முகல் கார்டன்
மலர்களை காண்பதென்றாலே மனதில் ஒரு உற்சாகம் சந்தோஷம். அதுவும் சின்னச் சின்ன பூக்கள் முதல் பெரிய பெரிய பூக்கள் வரை எங்கு பார்த்தாலும் மலர்கள் என்றால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே உள்ள தோட்டமான ”முகல் கார்டன்” பொது மக்களின் பார்வைக்கென திறக்கப்படும். [திங்கட்கிழமை மட்டும் பராமரிப்பிற்கென மூடி இருக்கும்]
இப்போது தான் மலர்கள் இங்கு பூத்துக் கிடக்கும். இங்கே உள்ளே செல்ல நுழைவுச் சீட்டெல்லாம் கிடையாது.சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் இங்கு சென்று வந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாங்க! தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம்.
இந்த முகல் கார்டன் 15 ஏக்கர் பரப்பளவுடையது. மூன்று வகையான தோட்டங்களைக் கொண்டது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் முகல் கார்டன்.ஒரு நாள் காலையில் பத்து மணி வாக்கில் அங்கு சென்று சேர்ந்தோம்.
கேமரா இத்யாதிகள்
ஓரளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. உள்ளே காமிரா, செல்ஃபோன், பேனா, ஹேண்ட்பேக், உணவுப் பொருட்கள் போன்ற எதையுமே பாதுகாப்பு காரணத்துக்காக எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
முன்பே தெரிந்திருந்ததால் நாங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை (இப்போது செல்ஃபோன் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்)
தவறிப் போய் நாம் கொண்டு சென்றால் அவைகளை நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் நடமாடும் ஸ்கேனிங் மிஷினில் போட்டு எடுத்த பின்னர், தற்காலிகமாக ஏற்பாடு செய்திருக்கும் CLOAK ROOMல் வைத்து விட்டுச் செல்லலாம். இங்கு நிறைய கூட்டம் இருந்தது
தனித்தனி வழிகள் + சோதனை
அடுத்து ஆண்களுக்கெனவும், பெண்களுக்கெனவும் தனித்தனியாக வழிகள் அமைத்திருக்கிறார்கள். அங்கு காவல்துறையினரால் இரண்டு மூன்று இடங்களில் சோதனை செய்யப்படுகிறது. தில்லியில் இந்த மாதிரி சோதனையும், ஸ்கேனிங்கும் மெட்ரோ ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்கள் போன்ற எல்லா இடங்களிலுமே செய்யப்படும்.
என்னுடைய ஸ்வெட்டரின் இரண்டு பாக்கெட்டுகளில் ஒன்றில் வீட்டுச் சாவியும், மற்றொன்றில் திரும்பி வீட்டுக்குச் செல்ல பணமும் வைத்திருந்தேன். சோதனை செய்யும் போது என்ன இது? என்று காண்பிக்கச் சொன்னார்கள்.
அதைப் போலவே குழந்தைகளிடமும் சாக்லேட் கொண்டு வந்திருக்கிறார்களா என்று கேட்டும், சோதனை செய்தும் பார்த்தனர்.
“சாக்லேட்டினால் என்ன ஆகி விடப் போகிறது? அதைக் கூட ஏன் இப்படி அனுமதிக்க மறுக்கிறார்கள்?” என்று என்னவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவர் சொன்ன பிறகு தான் உண்மையான காரணம் தெரிந்தது. நம் மக்கள் உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு அதன் காகித குப்பைகளை போட்டு விட்டால்? பராமரிப்புக்காகத் தான் அனுமதியில்லையென்று.
அதுவும் சரி தானே. பாக்கு, பான்பராக் போன்றவற்றுக்கும் அனுமதி கிடையாது. இருந்தால், சோதனையின் போதே வாங்கி தூக்கிப் போட்டு விடுவார்கள்
உள்ளே நுழையும் போதே சற்று அமர்ந்து ஓய்வெடுப்பதற்கு நாற்காலிகளுடன் LOUNGE அமைத்திருக்கிறார்கள். இதைப் போன்றே நான்கைந்து இடங்களில் இருக்கிறது.
ஹெர்பல் கார்டன்
முதலில் நம்மை வரவேற்பது. ஹெர்பல் கார்டன். இதன் இடதுபுறமாக சற்றே தொலைவில் கூட்டமாக மான்களையும், வெள்ளை வெளேரென வாத்துக் கூட்டங்களையும் காண முடிந்தது.
மூலிகைத் தோட்டத்தில் துளசி, அஷ்வகந்தா, வெட்டிவேர், கற்றாழை போன்ற 33 வகையான மூலிகைகள் உள்ளன. அதன் தாவரவியல் பெயரும், அதன் சிறப்புத் தன்மையும் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
மூலிகைகளுக்கு நடுவே ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. அத்தனை மூலிகைகளின் பெயரையும் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினமாயிற்றே. கையில் ஒரு பேனாவும், பேப்பரும் இருந்தா எழுதியாவது வைத்துக் கொள்ளலாமே என்றால் அதற்கும் அனுமதி இல்லையே என்று நினைத்தேன்
MUSICAL FOUNTAIN
ஹெர்பல் கார்டனுக்கு அடுத்து இப்போ பாதை நம்மை MUSICAL FOUNTAINக்கு அழைத்துச் செல்கிறது
வழியெங்கும் காவல் துறையினர், HOME GUARD ஆகியோர் புல்லில் நடக்கக் கூடாது, பூக்களையோ, செடிகளையோ தொடக் கூடாது என்று மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஹிந்தி திரைப் பாடல்களுக்கு ஏற்றபடி நீரூற்றுகள் நடனமாடுவது போல் இருந்தது.
இங்கும் ரோஜாக்களும் விதவிதமான மலர்களும் கண்களைக் கவர்ந்தன. இந்த நீரூற்றுக்கு எதிரேயும் LOUNGE இருந்தது. இங்கு அமர்ந்து கொண்டு நீரூற்றுகளை கண்டு களிக்கலாம்.
போன்சாய் கார்டன்
அடுத்து போன்சாய் கார்டனுக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.
1978ல் நடப்பட்ட மரங்களிலிருந்து, 20 வருடங்கள், 16 வருடங்கள் முன்பு நடப்பட்ட ஆல மரம், அரச மரம், ரப்பர் மரம், சீன ஆரஞ்சு மரங்கள், மாதுளை, போகன்வில்லா என்றழைக்கப்படுகிற காகிதப் பூக்கள் என்று பலவகையானவை இருந்தன.
ஆனால் இந்த போன்சாய் மரங்களை பார்த்தால் ஏனோ பாவமாக இருக்கிறது. கை, கால்களை மடக்கி சுருட்டி வைத்திருப்பதாக தோன்றுகிறது.
தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் கை, கால்களை சுருட்டிக் கொண்டு குழந்தை இருப்பதைப் போல் இவை வருடக் கணக்கில்!
FLORAL CARPETS
நாம் இப்போது முகல் கார்டனின் முக்கிய இடமான ஜனாதிபதி மாளிகையின் பின்னே இருக்கும் மிகப் பெரிய தோட்டத்திற்குச் செல்கிறோம். இந்த தோட்டத்தில் எங்கும் அமர அனுமதி கிடையாது.
அமைதியை கடைப்பிடித்தால் அதன் உண்மையான அழகை ரசிக்கலாம். இந்த வருட சிறப்பான FLORAL CARPETS நம்மை இருபுறங்களிலும் வரவேற்கிறது.
PANSY, டேலியா, ரோஜாக்கள், சாமந்தி, விதவிதமான நிறங்களில் TULIP மலர்கள் என எங்கும் மலர்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்.
ஒரு ரோஜாவின் பெயர் FOURTH OF JULY, மற்றொன்றுக்கு FIRST PRIZE, ICE BURG, SUPER STAR, DR.BHARAT RAM, TREASURE OF FLOWER, PARADISE,TAJMAHAL, MRINALINI, ARJUN, MODERN ART என விதவிதமான பெயர்கள்.
பெரிய புல்வெளி, நடுநடுவே FLORAL CARPETS, நீரூற்றுகள் என தோட்டத்தின் அழகு பார்ப்பவர்களை மயக்குகிறது.
சீன ஆரஞ்சு காய்த்து குலுங்கியுள்ளது. வெளிநாட்டவர்கள், பள்ளிச் சிறார்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றோரும் பார்வையிட வந்திருந்தனர்.
இங்கிருந்து அடுத்த தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ”கேக்டஸ்” வகையைச் சேர்ந்த செடிகளும் இருந்தன.
ரோஜா தோட்டம்
அடுத்து இப்போ நாம் ரோஜா தோட்டத்திற்கே செல்லப் போகிறோம். ”ரோஜா…..ரோஜா…..ரோஜா……” என பாடலாம்
எங்கெங்கு காணினும் ரோஜா தான். சிவப்பு, பிங்க், வெள்ளை, வெள்ளையில் அங்கங்கே தெளித்தாற் போல பிங்க், மஞ்சள், பிங்கில் தெளித்தாற் போல வெள்ளை.
அடடடா… விட்டு விட்டு வரவே மனம் இல்லை.
CIRCULAR GARDEN
அடுத்து CIRCULAR GARDEN-க்கு செல்ல வேண்டுமே என்று அரை மனதோடு வெளியேறினோம்
இங்கு ஒரு பெரிய வட்ட வடிவ பாதையெங்கும் மலர்கள். ஒவ்வொரு பூவிலும் வண்டுகள் தேனை பருகிக் கொண்டிருந்தன.
இங்கும் டேலியாக்கள் பல வண்ண நிறங்களில், PANSY, சாமந்தி, ரோஜா மற்றும் கொடி போல ஆள் உயரத்தை விட பெரிய கொடியில் மலர்களோ மலர்கள்.
இதே மாதிரி கொடியில் ஆரஞ்சு வண்ணத்தில் மலர்கள், மற்றும் இனிப்பு பட்டாணி [Sweet Peas] செடிகள்
மலர்களோடு நாங்களும் மலர்களாய் வெளியே வரவே விருப்பமின்றி இருந்தோம்.
ஸ்டால்கள்
முக்கிய தோட்டத்தை விட்டு வெளியே வந்த பின்னர் அங்கு ஜனாதிபதி மாளிகையின் கூட்டுறவு சுயதொழில் முன்னேற்ற குழுவினரால் நடத்தப்படும் மூன்று ஸ்டால்கள் இருந்தன.
உரங்கள், காகிதபைகள், புக்மார்க்குகள், ஜனாதிபதி மாளிகையின் படத்தை பிரிண்ட் செய்துள்ள டீசர்ட்கள், மரப் பேனாக்கள், டைரிகள், மாளிகையின் படமிடப்பட்ட WALL HANGING என பலதரப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
அடுத்த ஸ்டாலில் இருந்த காய்கறிகள் இயற்கை உரத்தால் வளர்க்கப்பட்டவை. இவை இங்கேயே பயிரிடப்பட்டவை.
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், லெட்யூஸ், முள்ளங்கி, நூல்கோல், கேரட், செலரி, பேசில், பச்சை பட்டாணி, போன்ற பலவகையானவை. ஒரு காலிஃப்ளவ ர்நிச்சயம் 3 கிலோவுக்கு மேலே இருக்கும்.
அது போல் முள்ளங்கி ஒன்று குண்டாக இரண்டு அடி அளவுக்கு இருந்திருக்கும்.
SPIRITUAL GARDEN
அடுத்து நாம் செல்லப் போவது SPIRITUAL GARDENக்கு.
வேத புராணங்களில் இருக்கும் சில மரங்களை இங்கு பார்க்க முடியும் என அறிவிப்புப் பலகை சொல்கிறது.
நுழைவாயிலேயே ருத்ராட்ச மரம் இருக்கிறது. வேப்பமரம், சந்தனம், எலுமிச்சை, பேரீச்சை, மருதாணி, வில்வம், மாதுளை, மா, நெல்லி போன்ற பல.
இந்த தோட்டச் சுற்று முடிந்து வெளியே வந்தவுடன் பொது மக்களுக்கென ஒரு பெரிய மேஜையில் குடி தண்ணீர் DISPENSERS. அருகில் டிஸ்போஸபிள் டம்ளர்கள். மேஜைக்கு கீழே உபயோகித்த டம்ளர்களை போடுவதற்கு குப்பைக் கூடைகள்.
நாங்களும் தண்ணீரை குடித்து விட்டு நடந்து சிறிது தூரம் வந்ததும் ஓய்வெடுப்பதற்கு என அமைத்திருந்த LOUNGEல் அமர்ந்தோம், ஒன்றரை மணி நேரம் தோட்டத்தை சுற்றி பார்த்திருக்கிறோமே
சற்று தூரத்திலேயே ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக நடமாடும் கழிப்பறைகள்.
கிளம்பி வெளியே வருவதற்கான பாதையில் வரும் போது ஜனாதிபதி மாளிகையின் உள்ளேயே வேலை செய்பவர்களுக்கென கட்டியுள்ள குடியிருப்புகள் தெரிந்தது. அலுவலகங்களும் உள்ளது.
வழியெங்கும் சூரியசக்தியால் எரியக்கூடிய விளக்குகள். ஒரு வயதான பாட்டியை வீல்சேரில் வைத்து அழைத்து வந்து கொண்டிருந்தார்கள்.
இந்த மாதிரியான அமைதியான சூழலும், மலர்களும் அவருக்குள் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் அல்லவா? முதலுதவி செய்வதற்கென சில அறைகளும், ஒரு ஆம்புலன்சும் இருந்தது.
தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த திருப்தியுடன் நாங்களும் வெளியே வந்தோம்.
எங்களோடு நீங்களும் சுற்றிப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் இந்த சமயத்தில் சென்று மாளிகை தோட்டத்தை கண்டுகளியுங்கள்.
நட்புடன்
ஆதிவெங்கட்
மிகவும் அருமையான பதிவு . பார்ப்பதற்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்து இருக்கும் . நன்றி சகோ . வாழ்த்துகள்
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க..வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.. பார்க்க வேண்டிய தோட்டம்.
Good one. Nice to see your post.
Good information