in ,

மந்திரக் கோல் (சிறுகதை) – ✍ அனந்த் ரவி, சென்னை

மந்திரக் கோல்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 37)

“அம்மா பாட்டி வந்திருக்காங்க”

அந்த செய்தி காதில் விழுந்ததும் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பொங்க மலர்ந்தாள் சுதா. போட்டது போட்ட படி அப்படியே சமையலறையை விட்டு வெளியே ஓடி வந்தாள்.

உடனே உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை, ஒரு உல்லாசமான பாடல் வரிகள். அப்படி வரும் பொழுதே அவள் கண்கள் கடிகாரத்தைக் கவனிக்கத் தவறவில்லை. மணி எட்டரை. உடனே கிளம்பினால் இன்று டாண்னு பத்து மணிக்கு முன்னாலயே பேங்க் போய் சேர்ந்துடலாம்

“உனக்கு நூறாயிசும்மா” என்று அன்போடு இரு கைகளையும் பிடித்து தாயை வரவேற்றாள். மனதிற்குள் ஏற்றி வைத்திருந்த இமயமலை கீழே இறங்க, சுதாவின் மனசு இலேசானது

“நீ எங்க கிளம்பிட்டியோன்னு பயந்து கிட்டே வந்தேன் சுதா. என்னாச்சு, கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கியே?” என்று கரிசனத்தோடு கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லக் கூட நேரமில்லாமல், துண்டை அள்ளிப் போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குத் தாவினாள் சுதா. உள்ளே இருந்தபடியே உபசரிப்பும் தொடர்ந்தது.

“அம்மா, ப்ளீஸ் கோவிச்சுக்காதே. ஃபிரிட்ஜ்ல பால் இருக்கு, மேடை மேல டிகாஷன் இருக்கு. மூஞ்ச  கழுவிக் கிட்டு காபி போட்டுக் குடி, எனக்கு நேரமாயிட்டே இருக்கு”

சிரிப்பு தான் வந்தது அம்மாவுக்கு. சோபாவில் ஹாயாக அமர்ந்தார் பேரன் பேத்தியோடு

“என்னடா சமத்தா இருக்கீங்களா?” என்றபடியே தன் கையால் ஆசையாக செய்து கொண்டு வந்திருந்த மைசூர் பாகையும், ரிப்பன் பக்கோடாவையும் வெளியே எடுத்தார்.

பேரன், பேத்திக்குக் கொடுத்தபடியே, “அப்பா எங்கடா? ஆபீஸ் போயாச்சா?” என்று கேட்டார்.

“அப்பா தில்லிக்கி போயிருக்காங்க பாத்தி” இனிப்பை வாயில் தள்ளினபடியே சொன்னாள் பேத்தி

“ஓ! மாப்பிள்ளை டில்லிக்கி போயிட்டாரா?” என்று கேட்டு முடிப்பதற்குள், படாரென பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள் சுதா.

“முதுகு கூட முழுசா நனையலயேடி” என்ற அம்மாவின் ஆதங்கத்தை அப்படியே ஒதுக்கித் தள்ளினாள் மகள்

“போயிட்டுப் போகுதும்மா, அப்பா சௌக்கியமா இருக்காரா?” என்று கேட்டாள் சுதா

கை தேர்ந்த பரத நாட்டியக்காரியைப் போல கொடியிலிருந்த புடவையை லாவகமாக உருவி மின்னலடிக்கும் நேரத்தில் உடலில் சுற்றிக் கொண்டாள் சுதா. திறந்த வாய் மூடாமல் சுதா செய்வதையெல்லாம் அம்மா பார்த்துக் கொண்டே இருக்க, ஒன்பதுக்கெல்லாம் ஒரு வழியாகத் தயாராகி விட்டாள் சுதா

“அம்மா ப்ளீஸ் கோவிச்சுக்காதே, சாயங்காலம் வந்து எல்லாம் விவரமா சொல்றேன். இப்ப டைம் ஆயிடிச்சி” என்றவள், ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து வாயில் கடித்துக் கொண்டே இரண்டு பிஸ்கட்டுகளைக் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.

“ஏண்டி சாப்பாடு?” என்று அம்மா கேட்க

“இதோ” என்று வலது கையில் பாதி கடித்த ஆப்பிளைக் காண்பித்துப் புன்னகைத்தாள் மகள். நம்பவே முடியாமல் அம்மா முழிக்க, செருப்பில் காலை நுழைத்தபடியே சிட்டாகப் பறந்தே விட்டாள் சுதா

“மத்யானத்துக்கு?” என்ற அம்மாவின் கேள்வி காற்றிலே கரைந்து தான் போனது. சலிப்பாக இருந்தது தாய்க்கு

“வந்தவளிடம் ரெண்டு வார்த்தைக் கூட பேச முடியாமல் இது என்ன பொழப்போ?” என்று பொருமினார்

பேரனும் பேத்தியும் மைசூர் பாகில் மும்முரமாக இருந்தார்கள். பெருமூச்சோடு எழுந்தவர் முகத்தை அலம்பிக் கொண்டு, ஃப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்தார். பாலைக் காய்ச்சலாம் என்று சமையலறைக்குள் சென்றவருக்குப் பக்கென்றது

“பிரம்மச்சாரி பசங்க இருக்கற இடம் கூட இதை விட தேவலையாயிருக்கும் போல இருக்கே” என்றபடியே பால் காய்ச்ச ஒரு பாத்திரத்தைத் தேடி எடுத்துக் கொண்டார். கவரைக் கிழித்துப்  பாலை அடுப்பில் வைக்கவே அருவருப்பாக இருந்தது அந்த தாய்க்கு

அடுப்பிற்கு பின்னால் கரப்பான் பூச்சிக் குடும்பமே இருந்தது. கண்ணாடி டாப் போட்ட அடுப்பிலே ஒரு இன்ச் உயரத்திற்கு திட்டு திட்டாய் அழுக்கு அப்பிக் கிடந்தது. சிங்க் நிறைய பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. ஷெல்புகளில் லாலி லாலியாய் ஒட்டடை. ஆச்சரியப் பட்டுப் போனார் தாய்

“இப்பிடியுமா வீட்டை வச்சிருப்பா ஒருத்தி?”.

காபி மிகவும் அவசியமாகப்பட்டதினால் முகச்சுளிப்போடு அதை மட்டும் தயாரித்துக் குடித்தவர், பரபரவென்று வேலையில் இறங்கினார்.

#ads – Best Deals in Amazon 👇


சுதா அலுவலகம் போய் சேரும் பொழுது மணி பத்தைத் தாண்டி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. பயத்துடனே அட்டண்டன்ஸை தேடினாள். அது மானேஜர் ரூமுக்குப் போயிருந்தது

“சே” என சலித்துக் கொண்டே தயங்கித் தயங்கி கண்ணாடிக் கதவைத் திறந்து வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டே, “குட் மார்னிங் மேடம்” என்றாள்.  மேடத்தின் முகத்தில் வழக்கத்தை விடவும் அதிகமாக எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“எத்தனை தடவை தான் சொல்றது சுதா உனக்கு? உங்களுக்கெல்லாம் புரியவே புரியாதா? தெனம் இப்பிடி லேட்டா வந்தா கவுன்டர்ல நான் யாரை உட்கார வைக்கறது?”

சுதாவிடம் மேனேஜர் மேடத்தின் கேள்விக்குப் பதிலில்லை

“இங்க பாரு சுதா, இன்னியோட சரி. நாளைக்கு நீ பத்து மணிக்கு சீட்ல இல்லைன்னா நான் லீவு மார்க் பண்ணிடுவேன்” என்று பொரிந்த மானேஜர் அட்டடெண்ட்ஸ் புத்தகத்தை விசிறியடிக்க, பொங்கி வரும் அவமானத்தை விழுங்கிக் கொண்டே கையெழுத்தைப் போட்டு விட்டு வெளியே வந்தாள் சுதா

ஒரே ஒரு ஆப்பிளை மட்டுமே பெற்றுக் கொண்ட வயிறு இலேசாகக் தன் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்திருந்தது. சலிப்போடு தன் இருக்கைக்குப் போனாள்.

அவளை விடவும் சலிப்பாகவும், கோபமாகவும் வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்தார்கள். சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கி கொண்டு ஒரு பலவீனமான புன்னகையை வலிய ஒட்ட வைத்துக் கொண்டாள்.

தன்னை மறந்து வேலையில் ஈடுபட்டவளுக்கு, மணி இரண்டடித்து கிரில் கதவுகள் இழுக்கப்பட்டதும் தான் நினைவு வந்தது, ‘மதியம் சாப்பிட எதுவுமே கொண்டு வரவில்லையே’ என்று

பியூனைக் கெஞ்சிக் கூத்தாடி ஒரு தோசை வாங்கி வரச் சொல்லி அதை சாப்பிட்டாள். அவனும் வாங்கிக் கொடுத்து விட்டு முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

காலையில் லேட்டாய் வந்ததற்கும் சேர்த்து பதினைந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்து விட்டு சுதா கிளம்பிய போது, மணி ஐந்தடித்து பதினைந்து நிமிடங்களாகி இருந்தது.

அன்றைக்கு பார்த்து நேரத்தோட வர வேண்டிய பல்லவனும் கொஞ்சம் தாமதமாகவே வந்தான். சரியான கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. மிருகத்தனமான கூட்டத்திற்கிடையே தன்னையும் ஒருத்தியாகத் திணித்துக் கொண்டவள், வேண்டுமென்றே மேலே படர்ந்தவர்களைப் பார்வையாலேயே சுட்டு எரித்தாள்.

கசகசவென்ற வியர்வை உடல் முழுதும் பொங்கி வேதனைப் படுத்த பல்லைக் கடித்துக் கொண்டுப் பயணித்தாள். வீடு நெருங்க நெருங்க அம்மாவின் நினைவு அதிகமாகியது

“காலையில் ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் ரெண்டு வார்த்தை கூட சரியா பேசாம வந்துட்டமே” என்று வருத்தப் பட்டாள் சுதா

வீட்டிற்கு அருகில் வந்ததும் வரிசை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன.

‘நாளைக்கும் வேலைக்காரி வர மாட்டா. அவள் வர இன்னும் நாலு நாள் ஆகலாம். நாளைக்கு குழந்தைங்க ஸ்கூலுக்குப் போயே ஆகணும். ஆனா ஆட்டோகாரன் நாளைக்கு வரமாட்டேன்னுட்டான். நல்ல வேளை அம்மா இருக்காங்க, பேரக்குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரியான்னு கேட்டா சந்தோஷமா செய்வாங்க”

கோபம் இயலாமை என கலவையான உணர்ச்சிகளோடு வேகமாக பரபரவென வீட்டுக்குள் நுழைந்த சுதா, சட்டென அசந்து போய் நின்றாள்

“நம்ம வீடுதானா இது?” என்ற பெருத்த சந்தேகம் அவளை ஆக்ரமித்தது. ஒரு நொடி வெளியே போய் கதவின் இலக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தாள்

வீடு பளிச்சென மின்னியது. சுவரில் ஒட்டடைகள் இல்லை. மின்விசிறிகளில் கறுப்புப் பட்டைகள் இல்லை. சிங்க்கில் மலை மலையாகப் பாத்திரங்கள் குவிந்துக் கிடக்கவில்லை. கேஸ் அடுப்பு தங்கமாக மின்னியது

பாத்திரம், பண்டங்கள் இறைந்து கசாமுசாவென்றிருக்கும் சமையலறை, அன்று குளித்து முடித்து அலங்காரம் செய்யப்பட்டப் புதுப் பெண்ணாகத் துலங்கியது.

மணி மாலை ஆறரை ஆகி விட்டிருந்தபடியால், ஸ்வாமி விளக்கு ஏற்றப்பட்டு குழந்தைகள் பாட்டியோடு உட்கார்ந்து ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொன்றாகக் கவனித்துக் கொண்டே வந்த சுதா அசந்து போனாள். “இதென்ன மாயா ஜாலம்?” என்று பிரமித்துப் போனாள். தினமும் பொழுது விடிந்தால் அலுவலகம், வேலை என்ற பரபரப்பில் காணாமலேப் போயிருந்த உற்சாகம் எங்கிருந்தோ வந்து அவளைத் தொற்றிக் கொண்டது

ஓடிச் சென்று அம்மாவை கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் பூஜையில் இருக்கிறார்.

மளமளவென்று துணிகளை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் புகுந்தாள் சுதா. மனதை அரித்த அத்தனை கவலைகளும் திடீரெனக் காணமல் போன மாதிரி இருந்தது அவளுக்கு.

களையும் உடைகளோடு சேர்த்து தன்னைக் கலங்க வைத்துக் கொண்டிருந்த கவலைகளையும் களைந்து வீசி விட்டு ஷவரின் அடியில் நின்ற போது, உலகமே மறந்து போனது அவளுக்கு

பூப்பூவாக உடல் முழுவதும் தெறித்து ஓடிய சில்லென்ற நீர் அவளது உடல் வெப்பத்தை ஆற்றியது. மனமும் இலேசானது. சூடும் கோபமும் தண்ணீரோடு கலந்து ஓட, உல்லாசப் பறவையானாள் அவள்

விசிலடிக்க வேண்டும் போலத் தோன்றவே, ஆசையாக முயற்சித்துப் பார்த்தாள். பாட்டும் ஆட்டமுமாக சுத்தமாக இருபது நிமிடங்களைக் குளியல் அறைக்குள்ளேயே தொலைத்து விட்டு சுதா வெளியே வந்த போது, அது அவளுக்கு ஒரு புதிய உலகத்தின் ஒரு புதிய நாளாகத் தோன்றியது. மனம் மிகவும் உல்லாசமாக இருந்தது.  

ஐந்தே நிமிடங்களில் மணக்க மணக்க சூடான காபியுடன் வந்தார் அம்மா. காய்ந்த மாடு கம்பங்கொல்லை…. மாதிரி அதைப் பற்றிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “காபிக்கு மணம் கூட உண்டா?”

“ஏம்மா… காபிப் பொடி ஏதாவது ஊர்ல இருந்து கொண்டு வந்தியா?”

“இல்லையே”

“பால் வெளியே எங்கியாவது வாங்கினியா?”

“இல்லையே…” என்று தாய் கூறவும் சிணுங்கினாள் சுதா

“பின்ன எப்பிடிம்மா இது? இதே பவுடர்தான்…இதே பால்தான்…! உன் கை பட்ட காபி மட்டும் எப்பிடிம்மா இப்பிடி மணக்கறது!?”

“சீ ! போடி பைத்தியம் ! அம்மாவுக்கே ஐஸ் வைக்கிறியா?”

காபியை அனுபவித்து, ஆனந்தமாகக் குடித்து முடித்த சுதா, ஆசையாக அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். காலையிலிருந்து லோல் பட்ட மனதிற்கு அது மிகவும் இதமாக இருந்தது.

குழந்தையைப் போல அம்மாவின் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முழங்கால்களையும் கட்டிக் கொண்டு குதூகலித்தாள் சுதா. அவளுடைய அம்மாவுக்கும், அவளுடைய குழந்தைகள் இரண்டு பேருக்கும் அது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.

சுதாவின் உடலில் இருந்த சோர்வு, எரிச்சல், ஆற்றாமை அவ்வளவும் காற்றோடு காற்றாகக் கரைந்து போயின.

“பாட்டி இன்னிக்கு ஆஞ்சநேயர் ஸ்லோகம் சொல்லிக் கொடுத்தாங்கம்மா” என்றான் பையன்

“என் பையனா இவன்?!” வியப்போடு பார்த்தாள் சுதா. தினமும் அவள் பேங்கிலிருந்து வரும் பொழுது இரண்டு பேருமே பரதேசிக் கோலத்தில் தான் இருப்பார்கள். அவர்களை நேராக்குவதற்கே பொழுது சரியாகி விடும் சுதாவிற்கு

“ராத்திரி சாப்பிட ஏதாவது செய்தாக வேண்டுமே” என்கிற எரிச்சலோடு குழந்தைகளை சரி செய்வாள் தினமும். சமையலறையில் இருந்து விரட்டி விரட்டியே அவர்களை வீட்டுப் பாடம் செய்ய வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளுமே ஏன் தான் வீட்டிற்குத் திரும்பி வருகிறோமோ என்று இருக்கும் சுதாவிற்கு.

பக்கத்து பிளாட் மாமியைக் காலில் விழாக் குறையாகக் கெஞ்சி பள்ளியிலிருந்துத் திரும்பிய குழந்தைகளுக்கு காபியை மட்டும் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தாள். அதையும் அந்த மாமி வேண்டா வெறுப்பாகத் தான் செய்கிறார் என்பது வெளிப்படையாகவேத் தெரியும்.

இந்த வேதனைகளை எல்லாம் மறந்து இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தாள் சுதா. அந்த நினைப்பே அவளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது

“இரண்டு நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம், எந்த வேலைக்கும் பரபரக்க வேண்டாம்” என்று மனதிற்குள் குதூகலித்துக் கொண்டாள் சுதா. குழந்தைகளோடு ஆர்வமாகப் பேசினாள்

அலுவலகம் விட்டு வந்ததும் தங்களை திட்டிக் கொண்டே, கோபித்துக் கொண்டே இருக்கும் அம்மா இன்று இவ்வளவு அனுசரணையாகப் பேசுவது குழந்தைகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்றும் இல்லாத திருநாளாய் குழந்தைகளிடம் எரிச்சல் காட்டாமல், எரிந்து விழாமல் அவர்களுக்கு ஹோம் வொர்க் செய்ய உதவினாள்.

சுடச் சுட அரிசி உப்புமாவும், தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் கொத்சும் தயார் செய்தார் சுதாவின் தாய். ஊரிலிருந்து வந்த அம்மாவை இப்படி வேலை வாங்குகிறோமே என்று சுதாவின் மனதில் ஒரு ஓரத்தில் இடித்தாலும், நம் அம்மாதானே, நமக்கில்லாத உரிமையா என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

குழந்தைகளும் உணவை ரசித்து உண்டனர். இவ்வளவு ருசியாக அரிசி உப்புமாவைச் சாப்பிட்டு எவ்வளவு நாட்கள், இல்லையில்லை, மாதங்கள் ஆகியிருக்கும் என்று ஆயாசப்பட்டாள் சுதா.

ரவு உணவுக்குப் பிறகு காத்தாட மொட்டை மாடியில் அமர்ந்தனர் அனைவரும். சிலுசிலுவென்ற காற்று அவர்களைத் தழுவிச் சென்றது. இன்னும் பவுர்ணமிக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தன. எனவே நிலவும் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருந்தது.

ஒரு மாயாஜாலம் போல, தன் சுற்றுப் புறங்கள் எல்லாம் இவ்வளவு இனிமையாக மாறி விட்டது சுதாவிற்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அம்மா ஒரு பெரிய மந்திரவாதி தான் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்

“அம்மா ஊருக்குக் கிளம்பும் போது அந்த மந்திரக் கோலை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டாள்.

“அம்மா நீ இப்பிடியே என்னோடயே இருந்துட மாட்டியான்னு இருக்கு?” என்று கண்கள் கலங்க அம்மாவிடம் சொன்னாள் சுதா.

மௌனமாகத் தன் மகளையேப் பார்த்தத் தாய்க்கு அது பெருமையாகவும் அதே சமயம் சிறிது வருத்தமாகவும் இருந்தது.  மித மிஞ்சிய பாசத்துடன் தன் மகளின் தலையைத் தடவிக் கொடுத்தார் சுதாவின் தாயார்.

“இப்பிடி இளைச்சு கறுத்துப் போயிட்டியேடி சுதா? நாயாட்டமா ஏன் இந்த வேலைக்கு இப்பிடி அலையறே?” என்று வினவினார் அம்மா. அந்த கேள்வி மட்டும் சுதாவுக்கு இனிக்கவில்லை, கசந்தது.

“நல்லா இருக்குமா நீ கேட்கிற கேள்வி. வேலையை விட்டுடச் சொல்றியா என்னை…?” என்று கேலியாகவும், சிறிது கோபமாகவும் கூட வினவினாள் மகள். பதில் சொல்லாமல் தன் மகளையே உற்றுப் பார்த்தார் தாய். சுதாவுக்குச் சிரிப்பாய் வந்தது.

“என்னம்மா அப்பிடிப் பாக்கறே. என்னையும் உன்னை மாதிரி கட்டுப் பெட்டியா, வேலைக்காரியா இருக்கச் சொல்றியா? அப்பா என்னை நிறைய படிக்க வச்சிருக்காரும்மா. அந்த படிப்பெல்லாம் வீணாப் போற மாதிரி நான் வீட்டுலயே, சமையை ரூமை கட்டிகிட்டு அழணும்னு நீ சொல்றியா?” என்று கேட்டாள் சுதா

அவள் குரலில் இருந்த கேலியும், கிண்டலும் அவள் அம்மாவுக்குப் புரியாமல் இல்லை.

அந்த கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் சுதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தார் அவள் தாய். சுதா பெருமையாக சிரித்தாள்

“என்னால ஆகாது தாயே. சமைச்சுப் போட்டு, துணிமணிகளைத் தோச்சுப் போட்டு….வீட்டுக்குள்ளேயே வளைய வரது…அய்யய்யோ, என்னால கண்டிப்பா ஆகாதுமா. என்னைப் பாரு இப்போ… மாசம் பொறந்தா சுளையா நாப்பதாயிரம் வாங்கறேன். அவரும் சம்பாதிக்கிறார்.

அதனால தான் இவ்வளவு பெரிய வீட்டை வாங்க முடிந்தது. குழந்தைங்க ரெண்டு பேரும் பெரிய ஸ்கூல்ல படிக்கிறாங்க. வாரம் ஒரு தடவை ஜாலியா மால், சினிமான்னு போவோம். ஒரு தடவை போயிட்டு வந்தா ரெண்டாயிரம் பழுத்துடும். வேலை இல்லேன்னா இதையெல்லாம் அனுபவிக்க முடியுமா?” என்றாள் சுதா.

சொல்லி விட்டு மீண்டும் சுதா கேலியாக சிரிக்க, அவள் தாய் புன்முறுவல் பூத்தார்.

“அம்மா உங்க காலத்துப் பொம்பளைங்க மாதிரி நாங்க எல்லாம் அடிமைகளா இருக்க முடியாதும்மா. அந்த காலம் மலையேறிப் போச்சி. எங்களுக்குப் பொருளாதார சுதந்திரம் வேணும்மா. எகானாமிக் இண்டிபெண்டன்ஸ்…இதெல்லாம் உனக்கு எங்கப் புரியப் போகுது…! அப்பா காலையேக் கட்டிகிட்டு, அவரே உலகம்னு பொழைச்சிகிட்டு இருக்கே!”

இதைக் கேட்டு தாய் பகபகவென வாய் விட்டுச் சிரிக்கவும் எழுந்து உட்கார்ந்தாள் சுதா. அவள் தாய் சாதாரணமாக சிரிக்கவில்லை. அடிவயிற்றிலிருந்து பொங்கிப் பொங்கி சிரித்தார். சுதா கலவரமாகத் தன் தாயையேப் பார்த்தாள்.

“என்ன இது?! அம்மா இப்பிடி சிரிக்கிறாங்க?” என்று வியந்தாள் சுதா. நிதானமாகத் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேச அரம்பித்தார் சுதாவின் தாய்.

“ரொம்ப கரெக்ட்டி சுதா. கரெக்ட். நீ சுதந்திரமாத் தான் இருக்கே. அதுவும் கொஞ்ச நஞ்ச சுதந்திரமில்ல… பயங்கரமான சுதந்திரம்… அற்புதமான சுதந்திரம்” சொல்லி விட்டு மீண்டும் பகபகவென சிரித்தார் சுதாவின் அம்மா.

தாயின் சிரிப்புக்கு அர்த்தம் சுதாவுக்குப் புரியவில்லை. திகைத்துப் போனாள். சிரித்து முடித்ததும் சீறினார் தாய்…

“எதுக்குப் பேருடி சுதந்திரம்? என்னைத் தொட்டு தாலி கட்டின உங்கப்பா ஒரே ஒருத்தரோட உரிமையா அவரை நம்பி நா வாழறது சுதந்திரமா? இல்ல இப்பிடி தெருவுல போற வர நாய் பூனைக்கெல்லாம் பயந்து கிட்டு நீ வாழ்ந்துகிட்டிருக்கியே … அதுக்குப் பேரு சுதந்திரமா?”

சாட்டையடிப் பட்டவள் போல நிமிர்ந்தாள் சுதா

“அய்யய்யோ குழந்தைகளுக்குக் காபி கொடுக்கணுமேன்னு பக்கத்து வீட்டு மாமியை நம்பி கிட்டு நிக்கற, ஐயோ ஆட்டோக்காரன் வரலைன்னா யார் குழந்தைகளைக் கொண்டு விடுவாங்கன்னு அவனுக்குப் பயந்துகிட்டு அவனை நம்பி கிட்டு நிக்கறே. வேலைக்காரி நாலு நாள் வரலைன்னா வீடே நாறிப் போயிடுது ! அவ கேக்கறதை எல்லாம் கொடுத்து, அவளை அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு, அவளை நம்பி கிட்டு நிக்கற. எதுடி சுதந்திரம்?

அஞ்சி நிமிஷம் லேட்டா போனா மானேஜர் திட்டுவாளேன்னு அவளுக்குப் பயந்துகிட்டு போற. கடைசியில, ஐயோ யாருமில்லாத நேரத்துல இந்த அம்மாவாவது வந்தாளேன்னு இந்தக் கட்டுப்பெட்டியையும் நம்பி கிட்டு நிக்கற. இதுக்குப் பேர் தான் சுதந்திரமா?

உங்கப்பா ஒருத்தரை மட்டும் நம்பிகிட்டு நிக்கற நான் சுதந்திர மனுஷியா? இல்ல இப்பிடி வரவன் போறவன் எல்லாருக்கும் பயந்துட்டு, அவங்களை தாஜா பண்ணிகிட்டு நிக்கிறியே, நீ சுதந்திர மனுஷியா?”

வெலவெலத்துப் போனாள் சுதா. அம்மாவின் கேள்விகள் கூரிய அம்புகளாக அவளை அவளது ஈகோவை தைத்தன. ஒருவேளை அம்மாவின் கருத்து சரிதானோ என்றும் அவளுக்குத் தோன்றியது.

“என் வீடு சுத்தமாயிருக்கணும், என் குடும்பம் ருசியா சாப்பிடணும்னு நினைக்கிறது தப்பா? கணவருக்கும் குழந்தைகளுக்கும் சேவை செய்வது என்பது அடிமைத்தனம் அல்ல. அது அன்பு என்ற மந்திரக் கோலினால் நடப்பது. எதையுமே செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டு சோபாவில் உட்காரந்தே கிடப்பதற்கு பேர் சுதந்திரம் இல்லை.

யார் கையையும் நம்பாமல், நிமிர்ந்த பார்வையோடு எதையும் என்னால் சமாளிக்க முடியும் என்று நிற்பது தான் சுதந்திரம். ஒரு நாள் உன் வீட்டை சுத்தம் பண்ணா அதுக்குப் பேரு அடிமைத்தனமா? ஒரு நாள் பாத்திரம் கழுவினா அதுக்குப் பேரு அடிமைத்தனமா? உன் வீட்டுக்கு, உன் குடும்பத்துக்குதானே செய்யறே, அவரையும் சேர்த்துக்கோ. அவர் ஒரு நாள் குழந்தைகளை ஸ்கூலுக்குக் கொண்டு போய் விடட்டும். நீ ஒரு நாள் கொண்டு விடு. உன் படிப்பு இதையெல்லாம் உனக்குச் சொல்லித் தரலியா?” என்று படபடவென்றுப் பொரிந்தார் தாய்.

அசந்து போய் நின்றாள் சுதா. படிக்காத பட்டிக்காட்டுத் தாய் என்று தான் நினைத்திருக்க, தனக்கு எவ்வளவு பெரிய பாடத்தை இவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொடுத்து விட்டார் என்று எண்ணி எண்ணி வியந்தாள் சுதா

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

 

                                    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

18 Comments

  1. திரு அனந்த் ரவியின் மந்திரக்கோல் அருமை… எது சுதந்தரம் என்று நெற்றியடி

  2. அவசர யுகத்தில் அலுவலகம் செல்லும் பெண்களின் நிலையை ஆசிரியர் அருமையாக விளக்கியுள்ளார்.

    இந்த கதை படிக்கும் போதே எனக்கும் அந்த காஃபி சாப்பிட மனம் துடிக்குது. அந்த காபியை விட கதையின் வாசம் அருமை.

    சுதந்திரம் என்பது இப்படித்தான் என்பதை சுருக்கமாக அதே சமயம் நச் எனவும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் திரு. ஆனந்த் ரவி அவர்கள்.

    வாழ்த்துக்கள் அவர்தம் புலமைக்கு.

    அன்புடன்
    ஜோதிடர் ரவீந்திர ராவ்

  3. அருமையான வாழ்க்கைப் பாடம். பல மாடர்ன் பெண்களின் தவறான கண்ணோட்டத்திற்கு அம்மாவின் பதில் சரியான சாட்டையடி. வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.👍

    • கதையை நன்றாகப் புரிந்து கொண்டு விமர்சித்து இருக்கிறீர்கள் நன்றிமா. சிலர் இதை வேலைக்குப் போகும் பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட கதை என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல. ஏதோ ஓரிரண்டு நாள் வேலைக்காரி வரவில்லை என்றால் கூட, நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்கிற எண்ணம் தவறு என்பது மட்டுமே இந்தக் கதையின் கரு.

  4. பொருளாதார சுதந்திரம் என்று ‘ஈகோ’ நிறைந்த பெண்கள்…. சாட்டையடி கொடுக்கும் ஒரு கட்டுப்பெட்டி அம்மா…
    இவர்களை கதாபாத்திரங்களாக்கி, மகளின் குடும்பத்தை சுத்தம் செய்து காட்டி, “எது சுதந்திரம்” என்பதை வெகு லாவகமாக உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர். நல்லதொரு குடும்பப்பாங்கான கதை…
    நல்வாழ்த்துக்கள்!

    • சார், கதையின் மையக் கருத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அருமை சார். மிகவும் நன்றி.

  5. மிக இயல்பான நடையில் கதை பயணிக்கிறது. அநேக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வை கதாசிரியர் கண் முன்னே கொண்டு வருகிறார். பரிசுக்குரிய கதை

  6. உண்மை. சுதந்திரம் என்பதற்கு உண்மையான அர்த்தம் தெரியாத இந்த கால பெண் பிள்ளைகளுக்கு சாட்டையடி யாக இருந்தது உங்கள் கதை.

    • மாதங்கி அவர்களே, வேலைக்குப் போவது சுதந்திரம்தான். ஆனால் அதற்காக என் வீடு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்பது தவறான கண்ணோட்டம். இது என் வீடு, இதை சுத்தப் படுத்துவதால் எனக்கு எந்த கேவலமும் வந்து விடப் போவதில்லை என்ற எண்ணம் வேலைக்குப் போகும் பெண்களுக்கு வர வேண்டும் என்பதே இந்தக் கதையின் நோக்கம். உங்களின் விமர்சனம் அருமை. கதையின் மையக் கருத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு விமர்சித்திருக்கிறீர்கள். நன்றிகள் மா.

  7. அற்புதமான சிறுகதை. வாழ்வின் யதார்த்தத்தை முகத்தில் அறைகிறது.

    • ஐயா, தங்களின் பாராட்டு என்னை மிகவும் ஊக்குவிக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா.

  8. மந்திரக் கோல்– சாட்டையடி கதை.

    உப தேவதைகளின்
    உதவி இல்லாமல்
    உத்யோகத்தில்
    உயர்வது என்பது
    உணர்ந்து பெண்டிர்
    நடக்க வேண்டும்

    என்பதை மிக அழகாக தாயின் கேள்விகள் மூலம் சொல்லி உள்ளார் கதாசிரியர். கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்கிற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    வாழ்த்துக்கள் sir.

  9. அனுராதா ஜி,

    வேலைக்குப் போகிறேன். அதனால் என் வீட்டில் ஒரு ஸ்பூன் கூட நான் கழுவ மாட்டேன் என்ற மனோபாவம் தவறு என்பதே இந்தக் கதையின் அடிநாதம். அதை நன்றாகப் புரிந்து கொண்டு விமர்சித்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த நன்றிமா.

‘சஹானா’ இணைய இதழ் & ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ இணைந்து வழங்கும் – தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் 2021

வீரபாண்டிய கட்டபொம்மன் (சிறுகதை) – ✍ உமாதேவி வீராசாமி, மலேசியா.