in

வாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

வாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை)

ரு அழகான மாடி வீட்டில், மோகன் அவன் மனைவி அமுதா மற்றும் குழந்தை அகிலன் உடன் வாழ்ந்து வந்தான்

மோகன் ஆடைகள் விற்கும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் மற்றவர்களை பார்த்து அவர்களை  போலவே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை பொறாமையாக பார்த்து தனக்கும் வேண்டும் என்றும் ஆசைப்படுவான்

பக்கத்து வீட்டு குழந்தையை பார்த்து அகிலனிடம், “அவனை பார் எவ்வளவு நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கறான். நீ மட்டும் ஏன் இப்படி கம்மியா மார்க வாங்கற?” என்று கேட்பான்

அகிலனுக்கு கால்பந்தில் ஆர்வம் இருந்தது, அதில் திறமையும் அதிகம் இருந்தது

மோகன் எப்போழுதும் தனக்கு மட்டும் ஏன் நிறைய பணம் இல்லை என வருத்தப்பட்டு நேரத்தை வீணாக்கி, அவன் குழந்தையின் திறமையை உணர்ந்து அதனை வளர்க்க நேரம் இல்லாமல் போய்விட்டது.

அவன் எப்போதும் வருத்தமாகவே இருந்தான். மோகனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை, ஏனென்றால் அவன் யாருடன் பேசினாலும் “என்  பையன் நல்லாவே படிக்கமாட்டிங்கறான், நான் வேலை செய்யும் கடையில சம்பளம் ரொம்ப கம்மியா கொடுக்கறாங்க, என் மனைவி செய்ற சாப்பாட வாய்ல வைக்கவே முடியல” என்று ஏதாவது ஒன்று புலம்புவான். 

ஒரு நாள், மோகன் வேலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று பலத்த காத்துடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, மழையில் நனையாமல் இருக்க, அருகில் உள்ள உணவகத்திற்குள் நழைந்தான் மோகன்

ஜன்னலிற்கு அருகிலுள்ள மேசைக்குச் சென்று அமர்ந்தான். “மழை சற்று பெய்து நிற்கட்டும், அதன் பிறகு வீட்டிற்கு போகலாம்” என்று நினைத்தான்

அவனை சுற்றி அனைவரும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.  அதைக்கண்ட மோகனுக்கும்  பசிக்க ஆரம்ப்பித்தது. மெனு கார்டை எடுத்துப் பார்த்தான்

“அப்பா! என்ன எல்லா உணவு பொருட்களும் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கு. இவ்வளவு பணமெல்லாம் என்னிடம் இல்லை” என்று சிந்தித்தான்

ஒரு டீ மட்டும் ஆர்டர் செய்து விட்டு, வெளியில் வேடிக்கை பார்த்தான். மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது

#ad

அப்போது ஒரு மிக ஏழ்மையான குடும்பம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு குழந்தை, அவன் தாய் மற்றும் தந்தை, சாலையில் ஒரு பழைய குடையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்

அவர்கள் கால்களில் காலணிகள் இல்லை, ஆடைகள் கிழிந்து சாயம் போயிருந்தன. மோகன் அவர்களை பார்த்தான்

மழை  தீடீரென்று மிக பலமாக பெய்ய ஆரம்பித்தது. மழையின் வேகத்தை  தாங்காமல் அந்த குடும்பம் வெய்திருந்த  குடை கிழிந்து, அவர்கள் மீது மழைநீர் கொட்டியது

அந்த குழந்தை மகிழ்ச்சியுடன் மழையில் விளையாட ஆரம்பித்தான். அந்த குழந்தையின் தாயும் தந்தையும் மழையிலிருந்து தப்பிக்க, மோகன் இருந்த உணவகத்தில் நுழைய முயன்றார்கள்.

அவர்களின் ஏழ்மையை பார்த்து, அந்த உணவகத்தின் பாதுகாவலர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தை சாலையில் உட்கார்ந்தவாறே மழையை ரசித்து விளையாடிக் கொண்டிருந்தான்

அந்தக் குழந்தையின் சந்தோஷத்தை கண்ட தாயும் தந்தையும் சந்தோஷப்பட்டார்கள். அவனுடன் சாலையில் உட்கார்ந்து மழையில் விளையாட ஆரம்பித்தார்கள்

அதைப் பார்த்த மோகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். “அந்த குடும்பத்தின் இடத்தில் இருந்தால், இந்நேரம் நான் கோபப்பட்டு வருத்தப்பட்டு இருப்பேனே. ஆனால் அந்த ஏழ்மையான குடும்பம் பலத்த மழையில் சாலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் வருத்தப்படவில்லையே” என்று நினைத்தான்

சற்று நேரம் கழித்து மழை நின்றது. அந்த குடும்பம் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர்

“இவர்கள் இரவில் எங்கே சென்று தூங்குவார்கள்? இவர்களுக்கு வீடு உண்டா?” என்று யோசித்து கொண்டே குடித்த டீ’க்கு புலம்பிக் கொண்டே காசை கொடுத்து, அவனுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, அந்த  குடும்பத்தின் பின்னால் சென்றான் மோகன்

”எங்கே தூங்கப் போகிறோம்?” என்று அந்த குழந்தை கேட்டான்

“ஏதோ ஒரு நல்ல மரத்தின் கீழ் அல்லது கடையின் முன்பு தூங்கலாம்” என்று அந்த  தந்தை சற்று கூட வருத்தம் இன்றி கூறினார்.

அவர்கள் நடந்து செல்ல மோகனும் பின்னால் அவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். கடைசியில் அவன் வீட்டுக்கு செல்லும்  வழி வந்தது

அந்த குடும்பத்தை பார்த்துக் கொண்டே அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தை திருப்பி சென்றான்

வீட்டிற்கு சென்ற பின்பும் அதே யோசனையில் இருந்தான்

“என்னம்மா இன்னிக்கு அப்பா எதை பத்தியும் பொலம்பல?” என்று அவன் மகன் தனது மனைவியிடம் கூறுவதை கேட்டான்

“தூங்கறதுக்கு வீடு கூட இல்லை எப்படி அவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும்” என்று பொறாமையாக  யோசித்தான்.

அமைதியாக தன் அறைக்குச் சென்றான். அடுத்த நாள் கடைக்கு செல்லும் வழியில், அந்த ஏழைக் குடும்பத்தை மறுபடியும் பார்த்தான் மோகன்

அந்தக் குழந்தையின் தந்தை சாலையில் பூக்களை விற்றுக் கொண்டிருந்தார். குழந்தை சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது.

அவன் தாய், ஒரு பூவை வைத்து அந்தக் குழந்தைக்கு இது பச்சை இது சிவப்பு என்று வண்ணங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் முகங்களில் ஒரு தனி சந்தோஷம் இருந்தது

அன்று அலுவலகம் சென்ற பின்னும் அந்த குடும்பத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் மோகன்

இப்படி தினமும் அவன் வேலைக்கு செல்லும் பொழுதும் வரும் பொழுதும் அந்த குடும்பத்தை பார்ப்பான். பூ வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வைத்து, அவர்கள் ஒரு குடிசையை போடுவதை பார்த்தான்

ஒரு நாள் மோகனின் மனைவி அமுதா பூ வேண்டும் என்று பூக்களை வாங்க அனுப்பினாள், அவன் சென்றான். அப்போது அந்த ஏழ்மையான தந்தை சாலை ஓரத்தில் புதிதாக பூத்த மற்றும் வண்ணமான மலர்களை குறைந்த விலையில் விற்பதைப் பார்த்தான். இங்கையே வாங்கலாம் என்று சென்றான்.  

சிறு வண்ணமான பூக்களை வாங்கி, காசு கொடுத்து விட்டு தன்னை அறியாமலேயே, “நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்” என இத்தனை நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை கேட்டான் மோகன்

“வணக்கம் என் பெயர் கோபால்” என்றவர் மோகன் கேட்ட கேள்விக்கு பதில் கூச்சமில்லாமல் அளித்தார்

“அழகான குடும்பம், மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்கும் இந்த ஒரு அழகான குடிசை, மற்றும் இந்த வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் பணத்தில் இரண்டு வேளை உணவு, இதற்கு மேல் என்ன வேண்டும்.  இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு அது இல்லையே, இது இல்லையே, நிறைய பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தால், நம் வாழ்க்கையை நாம் எப்பொழுது வாழ முடியும்?” என்று கேட்டார் அவர்

அவர் கேட்ட அந்த ஒரு கேள்வி, மோகனது வாழ்க்கையை முற்றிலும்  மாற்றியது

இவ்வளவு வருடமாக அவன் செய்து கொண்டிருந்த தவறை முதல்முறையாக உணர்ந்தான் மோகன்

எவ்வளவு நல்ல வீடு, குடும்பம், குழந்தை, வேலை எல்லாம் நம்மிடம் இருக்கிறது என்று முதல் முறையாக சந்தோஷப்பட்டான்.

“நன்றிங்க ஐயா” என்ற கோபாலிடம்  சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான்

செல்லும் வழியில், சுற்றி இருந்த மரங்கள், இயற்கை, குளிரான காற்று, சூரியன் அனைத்தையும் ரசித்தான். வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கியதாக தோன்றியது அவனுக்கு

வீட்டிற்கு சென்றவன், அமுதா செய்த சாப்பாட்டை சுவைத்து சாப்பிட்டான்

”உப்பு காரம் பத்தல என்று ஏதாவது சொல்லுங்களேன், இன்னிக்கு எதுவும் சொல்லல” என்று அமுதா கேட்க 

“அருமையாக இருக்கு” என்று கூறிய மோகன், கோபால் மற்றும் அவன் குடும்பத்தை பற்றி கூறினான்

முன்பு  செய்து கொண்டிருந்த தவறை இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறினான்

“மிக நன்று! உங்கள் வாழ்க்கையை மாற்றிய அந்த கோபாலுக்கு ஏதாவது செய்யலாமே” என்று அமுதா கூறினாள்

“ஆமாம், கண்டிப்பாக செய்ய வேண்டும்” என்று ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான் மோகன்

சில நாட்களுக்குப் பிறகு, கோபால் மற்றும் அவன் குடும்பத்திற்கும் ஒரு அழகான வீட்டை வாங்கிக் கொடுத்த மோகன், கோபாலின் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டான்

அதன்பிறகு அவன் வாழ்க்கை மாறியது. அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர்

அகிலன் உடன் கால்பந்து விளையாட சென்ற மோகன், அகிலனின் திறமையை கண்டு, கால்பந்து பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டான். மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை  வாழ ஆரம்பித்தான்.

நீதி:-

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அப்படி செய்தால் அனைத்தும் அழகாக மாற ஆரம்பிக்கும், வாழ்க்கையும் செழிக்கும்

#ad


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதனை இக்கதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது . அருமை . வாழ்த்துகள் பாப்பா. வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  2. சின்னப் பெண் தான். ஆனாலும் எவ்வளவு ஆழமாய்ச் சிந்தித்துப் பேராசை பெரு நஷ்டம் என்பதைச் சொல்லி விட்டது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

குற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா