in

குற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

குற்றம் பார்க்கின் (சிறுகதை)

குருசாமி – 80 வயது பெரியவர்

வாழ்க்கையை நன்கு ஆண்டு அனுபவித்து, ஒரு நல்ல ஏகாதசி நாளில் இறைவனடி சேர்ந்தார். அநாயசேன மரணம்

அவரது மனைவி சுப்பம்மாவும் பழுத்த சுமங்கலியாக, ஒரு வருடம் முன்பாகவே இறைவனடி சேர்ந்து விட்டார்

இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உண்டு. பிள்ளைகள் அனைவரும்  மகன், மருமகள், மகள் மருமகன்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டனர்.  அத்துடன் உறவினர்களும் கூட்டமாக வந்து விட்டனர்

நல்லவிதமாக இறுதி காரியங்கள் செய்து முடித்தனர். அதன் பிறகு அவர் சொத்துக்களின் விவரங்கள் பிள்ளைகளிடம் பரிமாறப்பட்டன

குருசாமி, பிள்ளைகள் அனைவரிடமும் பிரியமாக இருந்ததால், தனது சொத்துக்களை நான்கு பேருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்து இருந்தார்

அவர்  பெண்கள் மூவரும் மிகவும் சந்தோஷமாக அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மூத்த மகன் மோகனுக்கு சற்று மனத்தாங்கலாக இருந்தது

அவன் தன்னுடைய மூன்று தங்கைகளுக்கும் கல்யாணம் செய்து கொடுப்பதற்கு அவன் தகப்பனார் குருசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தான். தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு மோகன் தீபிகாவை மணந்து கொண்டான்

ஆதலால் எல்லாருக்கும் சமமாக சொத்து பிரித்து கொடுத்தது மோகனுக்கு சற்று மன வருத்தமாக இருந்தது. அவன் ஒரே மகன்,  மூத்த மகன் ஆதலால் அவனுக்கு இன்னும் கூட நிறைய கொடுத்திருக்கலாம். பாதி சொத்தை அவனுக்கு கொடுத்து விட்டு, மீதி பாதி சொத்தை மூன்று தங்கைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து இருந்திருக்கலாம் என்று தந்தையின் மீது சற்று வருத்தமாக இருந்தது

அவன் முகம் வாடி இருப்பதை பார்த்து மூத்த தங்கை இந்திராணி  என்னவென விசாரிக்க, “உங்கள் அனைவருக்கும் நல்ல கல்வியைக்  கொடுத்து, கல்யாணம் செய்து வைத்து அதன் பிறகு சொத்திலும் பங்கு கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டான்

அதனை கேட்ட மற்ற இரு சகோதரிகளும் “அப்படி என்றால் நாங்கள் நம்ம அம்மா அப்பாவுக்கு பிறக்கவில்லையா?” என்று கேட்டார்கள்

இப்படியாக ஆரம்பித்த சிறிய விவாதம், பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது

அப்போது அவர்களது தாய் மாமா நல்லசிவம், “நீங்கள் யாரும் சண்டை போட கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக தான் எங்கள் அத்தான் உங்கள் நால்வருக்கும் சரிசமமாக சொத்தைப் பிரித்துக் கொடுத்து இருக்கிறார்” என்று அந்த சண்டையை ஓரளவுக்கு நிறுத்தி, அவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்

இதன் பிறகு அண்ணனும் 3 தங்கைகளும் பேசவே இல்லை. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போகவில்லை. மனத்தாங்கல் காரணமாக பிரிவு ஏற்பட்டது

மோகன் தீபிகாவின் முதல் மகன்  விசுவநாதன், பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவன். இரண்டாவது குழந்தை பெண் குழந்தை  சுபாங்கி, ஏழாவது படிக்கிறாள்

தாத்தா குருசாமி இறந்து ஆறு மாதங்கள் கழிந்த பின், ஒரு நல்ல நாளில்  பூப்பெய்தினாள் சுபாங்கி

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனாள் தீபிகா. அவள் அண்ணன் கணேசனும் அண்ணி ராஜியும் பிரியமாக இருப்பது இல்லை. ஆதலால், மகள் பெரிய மனுஷி ஆனதை அவர்களிடம் கூறினால் சந்தோஷமா படுவார்கள்? ஆனால் மூன்று அத்தைகளும் நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள்.

“மாமி உறவும் இல்லை, அத்தை பகையுமில்லை” என்பது பழமையான சொல்வழக்கு அல்லவா? ஆனால் அவர்களுடன் உறவுநிலை சரியாக இல்லையே, என்ன செய்வது? என்று தவித்து விட்டாள். மோகனுக்கும் கவலையாகி விட்டது

அம்மாவும் அப்பாவும் வருத்தமாக இருப்பதைப்  பார்த்து,  ஏற்கனவே பயத்தில் இருந்த சுபாங்கி, இப்போது இன்னும் பயம் அதிகமாகவே   அழ ஆரம்பித்து விட்டாள்

குடும்பத்தினர் எல்லாரும் ஒருவித மன கலக்கத்தில் இருந்தனர். வேலைக்காரி சங்கீதா வந்ததும் இவர்களைத் தேற்றி, “எதற்காக அம்மா கலங்குகிறீர்கள்? எல்லாம் சந்தோஷமான விஷயம் தான். பிள்ளைக்கு முதலில் சாப்பிட இனிப்பு கொடுங்கள்” என்றாள்

வேலை முடிந்து சங்கீதா வீடு செல்லும் போது, மோகனின் பெரிய தங்கை அபிராமி வீட்டில் வேலை பார்க்கும் சாமுண்டியைப்  பார்த்தாள். அவளிடம் பேச்சு வாக்கில் சுபாங்கி பெரிய மனுஷி ஆகிய விஷயத்தை கூறினாள் 

சாமுண்டி அபிராமியிடம் இந்த நல்ல விஷயத்தை கூற, அபிராமியும் சந்தோஷப்பட்டு அவளது இரண்டு தங்கைகளுக்கும் போன் செய்து விஷயத்தை கூறினாள்

அன்று மாலை அபிராமியின் கணவன் குணசேகரன் வீட்டிற்கு வந்ததும், அபிராமி சொன்ன செய்தியைக் கேட்டதும், உடனே குணசேகரன் “அப்படியானால் நாம் இப்போது உங்கள் அண்ணன் வீட்டிற்கு போகலாம்” என்றார்

அதற்கு அபிராமி, “அண்ணன் அப்பா இறந்த வீட்டில் எப்படி பேசினான்?  எதற்கு நாம்  போக வேண்டும்” என கேட்டாள்

உடனே குணசேகரன், “நமக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மனதில் வைத்துக் கொள், அவர்களுடைய கல்யாணத்திற்கு தாய் மாமனும் மாமியும் அவசியம் தேவை.  சபை ஏறி வர வேண்டும். அப்படி எல்லாம் உறவுகளை விட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை . அதனால் உடனே போகலாம்.  உன்னுடைய தங்கைகள் இரண்டு பேருக்கும் இந்த விஷயத்தை கூறி அவர்களையும் அங்கு வரச் சொல்” என்றான்

அதன் பிறகு குணசேகரன் மோகனுக்கு போன் செய்து, “அத்தான் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்

மோகன் இந்த போனை எதிர்பார்க்கவே இல்லை, இருந்தாலும் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. 

“நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுபாங்கி பெரிய பிள்ளையாகி விட்டாள்”  என்று கூறினான்

“தெரியும், கேள்விப்பட்டோம். நாங்கள் இப்போது அங்கு வருகிறோம்” என்று கூறினான் குணசேகரன்

“எப்படி இந்த விஷயத்தை சொல்லுவது? உங்களிடம் நான் அன்று சண்டை போட்டு விட்டேனே என்ற கலக்கத்தில் இருந்தேன்” என்று கூறினான் மோகன்

அதற்கு குணசேகரன் “அதையெல்லாம் விடுங்கள். நீரடித்து நீர் விலகுமா ? உறவு என்றால் அப்படித் தான். இப்பொழுது நாங்கள் அங்கு வருகிறோம்” என்றார்

அதன் பிறகு அபிராமியும் அவளுடைய இரண்டு தங்கைகளுக்கும் போன் செய்து, “உங்கள் அத்தான் நம் அண்ணன் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது நாங்கள் அங்கு போகிறோம் . குடும்பத்தோடு நீங்கள் இருவரும் கூட வாருங்கள்” என்று சொன்னாள்

அதன் பிறகு இரவு எட்டு மணிக்கு மூன்று தங்கைகளும் அவர்கள் கணவன் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றார்கள் .

மூன்று தங்கைகளையும் குடும்பத்துடன் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் ஆகி விட்டது தீபிகாவிற்கும் மோகனுக்கும். கண்கலங்க வாசல் வரை ஓடி வந்து வரவேற்றார்கள்

மூத்த தங்கை அபிராமிக்கு தேவசேனா, சுபத்திரா, ஜானவி என்று மூன்று பெண் குழந்தைகள், அவர்கள் சுபாங்கியுடன் அமர்ந்து பேசவும் சுபாங்கியும் சந்தோஷமானாள்

இரண்டாவது தங்கை செண்பகம் சோமசுந்தரத்திற்கு ரகுபதி கிருஷ்ணகுமார் என்று இரண்டு பையன்கள்

மூன்றாவது தங்கை இந்திராணி வரதராஜனுக்கு தேவராஜன் பாலச்சந்திரன் என்று இரண்டு மகன்கள். வீடு களைகட்டி விட்டது .

அதன் பிறகு அபிராமி தீபிகாவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை கூப்பிட சென்றாள். குணசேகரன்  சகலபாடிகளைக்  கூட்டிக் கொண்டு அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டார்

செண்பகமும்  இந்திராணியும் அடுப்படிக்குள் சென்று இரவு சாப்பிடுவதற்கு அனைவருக்கும் ஆன சமையலை செய்ய ஆரம்பித்தார்கள்

விஸ்வநாதன், ரகுபதி, கிருஷ்ணகுமார், தேவராஜன்,  பாலச்சந்திரன் அனைவரும் கலகலப்பாக  சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து மோகனுக்கு மனம் நிறைவாக இருந்தது

தன்னுடைய  தங்கைகளின்  குடும்பம் தன் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருப்பதே கண்டு மனம் மகிழ்ந்தான் மோகன். வீடு கலகலப்பாக ஆகிவிட்டது

அதன் பிறகு இரவு 9 மணிக்கு அத்தைகள் எல்லாரும் சேர்ந்து சுபாங்கி தலைக்குத் தண்ணீர் ஊற்றி மஞ்சள் நீராட்டினார்கள். வாங்கி வந்த  புத்தாடைகளை அணிவித்தார்கள். அவளை நன்கு அலங்காரம் செய்து நலங்கு வைத்து ஆரத்தி எடுத்தார்கள்

அக்கம் பக்கத்து பெண்களும் வந்து விழாவை நிறைவு செய்தார்கள் . அதன் பிறகு இரவு சாப்பாடு பொங்கல்,  தேங்காய் சட்னி, சாம்பார், மற்றும்  கடைகளில் வாங்கி வந்த இனிப்பு வகைகள் வைத்து அனைவரும் சாப்பிட்டார்கள் . இவ்வாறு நல்லவிதமாக மிகவும் சந்தோஷமாக சுபாங்கிக்கு மூன்று அத்தைகளும் விசேஷத்தை நடத்தினர்

அதன் பிறகு சுபாங்கிக்கு 16-வது நாளில் அருகில் உள்ள கௌஷிக் திருமண மண்டபத்தில் சடங்கு செய்வதற்கு கலந்து ஆலோசித்தார்கள். அதற்காக பேசி முடிக்கவே மணி 11 ஆகிவிட்டது. அதனால் எல்லோரும் தன் வீட்டிலேயே தங்கி மறுநாள் செல்லலாம் என்று மோகன் கேட்டுக் கொண்டான்

அடுத்த நாளிலிருந்து அவனது தங்கை கணவர்கள் மூவரும் அவனுக்கு தேவையான உதவிகளை செய்யலாயினர் குணசேகரன் கௌஷிக் மண்டபத்திற்கு போய் பேச, சோமசுந்தரம் சமையல்காரர்கள் பார்த்து பேசுவதற்கு என்று ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கட்டி செய்தார்கள்

தினமும் தங்கைகளின் பிள்ளைகள் பழைய படி மோகன் வீட்டிற்கு வந்து போயிருந்தனர். அபிராமியின் மூன்று பெண்களும் சுபாங்கியுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்தார்கள் . சுபாங்கி பயம் தெளிந்து சந்தோஷமாக ஆனாள்.

அவளுக்கு அத்தைகள் வீட்டிலிருந்து சாப்பிடுவதற்கு தினம் ஏதாவது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும் ஒரு நாள் உளுந்தங்களி இன்னொரு நாள் உளுந்தவடை, நல்லெண்ணெய் நாட்டுக்கோழி முட்டை, ஐஸ்கிரீம் வகைவகையான பெரிய டப்பாக்கள், கேக் வகைகள், லாலா கடை இனிப்புகள் என்று நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப அழகாக சந்தோஷத்தில் பூரித்துப் போய் இருந்தாள்

பதினாறாவது நாள் சடங்கு மிகவும் நன்றாக நடந்தது அப்பா வழி உறவினர்களும், அம்மா வழி உறவினர்களும், தங்கைகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆக கூட்டம் நிறைய வந்து சுபாங்கிக்கு நலங்கிட்டு ஆசீர்வாதம் செய்தனர். சுபாங்கிக்கு நெருங்கிய சிநேகிதிகளும் வந்திருந்த னர் .

பெரிய அத்தை சுபாங்கி க்கு பட்டுப்புடவை காதுக்கு கம்மல் ஜிமிக்கி வாங்கி கொடுத்தார் அடுத்த அத்தை பட்டுப்பாவாடை தாவணி ஒரு டாலர் செயின் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தார் . கடைசி அத்தை அவளுக்கு ஒரு ஜோடி தங்க வளையல் சுடிதார் சல்வார் கமீஸ் போன்ற உடைகளுடன் அன்பளிப்பு அளித்தார்.

தீபிகாவின் அண்ணன் கணேசனும் அண்ணி ராஜியும் சரியான நேரத்தில் வந்து சுபாங்கிக்கு நலங்கிட்டு ஆசீர்வாதம் செய்தனர். அன்பளிப்பாக நூறு ரூபாய் அளித்தனர். சீர் நிறைவாக செய்யவில்லை என்று கொஞ்சம் கூட கவலைப்பட இல்லை. ஆனால் விசேஷத்திற்கு வந்து நிறைவு செய்ததால் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைந்தார்கள்

தீபிகாவின் சகோதரிகள் நீலா, அருணா இருவரும் குடும்பத்துடன் வந்து சுபாங்கிக்கு இரண்டு மோதிரங்களை பரிசு அளித்தனர். ஒன்று சிவப்புக் கல் வைத்த நெளிவு மோதிரம். மற்றொன்று வைரம் பதித்த மோதிரம்

மேலும் வந்த உறவினர் அனைவரும் அவளுக்கு நிறைய பாத்திரங்கள் பரிசாக கொடுத்தார்கள்.  ஆக மஞ்சள் நீராட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தது.

இப்போது மோகனுக்கும் மன நிறைவாக இருந்தது குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதனை நன்றாக உணர்ந்து கொண்டான்.  வனத்தில் அலைந்தாலும் இனத்தில் வந்து சேர வேண்டும் என்பதனை உணர்ந்து கொண்டான் .

தன்னுடைய தங்கைகளுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தத்தை மறந்தான்  அவர்களை தலையில் வைத்து நாம் கொண்டாட வேண்டும். நம் வீட்டுப் பெண்களை நன்றாக மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டான்.

உறவினர்கள் சிறப்பு, அருமைகளை நன்கு அறிந்து கொண்டான். அவனது அப்பா தன் தங்கைகளுக்கும் சம பங்கு சொத்து கொடுத்து அவர்களைக் கொண்டாடியது மிகவும் சரியே என்பதனை புரிந்து கொண்டான். நாமும் நாளைக்கு அப்படித்தானே செய்வோம் என்று நினைத்துக் கொண்டான்.

மனத்தளவில் கோபம் வருத்தம் இல்லாமல் இருந்தால் மனம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும், சிவம் நம் உளமே புகுந்து ஆனந்த நடனம் ஆடும் என்று தெளிவடைந்தான்.

******  சுபம்   ******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

8 Comments

  1. நல்ல படிப்பினை உள்ள கதை. இந்தக் காலத்துக்குத் தேவையானதும் கூட. வாழ்த்துகள்.

  2. ஒவ்வொரு article க்கும் தேர்ந்தெடுத்துப் போடுகின்ற படங்கள் அத்தனையும் அற்புதம் . அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது . பாராட்டுகள் .

  3. உறவுகளின் பெருமையை மேன்மையை உணர்த்தும் சிறப்பான கதை! பாராட்டுகள்!

“சஹானா” மாத இதழ் – டிசம்பர் 2020 தொகுப்பு

வாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு