in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 2) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 2)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அப்பாவை அறிந்தான்

யத்தோடு தூங்கிய கிருஷ்ணனின் இரவு, விடிந்தது..! விடுவதற்குள் நைனா துணி மூட்டையோடு கிளம்பி விட்டிருந்தார். கிருஷ்ணன் தன் அம்மா இருப்பதாக நினைத்துக் கொண்டு, தலையணையோடு படுத்திருந்தான்.

மணி காலை 9.30. வீட்டில் எல்லோரும் எழுந்தாயிற்று. அவன் எழுவதாய் இல்லை. யாரும் எழுப்பவும் முன் வரவில்லை. துணிகள் அனைத்தையும் விற்று முடித்து, வீடு திரும்பிய அப்பா, இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனின் மேல், ஒரு தட்டு தட்டினார்.

அவன் “திடும்” என்று எழுந்து உட்கார்ந்து, “நைனா.. பேய்.. முருகா..” என்று உளறிக்கொண்டு திருதிருவென விழித்தான். அண்ணார்ந்து கடிகாரம் பார்க்குமிடத்தில் அப்பா நின்றிருந்தார்.

நேற்றிரவு அம்மா சொன்னது அனைத்தும் நியாபகம் வந்தது. பயத்தில், “காக்க..காக்க கனகவேல் காக்க” என்று உதடுகள் உளறின. ஜமுகாளத்தை சுருட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓடியே போய்விட்டான் கிருஷ்ணன்.

மகனின் செயலைப் பார்த்து, தகப்பனிடம் எந்தச் சலனமும் இல்லை. “பார்வதி..! சாப்பாடு இருக்கா?” என்று கேட்டார். 

(அந்தக் காலத்தில் கணவனும் மனைவியும் இன்று போல் சண்டை போட்டதில்லை, சகஜமாகவும் பேசியதில்லை. எல்லாம் சைகை தான். அவர்கள் இன்றிருப்பது போல், முகம் பார்த்துப் பேசியிருந்தாலோ முகத்துக்கு நேர் திட்டியிருந்தாலோ எப்படி இருந்திருப்பார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்) 

கிருஷ்ணனின் அப்பா சாப்பாடு பற்றிக் கேட்டவுடன், சமையலறையிலிருந்து தட்டு எடுக்கும் சத்தம் கேட்டது. அவரும் புரிந்து கொண்டு, குளித்து கடவுளைக் கும்பிட்டு சாப்பிட ஆஜரானார்.

பார்வதி இட்லி  எடுத்து வைக்க, பழனி சாப்பிட்டு முடித்தார். பின், இன்னொரு துணி மூட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்.

கிளம்பும் முன், விளக்கு வைக்கும் மாடத்தில் பார்வதி பார்வைக்குப் படுமாறு கொஞ்சம் பணத்தைச் செருகி விட்டுச் சென்றார். 

அப்பாவைப் பார்க்கவே பயந்து கொண்டிருந்த கிருஷ்ணன், பூஜை அறையிலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு, அவர் வெளியே சென்றதும் சமையலறைக்குச் சென்றான்.

அம்மாவின் முந்தியைப் பிடித்துக் கொண்டு, “எப்படிம்மா? அப்பாவைப் பார்த்தா உனக்கு பயமா இல்லியா?” என்று வியப்புடன் கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியை நினைத்துச் சிரித்துக் கொண்டே பார்வதி சொன்னாள். “அடப்போடா..! நீ கூட பயப்பட தேவையில்ல. எப்போவும் போல இரு. உனக்கு விருப்பம்னா அவரு கூட இருந்து, முடிஞ்ச வரிக்கும் தியானம், மனசு ஒருநிலை படுத்துறது இதுலாம் கத்துக்கோ. படிப்புலாம் எங்கேயும் கத்துக்கலாம். இதெல்லாம் யாரலையும் சொல்லி கொடுக்க முடியாது. கத்துக்கவே பிராப்தம் இருக்கணும்” என்று சொன்னாள். 

இதைக் கேட்டு ஒரு தெளிவு பெற்ற கிருஷ்ணன், குளித்துவிட்டு நேரே தறி நெய்யும் அறைக்குச் சென்றான். அங்கிருந்த ஜன்னலைத் திறந்தான்.

பகல் நேரமென்பதால், அதிக பயமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை. பயம் அற்றுப் போய்விட்டது. அன்றிலிருந்து, அப்பா வியாபாரத்திற்குச் சென்று விட்டால், அவன் நேரே அங்கே போய் உட்கார்ந்து கொள்வான். படிப்பது, எழுதுவது எல்லாம் அங்கே தான்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் போது, அவனுக்குக் கதை, கட்டுரை எழுதும் ஆசை மேலிட்டு இருந்தது. படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, குயர் குயராகப் பேப்பர் வாங்கி கதை எழுதுவான். இந்தப் பழக்கம் அவன் கல்லூரி படிக்கும் வரையிலும் தொடர்ந்தது. அதன் விளைவாக ஒரு பரிட்சையில் முதலுக்கு முதலாய் தோல்வியடைந்தான். 

நல்ல வேலை அவன் அண்ணன் படிக்கும் போதிருந்த நிலைமை இல்லை. ஒரு பாடம் போனாலும் அந்தப் பருவத்தில் வரும் அனைத்துப் பாடங்களும் இன்னொரு முறை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். கிருஷ்ணன் படித்த சமயத்தில், அந்த ஒரு பாடம் மட்டும் எழுதினால் போதுமானதாக இருந்தது.

கதை எழுதுவதை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, அக்கறையோடு படித்தான். வைராக்கியமாய் தேர்ச்சி பெற்றும் காட்டினான். அப்போது கிருஷ்ணனுக்கு எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்ற அறிவு வந்து விட்டிருந்தது.

படிப்பது போக, வெட்டியாக இருக்கும் நேரத்தில் மட்டும் கதை எழுதுவான். அம்மாவிற்குக் காய் அரிவதிலும் வீடு வாசல் சுத்தமாக வைப்பதிலும் உதவி செய்வான். இவனின் செயல்களை அவ்வப்போது தகப்பனார் கவனித்துக் கொண்டே தான் வந்தார்.  

எப்போது போல் அன்று  இரவும் சாப்பிட்டு முடித்து, தறி நெய்யும் அறைக்குக் கிருஷ்ணன் சென்றான். அப்பா அவர் கட்டிலில் ஏதோ களிமண் உருண்டை போல் ஒன்று வைத்துக் கொண்டு, ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

அதைப்பற்றி அறிந்து கொள்ள கிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் யாருக்கும் ஆர்வம் கிடையாது. இரவு 9.10 மணி இருக்கும். வெளியே ஒரே சத்தம். பார்வதி எழுந்து வாசலண்டை எட்டிப் பார்த்தாள்.

எதிர் வீட்டு வாசலில் இருந்த பாக்யம், “அத்தே.. நம்ம மூணாவது வீட்டு கணேச அண்ணேல.. பம்புசெட்டு ஆன் பண்ற வேலைக்குப் போச்சே.. அத… பேய் அடிச்சு புடிச்சாம்ல.. அவங்க வீட்ல படுக்க வெச்சிருக்காங்க. பேச்சு மூச்சே இல்லன்னு சொல்றாங்க அத்தே” என்று படபடவென்று சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லி முடிக்கவும் கணேசன் மனைவி அங்கு வரவும் சரியாக இருந்தது. பார்வதி என்ன என்பது போல் பார்த்தாள்.

“அது… பார்வதி அத்தே..! மாமாவ கொஞ்ச அனுப்புங்களேன். அவரு எப்படியு எம் புருஷன பொழக்க வெச்சிடுவாரு..” என்று இழுத்தாள்.

பார்வதி மென்மையாக, “போய் நீயே நிலைமையச் சொல்லு. அதான் சரி” என்று சொன்னாள். 

கணேசன் மனைவி மாலினி, நேரே கிருஷ்ணனின் தந்தை இருக்கும் கட்டில் அருகில் சென்றாள்.

அவள் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்வதற்கு முன்பே, பழனி கூர்மையான ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வா.! போவோம்” என்றார்.

பழனி முன் செல்ல, பார்வதி, மாலினி இருவரும் ஒரு வித ஆச்சரியத்துடன் அவரைப் பின்தொடர்ந்தனர்.

முதல் முறையாக தகப்பன் என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்பதற்குக் கிருஷ்ணனும் அவர்களுக்குத் தெரியாமல், அவர்கள் மூவரையும் பின் தொடர்ந்தான்…..!

பேய் அடித்து விட்டிருந்த கணேசனின் மனைவியும், பார்வதியும் பழனியைப் பின் தொடர்ந்து சென்றனர். கணேசன் நிலைமை ரொம்பவும் மோசமாய் இருந்தது.

முதலில் பழனி, கணேசன் வேலைக்குப் போகும் இடத்தைப் பற்றிக் கேட்டறிந்தார். பின் கண்ணை மூடி ஒரு சில நிமிடங்கள் தியானம் புரிவது போல் அமர்ந்து முணுமுணுத்தார். 

பிறகு, தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக்கேட்டு, அவர்க்குத் தெரிந்த கந்தர் சஷ்டி கவசத்தைப் பக்தியோடு சொல்லலானார். தண்ணீர் தெளித்து, சரியாக 15 நிமிடம் ஆனப்பின், கணேசன் லேசாக கண் திறந்தான். எல்லோரும் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பழனி மெதுவாக கணேசன் மனைவியைப் பார்த்து, “இதுபாரும்மா.. இனிமே அந்த வேலைக்கு போவேணானு சொல்லிடு. அவசியமா போனும்னா அந்த வழியில கண்டிப்பா போவ வேணா. இன்னொரு தடவ அது வழியில அர்த்த ஜாமத்துல போனா, உசுரு தப்பாது” என்று வார்த்தையாலே வரப்பு போட்டார்.

எல்லாவற்றிற்கும் “சரி” என்று தலையசைத்த கணேசன் மனைவி, மனதார தன் நன்றியையும் தெரிவித்து, அதே சமயம் தன் மாங்கல்யத்தையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாள்.

இதையெல்லாம் யாருமறியாமல் கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு வெலவெலத்துப் போனது. தான் வந்ததையே காட்டிக் கொள்ளாமல், வந்த வழியே திரும்பி வீடு சென்று விட்டான். “ஒற்றனை ஒற்றனால் அறி” என்பது போல அவன் அங்கிருந்து நழுவுவதை அவன் தந்தை கண்ணயரக் கண்டும், காணாதது போல் இருந்து விட்டார். 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மூணாவது வீட்டு கணேசன் மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்ததைப் பற்றியும், அவனைப் பிழைக்க வைத்த பழனியைப் பற்றியும், ஊர்வாய்ப் பேசாமல் இல்லை. பார்வதிக்கு ஒரு வகையில் பெருமிதம் என்றாலும், இன்னொரு வகையில் வருத்தம் மேலிட்டு விட்டது.  

கிருஷ்ணனுக்கோ பெருமை மட்டும் தான். தன் அப்பா யாரும் கற்க முடியாத கலையைக் கற்றுக்கொண்டு விட்டார் என்கிற பெருமிதம் தான் அது. தானும், அதைக் கூட இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அப்போதும் வந்த பாடில்லை.

ஆனால், கிருஷ்ணனின் இளைய அண்ணன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஆன்மீகப் பற்று அவரை ஆட்கொண்டு விட்டது. தினசரி குளித்து, அவர் அப்பாவைப் போலவே தியானத்தில் ஆழ்வார். சஷ்டி விரதத்தைத் தப்பாமல் கடைபிடிப்பார். நாட்கள் காற்றடித்த காகிதமாய் பறந்து விட்டன. 

ஒரு நாள் காலை. கிருஷ்ணனின் அண்ணன் ராதா, சாமி அறையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.  

அம்மா பார்வதி அவனைச் சாப்பிட அழைத்த நேரம், சாமியறையினின்று “தொப்” என்ற சத்தம். கிருஷ்ணனும் பார்வதியும் விரைந்தோடி அறையினுள் சென்றார்கள். அங்கே ராதா பொட்டலமாய்ச் சுருங்கியிருந்தான்.

அவன் கைகளில் இட்டிருந்த தியான முத்திரை சிறிதும் கலையவில்லை. ஆனால், உடல் மயக்க நிலைக்குப் போய்விட்டது. பார்வதி அதிர்ந்து போனாள். தகப்பன் வீட்டில் இல்லாததால், செய்வதறியாமல் அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள். 

கிருஷ்ணனன் இந்த சம்பவத்தால் ரொம்பவும் அழுந்தி போயிருந்தான். பெரிய அண்ணன் சென்னைக்குச் சென்ற பிறகு, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது சின்ன அண்ணன் ராதா தான்.

பத்தாவது படிப்பிற்குப் பிறகு, பணக்கஷ்டம் வந்த போது, ராதா தான் கிருஷ்ணனைப் படிக்க வைத்தான். இப்போது படித்துக் கொண்டிருக்கும் யூ.ஜி படிப்பெல்லாமும் ராதாவால் தான்.

அம்மாவும் ராதாவும் 6.00 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழாயில் நீர் சேந்தி எடுத்து வருவார்கள். ராதா நன்றாக சமைக்கவே செய்வான். படிப்பு தானில்லையே தவிர, ராதாவின் குணம் தங்கம். பார்வதி இதையெல்லாம் நினைத்து, அழுதுகொண்டே இருந்தாள். அக்கம் பக்கத்தினர், ஆறுதல் சொல்லி, ராதாவை அட்மிட் செய்தனர். 

பார்வதிக்கு என்னமோ போலிருந்தது. சிறிது நேரங்கழித்து, ராதா படுக்க வைத்திருக்கும் அறையை வெறித்துப் பார்த்தாள். மருத்துவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அப்புறம் “ஓ..” வென்று கதறி அழுது, “எ புள்ளைக்கு, படிப்பு இலனாலு மவராசா என்ன நல்லா பாத்துப்பானே..! ஒரு நாள் தவறாம கோயிலுக்கு போறவனுக்கா இந்த நிலைம..! ராமா.. என் புள்ளையை என்கிட்ட திரும்பவு ஆரோக்கியமா குடுத்துடு” என்று புலம்பினாள்.

கிருஷ்ணனுக்கு அழுகை முட்டிக்கொண்டு நின்றது. “மா.. அழாதம்மா.. டாக்டர் வருவாரு.. நம்ம என்னன்னு கேக்கலா..” என்று சமாதானம் செய்தான். 

டாக்டரும் வந்தார். அனைவரும் ஆவலோடு அவரைப் பார்த்தனர். பார்வதி மட்டும் கொஞ்சம் ஆர்வம் அடங்காதவளாய், “சாமி.. ஒன்னுலல என் குழந்தைக்கு..?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“ஒன்னுல தான்ம்மா. ஆனா காய்ச்சல் உடம்புல நெருப்பா கொதிக்குது. ஒரு வாரம் இங்கே பெட்ரெஸ்ட் எடுக்கட்டும். கொறைஞ்சதும் கூட்டிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பார்வதியைத் தேத்தி விட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் விலக, கணேசன் மனைவி மாலினி மட்டும் அவர்களுடனேயே இருந்தாள்…

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்னை… நான்! (சிறுகதை) – ✍ சுபகீதா, சென்னை

    அவலட்சணம் (சிறுகதை) – ✍ எ. யாஸ்மின் பேகம், சென்னை