in

காக்க! காக்க! ❤ (பகுதி 10) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 10)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9

யல்பானதாய் இருந்த இந்த நெருக்கம் மனதுக்கு மிகவும் நிறைவளித்தாலும், ஒருவித சுகஅவஸ்தையிலேயே இருந்தாள் பெண்.

இதில் மகிந்தன் வேறு அவளறைக்குள் நுழைந்ததும், எது எப்படியானாலும் பரவாயில்லை, இதோ… இவன் இப்படி அத்துமீறி படுக்கையறைக்குள் நுழைந்திருக்கும் அதிரூபனை, கண்டிப்பாக மகிந்தனிடம் காட்டிக் கொடுத்துவிடும் உத்தேசத்துடன் மிகவும் பலம் கொண்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறிக் கொண்டிருந்தாள் சிருஷ்டி.

ஆனால் அதிரூபனோ, அவளின் வாயிலிருந்து சத்தம் கூட வரமுடியாத படிக்கு அவளைத் தன்னோடு இணைத்து பற்றியபடி சிறை செய்திருந்தான்.

மகிந்தனோ, சிருஷ்டி அந்த அறைக்குள் இல்லாததைக் கண்டு முதலில் திகைத்தவன், பிறகு அந்த அறை முழுவதும் தேடினான். இவர்கள் இருவரும் கதவிடுக்கில் ஒளிந்து கொண்டிருப்பதைக் கவனியாது மேலும் சற்று நேரம் அந்த அறைக்குளேயே காத்துக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் அங்கேயே இருந்தவன், “ஒருவேளை அவள் தன்னைத் தேடி தனதறைக்குச் சென்றிருப்பாளோ?” என்ற எண்ணத்தில் அங்கிருந்து கிளம்பும் நேரம் அவனது அலைபேசி ஒலித்தது.

அதை இயக்கி அவன் பேசத் துவங்குகையில் மறுமுனையில் இருப்பது சிருஷ்டிக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் என்பது தெரிய வந்தது.

“ஹ்ம்ம்… சொல்லு விக்டர்”

“சிருஷ்டிக்கு அடுத்த டோஸ் இன்னைக்குக் கொடுக்கணும். அவளை இன்னைக்கு நைட் கூட்டிட்டு வறீங்கல்ல? அதுமட்டுமில்லாம, அவளோட அடுத்த வேலையும் தயாரா இருக்கு”

“ஆமா… அவளுக்கான எல்லா வேலையும் இன்னையோட முடிஞ்சுடும். அதனால, கண்டிப்பா கூட்டிட்டு வரேன்”

“அவளுக்கு உண்மை எதுவும் தெரிஞ்சுடலையே? அந்த அதிரூபன் வேற இங்க வந்துட்டதா சொன்னீங்க? ஒருவேளை அவன் எல்லா உண்மையையும், அதாவது சிருஷ்டி தாவ் கிரகத்தைச் சேர்ந்தவதான்ற உண்மையெல்லாம் அவகிட்ட சொல்லிட்டா என்ன செய்யறது?”

“சிம்பிள்… அவளுக்கு எப்போ உண்மை தெரிய வருதோ, அந்த நொடியே அவளை நான் கொன்னுடுவேன். அதுதான் ஏற்கனவே அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமா மருந்துன்ற பேருல விஷத்தை கொடுத்துட்டு வரேனே” என்று சாதாரணமாக மகிந்தன் கூறவும், நிஜமாகவே அப்பொழுது கிட்டத்தட்ட உயிர் போகும் நிலையில் தானிருந்தாள் அவள்.

விழிகள் கண்ணீர் வடிக்க, அதிரூபனை அடிபட்ட பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தாள். ‘இதுநாள் வரை தனது தந்தை என்று நினைத்திருந்த ஒருவன், இவ்வளவு மோசமாகச் சாயம் வெளுத்திருக்க வேண்டியதில்லை’ எனத் தோன்றி அந்த எண்ணம் உயிர் வரை அவளைக் கசக்கிப் பிழிந்து.

அந்த மகிந்தனின் உண்மை சொரூபத்தில் நிச்சயமாக அவள் உள்ளூர உடைந்தே போனதை அதிரூபனும் உணர்ந்தே இருந்தான். எனவே அவனும் இப்பொழுது அவளைத் தன்னிடமிருந்து விடுவித்திருந்தாலும், அவளுக்கு அவனை விட்டு நகரத் தைரியமில்லை.

மகிந்தன் மேலும், “அவள வச்சு நான் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாத்தையும் கிட்டத்தட்ட செய்துட்டேன். இன்னமும் அவளை ஏன் உயிரோட விட்டிருந்கேன்னா, ஒருவேளை அதிரூபனுக்கு நான் இங்க இருக்கற விஷயம், நான் செய்துட்டு இருக்கற காரியங்கள் பற்றி எல்லாம் தெரிஞ்சு என்ன தேடி வந்துட்டா, அவனை ஜெயிக்கறதுக்கான ஒரு துருப்புச் சீட்டா சிருஷ்டியை தான் பயன்படுத்தலாம்னு நினச்சேன். ஏன்னா, சிருஷ்டி அதிரூபனோட காதல் மனைவி இல்ல?” என்று மகிந்தன் வாயாலேயே அடுத்தகட்டமாக இத்தகைய உண்மை வெளிவர வர, இப்பொழுது காதலுடன் மன்னிப்பை யாசிக்கும் முகபாவம் சிருஷ்டியின் கண்களில்.

இப்பொழுது ஆறுதலாய் அவள் கண்ணீரை அவன் துடைக்க, ஆதூரமாய் அவன் தோளில் இவள்.

இன்னமும் மகிந்தன் தனது போனிலேயே, “அப்பறம் இன்னொரு விஷயமும் எனக்குத் தெரிய வந்துச்சு, தாவ் கிரகத்துல இருந்த நம்ம ஆளுங்க அங்கிருந்த சில்வேசன்கிட்ட மாட்டிக்கிட்டாங்களாம். இனி அவங்க என்ன மாதிரி கிரகம் விட்டுத் துரத்தப்படவெல்லாம் மாட்டாங்க. முதல் வேலையா அவங்களோட உயிரை பறிச்சுருப்பாங்க” என்று மகிந்தன் கூறவும், இப்பொழுது அதிர்வது அந்த விக்டரின் முறையாகியது.

“என்ன சொல்றீங்க சார்? தாவ் கிரகம் தான் முழுக்க முழுக்க அன்பினாலே சூழப்பட்ட உலகமாச்சே?” என்று அவனது அதிர்ச்சியை வார்த்தைகளுடன் இழைத்து கேட்கவும்

இப்பொழுது அந்த மகிந்தன் இறுகிய குரலில், “அங்க அன்புக்கு மட்டும் தான் மரியாதை. யாரொருவர் சுயநலமா சிந்திக்கறாங்களோ, அந்தச் சிந்தையால் மற்ற உயிருக்கு சின்னதா ஒரு கெடுதல் விளைவிச்சாலும்… அவங்களுக்குக் கண்டிப்பா அவங்க வாழ்க்கையை அவங்களே வெறுக்கற அளவுக்கான ஒரு தண்டனை கிடைக்கும். அதையும் விட, ஏண்டா பிறந்தோம்னு அவங்க வருத்தப்பட்டு தாங்களாகவே மரணத்துக்கு ஏங்கற அளவுக்கு இருக்கும் அவங்க கொடுக்கற தண்டனை. அதனால அங்க மாட்டிகிட்டவங்கள பத்தி யோசிச்சு நமக்கு எந்த உபயோகமும் இல்ல” என்று பேசிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.

மறுபுறம் சிருஷ்டிக்கு மகிந்தனது இந்த மொத்த உரையாடலையும் கேட்டதும் எப்படி இருக்கிறதாம். முழு அன்பு செலுத்தி, அந்த அன்பினாலே ஏமாற்றப்படுபவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அதுவும் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணரும் சமயம் அவர்கள் அடையும் வேதனைக்கு அளவே இருக்காது. அப்படியான ஒரு பாவப்பட்ட நிலையில் தான் இருந்தாள் அவள்.

அவளை நிருபன் எவ்வளவோ சமாதானம் செய்தும் கூட அவள் சாந்தப்படவில்லை. அவன் அவளிடம் இன்னும் மொத்தமாய் முழு உண்மைகளை எல்லாம் உரைத்து விளக்கமளித்துக் கொண்டு இருந்தான். ஆனால் அவளோ, இன்னமுமே அழுது கொண்டிருக்கச், சற்று நேரத்தில் அதிரூபனுக்குக் கோபமே வந்து விட்டது.

“இங்க பாரு சிருஷ்டி, உன்னுடைய இந்த நிலைமைக்குக் காரணம் நான் தான். ஏன்னா உன்னுடைய உயிர்சக்தி பாதிப்படைந்து, அதனால தான் நீ அவன் கிட்ட மாட்டிக்கிட்ட. ஆனா எப்படி நீ அவன்கிட்ட மாட்டி, இப்படி அவன் பொண்ணாவே வளர்ந்துட்டு இருக்கன்னு எனக்குத் தெரியல. இன்னும் சொல்லப் போனால் உன்னுடைய இந்த நிலையை அவன் பயன்படுத்திக்கிட்டானேன்னு உனக்கு அவன் மேல கோபம் தான் வரணும். ஆனா நீ அவன் உன்ன ஏமாத்தினத்தை நினச்சு இப்படி அழுகிறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல” என்று ஆத்திரம் ஆத்திரமாய்க் கூற, அவளுக்கும் மூளையின் ஏதோ ஒரு ஓரத்தில் சிறு தெளிவு உண்டானது.

ஆனாலும் கூட, “என்ன அவனோட பொண்ணுன்னு சொல்லி ஏமாத்திட்டான் ஆதி. நான் அவன நெஜமா இத்தனை நாள் என்னோட சொந்த அப்பாவா தான் பாசத்தோடு நினச்சேன். அதுமட்டுமில்லாம அவனோட பாசத்துக்காக எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? அவன் சொன்னதை எல்லாம் செஞ்சு எப்படியாவது அவன்ட்ட நல்ல பெயர் வாங்கணும், அவனோட பொண்ணுன்னு அவன் வெளில எல்லார்கிட்டயும் என்ன பத்தி பெருமையா சொல்லணும்னு என்னவெல்லாம் செஞ்சேன். ஆனா இவன் என்ன இப்படிக் கேவலமா பயன்படுத்தி இருக்கான். எவ்வளவு அடி முட்டாளா இருந்திருக்கேன் நான்” என்று அவள் கூற கூற, இன்னுமே சலிப்படைந்தே போனான் அதிரூபன்.

“சிருஷ்டி… ஏன் இப்படி முட்டாளா இருந்திருக்கேன்.. முட்டாளா இருந்திருக்கேன்னு பழசையே சொல்லி அழுதுட்டு இருக்க? இனிமேலாவது அப்படிப்பட்ட முட்டாளா இருக்காம அடுத்து என்ன செய்வதுன்னு யோசி. இப்படித் தகுதி இல்லாத ஒருத்தரோட நாடகத்தை நினச்சு அழுதுட்டு இருக்கறது தான் உச்சபட்ச முட்டாள்தனம்” என்று உச்சந்தலையில் ஆணியடித்தாற் போல அவன் கூற, அவனது வார்த்தைகளவாலுக்குள் ஆழமாக இறங்க.. அதன் பின்னரே ஓரளவிற்குத் திடமாகித் தெளிந்தாள் சிருஷ்டி.

அடுத்து அவளையும் வாசுவையும் அங்கேயே ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, தான் மட்டும் தனியாக மகிந்தனைப் பார்க்க போனான் அதிரூபன்.

மகிந்தனின் அறை அங்கு எங்கே இருக்கிறது என்றும் சிருஷ்டியிடமே விசாரித்து விட்டு அவ்விடம் நோக்கி செல்லலானான். அங்கு அந்த அறையின் முன்பு சென்றதுமே, முழுவதும் சாத்தப்பட்டு உள்ளுக்குள் தாழிடப்பட்டிருந்த அந்த அறை கதவின் மேல் எட்டி ஒரே ஒரு உதை. உடனே அதன் சென்சார் அலாரம் எல்லாம் பைத்தியம் பிடித்தது போல் கத்த ஆரம்பிக்க, அதிர்ந்து போய் உடனடியாக ஓடி வந்து கதவை திறந்தான் மகிந்தன்.

கதவை திறந்தவன் அப்படியே நிலத்திற்குள் புதைந்து விட்டால் தேவலை என்று எண்ணுமளவுக்கு ஒரு பயம் உடலெங்கும் பரவ, கோபத்தால் அக்கினிப் பிழம்பாய் கனன்று கொண்டிருந்த அதிரூபனைக் கண்டதும், அந்த நெருப்பிலே அப்படியே பொசுங்கிப் போய் விட்டதற் போன்றதான பிரமை.

என்னதான் ‘அதிரூபன் யுவா கிரகத்தை வந்தடைந்து விட்டான்’ என்று ஏற்கனவே மகிந்தனுக்குத் தெரிந்திருந்தாலும், அவன் தாவ் கிரகத்திலிருந்து துரத்தியடைக்கப்பட்டதற்குப் பிறகு இப்பொழுது தானே மீண்டும் அதிரூபனை நேருக்கு நேராய்ப் பார்க்கிறான்?

எனவே நடுங்கும் குரலில், நர்த்தனமாடும் நாவினைக் கட்டுப்படுத்த முயன்றவாறே, “நீ.. நீ.. எப்படி இங்க வந்த? நான் இங்க இருக்கிறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று அப்பட்டமான பயத்துடன்… அப்பிக்கொண்ட பயத்துடன் அவன் கேட்க

அதற்கு மிகவும் ஏளன நகையுடன், “எனக்கு நீ இங்க இருக்கிறது எப்படித் தெரியும்னு கேட்டியா? இல்ல… இதோ இப்படி மகிந்தனா உருமாறி.. இந்த யுவா கிரகத்தை அழிச்சுட்டு இருக்கறது எப்படித் தெரியும்ன்னு கேட்டியா?” என்று கேட்க அவனது இந்தக் கேள்வியில் மேலுமாய் அதிர்ந்தான் மகிந்தன்.

ஆனாலும் கூட மனதில் ஓரத்தில் சிருஷ்டி இன்னும் அவன் வசம் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அந்த எண்ணத்தால், தனது பார்வையில் திமிரை சற்று அதிக அளவில் சேர்த்துக் கொண்டு பார்த்தான்.

அவனது பார்வையில் அந்தத் திமிரை கண்டுகொண்ட நிருபன், மேலும் எரிச்சலுற்று, “எத்தனை தடவை அடிபட்டாலும் சிலர் திருந்த மாட்டாங்க. அதுல முதல் ஆள் நீ தான். அப்பேற்பட்ட புனிதமான தாவ் கிரகத்துல பிறந்த உனக்கு இப்படி ஒரு புத்தி இருந்திருக்க வேண்டாம். சொல்லு சிருஷ்டிய என்ன பண்ணின? அவ எப்படி இங்க உன்னோட மகளா இருக்கா?” என்று கேட்க

அவன் சிருஷ்டியை காணாது பரிதவித்து, அந்த வேதனையில் தான் கேட்கிறான் என்று எண்ணிய மகிந்தனோ, “சிருஷ்டிக்கு வந்த ஆபத்தெல்லாம் உன்னால தான் அதிருபா, இதுல நான் எதுவும் பண்ணல. என்ன நீங்க எல்லாரும் தாவ் கிரகத்தை விட்டு வெளியே துரத்தினீங்க, ஆனா என்னோட மருந்தினால பாதிக்கப்பட்ட மக்கள் நிறையப் பேர் அங்கேயே தான் இருந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் மாற்று மருந்து கொடுத்து அவங்களை எல்லாம் குணமாகி விட்டதா நீங்க நினைச்சீங்க.

ஹ்ம்ம்.. ஆனா.. அப்படி எல்லாம் முழுசா அவங்கள குணமாக்க முடியாது. அது மட்டும் இல்லாம நான் அந்தப் புரட்சி கூட்டத்துக்கு வந்திருந்த மக்களுக்கு மட்டும் தான் அந்த மருந்து கொடுத்து வந்ததா நினைக்கிறாயா? அப்படி நினச்சா, நீ தான் மிகப்பெரிய முட்டாள். நான் இன்னும் பல ஆயிரம் மக்களுக்கு என்னோட மருந்தை கொடுத்து இருந்தேன். அவங்க எல்லாம் இன்னமும் தாவ் கிரகத்திலிருந்து எனக்காக வேலை செஞ்சுட்டு தான் இருக்காங்க” என்று அவன் கூறவும், நிஜமாகவே ஒரு வகையில் அடிபட்டே போனான் அதிரூபன்.

எப்படி இப்படிப் பாதுகாப்பில் தான் இந்த அளவுக்குக் கோட்டை விட்டோம் என்ற குற்றஉணர்வு அவனை வதைக்கவே செய்தது.

“அதுமட்டுமில்லாம, அங்க நடக்குற ஒவ்வொரு விஷயமும் எனக்கு உடனுக்குடனே தெரிஞ்சிட்டு இருந்தது. அதுல முக்கியமா இங்க இந்த மாதிரி ஏதோ அணுகுண்டு கண்டுபிடிச்சுட்டாங்கனு நினைச்சு பயந்து அங்கிருந்து சிருஷ்டி இங்க ஓடி வந்தாளே, அதுவும் எனக்கு உடனே தெரிஞ்சுடுச்சு.

அது தெரிஞ்சும் கூட, சிருஷ்டி என்ன நேரடியா தேடி கண்டுபிடிக்க நாளாகும்னு நினச்சுக் கொஞ்சம் அஜாக்கிரதையாவே தான் இருந்தேன். ஆனா.. அப்படி வந்தவ வந்த கொஞ்ச நாளிலேயே நான் இங்க இருக்கறத கண்டு பிடிச்சுட்டா. அப்போ நான் இந்த அளவுக்கு இங்க யுவா கிரகத்தில் செல்வாக்கோடு இருந்தாலும், அப்பவே அவ நினைச்சிருந்தா என்ன கொன்னிருக்கலாம். ஆமா, அதே மாதிரி இங்க நடக்கற பிரச்சினைகளுக்கெல்லாம் பயந்து அவ என்ன கொல்லவும் வந்தா தான்.

ஆனா, தாவ் கிரகத்துல இருந்த என்னோட ஆள் அவளோட உயிர் சக்தியை அந்த நேரத்தில் பெரும்பாலான அளவு சிதைச்சுட்டான். அதனால என்ன கொல்ல வந்தவ, தன்னோட உயிர்சக்தி குறைஞ்சு போய் அப்படியே மயங்கி என் கால்ல சரிஞ்சுட்டா. அவளுக்கு நான் என்னோட மருந்துகளைச் செலுத்தி அவளை மயக்கத்திலிருந்து தெளிய வச்சு, அவளுடைய பழைய நினைவுகளை எல்லாம் அழிச்சு, அவள என்னோட மகள்ன்னு நம்ப வச்சேன்.

நான் இத்தனை செஞ்சதுக்கு உன்னுடைய உயிர் சக்தியையே முதல்ல அழிச்சிருக்கலாம். அதற்கு முயற்சியும் செஞ்சேன் தான். ஆனா நீதான் அழிவின் மொத்த சத்தியாச்சே. எவ்வளவோ முயன்றும் என்னால அத மட்டும் செய்யவே முடியல. அதனால என்ன? இப்ப தான் நீ என் முன்னாடியே நேருக்கு நேரா வந்துட்டியே? இப்போ என் ஆசை தீர என்னோட கையாலேயே உன்னோட உயிர நானே முடிக்கணும்” என்று அவன் கூறியதும்

“எதுக்காக வ்ரித்ரா? உனக்கு இத்தனை வெறி எதுக்காக? இத்தனை பேராசை எதுக்காக?” என்றவன் கேட்டதும்

“பேராசையா? ஹா.. ஹா.. பேராசை தான்னே நினைச்சுக்கோ. உலகத்துல இருக்குற எல்லாச் சக்தியையும் உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு, ஒளிஞ்சிருந்து, எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காம மத்தவங்களுக்கு நான் ஏன் ஓடி ஓடி போய் உதவி செய்யணும்? இது எந்த விதத்துல நியாயம்? எல்லா வகையான ஆயுத அறிவும் எனக்கு இருக்கு. எல்லா வகையான மருத்துவ அறிவும் எனக்கிருக்கு. உனக்குத் தெரியுமா அதிருபா? மருத்துவமும் ஆயுதமும் என்ன பொருத்தவரைக்கும் ஒன்னு தான். மருத்துவம்ன்ற விஷயத்துக்குள்ள தான் போர் பயிற்சியும், தற்காப்பு கலையும் அடங்கும்.

இரண்டுமே தற்பாதுகாப்புக்காகவும் உபயோகப்படுத்தலாம், மத்தவங்க உயிரை பறிக்கவும் உபயோகப்படுத்தலாம். அதே மாதிரி தான் என்னோட ஆயுதமும். மருத்துவமும் எனக்கு இஷ்டப்பட்டவங்கள காக்கும், எனக்கு வேண்டாதவங்கள அழிக்கும். ஆக மொத்தத்துல, இங்க காப்பவனும் நானே அழிப்பவனும் நானே. அதனால தான் என்னால ப்ரக்ட்டான பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது. நான் ப்ரக்ட்டான பத்தி சொன்னதும் உன் முகத்துல வருதே ஒரு பயம்.. ஒரு கவலை.. அது தான் என்னோட வெற்றி..

ஏன்.. அது அந்த வெய்யோட உட்கருன்றதால உங்களுக்குப் பயமா இல்ல? எப்பவும் போல அதே அன்பு.. இயற்கை.. பிற உயிர்களிடம் அன்பு செலுத்தறது அப்படினு கதைபேச முடியாம போய்டுமேன்ற பயமா? எது எப்படியோ, எனக்கு இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் என்னோட காலடியில் இருக்கணும். அதுக்கு அந்த ப்ரக்ட்டான் என்கிட்ட இருக்கணும். ஆனா நீங்க என்ன தாவ் கிரகத்திலிருந்து வெளியில அனுப்பின பின்னாடி முதல்ல என்ன செய்யறதுன்னே எனக்குத் தெரியல.

என்னோட ஆசை கனவு, லட்சியம் எல்லாமே முடிஞ்சுட்டா மாதிரி தோன்றிச்சு.. அந்த அஸ்தமனத்துக்கு நீ தான காரணம்ன்னு மட்டும் உறுதியான எண்ணம் இருந்துச்சு. அந்த எண்ணம் உன் மேல எனக்கு உச்ச பட்ச வெறியை உண்டு பண்ணிச்சு. அப்படி என்னோட கோபத்தையும், வெறியைம் உன் மேல காட்டணும்ன்னா.. நான் உன்ன விடப் பலசாலியா, உன்ன விட உயர்ந்த இடத்துல இருக்கணும்.

அந்தச் சமயத்துலதான் எனக்கு யுவா கிரகத்தோட உட்கரு ‘பிரக்யான்’ கிட்டத்தட்ட வெய்யோனொட உட்கரு தனிமமான ப்ரக்ட்டானுக்குச் சமமான தனிமமா இருக்குன்னு தெரிய வந்துச்சு. அதனால நான் நேரா நான் யுவா கிரகத்துக்கு வந்துட்டேன். ஆனா இங்க இருக்கறவங்ககிட்ட என்ன பத்தி எதுவும் சொல்லாம இந்தப் பிரக்யான் பற்றிய தகவலை மட்டும் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சு, அதை இங்க இருக்கிற தலைவர்கள்கிட்ட சொல்லி, அந்த மைய உட்கரு பிரக்யான வெளில எடுத்து, அத நாங்க சோதித்துப் பார்த்தபோது தான் இந்தக் கிரகத்தோட ஒரு முழுக்கண்டமே சிதைஞ்சு, சின்னாபின்னமாகி, அது இருந்த இடம் கூடத் தெரியாம போய்டுச்சு.

வெய்யோனொட வெப்பத்தில் கால்வாசி வெப்பநிலை கூட இல்லாத இந்தக் கிரகத்தோட உட்கருக்கே இத்தனை சக்தி இருகுதுன்னா, அப்போ அந்த அந்தப் பிரக்ட்டானுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்? அந்தப் பிரக்ட்டான நான் ஆயுதமா பயன்படுத்தினா எந்தப் பிரபஞ்சம் தான் எனக்கு அடிபணியாம போகும்? இப்போ கிட்டத்தட்ட அந்த ப்ரக்ட்டான் முழு ஆயுத வடிவமாகக் கூடிய நிலைமையில இருக்கு. இன்னும் கொஞ்ச நாளுல, நான் இந்த மொத்த பிரபஞ்சத்துக்கும் தலைவன் ஆகிடுவேன்.

ஆனா இதுல இருக்கற ஒரே ஒரு சோகம் என்னன்னா, என்ன முழுசா அழிக்க நெனச்ச நீ… இதையெல்லாம் பாக்குறதுக்கு இருக்க மாட்ட. ஏன்னா இப்பவே தான் நீ சாகப் போறல்ல?” என்று கூறி அதற்கான அதிரூபனிடம் சண்டையிட, சண்டையிட்டு அவனைக் கொன்று விடும் வெறியுடன் ஓடிவந்தான் மகிந்தன்.

ஆனால் இவனோ தனது ஒரு கையைத் திறந்து உடனே மூட, அதிலிருந்து வெளிப்பட்ட சிறிதானதோர் வெடிபொருள் மகிந்தனை தாக்கிவிட, அந்தத் தாக்குதலில் தடுமாறி வெகுதூரம் போய் விழுந்தான் மகிந்தன். அவன் மீண்டும் சுதாரித்து வரும்முன், வாசு சிருஷ்டியுடன் காணாமல் போய் விட்டிருந்தான் அதிரூபன்.

மகிந்தன் என்ன கூறினான்? என்ன திட்டத்தில் இருக்கிறான்? என்று முழுமையாகச் சிந்திக்கும் முன்னரே இந்த யுவாவின் மொத்த டிவி, சமூக வலைதளங்களிலும், அதிரூபன், வாசு, சிருஷ்டி இவர்கள் மூவரின் புகைப்படமும் ஒளிபரப்பப்பட்டு, மகிந்தனின் மகளை அதிரூபன் மற்றும் வாசு என்ற இரண்டு தீயசக்திகள் கடத்திக்கொண்டு போய் இருப்பதாய் செய்திகள் பரவ துவங்கின. மேலும் அதிரூபனையும், வாசுவையும் உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்குச் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த மக்களுக்கு மகிந்தன் என்பவன் மிகுந்த புத்திசாலி.. பலசாலி.. பணபலம், ஆள் பலம் மிக்கவன். அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெற்றவன் என்பதால், அவனது மகளையே ஒருவன் கடத்திக் கொண்டு போய் விட்டதை அறிந்து, அனைவரும் ஆத்திரப்பட்டுக் கொண்டு கோபாவேசத்துடன் மூவரையும் தேடிக் கொண்டிருந்தனர்.

அது அந்த யகுசா நாட்டில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த யுவா கிரகவாசிகளும் இப்பொழுது அதிருபன், சிருஷ்டி, வாசுவுக்கு எதிராகத் திரண்டிருந்தனர்.

இதில் எங்குப் போவது எங்கே ஒளிவது என்று எதுவுமே தெரியாது ஓடிக்கொண்டிருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் அப்படிக் கோபாவேசத்துடன் தேடிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திடம் அகப்பட்டுக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

அந்த வேளையில் வாசு மற்றும் சிருஷ்டியை அப்படியே தூக்கிக் கொண்டு வானில் பறந்து விட்டான் அதிரூபன். இறுதியில் ஒரு காட்டுப் பகுதியில் வந்து இறங்கிய அவர்களுக்கு மிகுந்த வேதனையாகிப் போய் விட்டது.

“என்ன மக்கள் இவங்க? யாரோ என்னமோ சொல்றாங்கன்னு இப்படி உண்மை எது எனத் தெரியாமல் ஒரே திசையில் போடற செம்மறியாட்டுக் கூட்டம் மாதிரி கண்ண மூடிகிட்டு நடக்கறாங்க?” என்று வாசு ஆதங்கப்பட, அவனை அதிரூபனும், சிருஷ்டியும் சேர்ந்து தான் சமாதானப்படுத்த வேண்டியதானது.

மேலும் அங்கு தனக்கும் மகிந்தனுக்கும் இடையில் என்ன நடந்தது என்று வாசு கேட்க, அங்கு நடந்தவை எல்லாவற்றையும் கூறத் தொடங்கினான் அதிரூபன்

வாசு தனது சந்தேகத்தை எல்லாம் கேட்க, அதை விளக்கும் பொறுப்பு அதிரூபனுக்கு இருந்தது.

“இந்தப் பாசு பிரக்யான் இரண்டுமே அணுஆயுதத்தை விடப் பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள். அந்தப் பிரக்யானோட அந்தச் சோதனை முயற்சியில் தான், யுவா கிரகத்தோட ஒரு கண்டமே அழிந்து விட்டதாக மகிந்தன் தற்பெருமை அடித்துக் கொண்டான். வெறும் ப்ரக்யானுக்கே இந்தளவுக்கு சக்தி இருந்துச்சுன்னா, அந்தப் பிரக்ட்டானுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்ற கொக்கரிப்பு வேறு.

அது மட்டுமில்லாம, இந்த இரண்டு வெடிபொருளும் அணுக்கரு இணைப்பு என்ற விதியின்படி செயல்படுது. அதாவது வெய்யோன்ல நடக்கிற அணுக்கரு இணைப்பு மாதிரி. அதனால இது கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்தப் பெருவெடிப்புத் தொடர்ச்சியாக நிகழ்ந்துட்டே இருக்கும். அதனால இந்த ஒட்டுமொத்த யுவா கிரகமுமே சிதறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

என்னதான் அந்த வ்ரித்ரனுக்கு எல்லாக் கிரகத்தையும் ஆளணும்னு ஆசை இருந்தாலும், அப்படி அவனோட ஆசை நிறைவேறாம போயிடுச்சுன்னா, இந்த யுவா கிரகத்தை மட்டுமில்ல, ஒட்டுமொத்த அண்டப் பேரண்டத்தையும்… அதிலிருக்கற ஒவ்வொரு கிரகத்தையும் சுக்கல் நூறாக வெடித்துச் சிதற வைக்கும் அளவுக்கு வெறியும் இருக்கு.

இப்போ அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான ஆயுதமும் அவன் கையில் இருக்கும் வேளையிலே, நாம எந்த அளவுக்கு அவனைத் தடுக்க முடியும்னு தெரியல. ஒருவேளை அப்படி அவளைத் தடுக்க முடியாது போனால், இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமல்ல… இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனை உயிரும்… உயிர் இல்லாத பொருளும் கூடச் சிதைந்து விடும்” என்று அதிரூபன் கூறக் கூற, வாசுவுக்கு மனமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது.

இந்நிலையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாததான ஒரு திகைப்பு. அப்படி அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில், அவர்களை நோக்கி ஒரு பெருங்கூட்டமே கையில் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்தது.

அவர்கள் அங்கே ஒளிந்து இருந்தது எப்படி தெரியும் எனத் திகைத்துப்போய் அவர்கள் நின்றிருக்க, ஓடி வந்து கொண்டிருந்த அவர்கள் அனைவரும் ஒரு சேர அந்த மூவரையும் தாக்க தொடங்கினர். உடனே மீண்டும் வாசுவையும் சிருஷ்டியையும் ஒருசேர தூக்கிக்கொண்டு, அதிரூபன் வானில் பறக்க, அவனுக்கு இணையாகப் பற்பல போர் விமானங்கள்.

அந்தப் பல நூறு போர் விமானங்களும் அவர்களைச் சுற்றிலும் பறக்க ஆரம்பிக்க, அதைக் கண்ட வாசுவிற்கோ, அப்படியே மயங்கி விழும் நிலை. அதைக் கண்ட சிருஷ்டி, அவனை வார்த்தைகளாலேயே தைரியப்படுத்திக் கொண்டிருந்தாள். மீண்டுமாய் அவர்கள் வேறொரு அடர்ந்த காட்டிற்குள் நுழைய, அங்குமே உடனடியாக இன்னுமொரு கும்பல் இவர்களைத் தாக்க ஓடி வந்து கொண்டிருந்தது.

அவர்களிடம் இருந்து மீண்டும் தப்பித்து இவர்கள் மூவரும் ஒரு பெரும் பாலைவனத்தை வந்தடைந்தனர். அங்குச் சென்றாலும் அடுத்தச் சில மணித்துளிகளிலேயே, பற்பல ஹெலிகாப்டரில் பல நூறு ரோபோக்கள் பல ஆயிரம் நவீன ஆயுதங்களுடன் வந்திறங்கின. உடனே அதற்கு அடிவயிற்றில் பெரும் கிலி பற்றிக் கொண்டது வாசுவிற்கு.

“எங்க போனாலும் இவங்க எப்படி நம்மள சரியா கண்டுபிடிச்சு இப்படித் துரத்திட்டே இருக்காங்க? எப்படி நாம போற இடமெல்லாம் இவங்களுக்கு இவ்வளவு துல்லியமா தெரியுது?” என்று அவன் சத்தமாய் யோசித்துக் கொண்ருக்க, அவர்கள் மூவரும் அந்த ரோபோக்களிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் சிருஷ்டிக்கு உண்மை புரிந்தது. “ஒருவேளை என் மேல ஏதாவது சென்சார் சிப் மாதிரி வச்சுருக்காங்களா?” என்று கேட்க, ஒரு கணம் நின்று அவளைத் திரும்பி பார்த்தான் அதிரூபன்.

உடனே, “ரொம்ப ரொம்பச் சரி சிருஷ்டி, கண்டிப்பா உன்கிட்ட தான்அந்தச் சென்சார் இருக்கு. அதனால தான், நாம போற இடமெல்லாம் அவங்களுக்கு சரியா தெரியுது” என்று அவன் கூற, தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டான் வாசு.

“இனிமே எங்க போறது என்ன செய்யறதுனு எனக்கு எதுவுமே தெரியல. ஏம்பா நீ தானே அழிவின் சக்தி? ஏன் உன்னோட சக்தியை உபயோகித்து இப்படி நம்மள தாக்க வரவங்க எல்லாரையும் அழிச்சுட கூடாது?” என்று அவன் கேட்க

“கொஞ்சமும் யோசிக்காம பேசாதீங்க வாசு.. இப்போ அதிரூபனும் திரும்பி போரிட ஆரம்பிச்சா, ஒருவேள அதனால ஆத்திரமடைந்து.. அந்த மகிந்தன் அந்த ப்ரக்ட்டானயோ, இல்ல பிரக்யானயோ, உபயோகிச்சா என்ன செய்யறது? எத்தனை எத்தனை மக்கள்.. எத்தனை எத்தனை ஜீவராசிகள்.. எத்தனை எத்தனை பிரபஞ்சங்கள் அழிவது?” என்று அவள் கேட்க, மொத்தமாய் நம்பிக்கை இழந்துவிட்டான் வாசு.

இறுதியில், ஒரு பாவப்பட்ட பார்வையுடன், “நெஜமாவே எனக்கு ரொம்பப் பயமா இருக்கு அதிருபா” என்று வாசு கூற

அவனது மனநிலை உணர்ந்த அதிரூபன், “எனக்கு உன்னோட பயம் புரியுது வாசு. ஆனா இது நாம போராட வேண்டிய நேரம். இப்படிப் பயப்படக் கூடாது அதுவும் ஒரு போர்வீரனோட அகராதியில, பயம்ன்ற வார்த்தையே இருக்கக் கூடாது. இப்போ இது உனக்காக எனக்காகன்னு இல்லாம, ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்காக நாம நடத்துற போராட்டம். அதுல நாம ஜெயிக்கணும்னு நினைக்கனுமே தவிர, எதிராளியோட பலத்த நினைச்சுப் பயப்படக்கூடாது.

இப்போ கண்டிப்பா சிருஷ்டி உடம்புல தான் அந்தச் சிப் இருக்குன்னு நான் சந்தேகப்படறேன். ஆனா அது அவ உடம்புல எங்க பொருத்தப்பட்டு இருக்குன்னு தெரியல.. அத எப்படி வெளில எடுக்கன்னும் தெரில. ஆனா அதையெல்லாம் பரிசோதிக்க இப்போ நமக்கு நேரம் இல்ல. ஏன்னா அந்தச் சிப் தொடர்ந்து நாம எங்க எங்க போயிட்டு இருக்குன்னு கண்காணிச்சு, அந்தத் தகவல எல்லாம் மகிந்தனுக்கு அனுப்பிட்டே இருக்கு.

அதனால இந்த மாதிரி மின்காந்த அலைகள், மின் நுண்ணலை கற்றைகள் எல்லாம் வேலை செய்யாத இடம் இருந்தா, நாம அங்க தான் போயாகணும். ஆனா, அப்படியான ஒரு இடம் யுவால இருக்கறதாவே எனக்குத் தெரில.” என்று அதிரூபன் கவலையுடன் கூற, அக்கணமே முகமெல்லாம் பிரகாசிக்க நின்றுவிட்டான் வாசு.

அதைக் கண்ட அதிரூபனும், சிருஷ்டியும், “ஏன் வாசு திடீருன்னு நின்னுட்ட?” என்று படபடப்புடன் கேட்க

அதற்கு வாசு, “இப்போ அதிரூபன் சொன்ன மாதிரியான இடம் எங்க இருக்குனு எனக்குத் தெரியும்” என்று கூற, மற்ற இருவரின் கண்களும் ஆனந்தத்தில் விரிந்து, ‘எங்கே?’ என்ற கேள்வியைத் தேக்கியது.

“அது தான் மகாசாயப் போராளி” என்றான் வாசு.

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் (சிறுவர் கதை) – ✍ ரமணி.ச

    மலரே மௌனமா ❤ (சிறுகதை) – ✍ ராஜஸ்ரீ முரளி, சென்னை