in ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 5) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

காரில் ஏறிய கோபாலன், ‘திருநாவு  ,மேடம் காலேஜ் இருக்கற ரோடு வழியாப் போ’

‘சரிங்க சார்’

இந்த வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக வேலை பார்ப்பவர் திருநாவுக்கரசு.

தான் சொந்தமாக வைத்திருந்த ஸ்கார்ப்பியோ வண்டியை பணத்தேவை வந்ததால் ஒரு காவலருக்கு விற்கிறார், அவரிடம் பலமுறை சொல்லியும், இதோ அதோ என்று சொன்னாரே தவிர வண்டியை அவர் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்யவே இல்லை. இரண்டு ஆண்டுகளாகி விட்டது, இதை மறந்தே போனார் திருநாவு.

திடீரென ஒருநாள் வீட்டிற்குப் போலீஸ் வந்தது, முதல்நாள் ஸ்கார்ப்பியோவை ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டார்  என்று கைது செய்தனர். மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. விவரம் பின்னரே தெரியவந்தது.

வண்டியை வாங்கிய காவலர் ஒருநாள் பின்னிரவு நேரத்தில் சென்னை செல்லும் சாலையில் வண்டியை ஓட்டிச் செல்லும்போது முதியவர் ஒருவரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டார். .திண்டிவனம் அரசு மருத்துவ மனையில்  முதியவர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் காவலர் தான் வண்டியை ஓட்டிவரவில்லை என்று சொல்லிவிட்டார். வண்டி திருநாவுக்கரசின் பெயரில் இருந்தது சான்றாகி விட்டது.. இவர் தான் அதை விற்று விட்டதாகச் சொன்னதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. வழக்கு ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் தன் நண்பர் ஒருவர் சொன்னதால் கோபாலனைச் சென்று பார்த்து விவரம் சொல்லிக் கலங்கினார் திருநாவு.

கோபாலன் அந்தக் காவலரை அழைத்துக் கண்டித்து, வாங்கின தேதிக்கே வண்டியை அவர் பெயருக்கு மாற்றச் செய்தார். அதோடு விபத்து ஏற்படுத்தியவர் அவரே என்றும் உண்மையை உரைக்கச் செய்தார். திருநாவு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தனது காருக்கு திருநாவை ஓட்டுநராக்கிக் கொண்டார். இன்று கோகிலத்தின் ஆதரவில் திருநாவின் மகள் அங்கு பயில்கிறாள்.

அவருக்குத் தெரியும் கோபாலனின் உயர்ந்த குணங்கள், நடுவில் போதாத காலம், யார் கண்பட்டதோ சுனாமி வந்ததுபோல் ஆகிப் போனது, ஓருயிர் ஈருடலாக இருந்தவர்கள் ஒரே வீட்டில் தனிவாசம்.

இதைப்போல் ஒரு கொடுமை வரவே கூடாது.

‘திருநாவு உனக்குத் தெரியுமா, இன்னக்கி அவங்களுக்கு ரிடையர்மென்ட்’

‘அப்படியா சார், நல்லது ஓய்வா இருக்கட்டும்’

‘நீ அவங்களை வெளியில அழைச்சிட்டுப் போகும்போது ஏதாவது சொல்வாங்களா?’

‘எதுவும் தேவையில்லாம பேசவே மாட்டாங்க, ‘

அதற்குள் கல்லூரி வந்து விட்டது, அதுதான் அவளை இத்தனை காலமும் தாங்கிப் பிடித்திருக்கிறது, இனி என்ன செய்வாள், இந்தக் கல்லூரியில் முதல்நாள் அவளைப் பணியில் சேர்க்க அழைத்து வந்ததை நினைத்துப் பார்க்கிறார்.

இவர்களுக்குத் திருமணமான பிறகுதான் கோகிலாவிற்கு இந்தக் கல்லூரியில் வேலை கிடைத்தது. முதல்நாளே இங்கு வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கினார்கள். மறுநாள் டாக்சியில் பணிநியமன ஆணை போன்ற வேண்டிய சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.

கல்லூரி முதல்வர் வாழ்த்துகள் சொல்லி, அவளது இயற்பியல் துறையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அது மகளிர் கல்லூரி. ஒருவாரம் வரையில் அங்கு தங்கி அவளைத் தினமும் கல்லூரியில் விட்டு, மாலையில் அழைத்துக்கொண்டு வருவார்.

அதன்பின் கடற்கரை, சினிமா, கோவில் என்று செல்வார்கள் தெரிந்தவர்களிடம் சொல்லி கல்லூரிக்கு அருகில் ஒரு வீடு பார்த்து முன்பணம் தந்துவிட்டு சனி, ஞாயிறு விடுமுறையில் ஊருக்குத் திரும்புகிறார்கள்.

தன் அம்மா கமலத்திடம், ‘ அம்மா அது புது ஊரு, கொஞ்ச நாளைக்கி கோகிலாவோட யாராவது இருக்கணும்’

‘அதுக்கென்ன பா, என் மருமகளுக்கு நான் துணையா இருக்கேன்’ என்று உடன் வந்தாள்.

அன்று துணையாக வந்த மாமியார் மெச்சும் மருமகளாக கோகிலா நடந்து கொண்டாள். அம்மாவின் இறுதிக் காலங்களில் ஒரு குழந்தையைப்போல் அம்மாவைக் கவனித்துக் கொண்டதை இப்போது நினைத்துப் பார்த்தார்.

நாகை மாவட்டத்து கத்தரிக்குடி எனும் சிற்றூரில் ஏழு ஏக்கர் நஞ்சையும், தென்னந்தோப்பு ஒன்றும், ஒரு வீடுமாக வாழ்ந்த கலியன் என்னும் கலிவரதன் கோபாலனின் தந்தை ஆவார்.. கலிவரதனின் அன்னையார் ஆறு குழந்தைகளப் பெற்றெடுத்தார். மூத்தவர் கலிவரதன். இவருக்குப் பதினான்கு வயதானபோது ஏழாவது முறையாக வயிறு வாய்க்கப் பெற்றார்.

ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் ஒருநாள் கிணற்றில் நீர் சேந்தும்போது மயங்கி விழுந்தார். வயிற்றில் அடிபட்டதால்வயிற்றிலேயே குழந்தை இறந்து போனது.தாயும் மீளவில்லை.. கலியனின் தகப்பனார் வேறு மணம் செய்து கொள்ளவில்லை. பிள்ளைகளுக்காக உழைத்தார்.

எட்டாவது வரை படிப்பை நிறுத்திக்கொண்ட கலிவரதனும் தந்தையோடு பாடுபட்டார் கழனியும் ஏமாற்றாமல் விளைச்சலைத் தந்துகொண்டிருந்தது. அண்ணனும் அப்பாவும் உழைத்துக் கொண்டு வருவதைப் பெண்பிள்ளைகள் கவனமாகச் செலவு செய்தார்கள்.

பெரியவளுக்குத் திருமணம் முடித்த கையோடு கலியனுக்கும் கமலத்தை மணமுடித்தார் பெரியவர். மாமனார் போற்றும் பொறுப்பான மருமகளாக இருந்து நான்கு பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி அனுப்பி வைத்தாள்.

இருந்த நிலபுலன்கள் இவற்றுக்கானச் செலவுக்காக விலைபோக வேண்டியிருந்தது. எஞ்சியிருந்தது ஒரு காணி நிலமும், வீடும் மட்டும்தான்.பரவாயில்லை மீண்டு விடலாம் என்று நினைத்தபோது தொடர்ந்து இரண்டு வருடமும் அறுவடை சமயத்தில் மழை பெய்து விளைச்சலைப் பாழாக்கி விட்டது.

இந்தக் கவலையில் மகனுக்கு உதவ முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாமனாரும் போய்ச் சேர்ந்தார். இருந்த ஓட்டு வீடு ஒழுக ஆரம்பித்து, ‘என்னையும் கொஞ்சம் கவனி’ என்றது. பயிர் வைக்கவும், பராமரிக்கவும் வாங்கியிருந்த கடன், வட்டி சேர்ந்து நிலத்தை வாங்கிக் கொண்டது. வீடு மட்டும் இருந்தது.

இதற்கிடையில் கோபாலன் பிறந்து அவனுக்கும் ஐந்து வயதாகிவிட்டது, வெகு நாட்களுக்குப் பிறகு கமலம் இரண்டாவது குழந்தையைச் சுமந்திருந்தாள். காலங்காலமாக வசதியாக வாழ்ந்த ஊரில் கலிவரதன். கூலி வேலைக்குப் போக மனமில்லாமல் நகரத்தில் ஏதாவது வேலை தேடலாம் என்று மனைவி, மகனோடு நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மொத்தவிலைக் கடைகளில் பழங்களை வாங்கித் தள்ளு வண்டியில் வைத்துத் தெருக்களில் விற்பனை செய்ய நண்பர் ஒருவர் வழி சொன்னார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது.

“கமலம் என்ன நெலைமை பாரு, விவசாயியா இருந்து, கூவி விற்கும் வியாபாரி ஆகிட்டேன்”

“பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, ஏமாத்தக் கூடாது,மத்தபடி எந்த வேலையும் செஞ்சு பொழைக்கலாங்க”

“தம்பி நீ என்னடா சொல்றே”

‘சரீமா’ என்றான் கோபாலன்.

கலியனின் தள்ளுவண்டி வியாபாரம் நன்றாக நடந்தது கமலத்திற்குப் பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடத்தில் சேர்த்திருந்த தொகையில் அருகிலிருந்த சிற்றூரில் சின்னதாக ஒரு இடத்தை வாங்கி அதில் குடிசை போட்டுக் கொண்டார்கள்.

கணவன் கொண்டுவரும் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்து மிச்சம் பிடித்தாள். அதற்கடுத்த இரண்டு வருடத்தில் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருந்தது.

ஒருநாள் கலிவரதன், ‘கமலம் வாடகைக்கு ஒரு எடத்தப் புடிச்சி பழக்கடை வச்சிடலாமா?’

‘ரொம்ப நல்லது மாமா, செய்யலாம்

கலிவரதன் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து பழக்கடை வைத்தார்.

கோபாலன் அரசுப்பள்ளியில் நான்காவது படித்துக் கொண்டிருந்தான், தங்கை அல்லி பால்வாடிக்குச் சென்று கொண்டிருந்தாள்.

கமலம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கடைக்கு வருவாள் கணவனும் மனைவியும் சேர்ந்தே உண்பார்கள். பிற்பகல் நேரத்தில் வியாபாரம் குறைவாக இருக்கும் இவள் கடையைப் பார்த்துக்கொண்டு அவரை ஓய்வெடுக்கச் சொல்வாள்.மாலையில் வீடு திரும்புவாள்.

கோபாலன் படிப்பில் ஆர்வத்தோடு படித்தான், நல்ல பண்புகளும் உடன் வளர்ந்து கொண்டிருந்தன. மாலையில் பள்ளி முடிந்ததும் பழக்கடைக்குச் சென்று தந்தைக்கு உதவி செய்வான்.

அதுமட்டுமின்றி தங்கைக்கும் சொல்லிக் கொடுப்பான். நல்ல பண்புகள் நிறைந்த கணவன் மனைவி நடத்தும் இல்லறம், நல்ல பிள்ளைகளை உருவாக்கும், இவர்களின் கடின உழைப்பு திருமகளை வரவேற்கும்.இதற்கு உதாரணமாக பழக்கடை கலிவரதனின் வசதி கூடிக்கொண்டே இருந்தது.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 4) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    கடைசி வேட்டி (சிறுகதை) – மா. அன்பரசு