in

என்னை… நான்! (சிறுகதை) – ✍ சுபகீதா, சென்னை

என்னை... நான்! (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ள்ளி காலம் முழுதும் மாணவர்கள் எப்போதுமே சந்தோஷமாக நிம்மதியாக கழிக்கும் ஒரு பருவம். பழைய மாணவர்களை – நண்பர்களை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷமானது அளவிடற்கரியது. எத்தனை வருஷங்கள்?

ஆனாலும் பழைய நட்புகளை சந்திக்கும் தருணம் மிக நேசிக்க கூடியது. அந்த ஒரு தருணத்தில் தான் இன்று நான். எனது பள்ளி பருவத்தில் இருந்த நட்புகளை சந்திக்க சென்னை வந்திருக்கிறேன். எங்கிருந்து என்று கேட்டால்?

ம்ம்ம்..

புது தில்லியில் இருந்து வருகிறேன். என்னோட சொந்த ஊரு சென்னை தான். இங்கே தான், அப்போதெல்லாம் ஒரு சாதாரணமான வாழ்க்கை நிலை. அப்பா ஒரு மத்திய வர்க்க குடும்ப தலைவர். எனக்கு கிடைச்சது ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் படிப்பு. பீஸ் கட்ட அப்பா -அம்மா வயிற்றை கட்டி, வசதிகளை குறைத்து கொண்டு…

பழைய மாணவர்கள் சந்திக்கலாம் என பள்ளியில் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்காங்க. ஏறத்தாழ இருபத்து மூணு வருஷம் கழிச்சு என்னுடைய இந்த பழைய ஸ்கூல் பக்கம் நான் வரேன். என்னுடைய மனசு முழுக்க சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம்.

பலபேரை இதுவரைக்கும் நான் மீட் பண்ணவே இல்ல, முகநூலில் கூட அவர்களுடைய எனக்கு நட்பு இல்லை. அவங்க எப்படி இருக்காங்க என்ன பண்றாங்க… இதெல்லாம் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்

அதே ஆர்வம் வரவங்க அத்தனை பேருக்கும் இருக்குமா, யார் யாரெல்லாம் வரப் போறாங்க, எத்தனை பேருக்கு என்னை ஞாபகம் இருக்கப் போகுது, இதெல்லாம் நினைக்கும் போதே மனசுக்குள்ள ஒரு மாதிரி படபடன்னு வருது.

இந்த உணர்வுகளுக்கு நான் பெயர் வைக்க விரும்பல. ஆணும் பெண்ணுமாய் இருபாலரும் சேர்ந்து படிக்கும் படிப்பு,  அங்கே நடக்கும் நிகழ்வுகள். இது எல்லாமே பள்ளிக்கூட- கல்லூரி நாட்களில் அழிக்க முடியாமல் மனசுகுள்ள ஆழமா பதிந்து போன விஷயம்.

அம்மா அப்பா தம்பி எல்லாருமே இப்ப சென்னையில தான் இருக்காங்க. நான் சென்னை வந்து போயிட்டு தான் இருக்கேன். ஆனா ஊர் மாறி போச்சு.

நான் இங்கே இருந்து டெல்லிக்கு கிளம்பி போன போது நான் இருந்த பெரம்பூர் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியும். ஆனா இப்பவும் அதே மாதிரி தான் என்னுடைய பெரம்பூர் இருக்கா,  என்னோட பள்ளிக்கூடம் இப்ப எவ்வளவு வளர்ந்து இருக்கு? 

இதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியல. எங்க ஏரியால அந்த பள்ளிக்கூடம் தான் முதல் முதலாக ஆரம்பிச்ச மெட்ரிகுலேஷன் ஸ்கூல். அங்க சேர்ந்து படிக்க  ஏகப்பட்ட போட்டி.

அந்த ஏரியால ஒரே ஒரு கவர்மெண்ட் பள்ளிக்கூடம் இருந்தது. அதனால நிறைய பிள்ளைகள், வசதி இல்லாத பிள்ளைகள் அங்கு தான் படிச்சாங்க

எங்க அப்பாக்கு என்னையும் என் தம்பியையும் ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்க ரொம்ப ஆசை. முதலில் நானும் அரசு பள்ளி கூடத்தில் தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அப்பா…  அவர் சாதாரண ஒரு ஃபேக்டரி சூப்பர்வைசர் தான்.

ஆங்கில பள்ளி தொடங்கியது அப்பா அம்மாவைப் பொறுத்த வரையில் ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி. இப்பவும் அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார் என்னையும் தம்பியையும் அங்க சேர்த்து படிக்க வச்சதை நினைத்து. அவங்கள பொறுத்த வரை அது ஒரு சாதனை!

எனக்கு சென்னை ஏர்போர்ட் வந்துருச்சு. நான் திருப்பியும் உங்ககிட்ட வேற வேற விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். உங்களோட பேச, நிறைய விஷயம் எனக்குள்ள இருக்கு.

என் வீட்டில்:

அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி எல்லாரும் எனக்காக வாசலிலேயே காத்திருக்காங்க. நிஜத்துல என்னோட பிளைட் அரை மணி நேரம் கால தாமதம் ஆயிடுச்சு. எல்லாருக்குமே வீட்டுல பதட்டம் தான். நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல திரும்பவும் டெல்லி போகணும்.

என்னோட பெரிய பையனுக்கு இருபது வயசு, ரெண்டாவது பையன் பிளஸ்டூ படிக்கிறான். பள்ளிக்கூடத்துல ஒருநாள் முழுக்க செலவு ஆயிடும். அதை ஈடுகட்டும் அளவிற்கு நான் வீட்டிலேயும் நேரம் செலவு செஞ்சா அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்க.

கொஞ்சம் ஷாப்பிங் வேலை இருக்கு. பள்ளி  கல்லூரி நாட்களில் டி.நகர் ஷாப்பிங்.  என் கல்யாணத்துக்கு அப்புறம் நான் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் போகல. அங்க இருக்கும் ஜனநெருக்கடியும் அங்கு கிடைக்கின்ற பொருட்களும் நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்.

எப்படி இருந்தாலும் என்னோட அந்த நாட்களுக்கு  திரும்பி போக முடியாது!

கல்லூரி முடிக்கும் பொழுது கல்யாண ஏற்பாடு ஆயிடுச்சு, சரியா இருபது வயசு. தூரத்து உறவு, இப்போ நெருங்கிய உறவு.

கல்யாணம் ஆன கையோட டெல்லிவாசி ஆயிட்டேன். பிறகு ரெண்டு தடவை சென்னை வந்தேன், நடுவில கொஞ்சம் அதிக நாட்கள் சென்னையில் இருந்த நாட்கள்னு  என்று கூட சொல்லலாம்.

வேற ஒன்னும் இல்ல… என்னோட ரெண்டு குழந்தைகளோட பிரசவத்திற்கு சென்னை வந்தேன். பெரியவனுக்கு அஞ்சு மாசம் தங்க முடிஞ்சது. ரெண்டாவது பையன் பொறக்கும்போது ஒரு மாசம் தான் அம்மா வீட்டுல இருக்க முடிஞ்சது. மாமியாருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. சோ… பெட்டியை தூக்கிட்டு பாக் டு டெல்லி. திருப்பியும் போயாச்சு.

அப்பப்ப வரத்தான் செய்யறேன் சென்னை பக்கம், தங்க தான் முடியல. அதனால ஒரு நாள் முழுக்க ரங்கநாதன் தெருவில் எங்க அம்மா, தம்பி மனைவி ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஒரு சுத்து  போகலாம்னு முடிவு பண்ணிட்டு வந்து இருக்கேன்.

நாளைக்கு என்ன டிரஸ் போட்டுட்டு போக? ரொம்பவே குழப்பமா இருக்கு. புதுசா வாங்கின குர்தி… என்னோட லெக் இன் இல்ல ஜீன்ஸ் ஏதாவது?

மறுநாள் பள்ளி வளாகம்;

என்னோட அப்பா, அம்மா, தம்பி அவனுடைய குடும்பம் எல்லாம் சோழிங்கநல்லூர்ல இருக்காங்க. தம்பி மனைவி எனக்காக காரை எடுத்துக்கிட்டு வந்திருக்கா இங்க, பெரம்பூர் வரைக்கும்.

ரொம்ப சில தோழர்கள் தான் வந்திருக்காங்க. அதிகம் தோழிகள் வரல. அது என்னமோ தெரியல… கல்யாணத்துக்கு அப்புறமா பெண்கள் பழைய நட்பை தொடர்வதில்லை. எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை.

நானும் கூட முதல்ல இந்த கூட்டத்துக்கு வரணும்மானு ரொம்ப யோசிச்சேன். என்னுடைய கணவர்,  அவர் தான் நீ போயிட்டு வா, உன்னுடைய தோழமைகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு அப்பா அம்மா கூடவும் இருந்துட்டு திரும்பி வா,  அப்படின்னு சொல்லி அனுப்பி வச்சாரு.

என் பெரிய பையன் தம்பி, அப்பா, பாட்டி தாத்தா எல்லாரையும் கவனமா தானே,  மூன்று நாளும் பார்த்துக் கொள்வதா சொன்னதுனால இந்த பயணம்.

என்னோட பெரிய பையன் இப்போ சி.ஏ.பவுண்டேஷன் படிக்கிறான். ஒருவிதத்தில் எனக்கு ரொம்ப நெருக்கமான தோழன். எனக்கு எது வேணும்னாலும் தைரியமா அவன்கிட்ட என்னால கேட்க முடியும்.

என் கணவர்,  அவருக்கு அடுத்தது என்னுடைய பெரிய பையன் தான்  என்னோட மிக நெருங்கிய நட்பு.  சின்னவன் அதிகமா எதையும் பேசவும் மாட்டான். ஆனா, என் மேல எப்போவும் கவனம் வச்சிருப்பான்.

எனக்கு முடியாத சமயத்துல வீட்டு வேலை எங்க மாமியாருடன், பெரியவன் என்னை பாத்துக்க, கணவர் சின்னவன்  மாமனார் வெளி வேலைகள்.

மத்த நேரத்துல, இது எல்லாம் சமாளிக்க, நா ஒருத்தியே போதும் ! அஷ்டாவதானி.   வீட்டில் இருக்கும் பெண்கள் நிஜத்துல எல்லாத்தையும் சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்ட சாமானியர்கள். கொஞ்சம் என்னோட குர்தி காலர் தூக்கி விட்டுக்கறேன்.

தோழமைகள்  யார் யாருக்கு என்னை அடையாளம் தெரியுது, இந்தப் பிரயாணம் வெற்றியா? எல்லாருடைய நிலை எப்படி இருக்கு,  இதெல்லாம் தெரிஞ்சுக்க ரொம்பவே எனக்கு ஆர்வமா இருக்கு.

ஹாய், என்னோட ரொம்பவே பழைய… அதாவது என்னோட ஆறாம் கிளாஸ் முதல் என் கூட படிச்ச பொண்ணு இவ. நா பள்ளிக்கூடம் மாறினால், இவள் என் பக்கத்துல உக்காந்து இனிய அதிர்ச்சி குடுத்தா.. இவ பேரு நந்தினி. இவளோட நான் இங்க பேசிட்டு இருக்கேன்.

“ஹாய் நந்து…எப்படி இருக்க?”

அவகிட்ட ரொம்ப நிமிர்வு தெரியது. சிரிப்பு  முன்னாடி மாதிரி அதிரடி இல்ல. வெடி சிரிப்பு அவளோட அடையாளமா இருந்தது. முகம் மாறல.  வார்த்தைகள் நிதானமா இருக்கு. அவசரமா எதுவுமே அவ பேசல. எனக்குள்ள அவளோட பேசுவதற்கு அதிக விஷயம் இல்லன்னு தோனிச்சு. ஆடை, அலங்காரம் ரெண்டும் வெளிநாட்டு சாயல்.

“நா கனடால இருக்கேன், பைனான்ஸ் மேனேஜர்” என்று தன்னை, சிறு குறிப்புகள் மூலம் எடுத்து சொன்னாள். பரஸ்பரம் அழைக்கும் நம்பர்கள், முகநூல் விவரங்கள், பகிர்ந்து கொண்டோம்.

தாஜில் தங்கி இருப்பதாக சொன்னாள்.  மற்ற நண்பர்களுடன் அளவளாவி(?), விவரங்கள் பகிர்ந்து கொண்டு, மதியம் கிளம்பி விட்டேன்.

நிஜமா சொல்வதெனில், ஏனோ ஒட்டவில்லை.  வருஷங்கள் மனுஷ மனசுக்குள்ள எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தியது. எங்களுடனேயே நந்து கிளம்பி விட்டாள்.  அவளை தாஜில் இறக்கி விட்டோம்.

மறுநாள் வர முடியுமா என்று அழைப்பு விடுத்தவளை தவிர்க்க நான் விரும்பவில்லை.  பேசுவதற்கு விஷயம் இருக்கிறதா இல்லையா இதெல்லாம் நாளைக்கு அவளோடு போயி நேரம் செலவு செஞ்சா தான் புரியும்.

மறுநாள் காலை:

தாஜ் ஹோட்டல் போகலாமா வேணாமா அப்படின்னு ஒரு குழப்பத்திலேயே என்னுடைய நாள் ஆரம்பிச்சது. பல சமயங்களில் நான் சரியான முடிவு எடுக்கிறது இல்ல. இல்லனா ரொம்ப தாமதமா முடிவு எடுக்கிறது என்னோட வழக்கமா போச்சு.

நானும் பல வருஷமா அதெல்லாம் சரி செஞ்சுக்கணும் முயற்சி என்னமோ எடுக்கிறேன். ஒருவேளை என்னோட தொட்டில் பழக்கமா இருக்குமோ?

எனக்கு தெரிஞ்சு நான் சரியான நேரத்துல சரியான முடிவெடுத்து இருக்கேன்னு சொன்னா அது என் கல்யாணம் தான். இத நெனச்சு பல சமயம் நானும் சிரிக்கிறது உண்டு!

காலையில டெல்லியில் இருந்து மாமியார் அதுக்கப்புறம் மாமனார் வீட்டுக்காரர் பசங்க எல்லாரும் வரிசையா போன் பண்ணிட்டாங்க, மார்னிங் அட்டனன்ஸ் போட்டாச்சு.

அம்மா வீட்டில, அதனாலேயோ என்னமோ கொஞ்சம் சோம்பேறித்தனமாக கூட ஃபீல் பண்றேன். மெதுவா அம்மாகிட்ட பேச்சை எடுத்தேன்.

“அம்மா நான் இன்னைக்கு தாஜ் ஹோட்டல் போறேன். கூட படிச்ச பிள்ளையை பார்க்க. லஞ்சுக்கு வீட்டுக்கு வருவேனா, இல்ல அவளுடன்  சாப்பிட போவேனான்னு போன் பண்றேன்” என்றேன். 

அம்மா முகம் வாடி விட்டது.  இன்று அவர்களுடன் இருப்பேன் என இருந்த சந்தோஷம் காணாமல் போய்விட்டது. இன்னும் ஓரு நாள் அம்மா வீட்ல இருக்கபோறேன்னு  என்னோட வீட்டுக்கு சொல்ல ஆசை. பாப்போம் !

தம்பி மனைவி, “உங்களோட நான் வரவா?” என்றாள்.

எனக்கு என்னமோ அவளை என்னோட சொந்த விஷயங்களுக்காக ரொம்ப அலைய வைக்க இஷ்டமில்லை. ஊபர் புக் பண்ணிட்டு நேரத்துக்கு போயிட்டேன்.

கொஞ்ச நேரம் நானும் என்னுடைய தோழியும் பொது விஷயங்களை பற்றி பேசினோம். பள்ளி நாட்கள் பற்றி எங்க பேச்சு அதிகமாக இருந்தது.

புட்பால் மேட்ச் சமயத்துல பாய்ஸ் டீம்ல ஒரு பையன் உடைய கால் தடுக்கி விட்டது, பாய் சுகங்களுக்கும் எப்பவும் வர சண்டைகள் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இங்க இளமை நாட்களுக்கு கூட்டிட்டு போச்சு.

நேரம் போனதே தெரியல. அவகிட்ட நான் கேட்டேன், “உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?”

அவ சொன்னா, “எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது. பையன் இப்போ ஒன்பது வயசு. ஸ்கூலுக்கு போறான். என் ஹஸ்பண்டும் பையனும் இப்ப வந்து இருக்காங்க. அடிக்கடி நான் வேலை விஷயமா அதிக நாட்களுக்கு வெளில தங்குவது சகஜம்தான். அதனால அங்க சமாளிச்சுகுவாங்க”

விஷயம் பர்சனல் லைப் பற்றி பேச ஆரம்பிச்சோம். எங்க வீடு பற்றி அவள் கேட்டாள். 

“எனது கணவர் ஒரு மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்” என்றேன்.  அவள் கணவர் நிதிநிலை அதிகாரி என்றாள்.

தன் வேலை பற்றி பேச அவளுக்கு நிறைய இருந்தது. சென்று வந்த நாடுகள், அனுபவங்கள் பற்றி நிறைய பேசினாள்.  பள்ளி நாட்களில் இருந்த தோழி திரும்பியதாக உணர்ந்தேன்.

“உன் கணவருடைய பெற்றோர்கள் எங்க இருக்காங்க?” என்றேன்.

“அவங்களும் சென்னை தான். நான் இங்க வந்திருக்கிறது அவங்களுக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன். நிஜத்துல எனக்கு சென்னை வருகை பற்றி பெருசா ஒன்னும் இஷ்டமில்லை. பழைய நட்பு வட்டம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம்தான் காரணம். மற்றபடி எனக்கு வேலைகள் நிறைய இருக்குது. இதுல மாமியார் மாமனாரை வேற பார்க்கணுமா? அங்க போனா நிச்சயம் அவர்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுக்கணும். என்னால சுதந்திரமா இருக்க முடியாது. அதனால தாஜ்ல புக் பண்ணிட்டு ரெண்டொரு நாள்ல கிளம்பிடலாம்னு யோசிச்சேன்” என்றவள், ஏனோ எனக்கு வித்தியாசமாய் தெரிந்தாள். 

நிச்சயம் இது பற்றி கருத்து சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை.

“நீ ஏதும் வேலைக்கு போகலையா?” என்று என்னிடம் கேட்டாள்.

“வேலைக்கு எங்கேயும் போக எனக்கு நேரமில்லை. எங்க வீட்டுல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க வந்தபோதே வேலைக்கு போகக் கூடாது. மாப்பிள்ளை டாக்டர். அவனோட நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ‘காரியம் யாவிலும் கை கொடுப்பாள்’ மனைவி அப்படிங்கற வகையில் தான் நாங்க பொண்ணு தேடுகிறோம்னு எங்க மாமனார் மாமியார் தெளிவா சொல்லிட்டாங்க. அவரும் பார்க்க வந்த முதல் பெண் நாந்தான்.

முன்னமே எங்க அத்தைகிட்ட சொல்லிட்டாராம், உங்க வரையில் நீங்க எத்தனை ஜாதகம் வேணாலும் பாத்துக்கோங்க, குடும்பம் பற்றி பேசிக்கோங்க. நான் ஒரு பொண்ண தான் பார்ப்பேன், பாக்குற பொண்ணு தான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு.

எனக்கும் அவரைப் பார்த்தவுடனேயே ரொம்ப பிடிச்சிருச்சு. அதனால வேலை  மத்ததெல்லாம் யோசிக்கல. வீட்லயும் அப்பாவுக்கு ரொம்ப பெரிய வேலை என்று சொல்ல முடியாது. வந்தது நல்ல இடம் நல்ல குடும்பம். எங்களுக்கும் தூரத்து உறவு. மறுக்க எதுவும் காரணம் இருக்கிறதா எனக்கு தெரியல. அவருக்கும் 25 வயசு தான் ஆகியிருந்தது. மெடிசன் முடிச்சு பிராக்டிஸ் ஆரம்பிச்சு ஒரு வருஷம். பார்க்கவும் சரி, பேசவும் சரி, அவர்கிட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கல்யாணத்தை மறுக்க எனக்கு எந்த காரணம் இல்ல.

நிச்சயம் செய்யும் பொழுது அவர் எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு பிரக்டிஸ் பண்ணிட்டு இருந்தாரு. நான் பி.காம் கடைசி பரீட்சை எழுதி இருந்தேன். பிடிச்சிருந்தது, கல்யாணம் ஆகிடுச்சு”

வெகு சுலபமாக சொன்ன என்னை விந்தை மனுஷி என பார்த்து வைத்தாள் நந்து.

“உன் இழப்புகள் பற்றி கவலையாக இல்லையா?”

“எனக்கு நெஜமாவே புரியல… என்ன இழப்பு? இழப்புன்னு இதை எப்படி சொல்ல முடியும்?”

என் கேள்வி அவளை குழப்பம் கொள்ள செய்தது. அவளது இந்த கேள்விக்கு, குழப்பத்திற்கு நான் எங்கள் முன்கதை சுருக்கமா சொன்னா உங்களால் புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்.

நானும்  நந்தினியும் ஆறாவது கிளாஸ் இருந்து ஒண்ணா படிச்சவங்கனு சொல்லி இருக்கேன் இல்லையா? அவ கொஞ்சம் சுமாரா படிக்கக் கூடியவள். நான் கொஞ்சம் நல்லா படிக்கிற ரகம். ஏழாம் வகுப்பு படிக்கும் போது எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு விஷயம் நடந்தது. நந்தினி அந்த வருஷம் ஃபெயில் ஆயிட்டா. அவளுக்கு படிப்பு வரலன்னு சக மாணவர்கள், வீட்ல  எல்லோரும் ரொம்ப கிண்டல் பண்ணாங்களாம். என் வீட்டில் வந்து சொல்லி அழும் பொழுது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும்.

அரையாண்டு பரீட்சை நடக்கிற சமயத்தில் எனக்கு வலது கையில பிராக்சர் ஆகி என்னால தொடர்ந்து பள்ளிக்கு போக முடியாத நிலைமை. அடுத்த வருஷம் அவளும். ஏழாவது வகுப்பு, நானும் ஏழாவது வகுப்பு. கை அடிபட்ட சமயம்  சுமார் ஆறு மாசத்துக்கு என்னால வெளியே உலகத்தையே பார்க்க முடியாத நிலைமையில் நான் இருந்தேன். மீண்டும் ஒரே செக்ஷன்.

இதனால எங்க நட்பு திரும்பவும் ஏதோ ஒரு விதத்துல மீண்டும் பலமா ஒட்ட வைக்கப்பட்டதுனு தான்  சொல்லணும். ரெண்டு பேருக்கும் இடையில ரொம்ப ஆழமா நட்பு காணப்பட்டது.

அவளுக்கு அறிவியலும் கணக்கும் ரொம்பவே அலர்ஜி, ஆனா பாருங்க இங்கிலீஷ் ரொம்ப நல்லா படிப்பாள். எனக்கு இங்கிலீஷ் நான் கொஞ்சம் அலர்ஜி. எங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒரு அக்ரீமெண்ட் வந்தது தெரியுமா?

எனக்கு அவள் இங்கிலீஷ் பாடம் சொல்லித் தரணும், அவளுக்கு நான் கணக்கும் அறிவியலும் சொல்லி தருவேன். பத்தாம் கிளாஸ் படிக்கும் பொழுது எனக்கு 500க்கு 470 மார்க் வந்தது. அவளுக்கு 500க்கு 450 வந்தது.

எங்க அப்பா அப்பவே சொல்லிட்டாரு என்னை மேற்கொண்டு பொறியியல் கல்வியில் சேர்த்து விட முடியாதுன்னு. அதனால, நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று  கணிப்பொறி மற்றும் வணிகவியல், கணக்குபதிவியல் பாடங்களில் நான் சேர, அவளோ  பிசினஸ் மேத்ஸ், கணக்கு பதிவியல், பாடத்தில் சேர்ந்து படித்தாள்.

ஒரே பள்ளிதான், ஆனாலும் எங்கள் பாதை மாறிய நேரம் அது.  நான் +2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாம் இடம். எங்கள் குடும்பம் வடசென்னையில் இருந்து, தென்சென்னை குடி பெயர்ந்தது.  வேறு வேறு கல்லூரி,  வாழ்க்கை பாதை. 

என்னுடைய கல்யாணம் அப்பா அம்மா முடிவு செய்ய, நந்தினி மேலே எம்.எஃப்.எம் முடித்து, வேலை செய்த இடத்தில் காதலித்து, திருமணம் செய்து கொண்டு இப்போது கனடாவாசி ஆகிவிட்டாள்.

வெறும் குடும்ப தலைவியாக நான் இருக்கிறேன் என்பதில் அவளுக்கு வருத்தம். 

“நீ உன்னோட சுயம் இழந்து வாழறதா உனக்கு தோணலையா?”

“நிச்சயம் இல்லை” என்றேன் நான்.

“நான் மருத்துவர் இல்லை. என் கணவர் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணர்.  அவரால் பலர் உயிர் பிழைத்துள்ளனர். அவர் நேரம் அவரது இல்லை.   

பிள்ளைகள், அவர்கள் வாழ்வு என் கையில், வீட்டு நிர்வாகம் என் கையில் . வீட்டின் பெரியவர்களை என்னை நம்பி என் கணவர் விட்டு செல்கிறார். என் சுயம் எங்கு தொலைந்து போனது?” 

என் பக்கத்து வாதம் அவளுக்கு புரிந்தாலும் அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவள் தன் பெற்றோர், புகுந்த வீடு எங்கும் செல்ல விரும்பவில்லை. 

“நாளை கனடா செல்கிறேன்” என்றவளை

“மீண்டும் இந்தியா வந்தால் தில்லியில் என் வீடு உனக்காக திறந்திருக்கிறது. மறக்காதே” என்றேன். அவளிடம் இருந்து கசந்த முறுவல்.

நாட்கள், மாதங்கள் கடந்தது.  எனது சமையல் நிகழ்ச்சிகளை என் மகனே அவன் கேமராவில் பதிவு செய்து யூ.டியூப்  சானலில் பதிவேற்றிவிட்டு, முகநூலில் லிங்க் கொடுத்து விடுவான்.  நல்ல வரவேற்பு, வருமானம்.  முகம் மட்டும் காண்பிக்க மாட்டேன்.

பார்த்து விட்டு நந்து தொடர்பு கொண்டாள். “ஏடி, சொல்லவே இல்ல?” என்று என்னை பிடித்து கொண்டாள். 

என் ரெசிபி அவர்கள் சமையல் அறையை மணக்க செய்கிறதாம். பட்டு நூலில் ஆபரணங்கள் செய்வேன். என் பெரிய பையனுக்கு அவற்றை நண்பர்கள் மத்தியில் விற்பனை செய்வது பெருமை.

அவன் நண்பர்கள் வீட்டு பெண்கள் என்னிடம் ஆர்டர் செய்து வாங்குவார்கள். இருக்கவே இருக்கிறது, ஆன்லைன் ஷாப்பிங். முகம் தெரியாமலே,  நம்மை முன்னேற்றிக் கொள்ள முடியுமே?

எம்.காம், சி.ஏ இன்டர் முடித்திருக்கிறேன். என் மகனுக்கு (பெரியவனுக்கு) நானே சொல்லிக் கொடுக்கிறேன். என்னையும் நடப்புக்கு தயார் செய்து கொள்கிறேன்.

(என் கணவர் எம்.எஸ் படிக்கும் பொழுது நான் மேலே எம்.காம்  படித்தேன்.  தூண்டுகோல் அவரே.  இரண்டாம் மகனுக்கு  மூன்று வயது அந்த சமயம்)

பெரியவனுடனேயே சி.ஏ  இறுதி தேர்வு எழுத முடிவு செய்துள்ளேன். கணவருக்கு முதலீடுகள், நிதி மேலாண்மை விஷயங்கள் தயார் செய்வது நானே! என் மாமனார் கிண்டல் செய்வார்,  அவனது (மகனது ) வலது கை நான் என்று.

நான் யார்?  என் முகம் என்ன? என் நிகழ்வுகள் யாரை, எதை சார்ந்தது? என் எதிர்பார்ப்பு என்ன? எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது.  நிறைவேறிய விஷயம் வெகு சில. நடுத்தர குடும்பம் எதிர்நோக்கும் பல விஷயங்களில் என் கனவுகள் கனவாகவே முடிந்தது.

கானல் நீரை மீட்க முடியாது. ஆனால், வாழ்க்கை போக்கை நிச்சயம் மாற்ற முடியும்.  நான் என்னை தேடி கண்டுபிடிக்கும் முயற்சி இது. இருபது வயதில் ஆன திருமணம், என் வாழ்க்கையை சுருக்கியதா? நான் என்னை சுருக்கிக் கொண்டேனா?

நான் ஆக்க சக்தி,  பிரம்மாண்டம். என் நம்பிக்கை, தைரியம் இவற்றின் ஒளியில் என் சுற்றத்தை நிமிர வைக்கும்  அகல் விளக்கு நான்!

“நான் பெண் எனும் அற்புதம் ❤. நான் ஆதி சக்தி. உலகம் என்னிடம் தொடங்குகிறது.  நடப்புகளின் மையம் நான்” 

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. The short story is nice and I liked it. “Naan oru aakka sakthi. Athu ‘brahmaandamaanathu.’ En ‘nambikkai, thairyam ivaiGaLin oLiyil en suRRaththaarGaLukkum, nerunGiya naNbarGaLukkum paLichchenRu, ‘OLi ViLakkaip pOl’ prakaasippEn, anaivaraiyum iirppEn, vazhiyinaiyum kaattiduvEn.

    — “MandakoLathur Subramanian.”

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 1) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 2) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்