ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
மிகப்பெரிய அரண்மனை போன்றதொரு வீட்டின் பட்டு விதானமும், ரத்தினக் கம்பளமும் விரிந்திருக்க, அறையெங்கும் தாழம்பூ மலர் வாசம் பரவிக் கொண்டிருக்க, அந்த அறையின் ஒவ்வொரு அடியிலும் நித்திய சுகம் விரவி இருக்க, இதை எதையும் அனுபவிக்கவியலாத அவஸ்தையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு, மனதிற்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் வசம் சிக்கி குழம்பிக் கொண்டு இருந்தான் மகிந்தன்.
அதில் முக்கியமானதாக நிறைந்திருந்தது.. அந்த மக்களை.. அவனது பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெரும் ஆட்களை அடித்து நொறுக்கி கொன்றொழித்த அந்த மனிதன் தான்.
‘நிஜமாகவே அவன் மனிதன் தானா? இருக்கவே முடியாது. ஒரு சாதாரண மனிதனால ஒரு மாமோத்த அடக்குவது கூட முடியவே முடியாத காரியம். என்ன தான் நான் அந்தப் போர் பயிற்சி எடுத்துக்கறவங்களுக்கு நித்தில சாறு கொடுத்திருந்தாலும், நான் வரையறுத்து, பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிகமாக இருந்தால் தான் இப்படி இத்தனை மனிதர்களையும், இவ்வளவு பலநூறு யானைகளையும் அடிச்சு கொல்லும் சக்தி கொஞ்சமாவது கிடைச்சிருக்கும்.
ஆனால் நான் சொன்ன அளவை விட அதிகமாக அந்த நித்தில சாரப் பருகியிருந்தா, அந்த மனுஷனுக்கு உடனே மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கல. ஆனா, அந்தப் பானத்தினால தான் அவனுக்கு இத்தனை பலம் கிடைச்சுருக்குன்னு சொல்றாங்க. ஆனா, என்னால இத எல்லாம் நம்பவே முடியாது. ஒருவேளை அவன் இயல்பிலேயே அதீத சக்தி கொண்டவனா இருப்பானா? அப்படின்னா, அது தாவ் கிரகத்துல ஆளுங்களுக்குத் தான் அந்த மாதிரியான அதீத சக்திகள் இருக்கு. அப்போ எனக்கு வந்த தகவல் உண்மை தானா?” என்று எண்ணியவாறே, அந்த அறைக்குள்ளாகவே நடந்து கொண்டிருந்த மகிந்தன் தனது கையில் இருக்கும் கணினித் திரையை உயிர்ப்பித்து அதைக் காற்றில் மிதக்க வைத்த பின், சிருஷ்டியால் உருவாக்கப்பட்ட அந்தப் புதுவகை மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் ஒவ்வொருவரும் 12 அடி உயரத்தில் இருந்தனர். அவர்கள் என்றென்றுமே மரணமே தழுவாத வகையுடனான உடலமைப்புடன் உருவாக்கப்பட்டிருந்தனர் (அப்படி இருக்க முடியுமா??!).
மகிந்தன் தனக்கிருக்கும் தொழில்நுட்ப சக்தியால் தனது விருப்பத்திற்கு ஏற்ப உடலமைப்பு, உயிர் சக்தி என அனைத்தையும் முன்பே கணினியில் பதிவு செய்து வைத்துவிட, இதோ சிருஷ்டியில் தீண்டுதலில் அந்தப் பொம்மைகள் இப்பொழுது மனிதர்களாக.
அதன் மூலம் யுவாவிற்கும் அழிவிற்கான வகைச் செய்தாள் சிருஷ்டி, அவள் அறியாமலேயே. அந்தப் புதுவகை மனிதர்களுக்கு அபரமேயர்கள் எனப் பெயரிட்டான் மகிந்தன்.
எந்தவித மின் சாதனங்களையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ அல்லது ஆயுதமாக மாற்றவும் கூட அவர்களுக்குத் தெரியும். மேலும் அவர்களின் உடல் வலிமையும் அசாதாரணமானது. இந்த அபரமேயர்கள் 10 பேர் சேர்ந்தால் போதும், இந்த யுவா கிரகத்தின் பாதி ஜீவராசிகள் அழிவதற்குப் போதுமானதாய் இருக்கும்.
ஆனால் இந்த யுவா மக்களை வைத்தும் வேறு ஒரு திட்டம் இருந்தது மகிந்தனுக்கு. அவனைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் அவனுடைய குறிக்கோளுக்கு வெறும் முதற்படி கூட அல்ல.
அந்த அபரமேயர்கள் தனது மெய்க்காப்பாளர்களாக இருக்கும் தைரியத்தில் தான் மாமோத்களை வென்றெடுத்த மனிதனை இங்கு மகிந்தன் வர வைத்தான்.
ஏனென்றால் முதலைக்குத் தண்ணீரில் தான் பலம் அதிகம் என நம்பினான். ஆகவே தன் இடத்திற்கு அந்த எதிராளியை வரவழைத்து அவனது விவரங்களை அவன் மூலமாகவே அறிந்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினான்.
ஆனால் முதலைக்குத் தான் தண்ணீரில் பலம். காட்டின் அரசன்.. கர்ஜிக்கும் சிங்கமானது, எவ்விடத்திலும் சிங்கம் தான்.. எங்கெங்குமே அரசன் தான்.
மகிந்தனின் அழைப்புக் கடிதம் அதிரூபனுக்கும், வாசுவிற்கும் சேர்த்தே தான் கிடைத்தது. அவர்கள் இருவரும் தனிவிமானத்தில் ஸ்வர தீபத்திலிருந்து யகுசாவை நோக்கி பறந்து கொண்டிருந்தனர். வெகுகாலத்திற்குப் பிறகு வானில் இப்படி நீண்ட நேரம் பறந்து கொண்டிருப்பதெல்லாம், அதிரூபனுக்கு அவன் மனது அவன் வாழ்வின் முந்தைய காலம் நோக்கி இட்டுச் செல்லக் காரணமாகியது.
அவனவளால் உயிர் சுகம் கண்ட பொழுதுகள், இப்போதும் கண்முன்னே காட்சிகளாய் விரிய துவங்கியது. சிறுவயதிலிருந்தே சிருஷ்டியை அவன் அறிந்திருந்தாலும், இருவரும் எப்பொழுதும் வெவ்வேறு பாதையில் தான்.
ஏனென்றால் சிருஷ்டி.. சிருஷ்டிப்பவள், அவன் அதிரூபன் அதனை அழிப்பவன். இந்தத் தாவ் கிரகத்தின் ஒவ்வொரு உயிரும் சிருஷ்டியின் உள்ளம் கனிந்தாலே உயிர்ப்பிக்கும். ஒவ்வொரு மலைச் சிகரமும், சிறு சிறு புல்லின் நுனியும் சிருஷ்டியின் விரல் தொட்டே உயிர்ப்பிக்கும்.
ஐந்திணை அரசர்கள் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியாக அரசாண்டு கொண்டிருந்தாலும், அந்த ஐந்திணை மக்களை மனத்தால் சுமந்து அவர்களின் இன்பங்களில் இணைந்து, துன்பங்களின் துயர் துடைத்துக் கரம் கோர்க்கும் ஒருவன் அவர்களுள் ஒருவன் அதிரூபன்.
அவன் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு வேற்று கிரகத்தில் இருந்தோ, அல்லது அந்த மக்களுக்குள்ளாகவோ ஏதேனும் பிரச்சனை வருகிறதென்றால் அங்கு நிச்சயம் அவற்றிற்கான முடிவாக இருப்பான் அதிரூபன்.
அன்று தாவ் கிரகத்தின் ஐந்திணை பெருவிழா, வருடா வருடம் நடக்கும் முக்கியமான திருவிழா. அந்தத் தினத்தில் ஐந்திணை மக்களும் குறிஞ்சியின் மலைமுகட்டில் வந்து கூடியிருக்க, அத்தனை தலைவர்களும் ஆசி கூறும் இந்த விழா.
மேலும் அனைத்து மக்களுக்கும் அவர்களது பாதுகாப்பு பற்றிய உறுதியையும், மற்ற கிரகங்களுக்குத் தாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்துக் கொண்டிருக்கும் பாதுகாப்புக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும், மேலும் கிரகத்தின் நிலையை உயர்த்த என்னென்ன செய்யப் போகிறோம் என்ற வருங்காலத் திட்ட மதிப்பீடுகளும் மக்கள் முன்னிலையில் தெளிவாக விளக்கப்படும் நாள் அது.
அங்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் குறைவும் இருக்காது. அங்குத் தலைவர், மக்கள், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்த வேறுபாடும் என்றுமே இருந்ததில்லை. அன்றும் அதுபோலவே மொத்த மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாக நிலவொளியில் உணவு உண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து மறுநாள் காலையில் அவரவர் அவரவர் நாட்டிற்குச் சென்று விடுவர்.
ஆனால் இத்தனை வருடங்களில் அதிரூபன் அந்த ஐந்திணை பெருவிழாவில் கலந்து கொண்டதே இல்லை. ஏனென்றால் அத்தனை தலைவர்களும் குறிஞ்சித் திணையில் மட்டுமே இருப்பதால், மேலும் மக்கள் அனைவரும் குறிஞ்சியிலே அந்த இருநாட்கள் தங்கி இருப்பதால் அங்கு ஒவ்வொரு திணைக்கும் சென்று ஏதாவது பராமரிப்பு வேலைகள் மீதம் இருந்தாலும், அல்லது பாதுகாப்பும் ஏற்பாட்டினை பற்றிய ஐயப்பாடு இருந்தாலும் அதையெல்லாம் சரி செய்து கொள்ளும் தருணமாக இதைப் பயன்படுத்திக் கொள்வான் அவன்.
அதுபோலவே சிருஷ்டிக்கும் இதுபோன்ற விழாக்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு மக்களும் அவளது உயிர் தான் என்கையில், தன்னை மட்டும் அவர்கள் அத்தனை பேரிலிருந்து பிரித்துத் தனியாக மேடை அமைத்து அதில் உட்கார இவளுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை.
அந்த முறை தேவ தேவன் இவளிடம் மிகவும் வற்புறுத்தவே தான், அந்த விழாவில் பங்கேற்க வந்திருந்தாள். அதுமட்டுமின்றி அவளுக்காக அந்த மக்களிடம் கூறுவதெற்கெனவும், முக்கியமானதாக ஒரு விடயம் இருந்தது.
அதுபோலவே அதிரூபனுக்கும் இந்த வருடம் பெருவிழாவில் கலந்து கொள்ள ஏதோ ஆசை வந்து விட்டது, அதனால் அவனும் இதோ இங்கு விழாவில். ஏற்கனவே கூறியது போலவே முதலில் தேவ தேவர் குறிஞ்சித் திணைக்கான வளர்ச்சித் திட்டங்களையும், அதன் பாதுகாப்பு மேம்பாடுகளையும் மற்றும் மற்ற திணைகள் மற்ற கிரகங்களுக்கு உடனான நட்புறவை மேம்படுத்துவது பற்றியும் தனது வருங்காலச் சிந்தனைகளை மக்களிடம் கூறி அவர்களின் கருத்தையும் கேட்டறிந்தார்.
அடுத்து சில்வானஸ், அவரும் இது போலவே முல்லைத் திணையில் திட்டங்களைக் கூறி மக்களின் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு, அதன் சாதகப் பாதகங்களை மக்களிடமே விவாதித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
அடுத்ததாக மருத நிலத்தின் அரிமா, நெய்தல் நிலத்தின் அம்பரி மற்றும் பாலை நிலத்தின் சேத் ஆகியோரும் இதுபோலவே ஒவ்வொருவராய் தங்கள் திணைகளுக்கான வளர்ச்சி திட்டங்களைக் கூற ஆரம்பித்து மற்ற கிரகங்கள் உடனான நட்புறவை மேம்படுத்தவும் ஆலோசனைகளை மக்களிடம் கேட்டுப் பெற்றனர்.
அதற்கு அடுத்ததாய், அடுத்தடுத்த பொறுப்புகளில் இருப்பவரும் பேசுவதற்கும், மக்களிடம் கலந்துரையாடுவதற்காகவும் மேடையில் ஏறினார்.
இந்த மேடைப் பேச்சு முதலில் சென்றது அதிரூபன் தான். அவனைத் தான் ஒட்டுமொத்த தாவ் கிரகமே குத்தகைக்கு எடுத்து இருந்ததே.. அவன் மேடை ஏறியதும் இங்கு மக்களிடையே, பெரும் கூச்சல்.. கரகோஷம்.. ஆனந்த வாழ்த்து.
அதிரூபனின் மதிமுகம் இவை எல்லாவற்றையும் கண்டு மேலும் பூவாய் மலர, மனதில் பெரும் மகிழ்வுடன் அதனை ஏற்றவன் மெதுவாக மக்களின் நல்வாழ்வு பற்றிப் பேச ஆரம்பித்தான்.
“என் இனிய சொந்தங்களுக்கு இந்த நற்பொழுதின் நல்வணக்கம். என்ன இங்க இருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். நான் யாருன்னு தெரியும் தானே உங்களுக்கு?” என்று அவன் மக்களிடம் கேட்க
அவர்களோ, “தெரியும்.. தெரியும்.. அதிரூபன்.. எங்கள் காவல் தலைவன்.. தீயவைகளின் அழிவிற்கு அரசன்..” என்று ஆரவாரித்தனர்.
அதைக் கேட்ட மீண்டும் முகம் மலர்ந்த அதிரூபன், “ரொம்பச் சந்தோசம் என் மக்களே..” என்று அந்த மலர்ச்சி மாறாது கூறிவிட்டு, பின் மிகவும் கூர்மையான பார்வையுடன், கவனமாக, அடுத்து பேசப்போகும் விஷயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து பேச துவங்கினான்.
“நான் உங்ககிட்ட சில முக்கியமான விஷயங்கள் பத்தி பேச போறேன்.. அந்த மாதிரியான, மிக உணர்வுப்பூர்வமான விஷயங்களை நான் பேசணும்னா.. அதோட முக்கியத்துவத்தை நீங்க உணர்ந்து கேட்கணும்னா, உங்க ஒவ்வொருத்தருக்கும் நான் யார்.. என் பதவியோட முக்கியத்துவம்.. இதெல்லாம் தெரிஞ்சுருக்கணும்னு நினச்சேன். இப்போ உங்களுக்கு நான் யார்னு தெரிஞ்சுடுச்சுல்ல? இப்போ விஷயத்துக்கு வருவோம்.
நமக்கு இருக்கற அதீத சக்திகள் ஒவ்வொன்னும் நமக்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கற சாதாரணமான விஷயங்கள் தான். இந்தப் பிரபஞ்சத்துல இருக்கற ஒவ்வொரு உயிருக்கும்.. உயிரற்றவைக்கும் கூடத் தனித்துவமான ஒரு இயல்பு இருக்கு.
ஒரு உயிர் துன்பத்தில் அடிபட்டு வலியால துடிச்சா.. அதைத் தூக்கி விடுவது தான் இன்னொரு உயிரோட கடமை. நாம நம்ம கடமை பற்றி மற்றும் நினைப்போம். அந்தக் கடமைக்குப் பேரு அபரிமிதமான சக்தி கிடையாது. அந்தக் கடமையைச் செய்வதற்குப் பேர் உதவி கிடையாது.
பரஸ்பரம் ஒவ்வொருத்தர் மேலும் அன்பு செலுத்தறதுக்குப் பேர் உதவி இல்ல. அது தான் இயற்கையோட இயல்பு. இங்க எதுவுமே ‘நான்’ என்பது கிடையாது. எல்லாமே இங்க எல்லாமே நாம் தான்.
இங்க பூக்கும் ஒவ்வொரு பூவும் நமக்காகப் பூப்பது கிடையாது. இங்க துளிர்க்கற ஒவ்வொரு இலையும் நமக்காக வசந்தம் வீசறது கிடையாது. இங்க பெய்கின்ற ஒவ்வொரு துளி மழையும் நம்ம தாகம் தணிக்கப் பொழியறது கிடையாது.
இப்போ இந்த வீசற காத்துல இருக்கிற பிராணவாயுவும், நமக்காக உருவாகிறது கிடையாது. இதோ, அந்த வெய்யோனிலிருந்து வெளிவரும் மென் கதிர்கள் எல்லாம் நமக்கு ஒளி கொடுப்பதற்காக இவ்வளவு தூரம் பயணிக்கறது இல்ல.
ஒவ்வொரு பொருளும், அதது.. அததோட இயல்புல இருக்கு. நாம அதையெல்லாம் உபயோகிக்கிறோம் அவ்வளவுதான். இந்தப் பிரபஞ்சத்துலயே மிகப்பெரிய சுயநலவாதி நாம தான். நாம எல்லா வளங்களையும் அனுபவிச்சிட்டு.. அதற்குப் பிரதியா எதுவுமே திருப்பிச் செய்யறது இல்ல.
நம்மகிட்ட இருந்து அந்த இயற்கைக்கு நாம கொடுக்க வேண்டியது அன்பு மட்டும் தான். அத நாம ஒவ்வொருத்தருக்குள்ளேயும் பகிர்ந்துட்டா, அந்த இயற்கை இன்னும் சந்தோசமா இருக்கும். இந்த ஒரு சின்ன விஷயத்தை இங்க இருக்கற எல்லாருமே புரிஞ்சுக்கணும்.
இங்க எல்லாரும் சமம்ன்னு நாம வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனா, ஒரு சிலரோட மனசுக்குள்ள எங்கிருந்து இந்த நஞ்சு புகுந்ததுன்னு தெரியல. ஒரு சிலர், நாம இப்படி ஒளிஞ்சு இருந்து பிற கிரகங்களுக்கு உதவத் தேவை இல்ல. நம்மிடம் நிறையச் சக்திகள் இருக்கு. அந்தச் சக்திகள உபயோகிச்சு நாம மொத்த பிரபஞ்சத்துக்கும் அரசனா இல்லாம, ஏன் இப்படி மறைந்து இருந்து உதவி செய்யணும்னு ஆதங்கப்படறாங்க.
இதெல்லாம் நான் பெரிய பாவம்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா.. இது நம்ம கிரகித்து விதிகளுக்குப் புறம்பானது. ஏன்னா, இதெல்லாம் நம்ம இயல்பு இல்ல. இந்த இயற்கை நம்மள அப்படிப்பட்ட இயல்போடு படைக்கல. ஒரு சிங்கம், மான கொல்லுதுன்னா, அது தான் இந்த உலகின் நியதி. ஆனா.. அது இயற்கையின் விதின்னு ஏத்துக்கலாம்.
ஆனா.. ஒரு மான் இன்னொரு சிங்கத்தைக் கொல்லணும்னு நினைச்சாலோ, அல்லது காட்டின் தலைவனாக முயற்சித்தாலோ.. அது தப்பு. அது இயற்கை இல்ல. அங்க ஏதோ தப்பா நடக்குதுன்னு அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு தப்பான விடயம் இப்போ பரவ ஆரம்பிக்குது. இங்க இருக்கிற ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் இருக்கு. இன்னைக்கு நான் வாழனும்னாலும், உங்க உதவி தேவை.
நீங்க வாழனும்னாலும் இன்னொருத்தர் உதவி தேவை. இதுல எனக்கு அதிகச் சக்தி இருக்கு.. நான் பெரியவன்.. அப்படின்னு நினைச்சுட்டு ஏன் மத்தவங்களுக்குத் தலைவனா இருக்கணும்னு ஆசைப்படறோம்?
நம்ப ஐந்திணை தலைவர்களும் உங்ககிட்ட அப்படி அரசன் மாதிரியா நடந்துக்கறாங்க? இதோ இங்க நடக்கற ஒவ்வொரு விஷயங்களும் உங்கள் முன்னாடி வெளிப்படையா பகிர்ந்துக்கறோம்.
ஒவ்வொரு கருத்தும் முக்கியமா இருக்கு நமக்கு. ஒவ்வொரு திங்களப்பவும் ஒவ்வொரு திணையிலையும் தனிப்பட்ட மக்கள் கூட்டம் நடைபெறுது. அதுல மக்களோட குறை நிறைகள் மட்டுமல்லாம, அவங்களோட ஒவ்வொரு தேவையும் பார்த்து பார்த்து நிறைவேற்றப்படுத்து.
இவ்வளவு ஏன்.. தலைமைப் பொறுப்பில் இருக்கற எங்களுக்கே ஏதாவது உதவி தேவைபட்டுச்சுன்னா, நாங்க தயங்காம மக்களிடம் கேட்கறோம் இல்லையா? நீங்களும் உங்கள்ள ஒருவரா தான எங்களை நினைக்கறீங்க.
அதே மாதிரி நாம ஏன் பிற கிரகங்கள்ல இருக்கற ஜீவராசிகளை நினைக்கக் கூடாது? ஒவ்வொரு உயிரும்.. வெறும் உயிர் மட்டுமல்ல. அதற்கு உணர்வும் இருக்கு.. அதனோட விருப்பங்களை நிறைவேத்திக்கற உரிமையும் இருக்கு. ஆனா.. அந்த விருப்பங்கள், பிற உயிரை ஒரு நுண்துமி அளவுக்குக் கூடக் காயப்படுத்தக் கூடாது.
நாம யாருக்கும் கீழேயும் இல்ல, யாருக்கும் மேலேயும் இல்ல. இப்படி எல்லாம் நாம் எல்லா உயிரிடத்திலும் சமநிலையைக் காண்பதால் தான், இயற்கையும் மனம் மகிழ்ந்து சமநிலை கொண்டிருக்கு.
இயற்கை மட்டுமே இங்க பெருந்தெய்வம்.. அதுவே நம் தாய்.. அதன் மடியில் நடைபயிலும் சிறு குழவியென நாம் உணர்ந்தால், என்றென்றுமே அதே தாயன்போட அந்த இயற்கை நம்மைக் காக்கும்.” என்று அவன் பேசி முடித்ததும் கட்டுப்படுத்தவியலா கரகோசம் மக்களிடம்.
அங்கிருந்த மக்களே இப்படி என்றால், அவனது இந்த உணர்வுப்பூர்வமான உரையைக் கேட்ட, அவர்களைக் காக்கும் அந்த இயற்கை அன்னை.. வானிலிருந்து பனி மழையைத் தூவி தனது மகிழ்வை வெளிப்படுத்தி அவனை ஆசீர்வதித்தாள்.
சுற்றிலும் வீசிய தென்றல் காற்றும், அங்கிருக்கும் ஒவ்வொருவரின் கண்ணம் தொட்டு வாழ்த்துக் கூறியது. அந்த மலையில் வளர்ந்திருந்த ஒவ்வொரு மரமெங்குமே அக்கணமே பூக்களாய் பூத்து பன்னீரை பொழிந்தது.
ஏரிக்கரை ஓரத்தில் துள்ளிக் குதிக்கும் மீன்கள் காற்றில் பறந்து வந்து அதிரூபனுக்கு வாழ்த்து கூறின. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயாக அந்த ஆதவனும், அதிரூபனை நோக்கி தனது பொன்னிளம் கதிர்களால், நல்லாசிகள் பரப்பியது.
அதுவுமல்லாது, அங்கிருந்த மக்கள் அனைவரும் இதுவரை மனதில் எங்கோ ஓர் ஓரத்தில் தங்களுக்கு இருக்கும் இந்த அதிசக்திகளை எண்ணி மனதில் கர்வம் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் இன்று இன்று கர்வபங்கம் அடைந்திருக்கும்.
இப்படி ஒவ்வொருவரும் ஆனந்த மனநிலையில்.. உள்ளுக்குள் பனியாய் உறைந்திருந்த உள்ளம், பரஸ்பர அன்பினால் உருகி.. கசிந்து போய் இருக்க.. சிருஷ்டியோ, உடலெங்கும் காற்றில் தவழும் முகிலென மாறிப் போனதாய் ஒரு பரவச நிலையில் இருந்தாள்.
அழிக்கும் சக்தியான அவன்.. உயிர்களைக் காப்பது.. அதுவும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்துவது, பிறருக்கு செய்யும் உதவி கூட, உபகாரமல்ல, கடமை என்று கூறியது.. இயற்கையின் மகோன்னதத்தை உள்ளத்தால் உணர்ந்து, அதை அனைவருக்கும் உணர்த்துவது.. மேலும் தாவ் கிரகத்தின் ஒவ்வொரு உயிரும், அதன் தனித்தியல்பு மாறாது.. என்றென்றுமே மனத்தால் கூட மாசடையாது மேன்மக்களாய் இருக்கவேண்டும் என நினைப்பது.. இவையெல்லாம் சேர்த்து அவன் மீது அவ் வணங்குக்குத் தித்திக்கும் பிரமையுடன், பிரேமையும் உண்டாக்கியிருந்தது. தானும் அந்த வெண்ணிற பனிமழையாய் மாறி.. அதிரூபன் மேல் பொழிவதாய் ஒரு பிரம்மை.
அதன் பின் பேசச் சென்றது சிருஷ்டி. என்னதான் மனமெல்லாம் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்திருந்தாலும், தான் இருக்கும் சூழலும், இப்பொழுது தான் பேசவேண்டிய விஷயமும் கருதி, மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
அவள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் வருவதில்லை தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் தாயென்பது யாரென்று தெரியும் தானே. அவளது முகம் கொண்டே தங்களைப் படைக்கும் தேவதை அவளென்று அறிந்தனர் அவர்கள். அவளும் ஒரு முக்கியமான விடயத்தைப் பேசவே அன்று வந்திருந்தாள்.
முதலில் அனைத்து மக்களுக்கும் அன்பால் வாழ்த்து பகிர்ந்தவள், பின்.. “எல்லாருக்கும் அதிரூபன் பேசிய விடயங்கள் புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன். நானும் அவர் கருத்துள்ள உடன்படறேன் தான். இது போல ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் நாமே ஆளணும்ன்ற எண்ணம் மட்டுமில்ல, சாகா வரம் பெறவேண்டுமென்ற எண்ணமும் நம்ம மக்களிடம் தலை தூக்க ஆரம்பித்திருப்பதாய் ஒரு செய்தி என் காதுக்கு வந்திருக்கு.
பிறத்தல், மடிதலும், மடிதல் மீண்டும் உயிர்த்தலுமே இயற்கையின் நியதி. என்றுமே, எதுவுமே சாசுவதமாய் இருப்பதில்ல. தீராக் கதையைக் கேட்க இங்க யாருக்கும் நேரமில்லை. எல்லா விடயத்துக்கும், அழகான ஒரு முற்றுப்புள்ளி தேவை. அப்படிப்பட்டதான ஒரு முற்றுப்புள்ளி தான் மரணம்.
மரணத்தை வென்று நாம் எதை ஆள? ஒளிரும் வெய்யோனுக்கும் ஒரு நாள் முடிவுண்டு.. வீசும் காற்றும் ஒரு நாள் நிற்பதுண்டு.. பொழியும் மழையும் தீர்ந்து போவதுண்டு.. துளிர்க்கும் மலரும் உதிர்வதுண்டு..
அதுபோல், உயிர்க்கும் ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது அவசியம். மரணமில்லா பெருவாழ்வு என்றுமே மனதுக்கு நிறைவாகாது. மரணமென்னும் முற்றுப்புள்ளி, அழகான கவிதையாய் நம் வாழ்க்கைக்கு இருக்க வேண்டுமென்றால், வாழும் ஒவ்வொரு நாளையும் நாம் அழகானதாய், பிற உயிர்களையும் அழகாக்குவதாய் வாழவேண்டும். அதனால் எம்மக்களே.. மரணமில்லா வாழ்வுன்ற பேராசை என்றுமே நமக்கு வேண்டாம்.
இன்னைக்கு நான் படைக்கும் தொழில்ல இருந்தேன்.. அதை என் மனசுக்குநிறைவா செய்துட்டு இருக்கேன்.. எனக்கு முன்னாடி படைப்புத் தொழில்ல இருந்தவர்களும் இதை நிறைவா செய்துட்டு இருந்தாங்க.. எனக்குப் பின்னாடி என் இடத்துக்கு வரவங்களும் அதே நிறைவோடு செய்வாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
அதனால.. சாகாவரம் என்ற இயற்கைக்குப் புறம்பான விடயத்தை நம்ம மனசுல இருந்து துடைத்தெறிந்துவிட்டு, வாழும் ஒவ்வொரு நாட்களையும் அன்பால் அழகாக்குவோம்.”என்று கூறி அவள் பேசி முடித்துக் கீழே இறங்கவும், தரை தொடும் அவளது அந்த வெற்றுப் பாதங்களைத் தன் மார் மீது ஏந்திக்கொள்ளும் பரவச நிலையில் இருந்தான் அதிரூபன்.
ஆக்க சக்தி தான் அவள்.. இருப்பினும் மரணம் பற்றி எவ்வளவு அழகாகப் புரிந்துவைத்திருக்கிறாள். மரணத்தின் புனிதத்தை எப்படி வார்த்தைகளால் கோர்த்து கவிதையாய் கூறியிருக்கிறாள்..
காதல் என்பது பார்வையிலும், மெய் தீண்டலிலும், அலங்கார வார்த்தைகளிலும் வருவதில்லை. உயிரும், உணர்வுமாய் உள்ளத்தைத் தொட்டு.. இருவருக்கும் இருக்கும் ஒத்த கருத்தால் உள்ளம் சேர்ந்திடுவது.
அந்த உயிர் தொட்ட கருத்துக்கள், இருவரின் உள்ளம் புகுந்து சென்று.. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு.. பார்வையிலே சத்தமின்றித் தொலைந்து, காலதேச வர்த்தமானங்களைத் தாண்டி பறந்து மிதந்து கொண்டிருந்தனர்.
காதல் உலகில் நாளும், கோளும் மாறினாலும்.. என்னாலும் நன்னாள் தானே?
அதுபோலவே அடுத்தடுத்த நாட்களில் அந்த உன்னதக் காதலானது, வார்த்தையாய் வளர்ந்து.. சிறுசிறு ஸ்பரிசத்தில் தொடர்ந்து.. இறுதியாக ஆசுவாச அமைதியில் இளைப்பாறியது. காதலுக்கான மௌன மொழியில், மனங்கள் இரண்டும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், வார்த்தைகளுக்கு வேலை இல்லை தானே?
அதுபோல அவர்கள் இருவரும் மௌன பாஷையில் பேசி காதல் வளர்க்கm அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல எண்ணிய வேளையில், ஏற்கனவே அதிரூபன் சந்தேகப்பட்டுப் பயந்தது போன்றதொரு விஷயம் அப்பொழுது நடந்தேற ஆரம்பித்தது.
(தொடரும் – புதன்தோறும்)
GIPHY App Key not set. Please check settings