சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 9)
எல்லா நாளும் எப்பொழுதும் போல் சாதாரணமாகவோ சாதகமாகவோ விடிந்து விடுவதில்லை. சிலருக்கு எதிர்பாராத ஆனந்தத்தையும் சிலருக்கு ஜீரணிக்க முடியாத இழப்புகளையும் சுமந்தபடியே தான் விடியும்
இன்றைய காலைப்பொழுது பாலகிருஷ்ணன் என்கிற பாலுவுக்கும் அவ்வாறே, மிகப் பெரிய பாரத்தைக் கொண்டு வந்து இறக்கி விட்டிருந்தது
காலை ஐந்தரை மணிக்கு நாகராஜிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பு, அவரை வெலவெலக்கச் செய்திருந்தது
”நம்ம ராஜேந்திரன் ஒய்ஃப் இறந்துட்டாங்க பாலு…”
”என்ன சொல்ற நாகராஜ்..?”
”என்னாலேயும் நம்பவே முடியல. நைட்டு ஒரு மணி போல இறந்திருப்பாங்க போலருக்கு, மூர்த்தி தான் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாரு. நம்ம செட்ல எல்லாருக்கும் சொல்லிடச் சொல்லி ராஜேந்திரன் சொன்னாப்லயாம், ஞாபகம் வர்றவங்களுக்கெல்லாம் அப்புடியே நீயும் கொஞ்சம் சொல்லிரு”
”எப்புடிப்பா? நல்லா தான இருந்தாங்க?”
ஃபோனை வைத்து விட்டு அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தார் பாலு
காபி டம்ளருடன் வந்த சுமதி, ’புடிங்க..’ என்றபடியே நின்று கொண்டிருக்க, தலை நிமிர்ந்து மெதுவாய் காபியை வாங்கியவர், விஷயத்தை அவளிடம் சொல்லத் தயங்கினார்.
அந்தக் காலை நேரத்தில் பாலுவின் முகபாவனை எதையும் பெரிதாக கவனித்திராத சுமதி, மீண்டும் அடுப்பறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். எப்படியும் விஷயத்தை சொல்லித் தானே ஆகவேண்டும் என யோசித்தவர், மெதுவாக எழுந்து அடுப்பறைக்குள் வந்தார்
மிடறு விழுங்கியபடியே அவளை நோக்கியவர், சற்று தாமதித்து விஷயத்தைச் சொன்னார்
’’என்னங்க சொல்றீங்க?’’ என அதிர்ச்சியாய் கேட்ட சுமதி, பலமாய் அழத் துவங்கினாள். உடல்நிலை சரியில்லாத அவளை, மெதுவாக அமர வைத்தார். ஏற்கனவே கலங்கியிருந்த பாலுவிற்கு, உதடுகள் துடித்து கண்ணீர் வெளியேறியது
“கிளம்பலாங்க… கமலாவை கடைசியா பாக்கணுங்க” என்றாள் சுமதி அழுகையினூடே
பதிலெதுவும் சொல்லாமல் பாலு அமைதியாய் இருக்க, ”என்னங்க பேசாம இருக்கீங்க.. கிளம்புங்க”
”இப்ப நீ வர வேணாம். நான் மட்டும் போயிட்டு வந்துர்றேன்..”
”என்ன இப்படி பேசறீங்க? அவங்க சாவுக்கு கூட போகலன்னா எப்புடீங்க?”
”நீ சாப்பிடற மருந்துகளுக்கெல்லாம் இந்த அக்னியில வெளியில எங்கேயும் போகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு. கொரோனா பிரச்சனை வேற இருக்கு, காரியத்துக்கு போகும் போது அழைச்சுட்டு போறேன். இப்ப வேணாம், சொன்னா கேளு” என அவளை மறுத்துவிட்டு தான் மட்டும் கிளம்பினார் பாலு
பாலுவும் நாகராஜும், இன்னும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு கிளம்பியிருந்தார்கள். மயிலாடுதுறைக்கு பஸ் பிடித்து ராஜேந்திரனின் வீட்டை சென்றடைவதற்குள் உடலை எடுத்து விடும் வாய்ப்பு அதிகம் என்பதால், இவ்வாறான முடிவெடுத்திருந்தனர்
மற்ற மூவரை விட பாலுவின் மனதிற்கு மிகவும் நெருங்கியவர் ராஜேந்திரன். இருவரும் அரசுப் பணியில் சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றிருந்தனர்
ராஜேந்திரன் தனது ஒரே மகளை தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமத்தில் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டு, சொந்த ஊரான மயிலாடுதுறையிலேயே செட்டிலாகியிருந்தார்
பாலுவோ தனது சென்னை வீட்டில் மகன், பேரன் என காலத்தை ஓட்டத் துவங்கியிருந்தார்
திடீரென நினைத்துக் கொண்டால், இவர் அவரது இடத்திற்கு கிளம்பிச் செல்வதும், அவர் சென்னைக்கு வருவதுமாக இருந்தது. இருவரும் ஒரே மாதத்தில் பலமுறை சந்தித்துக் கொண்டதெல்லாம் கூட உண்டு
பாலு ஒவ்வொருமுறை மயிலாடுதுறைக்கு செல்லும் பொழுதும் வைத்தீஸ்வரனை தரிசிக்கும் ஆவலுடன் ஒட்டிக் கொண்டு சுமதியும் கிளம்பி விடுவாள்
ஆனால் ராஜேந்திரனின் சென்னை வருகை மட்டும் ஒத்தையிலேயே இருக்கும். தனது காரிலேயே சென்னைக்கு வரும் ராஜேந்திரன், பாலுவோடு சேர்ந்து மனம் போன போக்கில் ஒரு சுற்று சுற்றி விட்டுச் செல்லும் திட்டத்துடனேயே எப்பொழுதும் வருவதால், மனைவி கமலாவை அழைத்து வருவதில்லை
கபாலீஸ்வரரையோ, திருவேற்காடு அம்மனையோ பார்க்க வேண்டும் என கமலா எப்பொழுதாவது வலுவாக கோரிக்கை வைக்கும் பொழுது மட்டுமே அவளையும் அழைத்து வருவார்
ராஜேந்திரனை துணையில்லா மனிதனாக கற்பனை செய்து பார்க்க பாலுவின் மனம் ஒப்பவில்லை. காரில் நண்பர்கள் பேசிக் கொண்டே வந்த எந்தத் தலைப்புகளும் அவரது செவிகளை எட்டவில்லை
பாரம் மனதை அழுத்தியிருக்க, பேச்சில் நாட்டமின்றி போயிருந்தது. சாலையை வெறித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தார்
மயிலாடுதுறைக்குள் கார் நுழைந்திருக்க, பூக்கடைகள் வரிசை கட்டியிருந்த பகுதியில் வண்டியை நிறுத்தி, பேரம் பேசாமல் பிரம்மாண்டமான மாலையொன்றை வாங்கிக் கொண்டார்கள்
செல்லும் வழியெங்கும் போஸ்டர்களில் கமலா புன்னகையுடன் வரவேற்றுக் கொண்டிருந்தார். தோற்றம் மற்றும் மறைவு தேதிகள், அவருக்கு ஐம்பத்தைந்து வயதென்பதை சொல்லிக் கொண்டிருந்தது. போக வேண்டிய வயதா இது?
சென்ற முறை வந்த போது, அது தான் அவருடனான இறுதி சந்திப்பு என்பது பாலுவிற்கு எப்படித் தெரியும்?
அடை சுட்டு, கடலை சட்னியும் நாட்டு சக்கரையும் வைத்திருந்தார். வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளச் சொல்லி நல்லெண்ணையில் கலக்கிய இட்லி பொடியை அருகிலேயே வைத்திருந்தார். நினைவுகள் தொண்டையடைத்து கண் கலங்கச் செய்தது
தெருவின் மூலையிலேயே காரை நிறுத்தி, மாலையை சுமந்தபடி சாமியானாவை நோக்கி நடந்தார்கள் நால்வரும்.பெரும் கூட்டம் கூடியிருந்தது
பந்தலுக்குள் நுழைந்த பாலுவை கண்டதும், பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடி வந்தார் ராஜேந்திரன்.
“பாலு… பாலு… விட்டுட்டு போயிட்டா பாலு. என்னைப் பத்தி கொஞ்சங் கூட யோசிக்காம போயிட்டா பாரு பாலு. நான் என்ன பண்ணுவேன்?”
தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு அழுத ராஜேந்திரனுக்கு ஆறுதல் சொல்லத் தெரியாமல், பாலுவும் சேர்ந்து அழுதார். கண்ணாடிப் பெட்டிக்குள் மங்களகரமாய், அமைதியாக படுத்திருந்த மனைவியை காட்டி காட்டி கதறினார் ராஜேந்திரன்
“இனிமே நான் எங்க போவேன்? யாருக்காகப்பா நான் இருக்கப் போறேன்? என்னை அழைச்சுட்டு போகாம போயிட்டாளே… நான் என்ன பண்ணப் போறேன்?”
அனைவருமாக சேர்ந்து ராஜேந்திரனை சற்றுத் தள்ளியிருந்த நாற்காலி பகுதிக்கு அழைத்து வந்தார்கள். தண்ணீரைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார்கள்
அழுகையை மெதுவாய் நிறுத்தினாலும், மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
“முடிஞ்சுருச்சு… எல்லாம் முடிஞ்சுருச்சு…” என அரற்றினார்
”நாங்கள்லாம் இருக்கோம் பாலு, தைரியமா இரு, மனசை விட்றாத”
“யார் இருந்து என்னப்பா பண்ணமுடியும்..? அவ அவ…” என மீண்டும் குலுங்கி அழுதார்
நாற்காலியை ராஜேந்திரனுக்கு எதிராக இழுத்துப் போட்டுக் கொண்டு, அவரது கைகளை இறுகப் பிடித்தார் பாலு.
“என்னப்பா ஆச்சு திடீர்னு? உடம்புக்கு எதாச்சும்னா ஃபோன் பண்ணி சொல்லமாட்டியா நீ?”
“என்னத்த பாலு சொல்லச் சொல்ற? எப்பவும் போல மத்தியானம் சாப்ட்டுட்டு பேரன்கிட்ட ஃபோன்ல கதையளந்துகிட்டு தான இருந்தா. நான் கொஞ்ச நேரம் அப்புடியே கண்ணசந்துட்டேன். அஞ்சரை மணி போல எழுந்திரிச்சு வெளியில கிளம்பிகிட்டிருந்தேன். எப்பவும் அந்த நேரத்துல படுக்காதவ, நேத்து படுத்தா.’இவ்ளோ நேரம் இருந்துட்டு ஏண்டீ வெளக்கு வைக்கப் போற நேரத்துல போயி படுக்கற, தரித்திரம் புடிக்கறதுக்கான்னு கேட்டேன். கண்ணை தொறாக்காமயே ’இல்லைங்க, என்னமோ மாதிரி வருது’ன்னா.
நான் முணுமுணுத்துகிட்டே வெளியில கிளம்பிப் போயிட்டேன். ரெண்டு மணிநேரம் கழிச்சு திரும்பி வந்தப்போ அதே எடத்துலேயேஒ ருக்களிச்சு படுத்துருந்தா. ஏதோ கேட்டேன்..’ம்..ம்..’னு முனகிகிட்டே இருந்தாலே ஒழிய ஒண்ணும் பதில் வரல. பக்கத்துல போயி திருப்பி பார்த்தேன். ஃபேன் ஃபுல்லா ஓடிகிட்டிருந்தும் உடம்பெல்லாம் தண்ணி தண்ணியா ஊத்தி தரையெல்லாம் நனைஞ்சிருந்துச்சு. என்னடீ பண்ணுதுன்னு கேட்டேன். தெரியலன்னு கையாலேயே செய்கை காட்னா. அதான்ப்பா… அதான் அவ கடைசியா நெனைவோட இருந்தது”
அனைவரும் ராஜேந்திரனின் முகத்தையே ஈயாடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
”பக்கத்து வீட்டு பையனோட கார்ல தூக்கிப் போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். செக் பண்ணி பாத்துட்டு, ஐசியூவுக்கு கொண்டு போனாங்க. வாசல்லேயே உக்காந்து பாத்துகிட்டிருந்தேன். நைட்டு பதினோரு மணி இருக்கும். திடீர்னு கூப்ட்டு, எங்களால முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணிட்டோம், நார்மலுக்கு வரல. வேணும்னா தஞ்சாவூருக்கு கொண்டு போயி பாருங்கன்னாங்க. சரின்னு ஆம்புலன்ஸ்ல வரச்சொல்லி…”
அதற்கு மேல் பேச முடியாமல் ராஜேந்திரனுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க, மற்றொரு நண்பர் தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து கொடுத்தார்
“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் அவளை பேர் சொல்லி கூப்ட்ருப்பேன். அதுக்கப்பறம் எப்பவும் ’ஏய்’ தான். ஆனா பாரு, நேத்து ஆம்புலன்ஸ்ல போறப்ப மட்டும் ஆயிரம் தடவை கமலா கமலான்னு கூப்ட்டேம்ப்பா. ஆனா, அவளுக்கு கேக்கவே இல்லல. கண்ணு முழிச்சி பாக்க மாட்டாளான்னு கன்னத்தை தட்டி தட்டி கூப்ட்டு பாத்துகிட்டே போனேன். ஆஸ்பத்திரிக்கு போனதும் வாசலுக்கே வந்து டாக்டர் செக் பண்ணினாரு…”
இல்லையென்பது போல் தலையாட்டினார் ராஜேந்திரன்.
”முடிஞ்சு அரை மணிநேரம் ஆச்சுன்னு சாதாரணமா சொல்லிட்டாரு. நல்லா செக் பண்ணுங்க டாக்டர், அவ என்னை தனியா விட்டுட்டு போகமாட்டான்னு கால்ல விழுந்து கெஞ்சினேன்.. ஊஹூம்…”
பாலு கண்களை துடைத்துக் கொண்டார்.
கமலாவின் அருகே ராஜேந்திரனின் மகள் கவிதா அழுது ஓய்ந்தவளாய், வெறுமையுடன் தாயை பார்த்தபடி அமர்ந்திருக்க, ஊர்களிலிருந்து கூட்டம் கூட்டமாய் வந்து சேர்ந்து கொண்டிருந்த சொந்தபந்தங்கள், அவளைக் கட்டியணைத்து கதறியபடியிருந்தது
மேளவாத்தியக்காரர்கள், துக்கம் விசாரிக்க வந்திருந்த பெரும்பணக்காரர்களின் முன்னால் சென்று கும்பிடு வைத்தபடியும், ஐம்பதும் நூறுமாக வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்தபடியும் இருந்தார்கள்.
தனது பாட்டியைச் சுற்றி எல்லோரும் அழுது கொண்டிருப்பதை அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் சென்ற பேரன், தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தான்
தாங்கமுடியாத சோக நிகழ்வு என்பதை அறிந்திருக்காத குழந்தைகள் மகிழ்ச்சியாய் ஓடிப்பிடித்தும், பெரிய மரங்களைச் சுற்றி சுற்றி ஓடியபடியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்
தண்ணீர் எடுத்து வந்து, குளிப்பாட்டி, திருநீறு மஞ்சள் குங்குமம் பூசி, அந்த ஊருக்கும் சமூகத்திற்குமான அனைத்து சாங்கியங்களும் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது
’இதென்னப்பா, நம்ம ஆளுங்க வழக்கத்துல இல்லாத விஷயமா இருக்கு..’ என்றபடி கமலாவிற்கு அவளது மகள் கொள்ளி வைக்கப் போவது குறித்து ஊர் பெருசுகள் முகத்தை சுழித்தபடி விவாதித்துக் கொண்டிருந்தது. விஷயம் ராஜேந்திரனின் காதுகளை வந்தடைய, ஒரே சத்தத்தில் அனைவரின் வாயையும் அடைத்தார்.
”ஊர்ப் பழக்கம் ஜாதிப் பழக்கம் அது இதுன்னு சும்மா எதையாச்சும் நையி நையின்னு பேசிகிட்டே இருக்காதீங்க. கவி தான் கொள்ளி வைக்கப் போறா, போயி ஆக வேண்டியதை பாருங்க” என்றார் சத்தமாய்
பெண்களின் ஓலங்களுக்கு மத்தியில், ரதம் ஏறினார் ராஜேந்திரனின் மனைவி
கூண்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு டிராலியில் தனது இறுதி நிமிடங்களுக்காக கிடத்தப்பட்டிருந்தாள் கமலா
’ம்… டைமாச்சும்மா..’ என்ற மயான ஊழியரின் பெருங்குரல் கவிதாவை உலுக்கியது. பொறுக்கமாட்டாதவளாய் தாயைப் பார்த்து கதறியவளை, கமலாவின் அருகில் அழைத்துச் சென்றனர் கூடியிருந்த உறவுப் பெண்கள்.
கவர் பிரித்துக் கொடுக்கப்பட்ட கட்டி சூடத்தை தன் தாயின் மார்பின் மத்தியில் வைத்து ஏற்ற, ராஜேந்திரனுக்கு வலித்தது. கவிதாவை அணைத்தபடியே இறுதியாய் கதறியழுது தீர்த்தார்
பாலுவுடன் வந்த நண்பர்கள், டிரைவரை நேராக மயானத்திற்கு வந்து விடச் சொல்லியிருந்ததால், கார் மயானப் பகுதிக்கு சற்றுத் தள்ளி காத்திருந்தது. மக்கள் கலைந்து செல்லத் துவங்க, நண்பர்கள் மூவரும் பாலுவை நெருங்கினார்கள்
“என்ன பாலு, கிளம்புவோமா?” என மற்ற இருவரும் கேட்க
சற்று யோசித்த பாலு, “இல்ல… நீங்கள்லாம் கிளம்புங்க. நான் இருந்துட்டு நாளைக்கி ஈவினிங் வர்றேன்” என்றார்
“உங்க வீட்ல உடம்புக்கு முடியாம இருக்காங்கன்னு சொன்னியேப்பா..?”
“ஆமா நாகராஜ். இருந்தாலும் ராஜேந்திரனை இப்புடியே விட்டுட்டு வர்றதுக்கும் ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்சம் பேச்சுத் துணைக்கு இருந்துட்டு வர்றேன். ஒருநாள் தானே, அவ பாத்துக்குவா..” எனவும், தயக்கத்துடனே காரில் ஏறி அமர்ந்தார்கள் அவர்கள்
இரவு
மறுநாள் பால் ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனின் பங்காளிகள், பொருட்கள் வாங்குவது குறித்து அவ்வப்போது அவரிடம் வந்து ஆலோசனை பெற்றபடி இருந்தனர்
சோகத்திலிருந்து மீளாதவராய் அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தவர், மெதுவாக பாலுவின் அருகில் வந்தார்.
”பாலு… கொஞ்சம் மொட்டை மாடியில போய் உக்காருவோமா?”
”ம்… போலாம்..”
“ராமு, ரெண்டு பிளாஸ்டிக் சேரை மாடிக்கு எடுத்துட்டு வாப்பா” என அங்கிருந்த உறவுக்கார இளைஞனிடம் கூறி விட்டு முன்னே நடந்தார் ராஜேந்திரன்
வானம் சுத்தமான கருமையைக் பூசிக் கொண்டிருக்க, நட்சத்திரங்கள் தெளிவாய்த் தெரிந்தன. காற்று மிதமாய் வீசிக் கொண்டிருந்தது
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, லேசாக தொண்டையை கணைத்துக் கொண்டு, பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்
“பாலு, இத்தனை வருஷமா என் கூட இருந்தப்ப யோசிக்காததையெல்லாம், நேத்து அவ கண்ணாடிப் பெட்டிக்குள்ள படுத்துருக்கும் போது தாம்ப்பா யோசிச்சேன். எல்லாத்தையும் நெனைச்சு பாத்துட்டு எனக்கு அப்பறமாதாண்டா நீ சாவணும்னு சொல்லிட்டு போன மாதிரியே இருக்கு பாலு. லட்சம் லட்சமா சம்பாதிச்சு போட்ருக்கேனே தவிர, ஒரு நல்ல புருஷனா வாழாம போயிட்டேன்னு ஒரே நாள்ல புரிய வச்சுட்டு போயிட்டாப்பா’’ என்றார் ராஜேந்திரன் கண்ணீருடன்
புரியாமல் ராஜேந்திரனை பார்த்தார் பாலு
”வீட்டு வேலை செய்றதுக்காகவே கல்யாணம் பண்ணிட்டு வந்த மாதிரி தான் அவகூட இத்தனை வருஷ வாழ்க்கையும் போயிருக்கு. அவ என் பக்கத்துல வரும் போதெல்லாம் எதாச்சும் சொல்லிகிட்டும், திட்டிகிட்டுமே காலத்தை ஓட்டிட்டேன் பாலு. அவளும், ’ஏன் என்னை இப்புடி நடத்துறீங்க, ஏன் இப்புடி பேசறீங்க’ன்னு ஒரு வார்த்தை கூட எதிர்த்து கேக்காம, நம்ம தலையெழுத்து இதான்னு நெனைச்சுகிட்டு கடைசி வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்துட்டு போயிருக்கா” என்றார் பெருமூச்சுடன்
ராஜேந்திரனின் அணுகுமுறை பாலுவுக்கும் நன்றாகவே தெரியும். மூச்சுக்கு முன்னூறு முறை கமலாவை ’ஏய்..’ என்ற அதிகாரத் தோரணையோடு அழைத்தபடியே தான் இருப்பார்.
தண்ணீர் கேட்பது, ஃபேன் போடச் சொல்வது, சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுக்கச் சொல்வது என அனைத்திற்கும் அவரது மனைவியை நோக்கிய ‘ஏய்..’ குரல் தான்.
’இதைக் கூட உங்களால எழுந்திருச்சு செய்ய முடியாதா..?’ போன்ற மறைமுக அர்த்தம் கொண்ட பார்வையோ, கேள்வியோ என்றும் அவளிடமிருந்து வெளிப்பட்டதில்லை.
”சமைக்கறது, பாத்திரம் கழுவறது, கடைக்கு போறது, பொண்ணுகிட்டேயும் பேரன்கிட்டயும் ஃபோன்ல பேசறது… இதான் அவளுக்கு வாழ்க்கை. இந்த காலத்துக்கு தகுந்தமாதிரி இதை கத்துக்க, அதை தெரிஞ்சுக்கன்னு எவ்வளவோ திட்டிகிட்டேயிருப்பேன். ’நீங்க தான் இருக்கீங்களே, நான் எதுக்கு அதையெல்லாம் கத்துக்கணும்’னு உடனே பதில் சொல்லுவா. சொல்றதை கேக்காம பதிலுக்கு பதில் இப்புடி பேசியே டென்ஷன் பண்றாளேன்னு கோவம் மட்டும் தான் பயங்கரமா வருமே தவிர, அவ வாழ்க்கையை முழுசா என்கிட்ட குடுத்துட்டு நிம்மதியா இருக்க நினைக்கறான்னு புரியலப்பா எனக்கு” என்றார் அழுகையை விழுங்கியபடி
தங்கள் இருவரைப் பற்றியும் பாலுவிற்கு நன்றாகவே தெரியுமென்பதை ராஜேந்திரன் அறிந்திருந்தாலும், அவரது தற்போதைய மனநிலை, அனைத்து விஷயங்களையும் பெரும் பட்டியலாக்கி புலம்ப வைத்திருந்தது. பாலுவும் அவரை பேச விட்டு பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“நீ திட்டுனது, கத்துனது எல்லாம் இருக்கட்டும். அதுக்காக, அவங்க மேல அக்கறை, பாசமெல்லாம் இல்லாமலா இருந்தே? வெளில காட்டிக்கல, அவ்வளவு தான். சும்மா போட்டு மனசை குழப்பிக்காம ரிலாக்ஸ் ஆகப் பாரு ராஜு” என சமாதானம் செய்ய முயன்றார் பாலு
“அதான் பாலு… அதைத் தான் சொல்ல வர்றேன். நாம அன்பை காட்டாம இருக்கறது எவ்வளவு பெரிய தப்பு, முட்டாள்தனம்னு தான் சொல்ல வர்றேன். ’ஆம்பளை’ங்கற திமிர்த்தனம் நம்மள மீறி நமக்குள்ள வலுவா உக்காந்துருக்குது. அதை கொஞ்சம் வெளியில நிக்க வைக்கணும். நம்ம மனசுக்குள்ள இருக்கற சந்தோஷம், பூரிப்பு, அவங்களைப் பத்தி நாம நினைக்கற நல்ல விஷயங்கள்னு எல்லாத்தையும் அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும். கமலா இப்ப உயிரோட வந்தான்னா, எப்புடி எப்புடியெல்லாமோ பாத்துக்கலாம்னு ஆசையா இருக்கு” என குரல் கம்ம கூறியவர் மேலும் தொடர்ந்தார்
”பாலு, நீ என் அளவுக்கு மோசம் இல்லேன்னாலும், கிட்டத்தட்ட நம்ம கேஸ்தான்னு தெரியும் எனக்கு. நான் பண்ணின அதே தப்பை நீயும் பண்ணாம இருக்கணும்னு தான் இவ்வளவையும் உன்கிட்ட சொல்றேன்” என நண்பன் கூறியதைக் கேட்டு, தலையை குனிந்தார் பாலு
“அவங்கள நல்லா, சந்தோஷமா பாத்துக்க. எங்க போகணும்னு ஆசைப்பட்டாலும் முடியாதுன்னு சொல்லாம கூட்டிட்டு போ. என்ன தப்பு பண்ணாலும் திட்டாம கொள்ளாம வச்சுக்க. வீட்டு வேலைங்கள்ல முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணு. அவங்க இருந்தாலே போதும்கற மனநிலைக்கு வந்துரு பாலு. நல்லா தான இருக்காங்கன்னு அசால்ட்டா இருக்காம அப்பப்ப டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி உடம்பை செக் பண்ணி பாத்துக்க. சின்ன பிரச்சனையா இருந்தாலும் உடனே பாத்துரு” என பட்டியலிட்டுக் கொண்டே போனார் ராஜேந்திரன்
”என்னடா நிறுத்தாம இப்புடி ஓவரா அட்வைஸ் பண்ணிகிட்டே போறானேன்னு பாக்காத. அவ இல்லாம இனிமே எப்புடி இருக்கப் போறேன், என்ன மாதிரியான மன உளைச்சல்லயெல்லாம் மாட்டப் போறேன்னு நெனைச்சா ரொம்ப பயமா இருக்கு. இன்னைக்கி என்னோட மனநிலைமை எப்படி இருக்குங்கறதை எந்த வார்த்தையாலேயும் சொல்ல முடியாதுப்பா” எனவும்
“இல்ல ராஜூ, நான் அப்படி எதுவும் நினைக்கல. நீ சொல்றது எல்லாமே கரெக்ட் தான்” என ஆமோதித்தார் பாலு
சென்னையை நோக்கிய பாலுவின் பயணத்தில், ராஜேந்திரனின் வார்த்தைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தன. அவரது வலியை நூறு சதவிகிதம் உணர்ந்திருந்த பாலுவுக்கு, அனைத்துமே தெள்ளத் தெளிவாய் புரிந்தது
தன்னை கண் போல் பார்த்துக் கொள்ளும் ஒரு மனைவியை, ஒரு கணவன் எப்படி நடத்தவேண்டும், எப்படியெல்லாம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை கமலாவின் மரணம் காலம் கடந்து ராஜேந்திரனுக்கு உணர்த்தியிருக்கிறது
’அவர் செய்த தவறை நீயும் செய்யாதே’ என ராஜேந்திரனைப் போலவே பாலுவின் உள் மனமும் அறிவுறுத்தியது. இனிவரும் காலங்களில் சுமதியிடம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவும், தான் இருக்கும் வரை அவள் எந்த விதத்திலும் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் மனதினுள் உறுதி பூண்டார்
தனது தம்பியின் முன்னால் அமர்ந்திருந்த பாலுவின் மனைவி சுமதி சுமதி, ஒரு பாட்டம் அழுது முடித்து, முந்தானையால் மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்
“இன்னும் கொஞ்ச நாள் பாத்துட்டு அப்பறமா டாக்டர்கிட்ட போலாமே அக்கா?” என தம்பி கூற
“இல்லப்பா… இதுவே லேட்டாயிருச்சு. ராஜேந்திரன் அண்ணன் பொண்டாட்டி செத்து இன்னையோட ரெண்டு மாசமாச்சு. சாவுக்கு போகும் போது நல்லா போனவரு, திரும்பி வரும் போது இப்படி ஆயிட்டாருப்பா. அதிர்ச்சியில ஏதாச்சும் ஆயிருச்சா என்னன்னும் தெரியல. அன்னையிலேர்ந்து என்னை பேர் சொல்லி தான் கூப்பிடறாரு. குழம்புல ஒருநாள் சுத்தமாவே உப்பு போடா ம விட்டுட்டேன். எந்த சத்தமும் குடுக்காம, அவராவே அடுப்படிக்கு தட்டை எடுத்துகிட்டு வந்து உப்பு போட்டுகிட்டு போறாரு
எப்ப என்ன பேசினாலும் அமைதியா, ரொம்ப சாந்தமா பேசறாரு. டாக்டர்கிட்ட சொல்றதுக்கு இன்னும் நிறைய இருக்கு தம்பி. தயவு செஞ்சு லேட் பண்ணாம நல்ல டாக்டரா பாத்துடலாம். நான் கூப்ட்டா வரமாட்டார்னு தான் உன்னை வரச் சொன்னேன். எவ்வளவு செலவு பண்ணியாச்சும் அவரை பழைய மாதிரி மாத்தணும். அவரு என்கிட்ட கோபப்பட்டு, திட்டி ரெண்டு மாசமாச்சு. ரொம்ப பயமா இருக்குப்பா, இதுக்கு மேல லேட் பண்ண வேணாம்” என தன் தமையனிடம் புலம்பி, மீண்டும் அழத் துவங்கினாள் சுமதி
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads – Amazon Deals 👇
தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
முடிவில் சுமதி கலங்குவதைப் பார்த்து ஒரு பக்கம் சிரிப்பு வந்துவிட்டது. இயல்பாய் இருக்க வேண்டியவர் அப்படி இல்லையேனு கலக்கம். பாலு தன் மனைவியிடம் மனம் விட்டுப் பேசி இருக்கணும். தான் இனிமேல் இப்படித்தான் இருக்கப் போவதாயும் சொல்லி இருக்கணும். 🙂
வித்தியாசமான சிந்தனைப் போக்கில் பிறந்த கதை. கணவன். மனைவி ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து ஒருவரை ஒருவர் சார்ந்து அதே சமயம் அன்புடனும், ஆறுதலுடனும் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய கதை. வரவேற்கத் தக்க கதை!
அதே சமயம் ஒரு விஷயம் சொல்லணும். பெற்றோருக்கோ/பிள்ளை இல்லை எனில் கணவனுக்கோ பெண்கள் எரியூட்டுவது நம் சமுதாயத்தில்/சமூகத்தில்/சநாதன தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே ஆகும். எங்கேயும் பெண்கள் “கொள்ளி” வைக்க வேண்டாம் என்று சொன்னதில்லை. இன்னும் சொல்லப் போனால் இறந்தவருக்குப் பிள்ளை இல்லை/பெண் தான் இருக்கிறாள் என்றால் அந்தப் பெண்ணே அனைத்துக் காரியங்களையும் செய்ய உரிமை உள்ளவள். அவள் பார்த்து எனக்குப் பதிலாக இன்னார் செய்யட்டும் என்று சொல்லலாம்.
மேலும் பெண்கள் மனம் மென்மையானது என்பதால் இதை எல்லாம் தாங்க முடியாது என்பதாலும் கூட மயானம் வரை சென்று கொள்ளி வைக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியும் மயானம் சென்று கொள்ளி வைத்தவர்கள் உண்டு. அதோடு திருமணம் ஆன பெண்களுக்குப் புகுந்த வீடு இம்மாதிரிக் காரியங்கள் செய்யும்போது ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். பல பெண்களின் மாமியார்/மாமனார்கள் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்வதில்லை. அந்தப் பெண்ணின் கைப்புல்லை வாங்கி அவள் கணவனே கூடச் செய்யலாம். ஆனால் மாமியார்/மாமனார் தாங்கள் இருக்கையில் தங்கள் மருமகளோ/அவளுக்குப் பதிலாகத் தங்கள் பிள்ளையோ கடைசிக்காரியங்களைச் செய்ய ஒத்துக்கொள்வதில்லை. பெண் வயிற்றுப் பேரன் செய்வது சிறப்பு எனினும் அதற்கும் புகுந்த வீட்டினர் ஒத்துக்கொள்ள வேண்டும் இம்மாதிரி லௌகிகங்களைப் பார்ப்பவர்களாலேயே தான் பெண்கள் தங்கள் பெற்றோருக்கு இறுதிக்காரியங்கள் செய்வதில் சுணக்கம் ஏற்படும். மற்றபடி நம்முடைய மனு தர்மமோ, நீதி சாஸ்திரமோ, சாஸ்திர சம்பிரதாயமோ பெண்ணுக்கு உள்ள இந்த உரிமையை ஒருநாளும் மறுத்தது இல்லை.
என் பெரிய மாமியார் (மாமனாருக்கு அண்ணன் மனைவி) அவர் கணவருக்கு அவரே கொள்ளி வைத்தார் மயானம் போய். இத்தனைக்கும் அது மின்சாரம் கூட வராத குக்கிராமம். இது எழுபத்தி ஆறில் நடந்தது. ஆகவே இது மனித மனம் சம்பந்தப்பட்டதே தவிர்த்து சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.
Thanks for sharing in detail Mami
ரொம்ப அருமையான கதை 🤩🤩 ஆழமான கருத்து 😄😄.
ஒருத்தவங்க வாழ்க்கைக்கு துணைவியார் எவ்ளோ முக்கியமானது என்றும் அவங்களுக்கான அன்பையும் பாசத்தையும் மறைக்காம மதிப்புடனும் நடத்தணும்னு அழகா சொல்லியிருக்கீங்க எழுத்தாளர்.
கடைசி பகுதி படித்தப்போ லைட்டா சிரிப்பு தான் வந்திச்சு. பாவம் பாலுவை பைத்தியம் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டீங்க. ஆனாலும் ஒருத்தர் தன் இயல்புனு கருதபடுற விஷயங்களில் இருந்து மாறுபடும் போது ஏற்படுற சூழ்நிலையும், அந்த நிலமைல கணவன் தன் மேல பாசமா இருக்காருனு சந்தோஷபடாம கணவனுக்காக யோசிக்கிறஅந்த மனைவியோட பாசமும் மிக அருமை…😄😄
இயல்பான நிகழ்வுடன் அழகான கருத்தை உரைத்தீர் எழுத்தாளரே… வாழ்த்துக்கள் 🤩
கொஞ்சம் பொறுத்து தான் இந்த கதையை பற்றிய கருத்தை சொல்ல முடியும். ஏன்னா அந்த கதையை என் மனைவியும் படிக்கணும் அப்புறம் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி கலந்து முடிவெடுக்கிறோம்.
Ha ha ha
ஹா ஹா .. உங்கள் முடிவுகளுக்காகவும் காத்திருக்கிறோம்
அடக்கடவுளே… சார்..
பாலு, அந்த துக்கத்துக்கு போயிட்டு திரும்பி வர்ற வரைக்கும் பக்கு பக்குன்னு இருந்துச்சு. எங்க அவரு திரும்பி வர்றதுக்குள்ள இந்தம்மா சுமதி மண்டைய போட்டுருக்குமோன்னு நெனச்சிட்டு, பயந்துட்டு இருந்தேன். கடைசில இப்படி பண்ணிட்டீங்களே சார்.
கதை மிக மிக அருமை. ராஜேந்திரனின் வாழ்க்கைலிருந்து பாலு மட்டும் அல்ல பலரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் மனைவி என்ற ஒன்றை ஜீவனுக்கு இணையாக எத்தனை உறவு இருந்தாலும் ஈடாகாது. இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் இந்த கதையை படித்தாவது புரிந்து கொள்ளட்டும்.
நிறைய யோசிக்க வைத்துவிட்டது
சிறப்பான கதை
வாழ்த்துகள் சார்
அருமை.. அருமை…
இந்த கதையை அனைவரும் படிக்க வேண்டும். மற்றவர்கள் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவர்கள் உண்மையில் புத்திசாலிகள். ராஜேந்திரன் போல தன் மனைவியை ஒரு பொருட்டாக நினைக்காத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். காலம் கடந்த ஞானம் வீண்.நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் நம்மோடு இருக்கிறார் கள்தான் மிக பெரிய சொத்து என்பதை இழந்த பின் தான் தெரிந்து கொள்கிறார்கள்.