in ,

கண்ணி (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ந.சிவநேசன்

கண்ணி (அறிவியல் புனைவு சிறுகதை)

         அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

ரேஷ் எப்போதையும் விட சற்று முன்பாகவே கண்விழித்துக் கொண்டான். கடவுச்சொல்லை சொன்னதும், தொடுதிரை முகத்துக்கு முன்னால் விரிந்தது. எதிர்பார்த்தபடியே புரொபசர் ஹென்றியிடமிருந்து மூன்று அழைப்புகள் வந்திருந்தன.

அவசரமாக எழுந்து புறப்படத் தொடங்கினான். தான் செய்வது சரியா தவறா என்ற குழப்பம் அவனது ஆழ்மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

பலவாறு யோசித்தும் முடிவு வராதவற்றை நரேஷ் அறிவின்வசம் தள்ளி விடுவான். மனது கடந்த காலங்களை நிகழ்காலத்தோடு இணைத்து குழப்பிக் கொண்டே இருக்கும். ஆனால் அறிவு நிகழ்காலத் தேவைகளை மட்டுமே எடை போட்டு எப்போதும் உயிர்ப்போடு இருக்கும் என அவன் தீவிரமாக நம்பினான்.

மனதை புறந்தள்ளி அறிவு சுயநலமாக சிந்திக்கக் கூடியது. நரேஷ் இப்போது தான் சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறான். இப்போது அவனது ஒரே கவலையெல்லாம் ப்ரொபசர் ஹென்றி மட்டும் தான். 

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கஷ்டப்பட்டு அவர் இந்த கால இயந்திரத்தை தயார் செய்ததையும், எத்தனையோ தடைகள் அச்சுறுத்தல்களைத் தாண்டி இதை சாதிப்பதற்குள் வாழ்வின் பெரும்பகுதியை இழந்துவிட்டதையும் லேப்பில் இருந்த அனைவரும் அறிவார்கள்.

இயற்கைக்கு எதிராக எதையும் செய்யத் தயங்குவதில் உள்ள காரண காரியங்களை ஆராய மறுப்பவர்களுக்கு அவர் பதில் சொல்லி ஓய்ந்து விட்டார்.

ஆனபோதும் சகமனிதன் மீதான அன்பு அவரை தொடர்ந்து லேபுக்கு அனுப்புகிறது. தொடர்ந்து செயல்பட தூண்டுகிறது. பரீட்சாத்த முயற்சிகளில் ஒரு முயலைப் போல ஈடுபட செய்கிறது.

அவரது நம்பிக்கையை குறைக்கும் விதமாக தான் செயல்படுவதைத் தான் அவன் கடந்த ஒரு வாரமாக சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.

சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தவனை மீண்டும் அழைத்தார்கள். அழைப்பை எடுக்காமல் லேப் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதை கணினி குரல் வெளிப்படுத்தியது. கார்பனின் வீச்சம் நாசியை துளைக்க கழுத்தில் இணைக்கப்பட்ட பொத்தானை அழுத்தினான்.

அவனைச் சுற்றி ஒரு மீட்டர் அளவுக்கு ஆக்சிஜன் சூழ்ந்து அவன் சுவாசத்தை சமநிலைப் படுத்தியது. பூமி முற்றிலுமாக பசுமையை இழந்து பொட்டல் வெளியாகி கிட்டத்தட்ட 60 வருடங்கள் ஆகப் போகின்றன.

அதை மீட்டுக் கொணர பலரும் எடுத்த பிராயத்தனங்கள் தோற்றுப் போயின. ப்ரொபசர் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.  

ஏற்கனவே லேபில் இருந்தவர்கள் அரசல்புரசலாக இவனிடம் சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள்.. இந்த முறை காலப் பயணம் செல்லப் போவது அவன் தான் என்று.

ப்ரொபசர் சொல்வதற்கு முன்பே அவனுக்குத் தெரியும். தன்னுடைய உதவியாளன் என்ற முறையில் அவர் அவனுக்கு ஏராளமான சலுகைகளை அந்த லேபில் வழங்கியிருந்தார்.

தன் பிள்ளையை போல அருகில் அமர்த்திக் கொண்டு இந்த பூமி இதற்கு முன்பு இருந்ததையும், இனி நடக்கப் போகும் மாற்றங்களையும் அவனிடம் விளக்கிக் கொண்டே இருப்பார். 

லேபுக்குள் அவன் நுழைந்தவுடன் எழிலி அவசரமாக அருகில் வந்து “உடனே ப்ரொபசர் அறைக்குச் செல்லுங்கள்” என்றாள்.

நேராக அறைக்குள் நுழைந்தவனின் வணக்கத்தை வாங்கிக் கொண்டவர் மிகுந்த உற்சாகத்தோடு “தயாராக இருக்கிறாயா நரேஷ்?” என்றார்.

‘தயார்’ என்பது போல் லேசாக தலையசைத்தான்.

இதுவரை இரண்டு முறை அவர் காலப் பயணம் சென்று இயந்திரத்தை பரிசோதித்து இருக்கிறார். அவரால் மூன்று வருடங்கள் மட்டுமே பின்னோக்கிச் செல்ல முடிந்தது.

இரண்டு முறையும் உயிர் தப்பியதே பெரும்பாடு என திரும்பி வந்ததும் அதன் நிறைகுறைகளை ஒரு நாள் முழுக்க வகுப்பு எடுத்துக் கொண்டே இருந்தார்.

இது கிபி 2400. கிட்டத்தட்ட 250 வருடங்கள் அவன் பின்னோக்கிப் போக வேண்டும். அதுவும் ஒளியின் வேகத்தில் செல்லும் போது உடல் அணுக்களை அதற்கேற்ப தயார்படுத்துவது பற்றிய புதிய கோட்பாடுகளையும், தரவுகளையும் அவனுக்கு அவர் விளக்கிய போதெல்லாம் அது எத்தனை அசாத்தியமானது என்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.

அதில் உள்ள தவறுகளை அவர் செயல்படுத்திப் பார்த்து உணர்கிறார்.. பிறகு வந்து புலம்புகிறார்.. மீண்டும் இயந்திரத்தை சீரமைக்க தொடங்குகிறார்.. இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு பக்கம் அவனுக்கு சிரிப்பாக இருக்கும்.

அரசாங்கமே அனுமதி மறுத்து விட்ட போதிலும் இந்தக் கிழவர் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறார்? பாரம்பரியத்தை மீட்டெடுத்து இவர் தருவதால் என்ன பிரதி பலன் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் பலமுறை சிந்தித்து இருக்கிறான். அவரோடு விவாதித்தும் இருக்கிறான்.

இப்போது அவனை கருவியில் ஏற்ற போவதாக அவர் முடிவெடுத்த தருணத்தில் அவன் மனதை அதற்கு தகுந்தவாறு பல நாட்களாக தயார்படுத்தி வருகிறார். அவனும் ஒரு வேட்டை நாயின் துல்லியத்தோடு பயின்று வருகிறான். 

அவசரமாக ஏற்பாடாகியிருந்த அறிவியல் கூட்டத்தில் ப்ரொபசர் ஹென்றி பேச ஆரம்பித்ததும் இவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“எனதருமை தோழர்களே.. நாம் அரசுக்கு எதிராக எந்த சதியும் செய்யவில்லை. தீவிர குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கூட காபந்து செய்யும் இந்த அரசு நம்மைப் போல இழந்த நினைவுகளை மீட்டெடுக்கப் போராடும் ஆய்வாளர்களை துன்புறுத்துவதன் நோக்கம் தான் புரியவில்லை.

நெல் அதாவது ஒரைசா சட்டைவா என்ற தாவரத்தின் இயல்புகளை, அமைப்பு, பயன்பாடுகளை நாம் எவ்வளவோ விளக்கிக் கூறியும், பழைய காணொளிகளில் சேமித்து வைத்தவற்றை காட்டியும் கூட அதனை யாரும் நம்பத் தயாராக இல்லை.

எல்லா தகவல்களையும் நமது கற்பனை என்றும், ஒரு புல் வகையை மனித இனம் உண்டது என்பதை நம்ப இயலவில்லை என்றும் கேலி செய்பவர்களுக்கு எல்லாம் ஒரே பதிலாக அமைவது நம் நரேஷ் மேற்கொள்ளப் போகும் இந்த காலப் பயணம் மட்டுமே..

பசியை கட்டும் கார்போஹைட்ரேட் மாத்திரைகளை உண்பவர்களுக்கு 4500 வருடங்களாக பயிரிடப்பட்ட இந்த உணவுத் தாவரம் பற்றி என்ன தெரியப் போகிறது?

உணவு பஞ்சத்தை தீர்க்க தானியங்கள் மிஞ்சியிருந்த இறுதிக் காலத்தில் அவற்றை காப்பாற்றவே ‘துளிப்பசுமை’ என்ற அமைப்பை துவக்கியதற்கான தரவுகள் ஏராளமாக என்வசம் கிடைத்திருக்கின்றன.

உணவாக மாத்திரைகளை உண்ணும் கலாச்சாரம் பெருகத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. அவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கப் போராடிய ‘துளிப்பசுமை’ அமைப்பை உலகின் சர்வாதிகாரிகள், வணிகத்தந்திரர்களின் சொல்கேட்டு சுவடு தெரியாமல் அழித்திருக்கிறார்கள்.

இதோ.. அதற்கான ஆதாரங்களையும் அரும்பாடுபட்டு சேர்த்திருக்கிறேன். மிஞ்சிப்போன சிற்சில தாவரங்களையே உதாசீனப்படுத்தும் உலோக உலகத்துக்குள் பசுமை என்ற ஒன்றை புகுத்துவது நம்ப முடியாததாகவும் பெரும்பாடாகவும் இருக்கும் இவ்வேளையில், ஒரு பசி தீர்க்கும் புல் வகையை முன்னெடுத்து வெளிக்கொணரும் பொறுப்பு இங்கே என்னைவிட நரேஷின் கைகளில் தான் உள்ளது.”

எல்லோரும் நரேஷை திரும்பிப் பார்த்தார்கள். கைதட்டி வரவேற்பது போல ஆர்ப்பரித்தார்கள். அறிவியல் இயக்க முக்கிய நபர்கள் கைகுலுக்கி தோளில் தட்டிக் கொடுத்தார்கள்.

“இந்த கால பயணத்திற்கான சூத்திரங்களையும் கோட்பாடுகளையும் பல வருடங்களாக இயற்றி அதனை பரிசோதித்தும் பார்த்துவிட்டேன். இந்த சாதனை இயல்பை மீறிய ஒன்று. நாளை மறுநாள் இந்த கால பயணத்தை நரேஷ் மேற்கொண்டு நம் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய குடுவையை மீட்டு வரப் போகிறான். பசுமையை இவ்வுலகெங்கும் பரப்பிடும் தூதுவன் அவனே” 

மீண்டும் கைதட்டல்கள்.

 “கிட்டத்தட்ட 250 வருடங்கள் பின்னோக்கிச் செல்கையில் அதற்கேற்ப உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறான் என் மாணவன். அவனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். விதைநெல் நம் கைக்கு வந்த பிறகு மீண்டும் கூடுவோம்.. நன்றி!”

கூட்டத்திற்கு பிறகான இரவு விருந்தில் குடுவைகளில் திரவ ஆக்சிஜன் மிதந்தது. அவற்றில் சரியான விதத்தில் வேதிப்பொருட்களை கலக்க ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் கார்போஹைட்ரேட், புரோட்டின் இன்ன பிற அறுசுவை மாத்திரைகள் தட்டுகளில் பரிமாறப்பட்டன.

 கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த நரேஷ் ரகசிய எண்களை அழுத்தினான். தொடுதிரையில் குரல் மட்டும் ஒலித்தது. 

“எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கிறது” என்றான்.

 “சரி.இனி நீ தொடர்பு கொள்ள வேண்டாம். நீ காலப்பயணம் சென்று வந்த இரவில் அழை. அப்போது நாங்கள் அடுத்தகட்ட செயல்பாட்டைப் பற்றிச் சொல்கிறோம்.”

“ஓகே சார்”

“பாவம் அவர்கள். நீ எங்களுக்காக இரண்டாவது முறை காலப்பயணம் செய்யப்போவது தெரியாமல் உன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”

“அது சரி. ஆனால் இயந்திரத்தை இயக்கும் போது எழும் சத்தம் அதீதமானது. லேபில் வைத்து இயக்குவது சாத்தியமில்லை. எனவே அதனை வெளியே நகர்த்தி வர இன்னும் சிலர் தேவை.சற்று கனமானது.”

“அன்று இரவு நீ தொடர்பு கொண்டதும் நம் இயக்கத்தை சேர்ந்த இருவர் உனக்கு உதவ வருவார்கள். கவலை வேண்டாம்” 

“ஓகே சார்”

“கவனம் தேவை நரேஷ்.. நாம் ஏற்கனவே விலைபேசியாயிற்று. சரியான தேதியில் நெற்குடுவையை நாம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் நம் முடிவை நாமே தேடிக் கொண்டதாக ஆகிவிடும். உனக்கான தொகையும் 20 வருடங்களுக்கான உணவு மாத்திரைகளும் உன் கணக்கில் வரவு வைக்கப்படும்.”

“நன்றி சார், இந்தப் பயணம் வெற்றிகரமாக அமையுமென நம்புகிறேன்.”

இணைப்பு துண்டிக்கப்பட்டதும்  மீண்டும் விருந்தில் வந்து இணைந்து கொண்டான். 

‘புவியின் சூழல் ஒரு உயிரியும் வாழ்வதற்கு தகுதி இல்லாததாக மாறிவிட்ட நிலையில், நான் ஆசை கொள்வதில் என்ன தவறு இருக்கப் போகிறது? மனித இனம் ஒரு தேரைச் சமூகம்’ சிந்தனையை நிறுத்தி தேரைக்காக ஒருகணம் அனுதாபப்பட்டான்.

தேரையினம் அழிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. உதாரணம் காட்ட கூட உயிரினங்கள் இல்லாததை நினைத்து வருந்தினான்.

அந்த முக்கியமான நாளில் எல்லோரும் பரபரப்போடு இருந்தார்கள். ஆய்வகத்தில் பலவாறு அவனை சோதித்த பின் கால இயந்திரம் இருக்கும் உள்ளறைக்குள் அவனை அனுப்பினார்கள்.

எழிலி தொடு திரையில் வரைபடத்தை விரித்தாள்.

 “சார், நீங்கள் சொன்ன வருடங்களில் தோராயமாக இதே பகுதியில் விவசாய அமைப்பு இருந்திருப்பது நம் அதிர்ஷ்டம். அங்கே தான் நீங்கள் சொன்ன துளிப்பசுமை புராதன அமைப்பு இயங்கியிருக்க வேண்டும்.” என்றாள்.

ப்ரொபசர் பரிவோடு அவன் தோள்களை தொட்டார். 

“கவனம் தேவை பையா.. நீ அங்கே எந்த புற அலகுகளோடும் தொடர்பு கொள்ளக்கூடாது. இயந்திரத்திலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டதும் அதற்குள் இறங்குகிறாய்.. அதன் பெயர்.. ம்ம்.. வயல் என்று நினைக்கிறேன்.

அதற்குள் இறங்கி நெல் மணிகளை தரப்பட்ட குடுவைகளில் முடிந்த மட்டும் சேகரித்துக் கொள்கிறாய்.. மீண்டும் புறப்பட்டு விடுகிறாய்.. அங்கிருக்கும் மனிதர்களோடு நீ பேசவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது”

“ஏனென தெரிந்து கொள்ளலாமா சார்?”

“கடந்த காலத்தில் நீ ஏற்படுத்தும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் உன்னுடைய தற்போதைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.. அதாவது உன் உயிருக்கு. புரிகிறதா?”

“புரிகிறது சார்”

சற்று நேரத்தில் கணினிகளில் அடுத்தடுத்த கட்டளைகள் பறந்தன. எழிலி திரையின் முன் நின்று சந்தேகங்களை எழுப்பி கொண்டே வந்தாள்.

“வெப்பநிலை?” 

“மிதமானது… மாலை நேரம்” 

“வனவிலங்குகள் இருந்த அறிகுறிகள்?” 

“ஏதும் இருந்ததாக வரைபடத்தில் பதிவாகவில்லை, விவசாய நிலம்”

 “கிணறு, பள்ளங்கள்?

“சமவெளிப் பகுதி. ஒரு விவசாய கிணறு இருந்திருக்கிறது, ஆனால் மூடப்பட்டுள்ளது”

“செல்லும் நோக்கம்?”

 “தீர்மானிக்கப்பட்டு விட்டது” 

“பயண நேரம்?”

“தீர்மானிக்கப்படுகிறது” 

“பாடி ஸ்கேனிங்?

“செய்யப்பட்டு விட்டது.” 

“வருடம் சரியாக 2150”

“நாள் டிசம்பர் இறுதி… இதே நேரம்… ஓரிரு நிமிடங்கள் கூட குறையலாம்”

“கவுண்ட் டவுன்” 

“பத்து நொடிகள்..” 

“ஒன்பது நொடிகள்..”

“…………………………..”

“மூன்று…”

 “இரண்டு..”

 “ஒன்று..”

 “பூஜ்ஜியம்..”

 கால இயந்திரம் ஒரு பெரிய உறுமலை எழுப்பி அதிர்ந்தது. நரேஷ் கண்களை மூடிக் கொண்டான். அதிவேகத்தில் சுழல்வது தெரிந்தது. உடல் அணுக்கள் சிலிர்த்து காற்றில் பிரிந்துப் பரவுவதைப் போலிருந்தது.

சுழற்சி நின்றதும் கண்களைத் திறந்து பார்த்தான். எங்கும் இருட்டு விண்வெளியில் மிதப்பது போன்ற உணர்வு.. திடீரென்று வெளிச்சம் கண்களை கூசியது. இயந்திரம் அதே உறுமலோடு நின்றது.

சுற்றிலும் வயல்வெளி. மங்கலான வெளிச்சத்தில் துளிப்பசுமை அமைப்பின் கட்டிடம் தெரிந்தது. ஆச்சரியம் மேலெழ பிரமிப்பில் ஒருகணம் அப்படியே உட்கார்ந்து விட்டான். மனிதகுலத்தின் மகத்தான சாதனை இது.

நரேஷ் கட்டளைகளை பிறப்பித்ததும் பெல்ட்டுகள் விடுவித்து கொண்டன. அது ஒரு வெண்டை வயல். பழுப்பும் பச்சையுமாக வெண்டைகள் காய்த்திருந்தன. தூரத்தில் நெல்வயல் தெரிந்தது.

இந்த மாதத்தில் நெல் பயிரிட்டு இருப்பார்கள் என உணர்ந்த ஹென்றியின் திறமையை வியந்தான். அவசரமாக வயலை நோக்கி நடந்தான். முதிர்ந்த நெல்மணிகளையும், பச்சையும் மஞ்சளுமான பயிரையும் கண்டு அதிசயித்தான்.ஆச்சரியம் அடங்காமல் நெல்மணிகளை பயிரோடு பிடிங்கி குடுவையில் போடத் தொடங்கினான்.

“யார் அது? நெல்வயலில் நிற்பது..”

திடுக்கிட்டு தலையை நிமிர்த்தினான். குரல் வந்த திசையில் இருந்து இரண்டு பேர் கைகளில் ஏதோ கருவிகளோடு ஓடிவந்தனர். இவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான். அவர்களுக்கு விளக்கிச் சொல்ல அனுமதி இல்லை. சொன்னாலும் புரியுமா என்றும் தெரியவில்லை.

குடுவையை நிரப்பியும் நிரப்பாமல், குலுங்கும் நெற்பயிர்களோடு இயந்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். இயந்திரத்தைப் பார்த்ததும் அவர்கள் சற்று திகைத்து நின்றது போல் இருந்தது.

இவன் அதற்குள் தன்னை பொருத்திக் கொண்டு அவசரமாக டைமர் செட் செய்து விசையை இழுத்தான். வித்தியாசமான ஒலியுடன் அதிர்ந்து சட்டென்று இயந்திரம் மறைந்ததைக் கண்டு அவர்கள் மருண்டு போய் திரும்பி ஓடினர்.

இங்கு நரேஷை நெற்பயிர்களோடு கண்டதும் லேபில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பினர். ஹென்றி உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அவனை உடல் பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்.

அங்கு நரேஷ் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டான். பிரமிப்புடன் குடுவையை பிரித்து அதில் இருந்த நெற்பயிர்களை எல்லோருக்கும் காட்டினார்.

அதனை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஹென்றி பெருமிதத்துடன் “இது அறிவியலின் அடுத்தகட்டப் பாய்ச்சல்” என்றார். கதிர்களை தொட்டுப் பார்க்க முயன்றவர்களை தடுத்தார்.

“இது நம் முன்னோர்களின் பொக்கிஷம். நாம் இழந்துவிட்ட பாரம்பரிய உணவின் ஒரு துளி உயிர்ப்பு. சோதனைகள் முடியும் வரை யாரும் தொட அனுமதி இல்லை” என்றவர் சோதனைக் கூடத்துக்கு பத்திரமாக குடுவைகளை எடுத்துச் சென்றார்.

சோதனைகள் முடிந்ததும் நரேஷ் வெளியே வந்தான். இரகசிய எண்ணை தொடர்பு கொண்டுப் பேசினான்.

“இரவு எட்டு மணிக்கு என் ஆட்கள் மின்வேலியோரம் வருவார்கள்.நீ திரும்பி வரும் போது தப்பிக்கத் தயாராக வாகனமும் காத்திருக்கும்”

 “ஓகே சார்”

 “இன்னொரு விஷயம்” 

“என்ன?” 

“நீ கொண்டுவந்த நெல் பயிர் இருக்கும் அறைக்கு தீ வைத்து விடு”

“சார்…” 

“யோசிக்காதே… செய்..”

“இது தவறில்லையா?”

“சரி தவறு கேட்பதற்கு உனக்கு வரம்பு இருக்கிறதா நரேஷ்?

இவனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தது, பொறுத்துக் கொண்டான். 

“நீ உனக்கானதை பெற்றுக் கொண்ட பின் இங்கே இருக்கப் போவதில்லை. பிறகேன் பயப்படுகிறாய்? சொன்னதைச் செய்”

தொடர்பு துண்டிக்கப்பட்டது. சற்று நேரம் மௌனமாக இருந்தான். அமில வாயுக்கள் நிரம்பிய வானம் பல செய்திகளை அவன் காதில் சொன்னது.

‘வியாபாரம்.. எல்லாம் இழந்த பின்னும் இந்த வியாபாரம் செய்யும் புத்தி மட்டும் மனிதனை விட்டு போவதே இல்லை. இனி நன்மை தீமையை எண்ணி போராடுவது வீண்’ என்ற முடிவுக்கு வந்தான்.

அவனுக்கான நேரம் வந்ததும் லேபுக்கு பின்புறமாக வந்தான். வேலியோரம் அவர்கள் காத்திருந்தார்கள். எதுவும் பேசாமல் நேராக நடந்தவனை பின் தொடர்ந்தார்கள்.

லேபுக்குள் அவனுக்கு மட்டுமான தனி உரிம அட்டையைப் பயன்படுத்தி லேசர் அடையாளக்கற்றைகளை ஏமாற்றி உள் நுழைந்தான். மூவரும் இயந்திரத்தை சிரமத்தோடு நகர்த்தி வந்தார்கள். 

வெளிவரும் முன் நெல் பாதுகாக்கப்பட்ட அறைக்கு முன்பாக நின்றான். ப்ரொபசரின் 20 வருட உழைப்புக்கான பலன் உள்ளே சேமிக்கப்பட்டு இருந்தது. பதட்டமின்றி லைட்டரை உயிர்ப்பித்தான். தீ பரவிய மறுகணம் வேகமாக மிஷினை தூக்கியபடி வெளியே வந்து மறைவிடம் நோக்கி முன்னேறினார்கள். 

மிஷினில் அமர்ந்து சென்றமுறை போல கட்டளைகள் அனைத்தையும் சொல்லி, டைமரை ஆன் செய்வதற்கு முன் லேப்பை திரும்பிப் பார்த்தான். அவசரகால அலாரம் சப்தமிட எல்லோரிடமும் பரபரப்பு தொற்றுவதை உணர முடிந்தது.

ஹென்றியும் எழிலியும் நெருப்பை நோக்கி கத்தியபடி ஓடுவது தெரிந்தது. இந்த வேலையை செய்தது அவன் தான் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

நெருப்போடு சேர்ந்து ஹென்றி அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் எரிந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

டைமரை ஆன் செய்தான். இரைச்சலுடன் இயந்திரம் இயங்கி சட்டென மறைந்தது. சுழல்வது நின்றது போல் தோன்றியதும் கண்களைத் திறந்தான். 2150ன் இருட்டைப் பார்த்ததும், வந்துவிட்டோம் என உற்சாகம் பிறந்தது.

இயந்திரத்தின் சப்தம் நின்ற மறுகணம் திடீரென அவனும் இயந்திரமும் கீழே இழுக்கப்பட்டது போல் இருந்தது. குபீரென பாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பது சட்டென அவனுக்கு உறைத்தது.

கால இயந்திரத்தை அவன் இயக்கிய இடத்தில் ஒரு கிணறு இருந்திருக்கிறது. ‘இது எப்படி சாத்தியம்? வரைபடத்தில் இப்படி ஒரு அமைப்பே இல்லையே’ என அவன் நினைத்து… அதிர்ச்சியில் திகைத்து.. கைகால்களை பெல்ட்டுகளில் இருந்து விடுவிக்க எண்ணி.. “ஆ”வென கத்தியபடி அசைய முயற்சித்து… பாறைகளில் மோதி இவ்வளவும் ஒரு நொடிப்பொழுதில் நிகழ இயந்திரத்தோடு உள்ளே விழுந்து கொண்டிருந்தான்.

இயந்திரம் மோதியதில் சரிவுகளில் இருந்த கற்கள் அதிர்ந்து அவன் மேல் விழுந்து மூடத் தொடங்கின.

ப்ரொபசர் ஹென்றி இப்போது தான் நரேஷையும், இயந்திரத்தையும் தேட ஆரம்பித்திருந்தார். எல்லோரும் தீயை அணைக்கும் வாயுக்களை மும்முரமாக செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஓரிரு நெல்மணிகளையாவது கருகும் முன்பே மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் கட்டளைகளை பரபரப்பாக பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

இங்கே..

கிணற்றைச் சுற்றி எல்லோரும் கூடியிருந்தார்கள். முன்பு வந்த அதே மனிதன் தான் அதே மிஷினில் உளவு பார்க்க வந்திருப்பதாக பேசிக் கொண்டார்கள். ஏதாவது சாமி குத்தமாக இருக்குமோ என ஆராய்ந்தார்கள்.

கிணற்றுக்குள் இருக்கும் பாதாள அறையில் ஏலியன்கள் வாழ்வதாக இளவட்டங்கள் சொன்னார்கள். இறுதியாக அந்த கிணற்றை முழுமையாக மூடிவிடுவது என முடிவெடுத்தார்கள்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. Nangu padiththavarGaL, OraLavu padiththavarGaLukkellaam viRu viRuppOdu Padikkath thoonDum siRukathai. Miguntha paaraattukkaL intha kathaasiriyarukku. Aarvamudan irukkum nam iLam thalaimuRaiGaL intha kathaiyaip paditthu inburuvaarGaL enhathu eN thida nambikkai.

    “M.K. Subramanian.”

பதினைந்தாயிரம் ரூபாய் கே.என்.சுவாமிநாதன், சென்னை

ஒற்றைக்கண் மாயாவி (சிறுவர் கதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி