எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா? என் அறிவுல கால் பங்கு வருவாளா? என்ன தைரியம் இருந்தா, அத்தனை பேர் முன்னால் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்பாள் ‘ அவனுள் திரும்ப திரும்ப இக்கேள்விகளே எதிரொலித்தன.
நகரின் பிரபலமான ஏழு நட்சத்திர உணவகத்தின் கிளை நிர்வாகி அவன். அக்கிளைக்கே சிம்ம சொப்பனம். இன்று மதியம் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு, டேபிள் மாறி பரிமாறப்பட்டுவிட்டது.
மதியம் அவ்வளவாக கூட்டமில்லாததால், தன் அறையில் இருந்தபடியே தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவ்வாடிக்கையாளர் முதலாளியின் நெருங்கிய நண்பர். எனவே நேரடியாக முதலாளிக்கு மின்னஞ்சலில் புகார் அளித்து விட்டார்.
அது தொடர்பாக விளக்கம் கேட்க வந்த முதலாளியின் காரியதரிசி, “ரெண்டு டேபிள் கஸ்டமர், அதையே சரியா பார்க்கத் தெரியல, நீங்கல்லாம் ஏன் சீனியர்னு சொல்லிக்கறீங்க? கஸ்டமர் இருக்கும் போது ஏன் ப்ளோர்ல நீங்க இல்லை?” என கேட்டு விட்டாள்.
‘என்னை தனியா விசாரிக்காம, எனக்கு கீழ வேலை செய்றவங்க முன்ன விசாரிச்சுட்டா, அவளை சும்மா விடக் கூடாது’ என குமைந்தவாறு ஒரு பேப்பர் பேனாவை எடுத்தான்.
அவளைப் பற்றி அவதூறுக் கடிதம் எழுதி, அவளின் சந்தேகக் கணவனின் அலுவலக முகவரியை உறையின் மேல் எழுதினான். எதிரில் அவனின் பதின்பருவ மகள் அழுது கொண்டே வந்தாள்.
“ஏன் மா அழுகுற?
“இன்னிக்கு க்ளாஸ் டெஸ்ட்ல ராகுல் புக்கை பார்த்து எழுதினான். லீடர்ங்கிற முறையில் அவனை மிஸ்கிட்ட சொல்லிட்டேன். அதனால கோபப்பட்ட அவன் என்னை பத்தி நோட்டீஸ் போர்ட்ல தப்பு தப்பா எழுதிட்டான். தப்பு யார் செஞ்சாலும் தப்பு தானே அப்பா?”
“ஆமாம்மா” என்றான் அவன் அதிர்ச்சியுடன். கைகள் அனிச்சையாக கடிதத்தை கிழித்தன.
எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings