in ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 3) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

சுவரில் இருந்த கடிகாரம் வீணையை மீட்டுவது போல் ஒலித்து ஆறு மணி ஆனது என்று சொன்னது. கோகிலம் நினைவு கலைந்து எழுந்தாள். இன்று நிறைய வேலை இருக்கிறது. முப்பத்து இரண்டு ஆண்டுகால கல்லூரிப் பேராசிரியைப் பணி நிறைவு பெறுகிறது.

ஒவ்வொருவரின் பணிநிறைவும் சக ஆசிரியர்களால் ஒரு விழாவாகக் கொண்டாடப்படும். பணி நிறைவு பெறுபவரின் துணையைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து இருவரையும் மேடையில் அமர வைப்பார்கள். சந்தனமாலைகளை அணிவிப்பார்கள். அன்பின் பரிசாக ஒரே மாதிரி வாங்கியத் தங்க மோதிரங்களை ஒருவரை மற்றவருக்கு விரலில் அணிவிக்கச் செய்வார்கள். பணி நிறைவு பெறுபவரின் நல்ல குணங்களைச், செய்த உதவிகளை, உழைப்பை, மாணவர்களை மேம்படுத்திய வரலாறுகளை, அவர்களோடு தங்களின் அனுபவங்களைச் சொல்லி மனம் நெகிழ்வார்கள். அதன் பின்னர் அறுசுவை விருந்து சைவம்,அசைவம் இரண்டுமாக சேர்ந்து உண்பது வழக்கம்.

பணி நிறைவு பெறுபவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும்  நெருங்கிய உறவினர்களையும் அழைத்து வரச் செய்வார்கள். எல்லாம் முடிந்ததும் மாலை வேனில் எல்லோரும் வீடு வரை வந்து விட்டுவிட்டு வாழ்த்திப் போவது வழக்கம்.

கோகிலாவிடம் விழா ஏற்பாடு செய்யும் தமிழ்ப் பேராசிரியர் வையாபுரி, “கோகிலா மேடம், சாரையும், மகன், மருமகள், மகள் மருமகன், பேரக்குழந்தைகள் எல்லோரையும் அழைச்சிகிட்டு வாங்க”

“இல்லை சார், இதுக்காக அவங்கல்லாம் வெளிநாட்டுல இருந்து வரணும்.”

“சரி, அப்போ, வேற யாரெல்லாம் வருவாங்க, நாங்க அவங்களை அழைக்கிறோம், அலைபேசி எண் கொடுங்க”

“யாரும் வரலை, நான் மட்டும்தான் வரேன், இந்த வழக்கம் எதுவும் வேண்டாம் சார், எனக்கு வருத்தமாகிவிடும்.”

“சரிங்க மேடம்.

ஏன் இப்படிச் சொல்கிறாள் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தார் வையாபுரி.

உண்மைதான், மகன் பத்து தினங்களுக்கு முன்னர் கோகிலாவிடம்  பேசினான், வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு அம்மாவின் பணிநிறைவு பற்றிய பேச்சை எடுத்தான்.

“அம்மா உங்களோட  ரிடையர்மென்ட் பார்ட்டிக்கு எனக்கும், தங்கச்சிக்கும் டிக்கெட் போடறேன்.”

“யாருமே வர வேண்டாம் பா”

“நார்வேல இருந்து நான் ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவேன், லலிதா ஒருநாள் முன்னாடி வருவா”

“லலிதாகிட்ட நான் பேசறேன்.”

“எதுக்குமா? உனக்கு நாங்க இல்லியா?

“நீங்கள் பிள்ளைகளாய்க் கிடைத்தது நான் செய்த புண்ணியம்டா, ஆனா இதுக்கு வரவேணாம்”

“சரிமா, உன் விருப்பம்”

 தாயின் மனவேதனையை உணர்ந்தவன் தங்கைக்கு எடுத்துச் சொன்னான்.

“லல்லி அப்பாவே இல்லாத விழாவில் நாம போறது எல்லாரும் பேச வாய்ப்பா ஆகிடும்னு அம்மா நெனைக்கறாங்க.”

“சரி அண்ணா, நல்லாதானே இருந்தோம் ,ஏனிப்படி ஆனது”

”பாப்பா நீ இப்போ அத நெனச்சி கவலைப்படாத”

“அண்ணியும் , மகனும் நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்க, மதனையும் குட்டிச் செல்லத்தையும் விசாரித்ததாய்ச் சொல்லு.” என்று முடித்தான்.

இப்படிப் பிள்ளைகள் வருவதை தடுத்துவிட்டோம், ,அண்ணனுக்கும் தன்னைப்பற்றித் தெரியும் அதனால் அவரும் வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டே எழுந்தாள் கோகிலம்.

கோகிலா குளித்துத் தயாராகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய அண்ணனின் அழைப்பு, “கோகிலா பணிநிறைவு வாழ்த்துகள் மா.”

“நன்றிங்க அண்ணா.”

“நாளைக் காலையில் நானும் அண்ணியும் வீட்டுக்கு வரோம் மா” என்று முடித்தார்.

கீழே வேலைகளை முடித்துவிட்டு வந்த அன்னம்மா.

“இன்னக்கி என்னமா சமையல் செய்யலாம்.”

“அன்னம்மா. இன்னக்கி நான் சாப்பாடு எடுத்துட்டுப் போகலை”

“எதுக்கு பாப்பா?”

“எனக்குப் பாராட்டு விழா நடத்தறாங்க, விருந்தோட, இன்னையோட என் வேலை முடிஞ்சுடுது.”

அவள் முகத்தைப் பார்த்து, “நல்லதுதான் பாப்பா, இனியாவது ரெஸ்ட் எடுத்து உடம்பைப் பார்த்துக்கோ.” என்று சொன்னவள், சாயந்திரம் மறக்காமல் ஆலம் கரைத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, பறித்துக்கொண்டு வந்திருந்த பூக்களை மாலை தொடுக்க ஆரம்பித்தாள்.

தயாராகி வந்த கோகிலா அன்னம்மாவிடம் சொல்லிக் கொண்டு காத்திருந்த ஆட்டோவில் புறப்பட்டாள். அந்த வசந்த மாளிகைக்கு முன்புறம் ஒன்றும், பின்புறம் ஒன்றுமாக இரண்டு படிக்கட்டுகள் இருந்தன.முன்புறப் படிக்கட்டை கோகிலம் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அந்தப் படிக்கட்டு கீழ்தளத்தின் ஹாலுக்கு அடுத்து இருந்த நடைப்பகுதியில் இருந்தது. ஏதேனும் ஒரு சமயத்தில் கோபாலன் எதேச்சையாக அல்லது வேண்டுமென்றே எதிரில் வருவதை அவள் எதிர்கொள்ள விரும்பவில்லை.இன்றும் அப்படி பின்புறப் படிக்கட்டின் வழியாகவே இறங்கிச் சென்றாள்.

இன்று காலையிலிருந்தே கோபாலனுக்கு  மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் அவளைப் பார்க்கும் தைரியம் வந்ததில்லை, ஒரு அச்சம் சூழ்ந்திருந்தது, தன்மீதே வெறுப்பு ஏகத்திற்கு மண்டியிருந்தது. ஏனோ இன்று அவளைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் எழுந்து கொண்டிருக்கிறது. அதனால் அவள் வருவதைப் பார்ப்பதற்காக டைனிங் ஹாலின் திரையைச் சற்றே நீக்கி அன்னம்மா வைத்த இட்டிலியையும், தேங்காய் சட்டினியையும் உண்ணாமல் வெகு நேரமாக காத்திருந்தார்.

மெலிதான கொலுசுச் சத்தம் வந்தது, இவருக்கு மட்டும்தான் கேட்கும், அவளுடைய மெல்லிய கொலுசில் ஒரே ஒரு முத்துதான் இருக்கும். நேராக முகத்தைப் பார்க்க முடியவில்லை, பக்கவாட்டில் தான் கண்டார், நீலநிறக் காட்டன் புடவையில் இந்த வயதிற்கே உரிய தளர்வு தெரிந்தாலும் ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே இருந்தாள். ஆனால் முகத்தில் மகிழ்ச்சியின் கீற்றுகூட இல்லை.

‘ஆமாம் இன்று அவளுக்குப் பணி நிறைவு தினமாயிற்றே, எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத அநாதையைப் போல் செல்கிறாளே?’ என்று நினைத்தார் அதற்குமேல் சாப்பிடப் பிடிக்காமல் எழுந்துவிட்டார் அவள் சென்ற ஆட்டோவின் சத்தம் தேய்ந்துபோனது.

‘குருவிக் கூட்டில் கல்லெறிந்தவர் யார்? யாருக்கும் தன் தேவை இல்லை, மகனும்,மகளும் இவரிடம் முன்புபோல் பேசுவது இல்லை. ஏன் அன்னம்மாவிடம் பேசும் பாசம் கூட இருக்காது. எப்போதாவது பேருக்கு அழைத்து நலம் விசாரிப்பார்கள் அவ்வளவுதான். தினமும் அம்மாவிடம் பேசுகிறார்கள். அவளைத் தங்களோடு வந்தவிடச் சொல்கிறார்கள், ஒருவேளை ஓய்வு பெற்றதும் அயலகம் போய்விடுவாளோ, தன்னருகில் இல்லாவிட்டாலும் இதே வீட்டில் அவள் இருப்பதே வறண்ட பாலைநிலமான எனக்கு ஓரளவு நிம்மதி தருகிறது. காதலித்துக் கைபிடித்த மனைவியை ஒளிந்திருந்துப் பார்க்கும் கேவலம் வந்துவிட்டதே’ என்று நினைத்துக் கொண்டிருந்த போது அன்னம்மா முன்புறமாகக் கீழே இறங்கி வந்தாள்.

“தம்பி இன்னக்கி முருங்கைக்காய் ,மாங்காய் சாம்பார் வெச்சுடறேன்.”

“அதோடு கோஸ் கூட்டும், உருளைக்கிழங்கு வறுவலும் பண்ணிடுங்க”

”ஏன் தம்பி யாராவது விருந்துக்கு வராங்களா?”

“இல்லே, கோகிலாவுக்கு இன்னக்கி விழாவாச்சே, அதனாலதான்.”

“ஜவ்வரிசிப் பாயசமும் வச்சுடறேன்.”

“நீங்க இங்கேயே சாப்பிடுங்க, திருநாவு வருவான் சாப்பாடு போடுங்க.” என்றார். அன்னம்மாவிற்குப் புரிந்தது  மனைவிக்குப் பிடித்தவற்றைச் செய்யச் சொல்கிறார்.

“கடவுளே, இந்த நேசத்தை மீண்டும் ஏற்கும் மனம் தரமாட்டாயா?”

“நான் சாகும் முன் இந்த வீட்டில் சந்தோஷத்தைப் பார்க்க மாட்டேனா” என்று தோட்டத்திற்கு வந்து குளமாகியிருந்த விழிகளைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். கோபாலன் ஓட்டுநர் திருநாவை அழைத்தார்.

அரைமணி நேரத்தில் திருநாவு வந்துவிட்டார்.

“சார் எங்கே போகணும், திடீர்னு?”

“பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகணும்.”

“பன்னிரண்டு மணிக்கு நடை சாத்திடுவாங்க, ஒன்பது மணி ஆகுது, சரியா இருக்கும் வாங்க.” என்று சொல்லிவிட்டு மேசையில் வைத்திருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றார். கோபாலன் அன்னம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

காலை இழுத்துக் கொண்டு நடக்கும் கோபாலனைப் பார்த்தபடி நின்றிருந்த அன்னம்மா, ’எப்படிக் கம்பீரமாக சிங்கம் போல் இருப்பார், இவர் இருக்கும் ஊரில் ஒரு தப்பு தண்டா நடக்குமா? காலம் எப்படியெல்லாம் சொக்கட்டான் ஆடுகிறது’ என்று நினைத்துக் கொண்டிருந்தவள் துணி துவைக்கப்போட்டிருந்த உயரமான பெரிய கல்லில் உட்கார்ந்து நினைவாலே நடந்தாள்

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 2) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 4) – மீனாட்சி சுந்தரமூர்த்தி