sahanamag.com
சிறுகதைகள்

கேன்டீன் (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

து பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கேன்டீன் (சிற்றுண்டி விடுதி).

காலை ஏழு முப்பது மணிக்கே கேன்டீன் திறக்கப்பட்டாலும்,  9.30 மணிக்கு மேல்தான் அலுவலர்கள், பணியாளர்கள் வர ஆரம்பிப்பார்கள்.

மதியம் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை சாப்பாட்டு நேரம் மிகவும் பிசியாக இருக்கும். மாலை ஐந்து மணியிலிருந்து பணியாளர்கள் வீடு திரும்ப ஆரம்பித்து விடுவதால், பெரிதாக வியாபாரம் ஒன்றும் இருக்காது. எனவே, இரவு 8.30 மணிக்கெல்லாம் கேண்டினை மூடி விடுவார் உரிமையாளர்  நாகராஜன்.

அன்று திங்கள்கிழமை, வாரத்தின் முதல் வேலை நாள்.   உரிமையாளர் நாகராஜன் ஏழு முப்பது மணியளவில் கேன்டினை திறந்தார். உள்ளே சில பணியாளர்கள் காலை நேர உணவு வகைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கடைக்கு வெளியே வந்து நின்றார். அதை கவனித்த உரிமையாளர், “என்ன பெரியவரே? என்ன வேனும்?” என கேட்டார்

அவர் தயங்கியப்படியே, “ஐயா, என் பெயர் கருப்பையா, சிந்தாதிரிப்பேட்டையில இருக்கேன். குடும்பம் கஷ்டம், ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்” என்றார்.

“நீங்களே வயதானவரா இருக்கீங்க, உங்களால ஓடியாடி வேலை பார்க்க முடியாது. உங்களுக்கு என்ன வேலையை கொடுக்கிறது?” எனக் கேட்டார்,

“நீங்க சொல்ற வேலையை செய்யுறேன் ஐயா, ஏதாவது வேலை போட்டு குடுங்க” என கெஞ்சினார் அந்த பெரியவர்.  

அவரை பார்த்து இரக்கப்பட்ட நாகராஜன், “சரி சரி… கொஞ்ச நாளைக்கு பின்னாடி பாத்திரங்கள், பிளேட்டுகள் கழுவ உதவி செய்யுங்க. அவ்வப்போது சொல்ற வேலையெல்லாம் செய்து கொடுங்க. காலையில சீக்கிரமா வந்துடனும், சாயங்காலம் மூணு மணிக்கு புறப்பட்டு போயிடலாம்” என்றார்.

“ரொம்ப நன்றி ஐயா” என்றார் பெரியவர்.

அவரிடம் தொடர்ந்து பேசிய கேன்டீன் உரிமையாளர்,  “ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம், தினமும் காலையில் பத்தரை மணிக்கு பிறகு  கூட்டம் இல்லாத நேரத்தில் நீங்கள்  சிற்றுண்டியை இங்கு இலவசமாக சாப்பிடலாம். மேலும் அவ்வப்போது காப்பி,  டீ அருந்திக் கொள்ளலாம். அதை தவிர்த்து வேறு எதுவும் இங்கே தர மாட்டோம்” என்றார்.

எல்லாவற்றிற்கும் சரி என்று தலையசைத்த   அந்தப் பெரியவர், “நாளையிலிருந்து வேலைக்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்றார்.

அவர் கூறியபடியே மறுநாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்த பெரியவர், அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்தார். ஆனால், அவ்வப்போது களைப்படைந்து கூட்டம் இல்லாத நேரங்களில் ஓய்வாக அமர்ந்து கொண்டார்.  

விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து 15 நாட்கள் பணிக்கு வந்த பிறகு, மற்றொரு வேலையாள் மூலமாக பெரியவருக்கு சிறிய பிரச்சனை வந்தது.

பெரியவர் கேண்டீனுக்கு பின்னால் ஓய்வாக அமர்ந்து இருந்தபோது, ஒரு குசும்பு பிடித்த வேலையாள் முதலாளியிடம் சென்று, “ஐயா,  அந்தப் பெரியவர் மேலே ஒரு கண்ணு வச்சுக்கிடுங்க”  என்றான்,

“என்னடா சொல்ற? அவர் வயசுக்கு மீறி நல்லாவே வேலை பார்க்கிறாரே” என்றார் முதலாளி.

“இல்லை ஐயா,  அவர் தினமும் அவரோட பையில எதையோ எடுத்துக்கிட்டு பின்பக்க வழியாக தன்னுடைய சைக்கிள்ல போகிறார்.   நாங்க ஒரு முறை என்ன பெரியவரே, பையில என்ன வச்சி இருக்கீங்க என கேட்டபோது, ஒன்னுமில்லை தம்பி என்று சொல்லிவிட்டு அவசரமா சைக்கிளை ஓட்டிக்கிட்டு  போயிட்டாரு. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு ஐயா, நீங்கதான் பார்த்துக்கனும்” என சொல்லி முடித்தான் அந்த பணியாள்.

“அப்படியா சங்கதி,   சரி நான் பார்த்துகிறேன். நீ போய் உன் வேலையை பாரு” என கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் நாகராஜன்.

மறுநாள் மூன்று மணியளவில்  வேலை முடிந்தவுடன் முதலாளியிடம் சொல்லி விட்டு போகலாம் என்று கல்லாவின் அருகே வந்த அந்தப் பெரியவர் கல்லாவில் அவரைக் காணாது தவித்தார். 

பின்னர், வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளையும் பையையும் எடுத்துக் கொண்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தபோது, அவரது முதலாளி நாகராஜன் வழியில் நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.

அவரைப் பார்த்த நாகராஜன், “என்ன பெரியவரே டூட்டி முடிஞ்சு கிளம்பிட்டீங்களா? அதுசரி… அந்த மஞ்சபையில என்ன வெச்சு இருக்கீங்க?” என கேட்டபடியே பையை எடுக்கப் போனார்,

பதறிப்போன பெரியவர், “ஐயா,  அதுல ஒண்ணும் இல்லைங்க, என்னுடைய பொருள்கள்தான் இருக்கு” என தடுத்தார்.

பையை பிடுங்கிய நாகராஜன் கீழே கொட்டி பார்த்த போது, அதில் நான்கு காய்ந்து போன இட்டிலியும், சட்னி சாம்பார் பாக்கெட்டுகளும் இருந்தது.

அதை பார்த்த முதலாளி, “என்ன பெரியவரே, நீங்க நல்லா சாப்பிட்டுவிட்டு திருட்டுத்தனமாக வீட்டுக்கும் எடுத்துக்கிட்டு  போறீங்களா?” என கோபமாக கேட்டார்.

“ஐயா மன்னிச்சிடுங்க, நான் காலையில் சாப்பிடாமல் எனக்கு கொடுக்கிற இட்லிய தான் மடிச்சு வெச்சிக்கிட்டு, அங்க வீட்ல படுத்து கெடக்குற என் பொண்டாட்டி கிழவிக்கு எடுத்துட்டு போறேன்” என்றார்.

மேலும் தொடர்ந்த  அவர், “அவ முடியாம படுத்திட்டா,  நான்தான் சோறு ஆக்கி போடணும். நான் எடுத்துட்டு போற இட்லியதான் ரெண்டு பேரும் பிச்சி போட்டுக்குவோம். அதுக்கு பிறகு நான் ஏதாவது சோறு, குழம்பு வச்சு ராத்திரிக்கி சாப்பிடுவோம். மிச்சமிருக்கிறத  தண்ணி ஊத்திவச்சு காலையில பழைய கஞ்சியை கிழவிக்கு கரைச்சு வச்சுட்டு வந்து விடுவேன். பிறகு நான் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு இந்த இட்லியை இருவருமாக சாப்பிடுவோம்” என்றார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்து போன முதலாளி,  “ஏன் பெரியவரே உங்களுக்கு பசங்க இல்லையா?” என கேட்டார்.

“இரண்டு பசங்க ஐயா, அவனுங்க பொண்டாட்டி பேச்சை கேட்டுக்கிட்டு எங்களை தவிக்க விட்டுட்டு எங்கேயோ பஞ்சம் பிழைக்க போய்ட்டானுங்க. ஒத்தன் பெயிண்டர் வேல பார்க்கிறான், இன்னொருத்தன் கிடைக்கிற வேலையை செய்வான். அவங்க ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியாது. நாங்க ரெண்டு பேரும் எனக்கு கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் கஞ்சியோ, கூழோ சாப்பிட்டுகிட்டு சிந்தாரிப்பேட்டை கூவம் நதிக்கரை ஓரமா குடிசையில தங்கியிருக்கோம்” என சொல்லி முடித்தார் பெரியவர் கருப்பையா.

பெரியவரின் சோக கதையை கேட்ட அங்கிருந்த அனைவரும் கண் கலங்கினர்.

பிறகு முதலாளி பெரியவரிடம், “ஐயா, என்னை மன்னிச்சிடுங்க  நான் உங்கள தப்பா நெனச்சிட்டேன்.  நீங்களும் வயசானவங்க, உங்க மனைவிக்காக நீங்க பட்டினி கிடக்காதீங்க, இனிமே நீங்களும் இங்கே சாப்பிட்டுவிட்டு உங்க மனைவிக்கும் இங்கேயிருந்து இலவசமாகவே டிபன் எடுத்துக்கிட்டுப் போங்க. அப்புறம் சாப்பாட்டுக்குப் பிறகு சாம்பார், ரசம்,பொரியல் எது வேணும்னாலும்  எடுத்துக்கிட்டுப் போங்க” என்றார் பெருந்தன்மையுடன்.

அவசரமாக அதை ஏற்க மறுத்த பெரியவர், “ஐயா, அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் இப்போ எடுத்துக்கிட்டு போற மாதிரியே தினமும் என்னோட டிபனை மட்டும் எடுத்துப் போக அனுமதித்தால் போதும்” என்றார்.

பெரியவரின் பெருந்தன்மையையும் நேர்மையையும் பார்த்து அங்கிருந்த அனைவரும் வியந்து போய் நின்றனர்.

(முற்றும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!