால், விடுமுறைக்கு வந்த போது இருந்த அந்த சந்தோஷம், இப்போது இல்லை. காரணம், என் தந்தை வாழ்க்கையில், கால் பகுதியை தனியே கழித்ததால், இப்போது குடும்பத்தின் ஒன்றி வாழ்வது எப்படி என்று அவருக்கு தெரியவில்லை
எப்போதும் ஏதாவது ஒரு சண்டை சச்சரவுடன் தான் வாழ்க்கை கழிகிறது. முகமது நபி(ஸல்) தன் அடிமையை ஒரு நாளைக்கு 70 முறை மன்னித்தார் என்று தெரிந்த என் தந்தைக்கு, தன் குடும்பத்தில் உள்ளவர்களை மன்னிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், அந்த மன்னிப்பை இப்போது என் தாய் வழங்கிக் கொண்டிருக்கிறார் அவருக்கு.
யாரையும் பிடிக்கவில்லை அவருக்கு. எல்லாமே அன்யோன்யமாக மாறிவிட்டது அவருக்கு
கல்லூரியில் நான் படித்த போது என்னுடைய ரோல் மாடல் யார் என்று கேட்டு, அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எழுத வேண்டும் என்று சொன்னதற்கு. எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம் என் தந்தை தான்.
அவருடன் நான் பள்ளிக்கு சென்றது முதல் பள்ளிவாசல் சென்றது வரை இன்னும் என் நினைவில் இருக்கிறது. என் உடல் சரியில்லாமல் போய் இருந்தபோது, என் வாந்தியை கையில் ஏந்தியவர். அப்படிப்பட்டவரை நான் என் தந்தைக்கு மேலாக பார்த்தேன்.
இப்போதோ என் தந்தை மாறிவிட்டார். காலம் எல்லோரையும் மாற்றி விடுகிறது
என் தம்பியின் பெயர் அபுல். எனக்கும் என் தம்பிக்கும் பதினைந்து வருட வித்தியாசம், எனக்கு கிடைத்த அந்த அன்பு இப்போது என் தம்பிக்கு கிடைக்கவில்லை.
எனக்கு கிடைத்த அந்த சுதந்திரம் இப்போது என் தம்பிக்கு கிடைக்கவில்லை. அவனும் இப்போது என் தந்தைக்கு வேண்டாதவன் ஆகி விட்டான். ஒன்றும் அறியாதவன் அவன். ஏன் என் தந்தை மாறி விட்டார் என்று தான் தெரியவில்லை.
இப்போதோ, என் தந்தையின் அன்பை நான் கொடுக்கிறேன் என் தம்பிக்கு. என் தம்பி என்னிடம் மட்டுமே எல்லா உண்மைகளையும் சொல்பவன். என்னிடம் மட்டுமே எல்லா கஷ்டங்களையும் சொல்வோம்.
இப்போது நான் அவனுக்கு ஒரு ஆசானாகவும் இருக்கிறேன். என் தாயின் கவலையெல்லாம் என் தம்பி பற்றி தான். என்னிடம் அவள் எப்போதும் சொல்லும் வார்த்தை “அவனை எப்படியாவது ஒரு ஆளாக்கிரு” என்பது தான்
என் தங்கையின் பெயர் ஆஷா. எனக்கும் என் தங்கைக்கும் 6 வருட வித்தியாசம். என் தங்கைக்கு கல்யாணமாகி, மூன்று வயது பெண் பிள்ளையும் இருக்கிறது.
என் தாயைப் போல் அவளும் என்னிடம் அன்பானவள். எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று அறிந்தவள். அவளும் வேண்டாதவள் தான் என் தந்தைக்கு.
எல்லா தந்தைகளுக்கும் பெண் பிள்ளைகளை ரொம்ப பிடிக்கும். ஒருகாலத்தில் என் தந்தையும் அப்படித் தான். இப்போதோ, என் தங்கையின் பிள்ளையையும் பிடிக்கவில்லை.
ஆனால், என் தங்கையின் வாழ்க்கையோ தன் கணவருடன் நன்றாகவே செல்கிறது
என் விடுமுறையின் போது தான் காசிமைப் பற்றிய தகவல் கிடைத்தது. காசிம் இறந்துவிட்டான் என்று. காசிமின் மரணம் ஒரு தற்கொலை. கல்லூரி முடிந்ததோடு சரி, அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக காசிம்மை பார்க்கவே இல்லை.
‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்து. இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ் (இறைவன்)? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி (தவிர்க்கப்பட்டது) விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீதெல்லாம் படித்தவன் தானே காசிம். ஆனாலும் வீட்டிற்கு ஒரே பிள்ளையான அவன், கல்யாணமான அவன், ஒரு குழந்தைக்கு தந்தையான அவன், எப்படி இந்த முடிவை எடுத்தான் என்று தான் தெரியவில்லை
காசிம், ஏன் தன் பிரச்சனையை யாரிடமும் சொல்லவில்லை அல்லது அவன் பிரச்சனையை எல்லோரும் அலட்சியம் செய்தார்களா? அவன் போன பிறகு, பல பேர் ஆயிரம் விதமான சாத்தியக் கூறுகளைச் சொன்னார்கள் வாழ்வதற்காக
அந்த ஆயிரம் சாத்தியக் கூறுகள் அவனுக்கு தெரிந்திருக்காதா என்ன?. ஆனால், வாழ வழித் தெரியாதப் போது இந்த உலகத்தில் எப்படி வாழ முடியும்.
இன்றும் நினைவிருக்கிறது, காசிம் கல்லூரியில் சொன்ன வார்த்தை. என்னுடைய அப்பா, சித்தப்பா, உற்றார் உறவினர்கள் எல்லோரும் சொந்த பிசினஸில் செட்டில் ஆயிட்டாங்க. நான் படித்து முடித்தவுடன் அவங்க பிசினஸை பார்த்துகிட்டு இருக்க வேண்டியது தான் என்று.
ஆனால் எதுவெல்லாம் தன் பலம் என்று யோசித்தானோ காசிம், அதுவெல்லாம் பலவீனமாய் போனதென்ன? நாம் அனுமானிப்பது போல் பல பேர் வாழ்க்கை அமைவதில்லை. எல்லாம் அர்த்தமற்ற அனுமானம் தானோ? என்று தோன்றுகிறது.
ஆனால், தன் நண்பன் கரீமின் வாழ்க்கையைப் பார்க்கும் போதோ வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. சுயநலமானவன், யாரிடமும் உண்மையாக நடந்து கொள்ளாதவன். அவன் கல்லூரியில் படிக்கும் போதே அப்படித் தான்
ஒரு ஒட்டுண்ணியை போல் கல்லூரி வாழ்க்கையை ஓட்டியவன். இப்போது, தன் சொந்த அக்கா பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக மாறாமல் ஒட்டுண்ணியாய்.
இந்த இருவரின் வாழ்வின் முரண் தான் என்ன என்று தெரியவில்லை. ‘வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான முழுமை, அது தொடங்குவதும் இல்லை முடிவும் இல்லை’ என்று எங்கோ படித்தது தான் ஞாபகம் வருகிறது.
என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளும் நண்பன் ஆறுமுகம் மட்டும் தான். எங்கள் இருவரின் நட்பும் பள்ளியில் தொடங்கியது. கல்லூரியிலும் நாங்கள் ஒன்றாகவே சேர்ந்தோம். எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் அவனுடன் தான்.
அவன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு முதிர்ச்சி அடைந்த ஞானியை போலவே பேசுபவன். அவனைப் போலவே அவன் குடும்பத்தாரும் என்னை நேசிக்கிறார்கள். ரம்ஜான் என்றால் நான் விருந்து வைப்பேன், அதுவே தீபாவளி என்றால் அவன் விருந்து வைப்பான்.
எனக்கு புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தியவன் அவன் தான். நான் அதிகமாக மனச் சோர்வுடன் இருக்கும் போது என் அன்னைக்கு பிறகு நம்பிக்கை ஊட்டியவன் அவன் தான்.
கல்லூரியில் படித்து முடித்து ஒரு வருடத்திற்கு பிறகு, சென்னையில் வேலை தேடிய போது, வருமானமே இல்லாத எனக்கு, மூன்று மாதம் சோறு போட்டவன். அவன் என்னை புரிந்த அளவுக்கு என் குடும்பத்தார் யாரும் என்னை புரிந்ததில்லை.
அவனைப் போலவே எனக்கு கசாலி என்ற ஆசிரியரும் உண்டு. அவர் எனது பள்ளி ஆசிரியர் அல்ல. அவர் ஒரு இங்கிலீஷ் ஸ்போக்கன் சென்டர் வைத்து நடத்துபவர்
ஊரில் உள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் அவரை கொண்டு தான் நடக்கும். அவர் எனக்கு அறிமுகமானது என்னுடைய எட்டாம் வகுப்பில். அப்போது எனக்கு ஆங்கிலக்கல்வி மிகவும் சிரமமாக இருந்தது.
வீட்டில் அடிக்கடி பிரச்சினை நிகழும். அப்போது என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அவரிடம் என் பிரச்சினையை சொன்னேன். ஆங்கிலக்கல்வி மிகவும் சிரமமாக இருக்கிறது என்று. உடனே அவர், அந்தப் பையனுக்கு எது இஷ்டமோ அதில் சேர்த்து விடுங்கள் என்று கூறி விட்டார்.
அப்போது எனக்கு அவரைப் பிடித்து விட்டது. ஒரு சிறுவன் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை. ஆனால் அந்த ஆசிரியர் நான் சொல்வதை காது கொடுத்து கேட்டதனால் எனக்கு அவரை மிகவும் பிடித்தது.
அதன் பிறகு, எனது 10ஆம் வகுப்பு கோடை விடுமுறையன்று, அவரிடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துக்க சென்றேன். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
அது ‘know something about everything and everything about something’ என்று, இன்றும் என் தொடர்பில் இருக்கிறார் அவர். அவர் என்னை ஒரு மகனைப் போல் பார்ப்பவர்
அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, வாழ்க்கையில் நீ எந்த நிலையில் இருந்தாலும் அதிலுள்ள சிறு சிறு நுணுக்கங்களை நீ ரசிக்க வேண்டும் என்று அவரிடமிருந்து தான், ‘கேட்கும் கலையை’ கொஞ்சம் கற்றுக் கொண்டேன் நான்
அவர் எனக்கு ஒரு மனநல நிபுணர் போல் செயல்பட்டவர். எனக்கு அத்தை பெண் ஒருத்தி உண்டு., அவள் பெயர் சனா. ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவளும் இறந்து போனாள். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்து இறந்து போனவள்.
வலிப்பு நோயால் இறந்து போனாள் அவள். ரொம்பவும் கலகலப்பான பெண்ணவள். என்னை விட மூன்று வயது மூத்தவள். மனதில் பல வேதனைகள் இருந்தும் வெளிக்காட்டாதவள். அவளுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.
அவள் இழப்பு என்னால் தாங்க முடியாத ஒன்று. அவள் இறந்த அன்று, அவளின் இரண்டு குழந்தைகள், தாய் இறந்ததை கூட அறியாதவனாய் நின்றிருந்தனர். இப்போது பிள்ளைகள் தங்கள் பாட்டியிடம் வளருகின்றன
என்னை விரும்பிய பெண் ஒருத்தி உண்டு, அவளும் ஒரு வகையில் எனக்கு அத்தை பெண் தான். என்னை அவள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் ஆசை நிறைவேறவில்லை.
அவள் ஆசைக்கு தடையாக இருந்தது என் குடும்பமோ அவள் குடும்பமோ இல்லை. என்னுடைய வேலை தான், அவள் ஆசைக்கு தடையாக இருந்தது. நான் வேலைக்கு சீக்கிரமே சென்றிருந்தால், அவள் ஆசை நிறைவேறி இருக்கும்.
எங்கள் ஊரில் ஒரு சம்பிரதாயம் உண்டு. பெண் பிள்ளைகளைச் சீக்கிரம் மட்டும் கல்யாணம் செய்து விடுவார்கள். அதனால் எனக்கும் சிறு வருத்தம் உண்டு, என்னை விரும்பிய பெண் எனக்கு கிடைக்கவில்லையே என்று.
இப்போதும் ஊருக்கு சென்றால், அவளை ஒருமுறையாவது பார்த்தால் தான் மனது ஆறுதல் அடைகிறது.
என்னைப் போலவே ஊரில் உள்ள பல பேருக்கும் இந்த வலி இருக்கத் தான் செய்யும். அது ஒரு சுகமான வலி என்று கூட சொல்லலாம்
இப்படிப் பல ஞாபகங்கள் மனதின் ஊடே வந்து செல்கின்றன. என்னால் மட்டும் ஒரு சில ஞாபகங்களை அழிக்க முடியவில்லை. சில சமயங்களில் ஞாபகங்கள் சாபம் போலவே தோன்றுகின்றன.
பல நேரங்களில் என்னால் என் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அது கட்டுப்பாடற்ற அலைகளாய் ஓடுகின்றன. ஆண்டவன் மட்டும் வேதனை அளிக்கும் ஞாபகங்களை மறக்கச் செய்யும் ஒரு சக்தியை மட்டும் கொடுக்கச் செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
வாழ்வின் ஊடே இதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் இதைச் செய்கிறானோ என்று தோன்றுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு தேசாந்திரி போல் எங்காவது சென்று விடலாமா என்று கூட தோன்றும்.
ஆனால் மறுபடியும் நான் என் நிகழ்காலத்துக்கு வந்து விடுவேன். வாழ்வில் பொருள் ஈட்டுவது முக்கியம் தான். ஆனால் அந்தப் பொருள்களால் மட்டும் எல்லா சந்தோசத்தையும் தந்துவிட முடிவதில்லை.
இன்று நான் நல்ல உத்தியோகத்தில் தான் இருக்கிறேன். ஆனால் என் தாய்க்கு என்னால் சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லையே. இத்தனை காலம் மாறாத என் தந்தை இப்போது மாறுவார் என்று நினைப்பது ஒரு மாயை.
மாற்ற யாருண்டு அவர் வணங்கும் இறைவனை தவிர. அந்த இறைவன் அவரை மாற்றுவான் என்ற நம்பிக்கையில் தான் வாழ வேண்டும். அந்த நம்பிக்கை மட்டும் தான் நம்மிடம் இருந்து பரிக்க முடியாத ஒன்று
எப்படி எல்லாம் வாழ்க்கை மாறி வருகிறது, வாழ்க்கையில் உள்ள மனிதர்களும் மாறி வருகிறார்கள். இந்த வாழ்க்கையில் நிறைய படிப்பினைகள் இருக்கு. அதை தினமும் ஒருவகையில் நாம் படித்துக் கொண்டே தான் இருக்கிறோம்
இந்த வாழ்க்கையில் எதையுமே அனுமானிக்க முடியவில்லை. நாம் அனுமானிப்பது போல் பல சமயம் நடப்பதும் இல்லை. எல்லாமே அர்த்தமற்ற அனுமானமாகி விடுகிறது.
ஞானிகள் சொன்னது போல் வாழ்க்கையின் போக்கை அவதானிக்கத் தான் முடியும் போல. சரி, அந்த அவதானிப்பாவது இனி தொடரட்டும்.
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
நிலையற்ற மாயை சிறுகதை முஹமது பிர்தவ்ஸ் .திருநெல்வேலி..கதை எண் 103
வருடம் 2021..
அற்புதமான கதை சார் இது..எத்தனை ஆத்மார்த்தமாக வெளி வந்துள்ளன.உங்கள் எண்ணங்களில் வார்த்தைகள்.
நிதர்சனம் கதையில் மின்ன காட்சிகள் தொகுப்பு மனதில் ஓடுகிறது.
உண்மையை உரக்க சொல்ல வேண்டாம்.ஒரு வரியில் கூட உண்மை புரியும்.வாழ்க்கை தத்துவத்தை கதையாக கொடுத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.ஏதோ மனம் சங்கட்ப்படுகிறது இந்த கதை வாசித்த பிறகு.அற்புதம்.அற்புதம்.
என் சிறுகதையை வாசித்து , குறைகள் ஒன்றும் சொல்லாமல், விமர்சனம் பதிவிட்டதற்கு நன்றி. அப்படி குறைசொல்லியிருந்தாலும் அதற்கும் நன்றி தான் சொல்லி இருப்பேன்.