ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
ஹாஸ்டலில் போய் அவர்கள் இறங்கிய போது ஒரு போலீஸ் வேன் நின்றிருந்தது. ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்களுடன் அவளுடைய ஹாஸ்டல் வார்டன் பேசிக் கொண்டிருந்தார். பொது மக்கள் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இந்தப் பெண்ணுடைய அறை தான் உடைக்கப்பட்டிருந்தது” என்று ஹாஸ்டல் வார்டன் கிருத்திகாவைக் காட்டினார்.
கிருத்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கருத்திருமன், “நான் பேசிக் கொள்கிறேன், நீ அமைதியாக இரு” என்றார்.
அவளுடைய அறையில் திருட்டுப் போவதற்கு ஒன்றும் இல்லை. ஒரே ஒரு சூட்கேஸ், அதிலுருந்த துணிகள் இழுத்து வெளியே போடப்பட்டிருந்தது. இரண்டாயிரம் ரூபாய் கேஷ் வைத்திருந்தாள். அந்த பர்ஸ் பணத்தோடு சேர்த்து சிறிது தூரத்தில் எறியப்பட்டிருந்தது. மொத்தத்தில் அறை கன்னா பின்னாவென்று கலைக்கப்பட்டிருந்தது .
எல்லாவற்றையும் போலீஸ் குறித்துக் கொண்டிருக்கும் போதே சபரீஷ்வர் அங்கே வந்தான். இவனுக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சர்யப்பட்டாள் கிருத்திகா.
சபரீஷ்வர் போலீஸ் விசாரணைக்கு பதில் கூறி முடித்த பிறகு, “கிருத்திகா, நான் கீழே ரிசப்ஷனில் காத்திருக்கிறேன். நீங்கள் சீக்கிரம் ஆபிஸ் போக ரெடியாகி வந்து விடுங்கள், என் காரில் போகலாம்” என்றான் சபரீஷ்வர்.
கருத்திருமன் இருவரிடமும் விடைபெற்று அலுவலகம் சென்றார்.
கிருத்திகா சபரீஷ்வருடன் காரில் போகும்போது ஏதும் பேசவில்லை, ஆனால் அவள் முகம் கலவரமாக இருந்தது.
“கிருத்திகா, போலீஸ் வந்ததால் பயந்து விட்டீர்களா?”
“போலீஸ் வந்ததால் பயம் இல்லை. என் ரூமில் போய் என்ன இருக்கிறதென்று பூட்டை உடைத்திருக்கிறார்கள்? இது நிச்சயம் திருடர்கள் வேலையாக இருக்காது. இப்படி ஏதாவது நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது கருத்திருமன் அங்கிளுக்குத் தெரியுமா?”
“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. கருத்திருமன் அங்கிளுக்குத் தெரியுமா என்பதை அவரைத் தான் கேட்க வேண்டும். பார்வதி அக்கா நன்றாக இருக்கிறார்களா? குழந்தை சந்தியா எப்படி இருக்கிறாள்?” என்றான் நமுட்டுச் சிரிப்போடு. கிருத்திகா அவனை உற்றுப் பார்த்தாள்.
“நான் அங்கே போனது உங்களுக்கு எப்படித் தெரியும்? இந்த கலாட்டா நடக்கும் என்று எதிர்ப் பார்த்தீர்களா சார்? இல்லையென்றால் கருத்திருமன் அங்கிள் வகுப்பு நடக்கும் இடத்திற்கே வந்து என்னை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? நான் அவர்கள் வீட்டில் தங்கியது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றாள்.
சபரீஷ்வர் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. அலுவலகம் வந்து சேர்ந்ததும் அவனும், கருத்திருமனும் மிகவும் பிஸியாகி விட்டார்கள்.
அன்று மாலை இளங்கோவிற்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவன் கம்பெனி கணக்குகளில் காட்டப்பட்டிருந்த நஷ்டக்கணக்கிற்கும் மறைக்கப்பட்ட லாபக்கணக்கிற்கும், வருமானத்துறையிடம் மறைக்கப்பட்ட கணக்கிற்கும், ஏன் அவன் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாதென்றும், ஏன் அவனை வேலையை விட்டு நீக்கக் கூடாதென்றும் கேட்கப்பட்டிருந்தது.
அதன் நகல் கிருத்திகாவிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. கம்பெனியின் எம்.டி. சபரீஷ்வரன் கையெழுத்திட்டு இருந்தான். வயலெட்டும், மும்தாஜும் கூட அதைப் படித்தார்கள்.
இளங்கோ இந்த கம்பெனிக்கு அவனே முதலாளி போல் எதற்கெடுத்தாலும் அலட்டிக் கொள்வான். கருத்திருமன் தன்னைப் போல் எம்.பி.ஏ. இல்லையென்றும், அவ்வளவு ஏன் வெளிநாடெல்லாம் போய் படித்து விட்டு வந்தாலும் சபரீஷ்வரன் கூட தன்னளவு மேதை இல்லையென்பது போல பேசுவான்.
இப்போது என்ன செய்யப் போகிறான் என்று யோசித்தார்கள். எல்லோரும் எதிர்ப்பார்த்தாற் போலவே இளங்கோ வேலையை ராஜினாமா செய்தான். அந்த கம்பெனிகளையும் கருத்திருமன் மேற்பார்வையில் ஒப்புவித்தான் சபரீஷ்வர்.
அன்று கிருத்திகாவிற்கு கிளாஸ் இல்லை, அதனால் நேராகத் தன் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள். அப்போது கருத்திருமன் இடமிருந்து போன் வந்தது.
“சில முக்கியமான கோப்புகளைப் பற்றி சபரீஷ்வர் கேட்டதால் அவர் அக்கோப்புகளுடன், சபரீஷ்வர் வீட்டிற்குப் போவதாகவும், கிருத்திகாவும் அங்கே உடனே வர வேண்டும்” என்றார்.
“நான் ஏன் வரவேண்டும்? என்னிடம் அந்த கோப்புகள் சம்பந்தப்பட்ட எந்த விவரமும் இல்லையே” என்றாள் எரிச்சலாக.
“நீங்கள் தானே கிருத்திகா அந்த கோப்புகளுக்கு பொறுப்பு. உங்களுக்கு அதிக வேலை பளு வேண்டாம் என்பதற்காக எம்.டி. அந்த பைல்களை என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அதனால் நீங்கள் உங்கள் பொறுப்புகளை ஒரேயடியாகத் தட்டிக் கழிக்க முடியாது”
“இப்போதே வர வேண்டுமா? இப்போது வந்தால் எப்போது நான் ஹாஸ்டலுக்குத் திரும்புவது?”
“இப்போதே வர வேண்டும், கால் டாக்சி கூட எம்.டி. புக் செய்து அனுப்பி விட்டார். ஒரு பத்து நிமிடத்தில் உங்கள் ஹாஸ்டலுக்கு வந்து விடும், சீக்கிரம் கிளம்புங்கள்” என்றார்.
‘இதுவரையில் எம்.டி. வீட்டிற்குப் போனதே இல்லை. ஆபீஸில் செய்யும் வேலைக்குத் தானே சம்பளம். வீட்டிற்குக் கூப்பிட்டு வேலை வாங்குவதெல்லாம் ரொம்ப அநியாயம். இந்த ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி தேர்வு முடிந்தவுடன், இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஏதாவது நல்ல வேலை தேட வேண்டும். நாம் எங்கு போக வேண்டும், எங்கு தங்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் தீர்மானம் செய்கிறார்களே’ என்று மனதிற்குள் பொருமினாள்.
கீழே போய் சமையல் அறையில் ஒரு டீ குடித்து விட்டுத் தன் அறைக்கு வந்து குளித்து விட்டு ஒரு பத்து நிமிடத்தில் தயாரானாள். அதற்குள் கால் டாக்சியும் வந்து விட்டது. ஜீன்ஸ் பேண்ட்டும், ஒரு குர்த்தியும் போட்டுக் கொண்டாள். கட்டுக்கடங்காத அந்தத் தலைமுடியை ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விட்டாள்.
சபரீஷ்வரின் வீட்டு வெளி ஹாலில் கருத்திருமன் உட்கார்ந்து இருந்தார், கூடவே சபரீஷ்வரும் அமர்ந்திருந்தான். கிருத்திகாவின் முகத்தைப் பார்த்தவுடனே அவள் கோபத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
“கிருத்திகா எங்கள் மேல் கோபமா?” என்றான் சபரீஷ்.
“நான் யார் சார் உங்கள் மேல் கோபப்பட? நான் எங்கே சாப்பிட வேண்டும், எங்கு தூங்க வேண்டும் என்பதெல்லாம் கூட நீங்கள் தீர்மானிக்கிறீர்களே என்று எண்ணும் போது தான் எரிச்சலாக இருக்கிறது”
“ஸாரி கிருத்திகா, நான் தான் எல்லாவற்றிற்கும் காரணம். இளங்கோவின் பழி வாங்கும் குணம், கோபம் எல்லாம் எனக்குத் தெரியும். அவன் ஆட்கள் தான் உன் அறையை உடைத்து, சாமான்களை கலைத்து உன்னை பயமுறித்தியிருக்கிறார்கள். உனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்று பயம் தான். அதனால் தான் நான் கிளாஸில் உன்னை டிராம் செய்வதும், கருத்திருமன் அங்கிள் பிக்கப் செய்வதும்” என்றான்.
“இதை என்னிடம் தெரிவித்திருக்கலாம் இல்லையா?” கிருத்திகா.
“நீ பயந்து வேலையை ராஜினாமா செய்து விட்டால்?”
“இப்போது மட்டும் என்ன, அதே எண்ணம் தான் வருகிறது” என்று முணுமுணுத்தாள்.
“இடியட் மாதிரி பேசாதே. நீ இளங்கோ ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன் போவதற்கு முன் , கருத்திருமன் அங்கிள் தான் அந்த பொறுப்பில் இருந்தார் தெரியுமா?”
“தெரியும்”
“அப்போதும் இதே போல் தான் அங்கிள் வீட்டில் இல்லாத நேரத்தில், அவர் வீட்டில் ஆட்களை அனுப்பி பார்வதி அக்காவையும் அந்த சின்னக் குழந்தை சத்யாவையும் மிரட்டி இருக்கிறான். அப்போது இவன் சொந்தக்காரன் என்ற காரணத்தால் போலீஸிற்குப் போகவில்லை. ஆனால் அவன் திருட்டு குணமும், போக்கிரித்தனமும் மாறாததால் தான், நான் உங்களை கிளாஸிற்கு அழைத்துப் போவதும், அங்கிள் உங்களைப் பிக்அப் செய்வதும், இப்போது போலீஸ் போனதும். எங்கள் மேல் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்றான்.
“என்ன சார், மன்னிப்பு அது இதுவென்று பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்களே” கிருத்திகா.
கருத்திருமன் எழுந்து போய் சமையல்காரர் சாம்பசிவத்திடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று உள்ளே போனார்.
“எம்.டி. சார் , நீங்கள் ஆபீஸ் ஃபைலைப் பற்றி விசாரிக்கத் தான் வரச் சொன்னீர்கள் என்றாரே அங்கிள்”
“நான் ஆபீஸ் வேலைப் பற்றி வீட்டில் பேசுவதில்லை. உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிச் சொல்லி உன்னை வரவழைத்தோம்”
“என்ன இவன் ரொம்ப உரிமையோடு ஒருமையில் அழைக்கிறானே. ஆனால் அதில் கூட அவன் உண்மையானவன் என்பதும், பிரியமானவன் என்பதும் தானே விளங்குகின்றது” என்று நினைத்துக் கொண்டாள்.
“கிருத்திகா, உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறதா? எல்லாம் உன் நன்மைக்காகத்தான் செய்கிறேன் என்று நீ தெரிந்து கொண்டால் போதும். மேலும் இனிமேல் அந்த ஹாஸ்டலில் தங்குவதும் பாதுகாப்பு இல்லையென்று நினைக்கிறேன்” என்றான் சபரீஷ்.
“மும்தாஜ் வந்து என் ரூமில் ஷேர் பண்ணிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறாள் சார். இரண்டு பேராக இருந்தால் பயமில்லை” கிருத்திகா.
பேசிக் கொண்டே, “நான் கிளம்புகிறேன் சார்” என்றாள்.
“இங்கே டின்னர் நான் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். நீயும், அங்கிளும் எனக்கு இன்று கம்பெனி கொடுப்பீர்களா?” என்றான் கெஞ்சும் குரலில்.
“சாரி சார், டின்னர் சாப்பிட்டுக் கிளம்பினால் ரொம்ப லேட்டாகி விடும்”
“என்னுடைய காரில் நானே கொண்டு வந்து விடுகிறேன்”
“அதெல்லாம் வேண்டாம் சார், நான் அங்கிளோடே போய் விடுகிறேன்” என்றவள் அப்போது உள்ளே நுழைந்த கருத்திருமனைப் பார்த்து சிரித்தாள்.
“என்ன மேடம், கோபம் எல்லாம் தணிந்ததா? சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்றார் கருத்திருமன் சிரித்துக் கொண்டு.
சாம்புத் தாத்தா மிக அருமையாக சமைத்திருந்தார். இட்லி, இடியாப்பம், சப்பாத்தி என்று. அவற்றிற்குப் பொருத்தமாக வெள்ளைக் குருமா, சாம்பார், சட்னியெல்லாம் மிக அருமையாக இருந்தது.
கிருத்திகா, அடுத்த நாள் காலை எட்டு மணிக்குக் கருத்திருமனுடன் வாடகைக் காரில் தன்னை வளர்த்த சேவை இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.
கருத்திருமன் டிரைவருடன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தார். கிருத்திகா டிரைவருக்கு நேர் பின்னால் உட்கார்ந்து கொண்டு கருத்திருமனுடன் பேசிச் சிரித்தவாறு வந்தாள்.
கிருத்திகா இவ்வளவு மனம் திறந்து பேசியோ, சந்தோஷமாக சிரித்தோ இதுவரை கருத்திருமன் பார்த்ததில்லை. மும்தாஜுடனும், வயலெட்டுடனும் கூட பேசுவாளே தவிர, இவ்வளவு மனம் திறந்து லொடலொடவென்று பேசிப் பார்த்ததில்லை.
அவர்கள் பேசும் போது, பெரும்பாலும் இவள் பங்கு குறைவாகவே இருக்கும். வயலெட்டும் மும்தாஜும் தான் வழியெங்கும் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சமயத்தில் ஒருவரை ஒருவர் தட்டிக் கூட விளையாடிக் கொண்டு வருவார்கள்.
‘இந்தப் பெண் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறாள்?’ என்று கருத்திருமனே பல நாட்கள் யோசனை செய்திருக்கிறார்.
சபரீஷிடம், முதல் நாள் அவர்கள் வீட்டில் டின்னர் சாப்பிடும் போதே ஆச்ரமத்திற்கு செல்ல அனுமதி வாங்கி விட்டாள். ஆனால் சபரீஷ்வரனோ அரை நாள் விடுமுறை கொடுத்து விட்டு அடுத்த நாள் பிற்பகல் அவள் என்னென்ன வேலைகள் முடிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலே கொடுத்து விட்டான்.
ஆனாலும் வெகுநாள் பிரிந்திருந்த ஒரு பெண் தன் பெற்றோரைக் காண எவ்வளவு ஆவலுடன் செல்வாளோ, அந்த ஆவலும் சந்தோஷமும் இன்று கிருத்திகாவின் முகத்தில் பிரதிபலித்ததைப் பார்த்தார் கருத்திருமன்.
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings