இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
கீழ்தளத்தில் நிலைமை இப்படி என்றால் முதல்தளத்தில் ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமலே எழுந்து கொள்ளும் பழக்கம் கோகிலாவை எழுப்பி விட்டது. படுக்கையிலிருந்து எழுந்தவள், திரைச்சீலையை விலக்கி வாசலைப் பார்த்தாள்.
இலேசான வெளிச்சத்தில் மாமரமும், மாதுளை மரமும், செண்பக மரமும், தென்னை மரங்களும் கோவில் நடைதிறக்க அதிகாலை வேளையில் காத்திருக்கும் அடியவர்களைப் போல் நின்றிருந்தன.
தென்னை தேங்காய் ஏந்தி நிற்பவரையும், மாமரமும், மாதுளை மரமும் கனிகள் ஏந்தி நிற்பவர்களையும், செண்பக மரம் இறைவனுக்கு மாலைதொடுக்க செண்பகப் பூக்களை ஏந்தி வருபவரையும் கோகிலத்தின் நினைவில் நிறுத்தியது.
பூஜை அறைக்கு வந்து வணங்கிவிட்டு, இன்றைய நாள் எல்லோருக்கும் இனியதாக அமையட்டும் என்று வேண்டிக்கொண்டு அன்றாட வேலைகளைத் துவங்கினாள். இவள் குளித்து விட்டு வந்தபோது கீழே கோபாலன் எழுந்து விளக்கைப் போட்டிருந்தார். இவள் தேனீரைப் போட்டுக்கொண்டு வந்து ஹாலில் ஊஞ்சலில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் பக்திப் பாடல்களை ஓடவிட்டாள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
திடீரென ஒரு பாடலில் நெல்லை காந்திமதி, கண்ணபுர மாரி, புன்னை நல்லூர் மாரி, திருபுவன தேவி,காடளந்த தேவி என்ற வரிகள் வந்தன. காடளந்த தேவி என்ற பெயரைக் கேட்டதும் சிலிர்த்தது மனம். நினைவு ஓடியது.
இவர்களின் குலதெய்வம் காடளந்த தேவி இந்த அம்மனின் கோவில் காட்டுப்புதூர் எனும் சிற்றூரில் அடர்ந்த வனத்தில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுற்றத்தார் எல்லோரும் கூடி அங்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டிப் படையலிடுவார்கள். சொந்தபந்தம் விட்டுப் போகாமல் இந்த விழா வருடந்தோறும் தவறாமல் நடக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக கோபாலன் இதில் கலந்து கொள்வதில்லை, தனது பங்களிப்பான தொகையை மட்டும் அனுப்பிவிடுகிறார்.
நானூறு வருடங்களுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்து அமைந்த செறிந்து பரந்து விரிந்த காட்டுப்பகுதியைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட சிற்றூர்கள் இருந்தன. போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது, அருகருகில் இருந்த ஊர்களைத் தவிர மற்றச் சிற்றூர்களுக்கு அந்த வனத்தைக் கடந்துதான் போகவேண்டும்.
தவிர்க்க முடியாத சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் அந்த மக்கள் கூட்டமாகவே வண்டிகளில் செல்வார்கள். காட்டு மிருகங்களாலோ, கள்வர்களாலோ இடர்ப்பாடுகள் வராமல் வனதேவி காத்து நிற்பதாக நம்பிக்கை. அது உண்மையாகவே இருந்தது.
ஒரு சமயம்,கள்ளிப்புதூரில் இருந்த பஞ்சாட்சரத்திற்கு சொர்ண மலையிலிருந்த வள்ளியை மணம் பேசி முடித்தார்கள். மூன்று வருடங்களாகியும் வள்ளி தாய்மை அடையவில்லை. கணவனும், மாமியாரும் வசைபாட ஆரம்பித்தனர். இவளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள நினைத்தான் அவன்.
அதேபோல் ஒருநாள் அவளிடம் அன்பாகப் பேசி மாட்டு வண்டி கட்டி அழைத்துக் கொண்டு போகிறார்கள் தாயும் மகனும். வழியில் சிறியதாக ஆறு ஒன்று சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது அதன் அருகில் வேப்ப மரங்களும், பூவரச மரங்களும், மாமரங்களும், புங்க மரங்களும் நிறைந்திருந்தன.
‘ஒரு வேப்ப மரத்தின் அடியில் சிறிய மேடை, அதன் மேல் அமர்ந்த நிலையில் உக்கிரமான அம்மன் சிலை ஒன்று கண்களில் சினத்துடன், கையில் ஓங்கிய சூலத்துடன் இருந்தது.நல்ல உச்சிவெயில் நேரமானதால் வண்டியை அங்கு நிறுத்துகிறான் பஞ்சாட்சரம். மாடுகளை அவிழ்த்துவிட்டு தண்ணீர் காட்டுகிறான், வைக்கோல் போடுகிறான்,
ஆற்றங்கரையோரம் பச்சைப்பசேலென்று கொழுக்கட்டை போல் செழித்து வளர்ந்திருந்த புல் மேய்வதற்கு விடுகிறான். கட்டுச் சோற்றை வண்டியிலிருந்து எடுத்து வந்தாள் வள்ளி, பஞ்சு தேக்கு இலைகளைப் பறித்து ஆற்றில் கழுவி எடுத்து வந்தான்.சீடை, முறுக்கு, சுண்டைக்காய் வற்றல், மோர் மிளகாய் இவற்றோடு கணவனுக்கும், மாமியாருக்கும் பறிமாறுகிறாள் வள்ளி.
‘இந்தா வள்ளி நீயும் சாப்பிடு’
“சரிங்க அத்தே, தண்ணி கொண்டாந்துட்டு சாப்பிடறேன்”
குடிநீருக்காக எடுத்து வந்திருந்தப் பானையை ஆற்றில் கழுவி தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்தாள். பித்தளைச் செம்பில் அவர்களுக்கு எடுத்து வந்து தந்தாள், தண்ணீர் இளநீராய் இனித்தது.
பூவரச நிழலில் “அம்மா நீயும் கொஞ்சநேரம் தூங்கு” என்று போர்வையை தரையில் விரித்து , தானும் துண்டை விரித்துப் படுத்தான் மகன்.
புல் மேய்ந்த மாடுகள் நிழலில் உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருக்க வள்ளி பாத்திரங்களை நதியில் கழுவி வண்டியில் கொண்டுபோய் வைத்தாள்.
“அம்மா இவளை இந்த ஆத்துலயே புடிச்சித் தள்ளிடவா?”
“வேணாண்டா தம்பி, இங்ஙனயே எதுனா சொல்லி விட்டுட்டுப் போயிடலாம்”.
“சரிமா”
அரைமணி நேரமானது.வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்த வள்ளியை அழைத்தான்,
“இந்தா வள்ளி, நாங்க நாளைக்கி வந்து உன்னை அழைச்சிட்டுப் போறோம், நீ காட்டை அளந்து சொல்லு.”
”இன்னா மாமா சொல்றே,காட்டை எதுக்கு அளக்கணும்?”
”ஆமாண்டி, புரியலே, அத்தை மவளை கட்டப்போறேன்”
”என்னைய கைவுட்டுடாதே மாமா”
”சரீடி, நீ இங்ஙன இருந்து காட்ட அளந்து சொல்லிட்டா உன்ன கூட்டிட்டுப் போறேன்.” என்றான்.
அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள், ’தாயே காடளந்து சொல்லு’ என்று அந்த அம்மனிடம் வேண்டுகிறாள். அவன் மாடுகளை வண்டியில் பூட்டி ஏறும்போது காடே அதிரும்படி ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தம்,
“எலே பஞ்சாட்சரம் காட்ட அளந்து சொன்னா நீ இருக்கமாட்டே, இவளோட ஒழுங்கா குடும்பம் நடத்து” என்று சொன்னது.
தாயும் மகனும், “தாயே மன்னிச்சிடு” என்று தரையில் விழுந்து கும்பிட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்கள். அடுத்த வருடமே அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இப்படிப் பல நிகழ்வுகள் அதுமுதற் கொண்டு காட்டைச் சுற்றி இருந்த கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து, ‘காடளந்த தேவி’ என்று பெயரிட்டு கோவில் கட்டி வழிபாடுகள் நடத்துகிறார்கள் இவள் குலதெய்வமாகி, மக்களுக்குக் காவல் தெய்வமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறாள்.
திருமணம் நிச்சயமானதும் இங்கு வந்து பூஜை செய்து முதல் பத்திரிகை அம்மனுக்கு வைத்து வேண்டிக் கொள்வார்கள். கோபாலனும், கோகிலமும் மகன் மற்றும் மகளின் திருமணத்திற்கு காடளந்த தேவிக்குதான் முதல் அழைப்பு வைத்தார்கள். என்ன தவறு நேர்ந்தது காடளந்தாள் கண்பாராமலிருந்து விட்டாள் என்று நினைத்த கோகிலத்தின் விழிகளில் நீர்ப் படலமிட்டது.
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings