in ,

ஒற்றைக்கண் மாயாவி (சிறுவர் கதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஒற்றைக்கண் மாயாவி (சிறுவர் கதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

த்னபுரி சாம்ராஜ்யம் விழாக் கோலம் பூண்டிருந்தது. பேரரசன் நரசிம்மனின் ஒரே மகள் இளவரசி ரத்னாதேவியின் சுயம்வரம்.  மக்கள்  தங்கள் வீடுகளை மாவிலை தோரணங்களாலும், வாழைக்குருத்துகளாலும், அலங்கரித்துக்  கொண்டிருந்தனர்.

நாலு தோரண வாயில்களும்  மலை சாமான்கள், பாக்கு, கமுகு, செவ்வாழை போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அன்றலர்ந்த பூக்களின் நறுமணம் உள்ளே வருபவர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. இளவரசர்கள் சுயம்வரத்திற்கு வர வர அவர்கள்  உபசரித்து அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டனர்

அந்தப்புரத்தில் ரத்னாதேவியை சிற்றரசர்கள் நாட்டு இளவரசிகள்.. அலங்கரிக்க,  ரத்னாதேவி  தேவகன்னியாய் ஜொலித்தாள்

“தேவி உங்கள் மனம் கவர்ந்த கள்வன் மதுராபுரி இளவரசர் ராஜசிம்மரை  எப்படி இளவரசர்கள் கூட்டத்தில் கண்டு பிடிப்பீர்கள்”

“இளவரசரின் கண்களை வைத்தே அவரை கண்டுபிடித்து விடுவார்” என்று மற்றொருவள் கூற., தலையாட்டினாள் ரத்னா.

ஆமாம், அந்த கண்கள் பல நாட்களாக அவளுடன் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும்

இவ்வளவு கோலாகலங்களையும் கண்டவாரே, பாதுகாப்புகளையும் மீறி, சன்னியாசி வேடத்தில் ரத்னபுரிக்குள்  நுழைந்து கொண்டிருந்தான் மாயாவி என்று மக்களால் பயத்துடன் அழைக்கப்பட்ட மந்திரவாதி ‘ஒற்றைக்கண்ணன்’

சுயம்வரம் ஆரம்பிக்க, எல்லா தேசத்து இளவரசர்களும்  ரத்னாதேவி தனக்கே மாலையிட மாட்டாளா என்ற ஆவலுடன் காத்திருக்க, ரத்னாதேவி ஒவ்வொருவரையாக  பார்த்துக் கொண்டே வந்தாள்

அதோ அவள் மனம் கவர் இளவரசன் ராஜசிம்மன். மெல்ல நகர்ந்து மாலையுடன் அவனருகே வந்து நாணத்துடன், அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க, மாலையை அணிவிக்க கைகளை உயர்த்தியவள், அவன் கண்களைப் பார்த்து திடுக்கிட்டாள்

“இல்லை.. இல்லை.. இது  இளவரசர் ராஜசிம்மனில்லை… அவர் கண்கள் எனக்கு தெரியும்… இவர் அவரில்லை” என்று அலற… அடுத்த நிமிடம் மந்திரவாதி மாயாவி, தன் உருப்பெற்று, இளவரசியை சின்னஞ்சிறு குருவியாக்கி தன் கைகளில் வைத்துக் கொண்டு  ஒரே நிமிடத்தில் பறந்து போனான்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததை  பார்த்து அனைவரும் திடுக்கிட்டனர். அதே நேரம் உள்ளே நுழைந்த ராஜசிம்மன்,  “அரசே மந்திரவாதி ஒற்றைக் கண்ணன் என் உருவில் வந்துள்ளான். இதை அறிந்து கொண்டு ஓடி வரும் முன், அவன் இளவரசியை தூக்கிச்  சென்று விட்டான், கலங்காதீர்கள். இன்னும் ஒரு திங்களில் தங்கள் மகளை மீட்டு தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்.இது உறுதி…” என்று கூறிவிட்டு கிளம்பினான்

தன் நாட்டுக்கு செய்தி அனுப்பிய பின்,  தன் குதிரை வல்லபனிடம், “வல்லபா… இளவரசியை மீட்டு கொண்டுவர வேண்டியது நம் கடமை.  மாயாவி பல தந்திரங்களை அறிந்தவன். அவனை வெல்வது அத்தனை சுலபமல்ல… முதலில் நாம் நம் குருநாதர்  சுவிஷ்டரிடம் போவோம். நீ உன் பறக்கும் சக்தியை உபயோகித்து என்னை குருவிடம் அழைத்துச் செல்” என்றான்

அவன் சொல்வதை புரிந்து கொண்ட வல்லபன் தலையசைத்து கனைத்தது.

ராஜசிம்மன் ஏறிக்கொள்ள, வல்லபன் தன் இறக்கையை விரித்து பறக்கத் தொடங்கியது. காட்டின் நடுவே குருவின் ஆசிரமத்திற்குச் சென்று இறங்கியது.

குருவின் குடிலுக்குள் நுழைந்த  ராஜசிம்மன், குருவின் தியானத்தை கலைக்க விரும்பாமல்  அமைதியாய் எதிரே அமர்ந்தான். சற்று நேரத்தில் குருவின் தியானம் கலைய, எதிரில் இருக்கும் ராஜசிம்மனை பார்த்தார்

“வணக்கம் குருவே!”

“வா ராஜசிம்மா… உன் மன வாட்டம் புரிகிறது ..இளவரசி ரத்னாதேவியை ஒற்றைக்கண்ணன்  கவர்ந்து சென்றதில்  மனம் கலங்கி வந்துள்ளாய்…”

“ஆம் குருவே…  அவன் என்னை போல் உருவெடுத்து இளவரசியை ஏமாற்றி, சிறுபறவையாக்கி கவர்ந்து சென்றுவிட்டான். இளவரசியை  மாயாவியிடமிருந்து மீட்டு, மன்னனிடம் ஒப்படைப்பதாக நான் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு வழி காட்டவேண்டும்” என்று அவர் பாதம் பணிந்தான்

முக்காலமும் உணர்ந்த குரு தன்னுடைய ஞானதிருஷ்டியினால் மந்திரவாதியின்  இருப்பிடத்தை அறிய, “ராஜசிம்மா… மாயாவி   இருப்பது பலகாத தூரம் தள்ளி.. ஏழு காடுகள்  தாண்டி…ஏழு மலைகள் தாண்டி… ஒரு குகையில் அவன் இளவரசியை சிறை வைத்துள்ளான் …அவளை மீட்பது மிகவும் கடினமான விஷயம்”

“குருவே.. தங்கள் வழிகாட்டுதல் இருந்தால் நான் எத்தகைய சிரமத்தையும் மேற்கொண்டு இளவரசியை மீட்பேன்”

“முதலில் அந்த  ஒற்றை கண்ணனை பற்றி என் முன்னோர்கள் எழுதி வைத்த சுவடிகளை பார்த்து உன்னிடம் சொல்கிறேன் கேள்… அவனைப் பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே நீ  இளவரசியை  மீட்க முடியும்”

ஓலையைத் தேடி எடுத்து  அதை வாசிக்கலானார்

“மாயவனின் பார்வையது ஒற்றையிலே… மாயவனின் உயிரதுவோ, பேசும் உயிர்தனிலே… மாயவனின் உறைவிடமோ குகையினிலே..  அவன் உயிர் நீத்தால் உள்வாங்கும் குகையதுவே … பஞ்சபூதங்களும் பலனின்றிப் போகும்,
மாயவனின் சக்தியது ..மறைந்துறைவான். அவன் உயிர்சக்தி வீழ்ந்தாலே அவன் வீழ்வான்..”

“புரிகிறதா  ராஜசிம்மா.. மாயாவி பஞ்சபூதங்களால் அழிவற்றவன் ..அவன் உயிர் இருக்கும் உயிரினத்தை நீ அழிக்க வேண்டும். அதே சமயம் அவன் உயிருடன் இருந்தால் மட்டுமே அந்த குகை மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் இருக்கும். இதையெல்லாம் நீ கவனத்தில் கொண்டு இளவரசியை மீட்கவேண்டும். இளவரசியை மீட்க சில ரட்சைகளை உனக்கு அளிக்கிறேன் உன் புத்தியின் பலத்தால், அவனைக் கொன்று இளவரசியை மீட்பாயாக …”

“இதோ இந்த தாயத்தை நீ அணிந்து கொண்டால்..உயிரை அது காத்து நிற்கும்.  இந்த மந்திர நீரை, நீயும், உன் குதிரையும் பருகினால், பல மாதங்களுக்கு உணவின்றி, நீரின்றி வாழலாம். இந்த குப்பியில் இருக்கும்  குளிகை இரண்டு தடவை நீ பயன்படுத்தலாம். இதை உட்கொண்டால் சில மணித்துளிகளுக்கு நீ யார் கண்ணிலும் தெரிய மாட்டாய் ..இதோ இந்த தர்ப்பைபுல் நெருப்பை அணைக்கவல்லது…

மேலும் ராஜசிம்மா! நீ ஒன்றை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏழு காடுகளும், ஏழு மலையுகளும் பல காத தூரம் ஆகும்… அதைத் தாண்டி பறக்கும் அளவுக்கு சக்தி உன் குதிரைக்கு  கிடையாது… 

எனவே நீ  காடுகளை நடந்து கடந்து செல்… மலைகளைத் தாண்ட மட்டுமே குதிரையின் பறக்கும் சக்தியைப் பயன்படுத்திக் கொள்… காடுகளை தாண்டும் போது சில தீய சக்திகளும் வரலாம்… நல்ல சக்திகளும் எதிர்படலாம்… எனவே உன்னுடைய கவனம் மிகவும் முக்கியம்… உனக்கு என் ஆசிகள்…” குருவை வணங்கி விட்டு வெளியே வந்தான்

குல தெய்வத்தையும்  வணங்கி விட்டு, நடக்கத் தொடங்கினான். முதல் காடு வர …வல்லபனின் பறக்கும் சக்தியால், காட்டை மேலிருந்து ஒருமுறை கீழே பார்த்து விட்டு, எந்த பாதையில் நுழைந்தால் எளிதில் வெளிவரலாம் என்பதை கணக்கிட்டுக் கொண்டு நடக்கத் தொடங்கினான் ..எதிரே துறவி ஒருவர் வர, சைகையால் அவனை அழைத்தார்.

அவன் உள்ளுணர்வு தவறாக உணர்த்த, அவரை தவிர்த்து நடந்தான்.அது மிகப்பெரிய ராட்சஸ கழுகாக மாறி, அவனை தாக்க வர, சட்டென தன் உடைவாளை அதன் கழுத்தில் இறக்கினான்.

பின் மீண்டும் நடக்க  ..காட்டில் அவனைத் தொடர்ந்த விலங்கினங்களை,  இன்னல் செய்யாது  நடந்தான். அவைகளும் விலகி அவனுக்கு வழிவிட்டுச் சென்றன…முதல் காட்டை கடந்தவுடன் எதிரே தென்பட்ட மலையை வல்லபனின் மேலேறி  பறந்து தாண்டினான்

அடுத்து வந்த காட்டில் நடந்த போது, மிக உயரம் குறைந்த நிறைய குள்ள மனிதர்கள் தென்பட்டனர் ..அவர்கள் முகபாவம் நேசத்தை வெளிப்படுத்த, ராஜசிம்மன் அவர்களை வணங்கினான். அவர்களும் அவனுடன் இணைந்து நடந்து, மந்திரவாதி ஒற்றைக் கண்ணனால் தாங்கள் பட்ட இன்னல்களை சொல்லிக் கொண்டே வந்தனர்

“காட்டில் உள்ள பல மிருகங்கள் அவன் பசிக்கு இரையாகி விட்டன..காட்டுக்குள் நுழையும் போது எதிர்ப்படும் எந்த உயிரினத்தையும் கொன்று தின்று விடுகிறான்.

அவன் எந்த நேரம் காட்டுக்குள் வருவானோ என்று பயந்து கொண்டு வாழ்கிறோம்.. அவன் வரும் சமயம்  பெரிய மரப் பொந்தில் ஒளிந்து கொள்கிறோம்.

அவனை எதிர்க்க சென்ற எங்களில் பலபேரை அவன் சிலையாக்கி விட்டான்.நீங்கள் அவனை அழித்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. எங்கள் அன்பு பரிசாக இந்த மூலிகைகளை வைத்துக்கொள்ளுங்கள் .

“அரவம் எதுவும் தீண்டாமல் இந்த  மூலிகை உங்களை காக்கும்” என்று கூறி விடை பெற்றனர். அடுத்துவந்த மலையையும் வல்லபன் உதவியால் தாண்ட, மீண்டும் காட்டுக்குள் நுழைந்தான் ராஜசிம்மன்

அரவங்கள் நிறைந்திருந்த அந்த காடு அச்சுறுத்துவதாக இருந்தது. குள்ளர்கள் தந்த மூலிகையை கையில் வைத்துக் கொள்ள, அரவங்கள் மூலிகை வாசனைக்கு அரண்டு ஓடிப் போன போது தான், அவர்கள் கொடுத்த மூலிகையின் உபயோகம் ராஜசிம்மனுக்குப் புரிந்தது.

அடுத்து வந்த மலையையும் தாண்டிய பின், மீண்டும் அடுத்த காட்டுக்குள் நுழைந்தான்.

சற்று இளைப்பாற அமர்ந்தவன், அங்குள்ள சிறு தடாகத்தில் வெள்ளை நிறக் கொக்குகள் போன்ற பறவைகள் விளையாடுவதைக் கண்டு மனம் மகிழ்ந்தான்.

அதே நேரத்தில் அவனருகே ஒரு கரிய ஆடை அணிந்த ஒரு முதியவர் வர, விளையாடிக் கொண்டிருந்த பறவைகள் வினோத சத்தம் எழுப்பிக் கொண்டு அரக்கப் பரக்க பறந்து மறைந்ததை கண்டு,  சற்றும் தாமதிக்காமல், ராஜசிம்மன் தன் உடைவாளை எடுத்து ,அவன் பேரில் பாய்ச்ச, அவன் மிகப்பெரிய அரக்கனாய் உருப் பெற்று கீழே விழுந்தான்.

பறவைகள் தமக்கு அளித்த சமிக்கையை எண்ணி அவைகளுக்கு நன்றி மனதில் செலுத்திக் கொண்டான்.

அடுத்து வந்த மலையைத் தாண்டி ..காட்டில் நடக்கும் போது நிஷ்டையில் ஒரு முனிவரைக் கண்டார். உள்ளுணர்வு உணர்த்த… அவர் பாதம் பணிந்து நகர முற்படும்போது” ..நீ செல்லும் காரியத்தில் வெற்றி பெற ஆசிகள் … உனக்குத் தக்க சமயத்தில் என் உதவி கிட்டும் போய் வா…” என்று ஆசீர்வதித்தார்.

மனம் நிறைந்தவனாய், அவரை வணங்கி விட்டு நடந்தான்.

மீண்டும் வல்லபனின் உதவியோடு, மலையைக் கடந்து, காட்டில் நடக்க தொடங்கினான்.வழியில் சில யட்சிணிகள் தென்பட அவற்றை வணங்கி ஆசி பெற்று நடந்தான்…சற்று தொலைவு நடந்ததும், எதிரே பச்சை கம்பளம் விரித்தது போல, புற்கோரை படர்ந்திருந்தது.

அவன் காதில் “நில்” என்ற எச்சரிக்கை கேட்க நின்றான்.

“மேலே ஒரு அடி கூட எடுத்து வைக்காதே… அது ஆளை விழுங்கும் புற்கோரை”

சற்று யோசித்த ராஜசிம்மன்…அது யட்சிணியின் குரலாக இருக்கும்  என நினைத்தவன், “வல்லபா அந்த புற்கோரையை பறந்து கடந்திடுவோம்…”என்று கூற, அதுவும் அப்படியே செய்தது.

அடுத்துவ ந்த மலையையும் பறந்து தாண்ட ..கடைசியாக அவன் கடக்க வேண்டிய காட்டை வந்தடைந்தான்.

அந்தக் காடு இருளடைந்திருந்தது. எந்தவித விலங்கினமும், அரவங்களும், இல்லாமல்  ஒரு கனமான மௌனத்தை தாங்கியிருந்தது. ஒற்றை கண்ணனின் குகை அருகிலேயே இருக்க வேண்டுமென தோன்றியது.

அதனாலேயே உயிரினங்கள் இல்லாமல் அந்தக் காடு மௌனமாக இருப்பது போல தோன்றியது. இந்தக் காட்டில் தான் மந்திரவாதியின் உயிரை தாங்கியிருக்கும் அந்த உயிரினம் இருக்க வேண்டும் என்று அவன் உள்ளுணர்வு உணர்த்தியது …

அதை எப்படி கண்டுபிடிப்பது எங்கே தேடுவது என்று மனம் குழம்பியது. காட்டை கவனமாக, நுணுக்கமாக பார்த்தும் எந்த உயிரினமும் அவன் கண்ணில் தென்படவில்லை

சரி முதலில் இளவரசியை காப்பாற்றுவோம். மந்திரவாதியின் உயிர் தாங்கிய உயிரினத்தை கண்டுபிடித்தாலும், அதை இப்போது அழிக்க முடியாது ,அதை அழித்தால் குகை புதையுண்டுவிடும் இளவரசியுடன்…அதனால் அந்த உயிரினத்தை  வரும் போது பார்த்துக் கொள்ளலாம். குருவின் ஆசி நமக்கு வழிகாட்டும் என்று நினைத்தபடி நடந்தான்

“வல்லபா.. உன்னுடைய குளம்படி சத்தம் கூட கேட்கக்கூடாது. சத்தம் கேட்டால் மாயாவி நம்மை கண்டுபிடித்து விடுவான்” .தலையசைத்த வல்லபன்… அவன் கூறியது போலவே சத்தம் கேட்காமல் மெதுவாக நடந்தது

குகை கண்ணில் தென்பட ..ராஜசிம்மன் கவனமானான். குகைக்கு வெளியே நிறைய குள்ளர்கள் சிலைகள்… வல்லபனை மறைவாக ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, அவன் மட்டும் மரத்தின்மேல் ஏறி அடர்ந்த கிளைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டான்

வெகுநேரம் கழித்து, ராஜசிம்மன் பொறுமையிழந்த நேரத்தில்,மாயாவி வெளியே வந்தான். வெளியே  இருந்த தாமரை மலர் போன்ற சிற்பத்தில் கைவைக்க ,குகை தானாக மூடிக் கொண்டது.  மாயாவி உணவு தேடி பறந்தான்.

மரத்திலிருந்து கீழே இறங்கிய ராஜசிம்மன் மாயாவி செய்தது போல அந்த தாமரைப்பூவில் கைவைக்க….  குகை திறந்து கொண்டது. குகை மூடியை விட்டால் என்ன செய்வது என்ற யோசனையுடன் உள்ளே நுழையும் முன் ஒரு பெரிய கல்லை உருட்டி  குகையின் வாயிலில்… வாயிலை பாதி அடைத்து  நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தான்.

“இளவரசி”என்று அழைத்தான்.  பதிலில்லை.. ஒரு கணம் திகைத்தான். இளவரசியைக் கொன்றிருப்பானோ மாயாவி… குகையில் நிறைய சிலைகள் இருக்க,  மாயாவி எதிர்க்க வந்தவர்களை  சிலையாக்கி வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான்.

பிறகு ‘இளவரசி… இளவரசி” என்று சத்தமிட லேசான ஒரு முனகல்  கேட்டது .அங்கும் இங்கும் அலைந்த ராஜசிம்மன் மந்திரவாதி வந்து விடக் கூடாதே என்ற பரபரப்பில் தேடிக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு பெரிய  காளி சிலையைக் கண்டான். அச்சிலையின் கீழ், பீடத்தின் அருகே இளவரசி சங்கிலியால் கட்டப்பட்டு அரை மயக்கத்தில் இருந்தாள். அவளைச் சுற்றி ஒரு பெரிய வட்ட வடிவ கோடு வரையப்பட்டிருந்தது.

“இளவரசி பயப்படாதீர்கள்! உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்!” என்றவன். அவளருகே செல்ல குப்பென அந்த கோடு  தீப்பற்றிக் கொண்டது.

ஒருகணம் திகைத்த ராஜசிம்மன்,  தன் குரு தந்த தர்ப்பை புல்லை அனலில் இட …தீ அணைந்தது. அருகே சென்று இளவரசியின்  சங்கிலிகளை அவிழ்த்துவிட்டான்.

இளவரசியை கூட்டிக்கொண்டு வெளியே வரும்போது, மந்திரவாதி உள்ளே நுழைவது தெரிந்தது. இருவரும் ஓடி ஒரு தூணுக்கு பின்னே மறைந்து கொண்டனர்.

குகைக்கு வெளியே கல்லைப் பார்த்த மந்திரவாதி, உள்ளே யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு கர்ஜித்தான்

அங்கும் இங்கும் அலைந்து தேட ..மந்திரவாதி அருகே வந்து விட… ராஜசிம்மன் சட்டென்று இந்த குப்பியில் இருந்த இரண்டு குளிகையையும் எடுத்து இளவரசியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி தானும் சாப்பிட… அவர்கள் உருவம் மறைந்து   மந்திரவாதியின் கண்ணுக்கு புலப்படாமல் போயிற்று

“இளவரசி!  மாயாவிக்கு  இடது கண் தெரியாது.. எனவே நாம் இடது பக்கமாகவே நகர்ந்து போவோம்”

இளவரசி…”அதோ இருக்கும் மந்திரக்கோலை எடுத்துக் கொண்டு வாருங்கள்.  அதுவே மாயாவியின் பாதி பலம்” என்றாள்.

அருவமாக இருந்ததால்  எளிதாக மந்திரக் கோலை எடுத்துக்கொண்டு குகையருகே சென்றனர்

“இளவரசி சீக்கிரம் வாருங்கள் இது சில மணித்துளிகளே நாம் அரூபமாக இருக்க முடியும்”. குகை வாயில் அடைபட்டிருக்க ஒருகணம் திகைத்தான் ராஜசிம்மன்

ரத்னாதேவி,” மாயாவி  குகையை திறப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.  மேலே இருக்கும் அந்த குமிழ் போன்ற சின்ன சக்கரத்தை இடதுபக்கமாக சுழற்றினால் குகை திறக்கும்”

“இளவரசி தயாராக இருங்கள்.. நான் குகையை திறந்ததும், வெளியே ஓடிவிடலாம்” 

இளவரசி டக்கென்று அந்த மந்திரக் கோலால்   எல்லா சிலை மீது  தட்ட எல்லோரும் உயிர் பெற்று எழுந்தனர் .அவர்கள் உருவத்தோடு இருந்ததால் மந்திரவாதியால்  அவர்களை பார்க்க முடிந்தது.

அதே நேரம்  ராஜசிம்மன் குகையை திறக்க,” சீக்கிரம் எல்லோரும் வெளியேறி விடுங்கள்” என்றாள் இளவரசி. வேகமாக ஓடி வந்தான் மாயாவி.  வாசலருகே வருவதற்குள் குகை  மூடியது

அதே சமயம் ரத்னாதேவி வெளியே வந்து, சிலையாக இருக்கும்  எல்லோரையும் மந்திரக்கோல் உதவியுடன் உயிர்ப்பிக்க, எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்

அரூபமாக இருக்கும் மூலிகையின் திறன் குறைய, நிஜ உருவத்திற்கு வந்தனர்.

ராஜசிம்மன் அவசரமாக “வல்லபா சீக்கிரம் வா” என்று குரல் கொடுக்க… வல்லபன் விரைந்தோடி வந்தது. ராஜசிம்மன், ரத்னா தேவியை ஏற்றிக்கொண்டு பறந்தான்.

மாயாவி  வெளியே வந்தான். “எல்லோரையும் காப்பாற்றிவிட்டு ஓடுகிறாயா? ஓடு எவ்வளவு தூரம் ஓடுகிறாய் பார்க்கிறேன்… இதோ வருகிறேன்… “என்று அவனும் பறக்கத் தொடங்கினான் .

“வல்லபா இந்தக் காட்டில் மந்திரவாதியின் உயிர் இருக்கும் அந்த உயிரினத்தை கண்டுபிடித்து நாம் அழிக்க வேண்டும். இல்லாவிட்டால், மந்திரவாதியிடமிருந்து தப்பிப்பது கடினம் .”

காட்டில் அவன் சந்தித்த முனிவர் நினைவுக்கு வர, அவரை மனதில் தியானித்தான். அப்போது அவன் காதில், “பொன்னிற ஒளியோடு விளங்கும் மரத்தை தேடு.. அதிலே இருக்கிறது சூட்சமம்…” என்ற குரல் கேட்டது.

“இளவரசி! பொன்னிற ஒளி வீசும் மரத்தை தேடுங்கள் ..”

வல்லபன் மீண்டும் காட்டை சுற்றிவர, ஒரு மரத்தை காட்டினாள் ரத்னாதேவி. அது மற்ற மரங்களிலிருந்து சற்று வித்தியாசமாக லேசான பொன்னிற ஒளியோடு விளங்கியது

“வல்லபா… சீக்கிரம் அந்த மரத்தின் கீழே இறங்கு. மந்திரவாதி வருகிறான், சீக்கிரம் நம்மை அணுகிவிடுவான். நாம் உடனடியாக  ஏதாவது செய்ய வேண்டும்”  என்று இளவரசி அலறினாள்

ராஜசிம்மன் மரத்தின் மேல் ஏற ..அங்கு பொன்னிற ஒளியோடு 5 கூண்டுகளில் ஐந்து விதமான பறவைகள்

“இதில் எந்த பறவை…சீக்கிரம் ” இளவரசி பரபரத்தாள்

ஒரு நிமிடம் ராஜசிம்மனுக்கு  குரு கூறியது நினைவிற்கு வர .” பேசும் உயிரினம் ..அதுவே மந்திரவாதியின் உயிர் உள்ள பறவை ..இளவரசி…”

“கிளி..அதுவே பேசும் உயிரினம்…சீக்கிரம் இந்த கிளியை பிடியுங்கள்” என்றாள் ரத்னாதேவி.

மாயாவி  வெகு சமீபத்தில் வந்துவிட்டான். அவன் வருகையால்  நிலமே தடதடவென அதிர்ந்தது .மிகவும் சிரமப்பட்டு ராஜசிம்மனும், ரத்னாதேவியும் மரத்தில் இருந்து நழுவி விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டே அந்த கிளியின் கூண்டை தனியாக எடுத்தனர்.

ரத்னாவதி கூண்டைத் திறக்க…  ராஜசிம்மன் கிளியை பிடித்தான்

அதற்குள் மந்திரவாதி ரத்னாதேவியை பிடிக்க கையை நீட்ட…ராஜசிம்மன் கிளியின் காலை உடைத்தான்.

மந்திரவாதி அலறிக் கொண்டு கீழே விழ ..அவன் மீண்டும் தட்டுத்தடுமாறி தன் கையை நீட்ட … அதற்குள் கிளியின் இறக்கைகளை வெட்டினான் . பின் அந்த தங்க நிற கிளியின் கழுத்தை திருக மந்திரவாதி துடித்தான்

கிளியின் உயிர் அடங்க, மந்திரவாதியும் இறந்து போனான்.அவனுடைய தீய சக்தியை உள்ளடக்கிய குகையும் பெரும் சத்தத்துடன் பூமிக்குள் புதைந்து போனது..

நிம்மதி பெருமூச்சு விட்டனர் ராஜசிம்மனும், ரத்னாதேவியும்..
அதற்குள் இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் அங்கே ஓடிவர எல்லோரும் இறந்து கிடந்த மாயாவியை பார்த்து குதூகலித்தனர்.

ராஜசிம்மனை கை கூப்பி வணங்கி “எங்களுக்கு  விடிவு காலம் பிறந்துவிட்டது… உங்களுக்கு மிக்க நன்றிகள் பல…” என்றனர்.

அவர்களிடம் விடை பெற்ற பின் …வல்லபன் இருவரையும் சுமந்து கொண்டு பறக்க …மந்திரக்கோல் உதவியால், எந்தவித இடையூறுமின்றி, காடுகளைக் கடந்து, ரத்னாபுரி  சாம்ராஜ்யத்தை அடைந்தனர்.பின் மந்திரவாதியின் மந்திரக்கோலை முதல் வேலையாக நெருப்பிலிட்டு அழித்தனர்.

இளவரசியைப் பார்த்ததும் மன்னன் மனம் மகிழ, அவளை அணைத்துக் கொண்டான். ராஜசிம்மன்  இளவரசியை மீட்க  உதவிய வல்லபனை அணைத்து அதன்  முகத்தை தடவிக் கொடுத்து முத்தமிட… சற்றே பொறாமையுடன் ரத்னாதேவி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விரைவில் ஒரு சுபயோக சுபதினத்தில் குருவின் ஆசி பெற்று,  தன் மனம் கவர்ந்த ராஜசிம்மனை, இளவரசி ரத்னாதேவி  திருமணம் செய்து கொண்டு சுகமாக பல்லாண்டு வாழ்ந்தாள்

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணி (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ந.சிவநேசன்

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை