ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“சொல்லுங்கள் தாத்தா, நான் உங்களைப் போய் தவறாக நினைப்பேனா? சொல்லுங்கள். உங்கள் முகம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறது?” என்றான் சபரீஷ்வர், தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர் அருகில் வந்தபடி.
“மாப்பிள்ளை இளங்கோ என்னை மிகவும் மட்டமாகப் பேசினார். காபி ஆறிவிட்டிருந்தது என்று என்மேலேயே கொட்டி விட்டார்” என்றார் சாம்புத் தாத்தா குரல் விம்ம, கண்களில் கண்ணீர் வழிந்தது.
“என்ன?” என்றான் திகைப்புடன் சபரீஷ்.
“ஆமாம் தம்பி, அவர் காபி கேட்டவுடனே நான் கொடுத்து விட்டேன். அவர் அதை டேபிள் மேல் வைத்து விட்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் அது ஆறிவிட்டது. அதற்கு எல்லோர் முன்னிலையிலும் என்மேல் காபியை வீசினார். கடும் வார்த்தைகளால் என்னைத் திட்டினார். எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது” என்றார் சாம்புத் தாத்தா கலங்கிய குரலில். தள்ளாத வயதில் அவர் படும் துன்பம் சபரீஷ்வருக்கு மிகவும் மனவருத்தம் கொடுத்தது.
சபரீஷ்வருக்கு மிக அதிகமாக கோபம் வந்தது. கண்கள் சிவந்து விட்டன.
“டேய் இளங்கோ” என்று கத்திக் கொண்டே சாம்பு தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
“கோபப்படாமல் பொறுமையாக்க் கேளுங்கள் தம்பி. என்னால் உங்கள் குடும்பத்தில் குழப்பம் வேண்டாம்” என்றார் சாம்பசிவம்.
“நீங்கள் பேசாமல் இருங்கள் தாத்தா” என்றவன் “இளங்கோ, ஒழுங்காக இந்த சாம்புத் தாத்தாவிடம் மன்னிப்பு கேள்” என்று உறுமினான் சபரீஷ்வர் .
“சபரீஷ்வர்… நான் இந்த வீட்டின் மாப்பிள்ளை என்பது ஞாபகம் இருக்கட்டும் . சமையல்காரரிடம்ட மன்னிப்பு கேட்கச் சொல்கிறாய். ஆபிஸில் ஒரு அநாதை நாயிடம் என் கணக்கு வழக்குகளை இன்ஸ்பெக்ஷன் செய்ய அசிங்கப்படுத்தினாய்” என்று முடிப்பதற்குள், சபரீஷ்வரின் வலுவான கைகள் இளங்கோவின் கன்னத்தைப் பதம் பார்த்தன .
“ஐயோ, மாப்பிள்ளையைப் போய் அடித்து விட்டாயே. எங்களை அவமானப்படுத்தி விட்டாய்” என்று கர்ஜித்தார் அவன் பெரியப்பா.
“இனி இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட நாம் இருக்கக் கூடாது” என்று பெரியம்மா அதை விட கலாட்டா செய்தாள்.
“ஒரு சமையல்காரனுக்கு இருக்கும் மதிப்பு என்னைத் திருமணம் செய்பவருக்குக் கிடையாதா?” என்று பொருமினாள் ஷீலா.
“யாருக்கும் சாம்பு தாத்தாவை அவமானம் செய்ய இந்த்வீட்டில் அதிகாரம் கிடையாது. டேய் இளங்கோ, அவரிடம் மன்னப்பு கேள்” என்று சபரீஷ்வர் மீண்டும் வற்புறுத்தினான்.
“அவர் இந்த வீட்டின் மாப்பிள்ளையாகப் போகிறார். அவர் போய் ஒரு சமையல்காரரிடம் மன்னிப்புக் கேட்பதா?” என்று கொதித்தார் அவன் சித்தப்பா .
“தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும். இவன் ஆபீஸ் பணத்தில் பல லட்சங்கள் கொள்ளை அடித்து தில்லு முல்லு கணக்குகள் வைத்திருக்கிறான். அதைக் கண்டுபிடித்ததால் அந்த ஆடிட்டர் பெண்ணை அநாதை நாய் என்கிறான் இந்த மடையன். இவன் செய்த திருட்டுத்தனத்திற்கு வேறு கம்பெனியாக இருந்தால் இந்நேரம் கம்பி எண்ணி இருப்பான் இந்தத் திருடன்” என்று உறுமினான்.
“என்னை இந்த அளவு அவமானம் செய்த இவன் வீட்டில் நான் இருக்க மாட்டேன். உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமானால் நீங்களும் இங்கே இருக்கக் கூடாது” என்றான் இளங்கோ.
எல்லோரும் மூட்டைக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டே கிளம்பி விட்டனர். அதைப் பற்றி சபரீஷ்வரும் ஒன்றும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
சாம்புத் தாத்தா மட்டும், “ஒன்றாக இருந்த குடும்பம் என்னால் உடைந்து விட்டது” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
எல்லாத் திருவிழாவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் முடிந்தது. இந்த மனஉளைச்சலால் சபரீஷ்வர் டின்னர் வேண்டாம் என்று கூறிவிட்டு மாடிக்குத் தன் அறைக்கு வந்து விட்டான்.
இளங்கோ, சாம்புத் தாத்தாவின் மேல் காபியைக் கொட்டினான் என்று நினைக்கும் போது அவன் கோபம் மிக அதிகமாகியது. கிருத்திகாவை அநாதை நாய் என்று இளங்கோ சொன்னதும் பொங்கி விட்டான்.
‘கிருத்திகாவை ஏதாவது சொன்னால் என் மனம் தாங்க மாட்டேன் என்கிறதே, ஏன்?’ என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.
‘தன்னைப் போலவே யாருமற்றவள் என்பதினாலா அல்லது அவள் அழகில் மயங்கி விட்டேனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவளை மனதால் நினைக்கும் போதே உள்ளம் முழுவதும் ஒரு சந்தோஷம் பரவுவதை அவனால் உணர முடிந்தது. அந்த நேரத்தில் அவன் செல் போனும் ஒலித்தது.
“ஸார், எட்டே முக்கால் மணிக்கு நான் நீங்கள் சொன்ன இடத்திற்கு வந்து விட்டேன். நீங்கள் சொன்னபடியே செய்கிறேன், போனை வைத்து விடட்டுமா?” என்றார் கருத்திருமன்.
“சரி” என்று சொல்லி விட்டுத் தன் அறையில் இருந்த பால்கனியில் வந்து நின்றான் சபரஷ்.
கதவைத் தட்டிவிட்டு சாம்பு தாத்தா கையில் ஒரு சிறிய வெள்ளிக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்தார்.
“தம்பி, என்னால் தான் நீங்கள் இப்போது பட்டினியாக இருக்கிறீர்கள். நீங்கள் டின்னர் சாப்பிட்ட பிறகு சொல்லியிருந்தால் நீங்களும் சாப்பிட்டு இருப்பீர்கள், இவ்வளவு கோபமும் வந்திருக்காது” என்றார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை தாத்தா. உள்ளே பகையை வைத்துக் கொண்டு பலர் நம்மைச் சுற்றியிருப்பதை விட, நம் மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கும் ஒருவர் நம்முடன் இருந்தால் போதும்” என்றான் சபரீஷ்.
“இந்த கிண்ணத்தில் கொஞ்சம் தயிர் சாதம், மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், கடுகு எல்லாம் போட்டு தாளித்துக் கொண்டு எடுத்து வந்திருக்கிறேன். வெறும் வயிற்றோடு படுக்கக்கூடாது. டி.வி. பார்த்துக் கொண்டே இதைச் சாப்பிடுகிறார்களா?” என்றார் சின்னக் குழந்தையிடம் கெஞ்சுவது போல்.
அவர் குரலில் தொனித்த வருத்தம், சபரீஷ்வருக்கு மனதைத் தொட்டது. அவர் கையிலிருந்த கிண்ணத்தை வாங்கிக் கொண்டான். டி.வி ஆன் செய்து விட்டு அவரைப் பார்த்து சிரித்தான். இனி இவன் சாப்பிடுவான் என்று நிம்மதியுடன் கீழே இறங்கி சென்றார் சாம்பசிவம்.
இரவு ஒன்பது மணிக்கு வகுப்பு முடிந்து வெளியே வந்தாள் கிருத்திகா. பஸ் நிறுத்தத்தை நோக்கி நடக்கும் போது அருகில் ஒரு கார் உரசியபடி வந்து நின்றது. லேசாக பயந்த அவள் நிமிர்ந்து பார்த்தால் உள்ளே கருத்திருமன் உட்கார்ந்திருந்தார்.
“கிருத்திகா, காரில் ஏறிக் கொள்ளம்மா?” என்றார்.
“இல்லை சார், எனக்குக் கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விடும், பஸ்ஸிலேயே போய்க் கொள்ளுகிறேனே”
“வேண்டாம் நீ என் வண்டியில் ஏறிக்கொள்” என்றார் பிடிவாதமாக.
“என் ஜாதகத்தில் இன்று ஓசி கார் சவாரி என்று இருக்கும் போல் இருக்கிறது, இல்லையா சார்” என்றவள், சிரித்தவாறு அவர் காரில் ஏறி உட்கார்ந்தாள்.
“உனக்கு இன்று எங்கள் வீட்டில் தான் சாப்பாடு என்றும் உன் ஜாதகத்தில் போட்டு இருக்கிறது” என்றார் அவரும் வேடிக்கையாக சிரித்தவாறு.
“வேண்டாம் சார், இன்னொரு நாள் வருகிறேனே” என்றாள்.
“எங்கள் வீட்டில் ஒன்றும் பெரிய விருந்தில்லை அம்மா சுண்டைக்காய் வற்றல் குழம்பு, பொரித்த அப்பளம், மோர் இவ்வளவு தான் சாப்பாடு” என்றார்.
“எனக்கு ஒன்றும் புரியவில்லை சார். திடீரென்று நீங்கள் வந்து என்னைக் காரில் அழைத்துப் போவதும், சாப்பிடக் கூப்பிடுவதும் ஏன் சார்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது”
“இதெற்கெல்லாம் ஆச்சர்யப்படக்கூடாது. உங்கள் ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கும்? மிக ருசியாக இருக்குமா?” கருத்திருமன்.
“ஏன் சார் பேச்சை மாற்றுகிறீர்கள்? நான் ஒன்றும் அம்மா, அப்பாவின் சீராட்டில் வளரவில்லை. எங்கள் ஹோமில் யாரும் ருசியைக் பார்ப்பதில்லை, பசிக்கு உணவு கிடைக்கின்றதா என்று தான் பார்ப்போம்” என்றாள் வறட்சியான குரலில்.
“ஸாரிம்மா, நான் ஏதோ விஷயம் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன். என் கேள்வி உன்னை மிகவும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்” என்றார்.
“பரவாயில்லை சார்” என்றாள் கிருத்திகா.
கார் ஒரு நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் முன் நின்றது. பழைய கால வீடு, இப்போது அந்த மாதிரி வீடுகளைப் பார்ப்பதே அதிசயம். நல்ல அகலமான வீடு, இரண்டு பக்கமும் நல்ல அகலமான நீண்ட காவி பூசிய திண்ணைகள். ஒவ்வொரு திண்ணையிலும் நான்கு மரத் தூண்கள். வீட்டின் உள்ளே ஏறுவதற்கு ஐந்து கருங்கல் படிகள்.
“சார் வீடு மிக அழகாக இருக்கிறது” என்றாள் கிருத்திகா தன்னை மறந்த குரலில்.
“என்ன கிருத்திகா கேலி செய்கின்றாயா? இது பழங்கால வீடு. சென்னையில் இவ்வளவு பழைய வீட்டைப் பார்ப்பது மிக அரிது. இதைப் போய் அழகாக இருக்கிறது என்கிறாயே” என்றார் கருத்திருமன்
“நான் ஏன் சார் கேலி செய்கிறேன். பெரிய பங்களாக்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் என்னைப் போன்ற சாமானியர்களை பயமுறுத்தும். கான்கிரீட், கருங்கற்களால் ஆன ஒரு கூடு. ஆனால் இந்த வீடு எளிமையாக இருப்பதால் எங்களைப் போன்றவர்களால் சுலபமாக நெருங்க முடியும்” என்றாள்.
“மிக அழகாகப் பேசுகிறாய் கிருத்திகா” என்றவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
ஒரு பெண், முப்பது வயது இருக்கும். ஆறு வயது பெண் குழந்தையோடு வந்து கதவைத் திறந்தாள். பார்வதி தன் மகளென்றும், சந்தியா தன் பேத்தி என்றும் அறிமுகப்படுத்தினார்.
சிரித்து வரவேற்றாள் பார்வதி. தன் தாயின் பின்னால் நின்று கொண்டு, அவள் முந்தானையைப் பற்றியவாறு எட்டிப் பார்த்தது குழந்தை சந்தியா.
வீடு மிக எளிமையாக இருந்தது. ஒரு சிறிய டி.வி, ஒரு டிரான்ஸிஸ்டர், பழைய கால மர பெஞ்ச், உயரம் குறைந்த நல்ல அகலமான பெஞ்ச், வழுவழுவென்று கருங்காலி மரத்தினால் ஆனது போல் இருந்தது. ஒரு பக்கம் ஒரு சோபா பெட், ஒரு சின்ன ரைட்டிங் டேபிள் டிராயருடன் இருந்தது. சந்தியாவின் புத்தகங்கள் அதில் தான் வைக்கப்பட்டிருந்தது.
பார்வதி நடுத்தர உயரமாக மாநிறமாக இருந்தாலும், மிகவும் அழகாக சிரித்த முகமாக இருந்தாள். சுருண்ட தலைமுடியுடன், அழகிய கண்களும், சிவந்த அதரங்களுமாக அழகான பொம்மை போல் இருந்தாள். மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“கிருத்திகா, கையைக் கழுவிக்கொண்டு வாருங்கள் சாப்பிடலாம். நீங்கள் நாளை வேலைக்குப் போக வேண்டுமல்லவா?” என்றாள் பார்வதி. குழந்தை சந்தியா சாப்பிட்டதால் போய்ப் படுத்துக் கொண்டாள்.
“நீங்களும் உட்காருங்கள் பார்வதி. எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு மூவரும் ஒன்றாக சாப்பிடலாம்“ என்றாள் கிருத்திகா.
சாப்பிட உட்காரும் பாயைக் கருத்திருமன் எடுத்துப் போட்டார். தண்ணீர் பிடித்து கிருத்திகா டம்ளர்களில் ஊற்றி வைத்தாள். பார்வதி சமைத்த சாப்பாட்டை எடுத்து நடுவில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
சாதம், பருப்பு, நெய், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர், ஊறுகாய். கேட்பதற்கு சிம்பிளான சாப்பாடாக இருந்தாலும், செய்பவரின் கைபக்குவம் வேறு இருக்கிறது இல்லையா.
கிருத்திகாவிற்கு அந்த சாப்பாடு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்கே மணி பத்தாகியது. பார்வதி பழக இனிமையாக இருந்தாள்.
“அங்கிள், என்னை ஹாஸ்டலில் விடுகிறீர்களா?” கிருத்திகா.
“இப்போது வேண்டாம் அம்மா. இன்று இரவு நீ பாருவுடன் படுத்து தூங்கு. நாளைக் காலையில் உன் ரூமில் கொண்டு போய் விடுகிறேன்” என்று கூறிய கருத்திருமன், அங்கிருந்த மரப் பெஞ்ச்சில் ஒரு டவலை விரித்துப் போட்டு தலையணையை வைத்துக் கொண்டு படுத்து விட்டார்.
கிருத்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பார்வதி அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு, இருவருக்கும் ஆளுக்கொரு பக்கமாகத் தலையணையைப் போட்டாள்.
“கிருத்திகா, அப்பா சொல்வதற்கும், செய்வதற்கும் ஏதாவது பொருள் இருக்கும். நீங்கள் எதையாவது போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அமைதியாகப் படுத்துத் தூங்குங்கள்” என்றாள் பார்வதி.
பார்வதி ஏதோ கதைகள் பேசிக் கொண்டு இருந்தாள். அவள் பேச்சை தாலாட்டுப் போல் கேட்டுக் கொண்டு தூங்கி விட்டாள் கிருத்திகா.
அடுத்த நாள் காலை ஜன்னல் வழியாக வந்த சூரிய வெளிச்சம் அவள் கண்களைக் குத்தி எழுப்பியது. பக்கத்திலே குழந்தை சந்தியா தூங்கிக் கொண்டிருந்தது, பார்வதியை படுக்கையில் காணவில்லை. ஒரு சின்ன அலாரம் மேலே ஸ்டேண்டில் இருந்து மணி ஏழு என்று காட்டியது.
எழுந்து வெளியே வந்தாள். கருத்திருமன் குளித்து விட்டு பனியன், வேட்டியுடன் மேலே ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு முற்றத்தில் நின்று சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு இருந்தார்.
இவ்வளவு நேரம் தூங்கி விட்டு அவரைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. பார்வதி வழிகாட்ட குளியலறையில் போய் பல் தேய்த்து விட்டு அவள் கொடுத்த காபியைக் குடித்தாள் கிருத்திகா.
கருத்திருமன் ஆபீஸ் போவதற்கு தயாராகி கிருத்திகாவிடம் வந்தார்.
“கிருத்திகா, இப்போது உன் ஹாஸ்டலுக்குப் போகலாமா?” என்றார்.
“ஆமாம் அங்கிள், நான் போய் குளித்து விட்டு ரெடியாகி ஆபீஸற்கு வர வேண்டும்” என்றாள்.
பார்வதி, கிருத்திகாவற்கு டிபன் ஒரு ஹாட் பாக்கிலும், கலந்த சாதமும் காய்கறிகளும் ஒரு ஹாட் பாக்கிலுமாக கொடுத்தாள்.
“எதற்குப் பார்வதி இத்தனை கஷ்டப்படுகிறீர்கள்? சாப்பாட்டிற்கும் சேர்த்துத்தான் நாங்கள் ஹாஸ்டலுக்குப் பணம் கட்டுகிறோம்” என்றாள் கிருத்திகா.
“பரவாயில்லை கிருத்திகா, என் சமையலையும் தான் ருசி பாருங்களேன்” என்று கூறி மென்மையாகச் சிரித்தாள் பார்வதி.
கருத்திருமன், கிருத்திகாவையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு சென்றார். அவர் முதல்நாள் மாலையே ஹாஸ்டல் வார்டனிடம் தங்கள் வீட்டில் தங்க அனுமதி வாங்கியிருந்தார். கிருத்திகாவிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லை.
ஹாஸ்டலில் போய் அவர்கள் இறங்கிய போது ஒரு போலீஸ் வேன் நின்றிருந்தது. ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்களுடன் அவளுடைய ஹாஸ்டல் வார்டன் பேசிக் கொண்டிருந்தார். பொது மக்கள் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இந்தப் பெண்ணுடைய அறை தான் உடைக்கப்பட்டிருந்தது” என்று ஹாஸ்டல் வார்டன் கிருத்திகாவைக் காட்டினார்.
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings