in

கல்யாணமாம் கல்யாணம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன் 

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வாசலில் கட்டிய வாழை மரமும், மாவிலைத் தோரணமும், பெரிய பெயர் வளைவுகளும், போஸ்டர்களும், தான் சரியான இடத்திற்குத்தான், வந்துள்ளோம் என்பதை லதாவுக்கு உறுதிப் படுத்தின.

பெரிய பெட்டியுடன் காரில் இருந்து இறங்கியவள், தன்னை வரவேற்க தெரிந்த முகம் உள்ளதா எனப் பார்த்தாள்.  அமெரிக்காவில் இருந்து லதா, தன் அத்தை பேத்தி ப்ரியாவின் திருமணத்திற்கு வந்தது, எல்லா சொந்தங்களையும் பார்க்கலாம் என்ற ஆசையில் தான்.

மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட பெரிய மண்டபம். ஒருத்தரும் தென்படவில்லை. ஒருவழியாக, சித்தி சித்தப்பா லதாவின் கண்களில் பட்டனர். வயதின் காரணமாக ஓட முடியாததால், மெதுவாக  நடந்து வந்து வரவேற்றனர்.

“பாவம் பதினாறு மணி நேரம் வந்திருப்பியே, களைப்பா இல்லே.  டிபன் சாப்பிடுடி, ஆனா அது ரெண்டாவது மாடி. எங்களுக்கு மூணாவது மாடியில தான் ரூம் கொடுத்துருக்காங்க, ஒரே மூட்டு  வலி” என்றாள்  சித்தி. 

“நான் பாத்துக்கறேன் சித்தி, நீங்க உட்காருங்க” என்றாள்.  அனைவரும் ரொம்ப பரபரப்பாக ஓடிக் கொண்டு இருந்தார்கள். யாரோ மாப்பிள்ளை வீட்டு வி.ஐ.பி போலும்.

 “என்னது, கீழ் ரூமை  வயசானவர்கள், எடுத்துக் கொண்டார்களா? வர்றவங்க முன்னாடியே கீழ் ரூம் தான் வேணும்னு சொன்னாங்களே?” .

“சரி. நான் போய் அந்த கிழங்களை எல்லாம் வேற ரூமுக்கு அனுப்பறேன்?”

காலம் இன்னும் மாறவேயில்லை. மாப்பிள்ளை வீடு படுத்தும் பாடு இருக்கே என லதா எண்ணினாள். அவர்களுக்கு மட்டும் தடபுடலான வரவேற்பு. 

“அவர்களை டிபன் சாப்பிட அழைத்துப் போயேன்”

அதற்குள் மாப்பிள்ளையின் அம்மா ஓடி வந்து, “நானே பார்த்துக்கிறேன், அவர்களுக்கெல்லாம் தனிச் சமையல்” என்றார்.

“என்னது… தனிச்  சமையலா?” என லதா ஆச்சரியமாகக்  கேட்டாள்.

“ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லிட்டோம். அவங்க வீகன் மட்டும் தான் சாப்பிடுவாங்க”

 லதாவிற்கு இது அதிர்ச்சியைத் தந்தது. இவ்வளவு பேர் கூடும் இடத்தில், கிடைத்ததை சாப்பிடாமல் இது என்ன கூத்து.

‘ஏன் பிரியா  இந்த மாதிரி மாப்பிள்ளை வீட்டாரைப்  பிடித்தாள். ஊரில் வேற மாப்பிள்ளையே இல்லையா?’ மனதிற்குள் பொருமிக் கொண்டு  அமர்ந்து இருந்தாள். இதையெல்லாம் கேட்பதற்கு, அத்தை இப்போது உயிரோடு இல்லை. அத்தை பையனோ அவர்களை கவனிப்பதில் படு  பிஸி.

அவளை டிபன் சாப்பிடும்படி அந்த கேட்டரிங் ஆட்கள் ரொம்பவே அழைத்தார்கள். அங்கே தான் கல்யாணப் பெண்ணின் தங்கை ப்ரீத்தியைப் பார்த்தாள்.

“லதா அக்கா… எப்போ வந்தீங்க? ஹொவ் வாஸ் யுவர் ஜெர்னி?” 

“நல்லா இருந்தது ப்ரீத்தி. என்ன ப்ரீத்தி, மாப்பிள்ள சைடு  ரொம்ப கெடுபிடி பண்றாங்களா?” 

“நோ… நோட் அட் ஆல்…”

“பின்ன? யாருக்கு, கீழ் ரூமும், ஸ்பெஷல் சமையலும்?”

“ஐயோ லதா அக்கா? நீங்க இன்னும் அந்தக் காலமாவே இருக்கீங்க…. அந்த வரவேற்பெல்லாம், போட்டோக்ராபருக்கு. காலையில் போட்டோ எடுத்தது வேறு ஒருவர், இவர் ஸ்பெஷலிஸ்ட். தீம் போட்டோக்ராபர். அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி, பின்னாடி அடிக்கற கூத்து இருக்கே.. ப்ரீ வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட் என அமர்க்களப்படுத்துகிறார்கள். கல்யாணத்துக்கு முன்னாடியே, வேற அழகான இடத்துக்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக் கொண்டு போய், வித விதமாக ரசிச்சு எடுக்கிறார்கள், இது தான் இப்ப ட்ரெண்டே. நிறைய கல்யாணத்துக்கு போறதால, அவங்க கல்யாணச் சாப்பாடு சாப்பிடமாட்டாங்க, டயட்”

லதாவுக்கு இது அதிர்ச்சியான தகவலாக  இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் கேட்கவில்லை என்றவுடன், நிம்மதியாக இருந்தது.

அப்போதுதான் ப்ரீத்தி அந்தப் பெண்கள் குழுவிடம், “வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்டாள்.

“யார் அந்தப் பெண்கள்? உன் தோழிகள்  மாதிரி தெரியலையே, கொஞ்சம் பெரியவங்க போல இருக்கே?” என்றாள்  லதா.

“அக்கா, இவங்க மேக்கப் போட வந்தவங்க….”

“பிரியா ஒருத்திக்கு  இவ்ளோ பேரா?”

“ஐயோ லதா அக்கா, பொண்ணு மட்டுமா மேக்கப் போடறாங்க…. எல்லாரும் போடறாங்களே. இதுல நிறைய பேர் மெஹந்தியும் போடுவாங்களே”

 “நான் ரொம்ப நாளா இந்தியால நடக்கிற கல்யாணத்துக்கு வரலே, அதான் ஒன்னும் தெரியல” சமாளித்தாள் (வயசாச்சுன்னு ஒதுக்கவா முடியும் ?).

லதா கல்யாணக் கூடத்திற்கு வந்தாள். ரொம்ப நேரமாக பிஸியாக சுற்றிக் கொண்டு இருந்த லதாவின் அத்தை பையன் அவன் மனைவி இருவரின்   கண்களில்  ஒரு வழியாகப்  பட்டாள்.

“சாரி லதா, உன்கூட பேச நேரமே இல்ல” அத்தை பையன் மட்டும் கொஞ்ச நேரம் பழங்கதைகள் பேசிக் கொண்டிருந்தான்.

“லதா, உங்கம்மா  அந்த காலத்தில், ரிஸப்ஷனுக்கு தானும் வர மாட்டாங்க. உன்னையும் அனுப்ப மாட்டாங்க தானே” எனக் கேட்டான். 

“ஆமா…. அதைத்தான் நானும் வழியெல்லாம் நினைத்துக் கொண்டு வந்தேன். நாங்க பணம் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்ட காலம் அது. எல்லாரும் ரொம்ப டிரஸ் பண்ணிக்கிற இடத்துக்கு, தானும் போக மாட்டாங்க… என்னையும் போக விட மாட்டாங்க. கல்யாணத்துக்கு மட்டும் கூட்டிக் கொண்டு போவார்கள்”

“இன்னிக்காவது ஒழுங்கா கலந்து என்ஜாய் பண்ணு” சொல்லிக் கொண்டே சென்றவன், “பிங்க் ரிஸப்ஷன், தெரியும் தானே?” எனத் திரும்பி சொல்லிவிட்டு சென்றான்.

“அய்யயோ. இது என்ன பிங்க் ரிஸப்ஷன்’ என அருகில் இருப்பவர்களிடம்

கேட்டாள்.

“நீங்க மெயில், வாட்ஸப் இதெல்லாம் பார்க்கலையா?” 

“ஊருக்கு வர்ற அவசரத்தில், பார்க்கல, அப்பறம் கனெக்ஷன்  இல்ல”

“பிங்க் ரிஸப்ஷன்…. அதாவது பிங்க் கலர் டிரஸ் இல்லன்னா, வரவேற்புக்கு வர முடியாது. நாளைக்கு கார்த்தால, வயலட் வெட்டிங். பொண்ணு மாப்பிள்ளை மட்டும் தான்  வயலெட் கலர். மத்தவங்க யாரும் அதைப் போடக்  கூடாது”

“இன்னிக்கு பிங்க் போடலன்னா நாளைக்கு வயலட் போட்டா என்ன பண்ணுவாங்க….”

“ஹால் பக்கமே தல காட்டக் கூடாது. வெளியில ஓரத்துல தான் இருக்கணும்.”

“இந்த சட்டமெல்லாம் யார் போடறாங்க?”

“நல்ல போட்டோ வீடியோ வேணும் இல்ல, எல்லாம் நம்ம போட்டோக்ராபர்ஸ் தான்” 

“நான் பிங்க் கொண்டு வரலியே”

“கல்யாணம்னா சும்மாவா?அதுவும் தீம் வெட்டிங்னா? போய் ஒரு பிங்க் டிரஸ் வாங்குங்களேன். பக்கத்திலேயே கடை இருக்கு”

லதா தனியாக கடைக்குச் சென்று, வாங்கணுமா என யோசித்தாள். இவளை மாதிரி ஒரு குழு, கடைக்குக்  கிளம்பிக் கொண்டிருந்தது. யாரெல்லாம் பிங்க் இல்லையோ, அந்தக் குழுவுடன் போகலாம்  என இடைவிடாது அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இவளும் சேர்ந்து கொண்டாள்.

“ஒரு மணி நேரத்தில், ஜாக்கெட் தைத்து கொடுத்துடுவாங்க. அதான் இந்த கடைக்கு வந்தோம்” என்றது அந்தக் குழு.

5000 ரூபாய்க்கு குறைந்து எதுவும் கண்ணில் படவில்லை, வேறு வழியில்லை என வாங்கினாள். பரவாயில்லை, ஊருக்கு போன பின் கூட கட்டிக்கலாம். ஆண்களுக்கு தான் பிங்க் கேவலமாக இருக்கும்.

அந்தக் குழு, ஒரு மணி நேரம் போக்குவதற்காக, அங்கேயே சுற்றி, கழுத்துக்கு, காதுக்கு எல்லாம் ரோட்டோரத்தில் பொறுக்கினார்கள். அதில் ஒரு ரெண்டாயிரம் செலவு… பிறகு ஜாக்கெட்டுடன் மண்டபம் திரும்பினார்கள். 

ஒரு பிங்க் மாளிகைக்குள் நுழைந்தது போல் இருந்தது வேலைப்பாடுகள். பிங்கில் இத்தனை வகையான பூக்களா? இந்த அலங்காரமெல்லாம் இவர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள்.?? வாவ்! என வியந்தாள்.

எல்லோரும் பிங்கில் தன்னை அலங்கரித்துக் கொள்ள கிளம்ப, லதாவுக்கும்  அந்த உற்சாகம் அவளையறியாமல் தொற்றிக் கொண்டது.

திரும்பி வந்தவுடன் ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. கல்யாண ஜோடியை சந்திக்கவோ என நினைத்தாள். அருகில் சென்ற பின் தான் தெரிந்தது, அது ஒரு சுயமி (செல்பீ) எடுக்கும் இடம் என்று.

ஒரு selfie எடுத்து, வரவேற்பில் இருப்பதாக சிரித்துக் கொண்டே status போட்டாள். மண்டபத்தில் இதற்கென, இலவச இணைய இணைப்பு இருந்தது. அங்கங்கே சாட் ஐட்டம்ஸ் கொட்டிக் கிடந்தது. பாணி பூரியுடனும், பேல்பூரியுடனும் போட்டோ எடுத்துக் கொண்டாள்….பிங்க் புடவைக்கு தோதாக, பஞ்சு மிட்டாயுடன் ஒரு போட்டோ.

திடீரென்று ரொம்ப பெரிதாக ஒரு சத்தம் கேட்டது. “டி ஜெ ”  எனச் சொன்னார்கள். இளையராஜா பாட்டும் இருக்குமா…இல்லை இளசுகளுக்கு தோதாக அனிருத் பாட்டு தானா? எனக் கேட்டாள்.

“லதாக்கா, உங்களுக்கும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆடலாம்” என்றார்கள். உள்ளே யாரோ அவளை இழுத்துக் கொண்டு போனார்கள்.

விண்ணையே அதிர வைக்கும் சத்தத்தில், “விண்ணைத் தாண்டி வருவாயா” என்ற பாடல் ஓடிக் கொண்டிருந்தது. கொஞ்சமாக சாப்பிட்ட பேல் பூரியும், பாணி பூரியும், அதிகமாக வேலை செய்ய, அதற்கு ஜெட் லாகும், சத்தமான பாட்டும் தோள் கொடுக்க, லதாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது.

சரியாக அந்த நேரம் பார்த்து, “வருது வருது விலகு விலகு… வேங்கை வெளியே வருது ” என்ற இளையராஜா பாட்டு போட, என் வயதுக்காரர்கள் துள்ளிக் குதித்தனர். முதல் முறையாக லதாவிற்கு இளையராஜா பிடிக்காமல் போனார், மாடிக்கு ஓடினாள்.

தலை வலி மண்டையைப் பிளக்க, ரூமிலேயே இருந்தாள். நல்ல வேலையாக சித்தி மட்டும், அங்கே தான் அமர்ந்து இருந்தார்.

“ஏன் சித்தி? நீங்க ரிஸப்ஷன் போகலை ?”

“ஆமா! நான் அங்க இருக்கேனா இல்லையான்னு யார் கவனிக்கப் போறாங்க? நான் மஞ்சப் புடவைதான் வெச்சுருக்கேன். எப்படியும் எனக்கு அந்த சத்தம் ஒத்துக்காது” என்றாள்.

சித்தி மட்டும் புத்திசாலியா? இல்லை அந்த காலத்து மனுஷங்க எல்லோருமா? 

ஒரு மணி நேரம் கழித்து, விடாமல் லதாவின் போன் அடித்துக் கொண்டே இருந்தது.

“என்ன… பொண்ணு மாப்பிள்ளையோட போட்டோவா…. இதோ வந்துட்டேன்” ஓடிச் சென்று, ஒரு புன்சிரிப்புடன் கலந்து கொண்டாள்.

பீட்சாவிலிருந்து பாஸ்தாவரை, வகை வகையாக சாப்பாடு இருந்தது. எல்லாம் இருந்தும், வயிறு சரியில்லாததால், தயிர் சாதத்தை தேடி சாப்பிட்டு முடிக்கவும், லதாவின் கணவர் போன் செய்யவும் சரியாக இருந்தது.

“என்ன? நல்லா என்ன விட்டுட்டு என்ஜாய் பண்ற போல இருக்கு?”

 “ஆமா… போட்டோ பார்த்தீங்களா?” 

“உம்ம்ம்… இந்திய கல்யாணம்னா கல்யாணம் தான். ஆமா ? நியூஸ் பார்த்தியா, இனிமே மண்டபத்துல ட்ரிங்க்ஸ் உண்டாம்” என்றான்.

லதாவுக்கு மீண்டும் தலை சுற்றியது. (இது கல்யாண மண்டபத்திற்கு இல்லை என்ற அறிவிப்பு லதாவின் காதுக்கு இன்னும் எட்டவில்லை)

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் (சிறுகதை) – ✍ மரு. உடலியங்கியல் பாலா

    நிலாவின் அம்மா (சிறுகதை) – ✍ வித்யா குருராஜன், புதுச்சேரி